Published:Updated:

மலைப்பு... மயக்கம்... மர்மம்....6

இமயமலையில் ஒரு பயணம்!கணேசன் அன்பு

மலைப்பு... மயக்கம்... மர்மம்....6

ஜிஸ்பா - இமயமலைத் தொடர்களின் சொர்க்கபுரிகளில்  ஒன்று. இந்தக் கிராமத்தின் அழகு பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தால், இன்னும் ஒருநாள் கூடுதலாக இங்கு தங்கியிருப்போம்.  டார்ச்சா - ஜிஸ்பாவில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. பாஹா ஆற்றங்கரையில் தங்கும் கூடாரங்களும், காவல் துறையின் பரிசோதனை மையமும் உள்ளன. இங்கும் நமது வாகனங்களையும், அடையாள அட்டையினையும் காண்பித்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும். திபெத் இளம் பெண்களால் நடத்தப்பட்ட உணவகம் ஒன்றில் முறுகலான ஹனி ப்ரெட் ரோஸ்ட்டும், சூடாக சூபி நூடுல்ஸும், ஆவி பறக்கும் ஜிஞ்சர் லெமன் டீயும் பருகி விட்டு, புல்லட்டை ஸ்டார்ட் செய்து சைலன்ஸரையும் கொஞ்சம் சூடாக்கினோம். மணாலி - லே சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுக் குழு ஒன்றும் எங்களுடன் இணைந்துகொண்டது. தவிர, மைசூரில் இருந்து தன்னந்தனியாக புல்லட்டில் வந்திருந்த ஒரு நபரும் அறிமுகமாகி இணைந்துகொண்டார்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....6

டார்ச்சாவின் உயரம் 10,800 அடி. பாஹா ஆற்றைக் கடந்ததும், அதிகாலை சூரியக் கதிர்களை மறைத்துக்கொண்டிருந்த பிரம்மாண்ட மலையை அடைந்து, சிறிது சிறிதாக மலை ஏற்றம் ஆரம்பமானது. வழி நெடுகிலும் மலைகளை உரசி ஆற்றுடன் சங்கமித்த எண்ணற்ற அருவிகள் எங்களை வரவேற்றதுடன், சூழலைக் குளிரூட்டவும் செய்தன. டார்ச்சாவில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள 'சார்ச்சு’ எனும் இடம்தான் அன்றைய இரவு தங்கும் இடம். அதற்கு 40 கி.மீ முன்பே உள்ள 'பார லாச்சா பாஸ்’ எங்களது அடுத்த நிறுத்தம். வழியில், 'ஜிங்ஜிங்பார்’ எனும் இடத்தில் ராணுவ முகாம் ஒன்று இருந்தது. ஆனால், வீரர்கள் யாருமின்றி நிசப்தம் நிலவியது.  

மலைப்பு... மயக்கம்... மர்மம்....6

மாறுபட்ட வண்ணங்களும், உச்சிகளில் படர்ந்திருந்த பனியும் மலைகளின் அழகை மேலும் மெருகூட்டியிருந்தன. இரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின்பு, 'சூர்யதால்’ எனும் ஏரியை அடைந்தோம். கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில், பார லாச்சா பாஸுக்குச் சற்று முன்பாக அமைந்துள்ளது இந்த ஏரி. இதுதான் பாஹா ஆற்றின் பிறப்பிடமாகும். நீல வானத்தின் எதிரொளியால், ஏரியும் கருநீல வண்ணத்தில் அது காட்சி அளித்தது. குளிர்காலத்தில் முற்றிலும் உறைந்து, ஏரியும் சுற்றியுள்ள மலைகளும் வெண்பனியைப் போர்த்தியிருக்கும். BRO (Border Road ORganisation) பணியாளர்களும், ராணுவ வீரர்களும் மட்டுமே காணக்கூடிய அற்புதக் காட்சி அது!

சாலையில் இருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் ஏரியின் கரை இருந்தது. இடைப்பட்ட தூரத்தில் கரடுமுரடான கற்கள். சறுக்கும் கற்களில் எச்சரிக்கையுடன் ஊர்ந்து சென்றால், ஏரியை அடையலாம். குழுவின் ஒரு பகுதியினர் ஆர்வத்துடன் ஏரியை அடைந்து நீரை சுவை பார்த்தனர். 16,000 அடி உயரத்தை நெருங்கிவிட்டிருந்தபடியால் லேசான தலைச்சுற்றல், மிதமான மயக்கத்துக்கு ஆளான மற்ற சிலர், சாக்லேட் சாப்பிட்டபடியே சாலை ஓரத்தில் ஓய்வெடுத்தனர்.

