ராளமான விழிப்புஉணர்வுப் பிரசாரங்கள், மோட்டார் வாகனச் சட்டங்கள், காவல் துறைத் தணிக்கைகள் என சாலைப் பாதுகாப்புக்கான அத்தனை இருந்தும், சாலை விதிகளை மதிக்கத் தயங்குவதற்குக் காரணம், இன்று இருக்கும் மெட்ரோ நகரங்கள் உருவான விதமும், சொந்த வாகனம் வாங்கும் மக்களின் மனப்பான்மையும்தான்.

இந்தியாவில் இருக்கும் பெருநகரங்கள் அனைத்துமே, தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டவை அல்ல. நகரங்களை உருவாக்கியவர்கள், சொந்த வாகனங்கள் இவ்வளவு பெருகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு, சென்னை அண்ணா சாலையை எடுத்துக் கொள்ளலாம். மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததும் சென்னை டிராஃபிக் இன்னும் அதிகமாகப்போகிறது. ஒரு காரணம், சொந்த வாகனங்கள் வாங்குவது அதிகரிப்பது. இன்னொரு காரணம், சாலையின் இருபுறமும் உயரமான கட்டடங்கள் இருப்பதால், இனி சாலையை அகலப்படுத்துவது மிக மிகக் கடினம். மேலும், சாலைக்குக் கீழே மெட்ரோ ரயில் பாதை இருப்பதால், முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டுவதும் இனி சிரமம். டிராஃபிக் நெரிசல்கள் அதிகமாக அதிகமாக,  சாலை விதிமீறல்களும் அதிகமாகும்.  

இன்று பலரும், வாகனம் ஓட்டுவதை தங்களுடைய சுதந்திரமாக நினைக்கிறார்கள். காரோ, பைக்கோ ஓட்டும்போது, மற்றவர்களை நம்பிஇருக்கத் தேவையில்லாமல், விடுதலை பெற்றுவிட்டதாக உணர்கிறார்கள்.

உங்கள் கார்தான்; உங்கள் பைக்தான்; உங்கள் சுதந்திரம்தான். ஆனால், உங்கள் சாலையா? இல்லை, இவை நம் சாலை. எழுத்தாளர் ஆண்ட்ரூ ஹெச்.மால்கோம் சொல்கிறார், 'டிரைவர் என்பவர், ஒரு சாதாரண காரின் இருக்கையை, தன் சிம்மாசனமாக உணர்கிறார்!’ - இந்த எண்ணம் கேட்க, படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால், வாகனம் ஓட்டும்போது மற்றவர்களுக்குப் பாதுகாப்பாக இல்லை.

வாகனம் உங்களுடையதுதான்; சாலை..?

ஏன் ஒரு டிரைவர் தன் இருக்கையைச் சிம்மாசனமாக உணர வேண்டும்? இங்குதான் வாகனம் வாங்கும் மக்களின் மனப்பான்மை வருகிறது. நமக்கு சொந்த காசில் வாகனம் வாங்குவது என்பது, வாழ்க்கையில் வெற்றியடைந்து விட்டதற்கான அடையாளமாக சமூகத்தால் சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளோம். 'என்ன தம்பி, படிச்சாச்சு, வளர்ந்தாச்சு; வேலைக்குப் போயி காசு பணம் பாத்தாச்சு. அப்புறம் என்ன? அப்படியே ஒரு காரோ, பைக்கோ வாங்கிப் போட வேண்டியதானேப்பா?’ என்றுதான் சமூகம் நம்மைப் பார்த்துக் கேட்கிறது. என்னதான் கோடீஸ்வரராக இருந்தாலும், வீட்டு வாசலில் பிஎம்டபிள்யூவோ, பென்ஸோ நிற்கவில்லை என்றால், காய்கறிக் காரர்கூட மதிக்க மாட்டார்.

சொந்த வாகனம் வாங்கியதையே வெற்றி என எடுத்துக்கொள்பவர்கள், சொந்த வாகனத்தை ஓட்டும்போது... சாலையையே சொந்தமாக்கிக் கொண்டதுபோல உணர்வார்கள். இந்த உணர்ச்சி, நம் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட விஷயம். ஆனால், பலரும் இப்படி நினைத்துக்கொண்டு ஓட்டியதால் வந்த விளைவுதான், டிராஃபிக் நெருக்கடி. சாலை சட்ட திட்டங்கள் வேறு; சாலைப் பாதுகாப்பு வேறு. மோட்டார் வாகனச் சட்டங்கள், ஒட்டுமொத்த மக்களுக்கும் சேர்த்து உருவாக்கப்பட்டது.

சாலைப் பாதுகாப்பு என்பது ஒருவித மனநிலை. இது, சாலையில் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் தனக்குத்தானே போட்டுக்கொள்ள வேண்டிய சட்டம். அதனால், ஆளைப் பொறுத்தும், வாகனத்தைப் பொறுத்தும் சாலைப் பாதுகாப்புப் பற்றி ஒவ்வொரு மனிதருக்கும் நாம் தனித்தனியாகப் புரியவைப்பது அவசியம். ஏற்கெனவே சாலையில் இருப்பவர்களைச் சரியாக ஓட்ட வைப்பதைவிட, புதிதாக சாலைக்குள் நுழையும் ஓட்டுநர்களை, முதலிலேயே சரியாக ஓட்டவைக்க வேண்டியதும் அவசியம்.

இந்த விஷயத்தை மக்களிடம் நெருங்கிச் சொல்வதற்காக இருப்பவைதான் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள். தனக்கு பாதுகாப்பான விதத்தில் வாகனம் ஓட்டச் சொல்லித் தரும் இவர்கள், மற்றவர்களுக்குப் பாதுகாப்பான விதத்தில் ஓட்ட சொல்லித் தருவது இல்லை. தமிழகத்தில் மிகச் சில ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள்தான் சிறப்பாக இயங்குகின்றன. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்துபவர்கள், இதை ஒரு தொழிலாகப் பார்க்காமல், கடமை உணச்சியுடன் அணுக வேண்டும். ஒரு மனிதன் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டாலே, வாகனங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளால்தான் சாலை விதிகளை மதிக்க, அருகில் இருந்து சொல்லித்தர முடியும்.  ஆனால், தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் எந்த நிலைமையில் இருக்கின்றன?

(சிக்னலில் சந்திப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு