Published:Updated:

ஷோ ரூம் ரெய்டு!

தேவன், படங்கள்: ஆ.முத்துக்குமார், ஓவ்யங்கள்: ஸ்யாம்

ரு சின்ன இடைவெளிக்குப் பின்பு, மீண்டும் ஷோரூம் ரெய்டு கிளம்பினோம். சென்னையில் வீடு வாடகை உயர்ந்ததற்கு மட்டும் அல்ல, டிராஃபிக் நெருக்கடி அதிகம் ஆனதற்கும் இவர்கள் தான் காரணம் என கைகாட்டப்படுபவர்கள், 'ஐடி’ மக்கள். ''கார்களின் விற்பனை அதிகரிக்க முக்கியக் காரணம், ஐடி ஆளுங்கதான். முதல் மாசம் ஆஃபர் லெட்டர் வாங்கினதுமே நேரா ஷோரூம் போய் ஒரு காரை புக் பண்ணிடுறாங்க'' என்பது எந்த அளவுக்கு உண்மை என்பதைச் தெரிந்துகொள்ள கிளம்பினோம். சென்னையில் ஐடி மக்கள், ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் ஏரியா ராஜிவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை). இந்தச் சாலையில் டைடல் பார்க்கைத் தாண்டியதும் கார், பைக் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் தென்படுகின்றன. ஹோண்டா, நிஸான், மாருதி, ரெனோ என சோழிங்கநல்லூர் வரை மொத்தம் நான்கு கார் ஷோரூம்கள் இருக்கின்றன. ஐடி ஏரியாவில் ஷோரூம் வைத்திருக்கும் இந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்கின்றன?

ஷோ ரூம் ரெய்டு!

ஹோண்டா, கேபிடல் ஹோண்டா, கொட்டிவாக்கம்

ஓ.எம்.ஆர் சாலையில் முதலில் இருப்பது கேபிடல் ஹோண்டா ஷோரூம்தான். வெளியே கார்களை பார்க்கிங் செய்வதற்குப் போதுமான இடம் இருக்கிறது. பெரிய ஷோரூம் இல்லை என்றாலும், உள்ளே ஹோண்டாவின் எல்லா கார்களையும் நெருக்கி நிறுத்தி வைத்திருந்தார்கள். நான் ஷோரூமுக்குள் போனபோது, மாலை 5 மணி. இந்த நேரத்தில்தான் ஷோ ரூம்களுக்குள் வேலை முடிந்து வாடிக்கையாளர்கள் வரும் நேரம் என்பதை, ஹோண்டாவின் ஷோரூமுக்குள் இருந்த கூட்டம் உணர்த்தியது. ஷோரூமுக்குள் நுழைந்து, ஹோண்டா அமேஸின் கதவுகளைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, பெண் ஒருவர் வந்தார்.

''சார், அமேஸ் பார்க்கிறீங்களா?''

''ஆமா!''

''பெட்ரோலா, டீசலா சார்?''

''டீசல்'' என்றதும், ''வாங்க சார், இந்த சேர்ல வந்து உட்காருங்க!''

- காரின் அருகே வந்து, காரில் இருக்கும் சிறப்பம்சங்களை அவர் விளக்க மெனக்கெடவே இல்லை. ''சார், இப்போ பார்த்தீங்கன்னா...'' என்று விலைப் பட்டியலை நீட்டினார். ''சார், இந்த மாசம் முடிய இன்னும் பத்து நாள்தான் இருக்கு. பட்ஜெட் போடப் போறாங்க. அதுல கார்களோட விலை ஏறப்போகுது. இப்ப புக் பண்ணீங்கன்னாதான் இந்த ரேட்டு. விலை ஏறிடுச்சுன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது!'' எனன்றார். 'காரை புக் செய்து விட்டுத்தான் மறுவேலை பார்க்க வைக்க வேண்டும்’ என்று நம்மை மறைமுகமாக நிர்பந்தித்தார். ''எங்க வேலை பார்க்கிறீங்க சார்?''

அந்தச் சாலையில் இருக்கும் ஒரு ஐடி கம்பெனியின் பெயரையும், மாதச் சம்பளத்தையும் சொன்னதும், லோன் கிடைக்கிறதுல ஒண்ணும் பிரச்னை இருக்காது. ரெண்டு, மூணு நாள்ல ரெடியாகிடும். ''புக் பண்ணிடலாமா சார்?'' என்று மீண்டும் கேட்டார். என்னுடைய விவரங்களைக் குறித்துக்கொண்டார். ஆனால், கடைசி வரை என்ன கலர் வேண்டும்; டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கிறீர்களா; காரின் சிறப்பம்சங்கள் என்ன என்று எதையும் சொல்லாமல், இந்த மாத டார்கெட்டை முடிக்க வேண்டும் என்ற பதற்றம் மட்டுமே அவர் கண்களில் தெரிந்தது.