16,500 அடி உயரத்தில் அமைந்துள்ள 'பார லாச்சா பாஸ்,’  மணாலி - லே பயணத்தின் முக்கியமானதும் ஆபத்தானதுமான கணவாய் ஆகும். மிகக் குறுகலான சாலைகள், சாலையின் குறுக்கே ஓடும் சிற்றாறுகள் என போக்குவரத்துக்குச் சவாலான பகுதி இது. சிற்றாறுகளைக் கடக்கும்போது, மிகுந்த எச்சரிக்கை தேவை. தண்ணீரின் ஆழம், வேகம், எங்கெல்லாம் கற்கள் நிரம்பி இருக்கின்றன என எதுவுமே நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. ஓரிரண்டு அடிகள் சறுக்கினாலும் பள்ளத்தாக்கில் விழ நேரும். இதுபோன்ற சமயங்களில் நான்கு சக்கர வாகனங்களை முதலில் போகவிட்டு, அந்தப் பகுதியிலேயே இருசக்கர வாகனங்களில் பின் தொடர்வது உகந்ததாக இருக்கும். தவிர, இந்தப் பயணத்தில், முதன்முறையாக AMS (Acute Mountain Sickness)-ஐ இங்கு உணரலாம். அதாவது, தலைச்சுற்றலும், மயக்கமும், உடல் சோர்வும். இதில் இருந்து தப்பிக்க சாக்லேட்டுகள், எனர்ஜி ட்ரிங்குகள், குளுக்கோஸ் ஆகியவை தேவைப்படும். தண்ணீரால் இரைப்பையை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் கண்களுக்குப் புலப்படும் தூரம் வரை மரங்களோ, செடிகளோ, புற்களோ எதுவுமே கிடையாது. கருநிறக் கற்களால் ஆன வறண்ட மலையும், உச்சியில் படிந்த பனியும் மட்டுமே இருப்பதால், காற்றில் ஆக்ஸிஜன் அளவு  குறைவான விகிதத்தில் இருக்கும். மணாலி - லே சாலை திறந்தவுடன், மே மாதத்தின் இறுதியில் பயணித்தால், இந்தப் பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறமும் சுமார் 15 அடி உயரத்திற்கு மதில் சுவர்களைப்போல பனி உறைந்திருப்பதைக் காணலாம்.  அக்டோபரில் பயணித்தாலும் கடும் பனிப்பொழிவைக் கண்டுகளிக்கலாம். ஆனால், உடல் திடம் வேண்டும்.

பார லாச்சாவைக் கடந்து சற்று கீழ்நோக்கிப் பயணித்ததும் 'பரத்பூர்’ எனும்  சின்ன கிராமத்தை அடைந்தோம். இங்கு தங்கும் கூடாரங்களும், உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன. கணவாயைக் கடக்கும்போது உடல் உபாதைகளுக்கு உட்பட்டவர்கள், இங்கு சற்று நேரம் இளைப்பாறிவிட்டுச் செல்லலாம். பத்துக்கும் மேற்பட்ட கூடாரங்களுடன் சேர்ந்த கடைகள் இருந்தன. சூரிய சக்தி மூலம் கிடைக்கப் பெறும் மின்சாரத்தின் துணை கொண்டு தொலைக்காட்சிகளில் பாலிவுட் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் மட்டுமே இங்கு கடைகள் நடத்தப்படுகின்றன. பனிப்பொழிவு துவங்கியதும், கூடாரங்களை அகற்றிவிட்டு இந்த மக்கள் மணாலிக்குத் திரும்பிவிடுகிறார்கள். ஆக, பரத்பூர் என்பது ஐந்து மாதங்கள் மட்டுமே இயங்கக்கூடிய, 16,000 அடி உயரத்தில் உள்ள இமலைமலைத் தொடரில் ஒரு தற்காலிக கிராமம்!