நிஸான், ஜுபிலன்ட் நிஸான், பெருங்குடி

ஷோ ரூம் ரெய்டு!

பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இடம் பிடித்திருக்கிறது நிஸான் ஷோரூம். வாகனங்களை பார்க்கிங் செய்ய இடம் அதிகமாகவே உள்ளது. ஹோண்டா ஷோருமுக்குள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, அடுத்தபடியாக நிஸான் ஷோரூமுக்குள் நுழைந்தால், 'பின் ட்ராப் சைலன்ட்’. ஷோரூமுக்குள் ஒரே ஒரு சேல்ஸ்மேன் மட்டுமே இருந்தார். ஏ.சி ஆஃப் செய்யப்பட்டிருந்தது. முதலில் நின்று கொண்டிருந்த மைக்ரா காரைப் பார்க்க ஆரம்பித்தேன். அவரும் என் அருகில் கைகளைக் கட்டியபடி பார்த்துக்கொண்டிருந்தார். நானாக, ''மைக்ரா வாங்கலாம்னு இருக்கேன்'' என்று சொன்னதும், ''ஓகே சார்'' என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார். காரின் எந்த டெக்னிக்கல் விவரங்களையும் அவர் சொல்லும் 'மூடில்’ இல்லை என்பது புரிந்தது.

''டட்ஸன் கோ-ல இருக்கிறதும் மைக்ரா இன்ஜின்தானா?'' எனக் கேட்டதும், ''யெஸ் சார். ரெண்டுலயும் ஒரே இன்ஜின் தான். பட்ஜெட் கம்மினா டட்ஸன் கோ வாங்கலாம். நல்ல கார் சார்'' என்றார். விலைப் பட்டியல் கேட்டேன். கொடுத்தார். ''ஓகே, போயிட்டு அப்புறம் வர்றேன்!'' என்று சொன்னதும், 'ஓகே’ சொல்லிவிட்டு மீண்டும் தான் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் போய்விட்டார். ஷோரூமுக்குள் நுழைந்தது நான் மட்டும்தான். என்னிடம் காரின் நிறைகளைச் சொல்லி, காரை வாங்கத் தூண்ட வேண்டும் என்ற எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்த மந்தமான விற்பனைப் பிரதிநிதியுடனான என்னுடைய முதல் சந்திப்பு, வெற்றிகரமாக முடிந்தது.

மாருதி கிவ்ராஜ் மாருதி, பெருங்குடி

ஷோ ரூம் ரெய்டு!

நிஸான் ஷோரூமுக்கு அடுத்தபடியாக, அதே சாலையில் கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் கிவ்ராஜ் மாருதி ஷோரூமுக்கு சென்றேன். இங்கேயும் வாகனங்களை பார்க் செய்ய அதிக இடம் இருக்கிறது. புழுக்கம் மிக அதிக அளவில் இருந்த நிலையில், மாருதி ஷோரூமுக்குள் ஏ.சி வேலை செய்யவில்லை. வாசலிலேயே நின்றுகொண்டிருந்த மாருதியின் செலெரியோ காரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென வந்தார் மாருதியின் சேல்ஸ்மேன். ''செலெரியோ பாக்கிறீங்களா சார்? ஆட்டோமேட்டிக்கா, மேனுவலா?'' என்று கேட்டார்.

மேனுவல் என்றதும், காரின் விலைப்பட்டியலைக் கொண்டு வந்து நீட்டினார். ''மைலேஜ் நல்லா கிடைக்கும் சார்!'' என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த இருக்கையில் உட்காரச் சொன்னார். கேஷா, லோனா என்று அவர் கேட்டுக்கொண்டு இருந்தபோது, அவருடைய கஸ்டமர் ஒருவர் குடும்பத்தினருடன் ஷோரூமுக்குள் நுழைந்தார்.

என்னை இன்னொரு சேல்ஸ்மேனிடம் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார். புதிதாக வந்த சேல்ஸ்மேன், ஹோண்டா ஷோரூமுக்குள் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவு படுத்தினார். ''சார், இந்த மாசத்துக்குள்ள வாங்கினாதான் இந்த ரேட்டு. அடுத்த மாசம் விலை ஏறிடும்!'' என்றார். என்னுடைய நம்பரைக் குறித்துக் கொண்டார். நான், ''ஃபேமிலியோட நாளைக்கு வர்றேன்!'' என்று சொன்னதும், தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு, ''நாளைக்கு போன் பண்றேன் சார்'' என்றார். சொன்னபடியே அடுத்த நாள் போனிலும் அழைத்தார். அப்போதும், 'கார் பிடிச்சிருக்கா சார், கார் பற்றி எதுவும் சந்தேகங்கள் இருக்கா, நான் விளக்கட்டுமா’ என்றெல்லாம் கேட்காமல், ''எப்போ சார் புக் பண்றீங்க? இன்னும் பத்து நாள்தான் சார் இருக்கு. விலை ஏறிடும்!'' என்று பூச்சாண்டிக் காட்டினார்.

ரெனோ, ரெனோ ஓ.எம்.ஆர், பெருங்குடி

ஷோ ரூம் ரெய்டு!

ஓ.எம்.ஆர் சாலையில் செல்லும் யாரும் மிஸ் செய்ய முடியாதபடி நல்ல லொக்கேஷனில் இருக்கிறது ரெனோ ஷோரூம். வாகனங்களை நிறுத்த, ஷோரூமுக்கு முன்னால் மிகப் பெரிய பார்க்கிங் ஏரியா இருக்கிறது. ரெனோ - நிஸான் இருவரும் தொழில்முறை பார்ட்னர்கள் என்பதை, ரெனோ ஷோரூமுக்குள் நுழைந்ததும் உணர முடிந்தது.  வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாமல் ஷோரூம் காலியாக இருந்தது. மூன்று, நான்கு சேல்ஸ்மேன்கள் இருந்தார்கள். சிலர் போனிலும், சிலர் கண்ணாடி அருகே நின்று கொண்டு சாலையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இங்கேயும் ஏ.சி மிகவும் குறைவாகத்தான் இருந்தது. நான் கொஞ்ச நேரம் பல்ஸ் காரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து அருகில் வந்தவரிடம், ''பல்ஸ் பத்தி டீடெய்ல்ஸ் வேண்டும்!'' என்று சொன்னதும், அருகில் இருந்த சேரில் உட்காரச் சொன்னார். 'ஃபுல் டீடெய்ல்ஸும் சொல்லுவார் போல’ என்று என் உள்மனது நினைக்க, என் எதிர்பார்ப்புக்கு எதிரியானார். ''சார், ஆக்சுவலா பல்ஸ் காரைப் பார்க்குற சேல்ஸ்மேன் இன்னைக்கு வரலை. உங்க நம்பரைக் குடுங்க. அவர் நாளைக்கு உங்களுக்கு போன் பண்ணுவாரு சார்'' என்றவர், எனக்கு டாடா காட்ட ரெடி ஆனார்.

அந்த ஷோரூமில் இருந்து நான் வெளியேறும்வரை ஷோரும்க்குள் ஒருவரும் வரவில்லை. அங்கே இருந்த ஷோரூம் சேல்ஸ்மேன்ஸ்களும் வேறு எந்த வேலையும் செய்து கொண்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ''சார், நான் ஓ.எம்.ஆர் ரெனோ ஷோரூமில் இருந்து பேசுறேன். நீங்க பல்ஸ் பார்த்ததா சொன்னாங்க!'' என்று ஒருவர் போன் செய்தார். ''ஆமாம் சார். நான் வேற கார் வாங்கிட்டேன்'' என்று சொன்னதும், அக்கறையுடன் 'எந்த கார் சார் வாங்கி இருக்கீங்க?’ என்று விசாரித்து விட்டு, போனைத் துண்டித்துவிட்டார். ஷோரூம் தேடிவந்த கஸ்டமைரைக் கோட்டை விட்டு விட்டோமே என்கிற எந்த ஏமாற்றமும் அவர் குரலில் இல்லை. அலட்சியத்தின் உச்சத்தை ரெனோ ஷோரூமில் பார்த்தேன்.

இந்த முறை ரெய்டு போன நான்கு ஷோரூம்களில், ஒரு ஷோரூமில் ஒரு சேல்ஸ்மேன்கூட காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கிறீர்களா எனக் கேட்கவில்லை. தண்ணி, டீ காபி வேண்டுமா என்று எந்த உபசரிப்பும் இல்லை.

எல்லா கார் நிறுவனங்களுமே விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. விளம்பரத்தைப் பார்த்துவிட்டு ஷோரூமுக்குள் நுழையும் மக்களுக்கு, மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறார்கள் ஷோரூம் சேல்ஸ்மேன்கள். ஐடி கம்பெனிகள் குவிந்திருக்கும் இந்தச் சாலையில் ஐடி கம்பெனிகளின் வளாகத்தில் கார்களை நிறுத்தி வைத்து அந்தப் பக்கம் போய், வரும் எல்லாரிடமும் காரைப் பற்றிய பிட் நோட்டீஸ் கொடுத்து கஸ்டமரைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். ஆனால், வாடிக்கையாளர்கள் வருவதற்காகவே பல லட்சம் ரூபாய் முதலீட்டில் ஷோரூம் திறந்து, அதை சகல வசதிகளுடனும் வடிவமைத்து, ஷோரூமுக்குள் கார்களையும் நிறுத்தி வைத்துவிட்டால் மட்டும் கார்கள் தானாகவே விற்பனையாகிவிடுமா? சேல்ஸ்மேன்களிடம் காரை விற்பனை செய்வதற்கான எந்த முனைப்பும் இல்லை என்றால் எப்படி?

அடுத்த கட்டுரைக்கு