மலைப்பு... மயக்கம்... மர்மம்....6

ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கில் இரண்டு வெளிநாட்டு இளைஞர்கள் வந்து சேர்ந்தனர். இந்தச் சாலையில் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் ஓட்டிவருவது சற்று அதிர்ச்சியாகத் தோன்றியது. அதுபற்றி அவர்களிடம் விசாரித்தபோது, 'இதுவரை எந்தத் தொந்தரவும் ஏற்படவில்லை. ஏதேனும் ஏற்பட்டாலும் இந்தியர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா?'' என்று கைகுலுக்கிப் புன்னகைத்தனர்.

பரத்பூரில் இருந்து சார்ச்சு 40 கி.மீ. இதுவரையில் இருந்ததைப்போல அல்லாமல், சாலைகள் படிப்படியாக மோசமாகின. மண் புழுதியும், கற்களுமே நிரம்பியிருந்தன. பரத்பூரில், கரு நிறத்தில் காட்சியளித்த மலைகள், சிறிது சிறிதாக செந்நிறமாக உருமாறின. கரும் பாறைகளும், செந்நிற மண்ணும் கலந்து, இந்தியாவில் இது போன்றதொரு இடமா என ஆச்சரியப்பட வைத்தன. இந்த ஆச்சரியத்தில் சாலைகளின் இடர்பாடு மறந்து போனது.

மாலையை நெருங்கிய மூன்று மணி அளவில் சார்ச்சுவை அடைந்தோம். எங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த கூடாரத்தில் மதிய உணவு தயாராக இருந்தது. வயிற்றுப் பசி அடங்கிய பிறகு தான் சார்ச்சுவின் அழகை முற்றிலும் ரசிக்க முடிந்தது. நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட ஓர் இடம். ஒவ்வொரு மலையும் வேறு வேறு வண்ணங்களை அணிந்திருந்தன. செந்தூரம், கருமை, சந்தனம் என திசைக்கொரு வண்ணம். கருநிற மலையின் அடிவாரத்தில் எங்கள் கூடாரங்கள் அமைந்திருந்தன. எதிர்திசையில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் செந்தூர நிற மலையின் அடிவாரத்தில் 'ஸரப் ச்சூ’ எனும் ஆறு சலனமின்றி ஓடிக் கொண்டிருந்தது.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....6

சார்ச்சு - ஒரு வனாந்திரப் பிரதேசம். ஐந்து மாதங்களுக்கு மட்டுமே தற்காலிகக் கூடாரங்கள் இயங்கும். நாங்கள் சென்றிருந்தபோது நான்கு இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சராசரியாக நபர் ஒருவருக்கு ஓர் இரவு தங்க 250 ரூபாய் கட்டணம். நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் குறைந்த விலையில், கூடுதல் சுவையுடன் உணவு கிடைக்கிறது. கூடாரங்கள் தற்காலிகமானதாக இருந்தாலும், பரத்பூரைப் போல சார்ச்சு தற்காலிக கிராமம் அல்ல. இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் - இரு மாநிலங்களின் எல்லை இoது. ராணுவ முகாமும், காவல் பரிசோதனை மையமும் எப்போதும் இயங்குபவை. ராணுவ முகாமில் மருத்துவமனையும் உண்டு. சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர கால இலவச மருத்துவச் சேவை இங்கு உண்டு.

மதிய உணவுக்குப் பின்பு கூடாரத்தில் சிறிது ஓய்வெடுக்க எத்தனித்த எங்களில் பெரும்பாலானோர், பித்துப் பிடித்ததைப் போன்றதொரு உணர்வுக்கு ஆட்பட்டோம். அதிகாலையில் ஜிஸ்பா எனும் கனவு கிராமத்தில் இருந்து புறப்பட்டு மாலையில் வந்து சேர்ந்த சார்ச்சு, ஒரு நரக வேதனையைத் தரும் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இணையதளங்களில் சார்ச்சுவில் இரவில் தங்காமல் இருப்பது நல்லது. அக்யூட் மவுன்டெய்ன் சிக்னஸால் தலைவலி, வாந்தி, குமட்டல், சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடந்திருக்கின்றன என்கிற எச்சரிக்கை எங்களுக்கு அப்போதுத£ன் புரிந்தது!

(சிகர்ர்ரூ...ம்)