Published:Updated:

சிட்டி ஸ்மார்ட்!

ர.ராஜா ராமமூர்த்தி

ரும் காலத்தில் காம்பேக்ட், அதாவது குட்டி கார்களுக்குத்தான் மவுசு இருக்கும் என்று முதலில் யோசித்தது 'ஸ்வாட்ச்’ எனும் கடிகாரம் தயாரிக்கும் நிறுவனம்தான். ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவருக்கு வந்திருக்க வேண்டிய இந்த எண்ணம், 1980-களில் 'ஸ்வாட்ச்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான  நிக்கோலஸ் ஹெய்க்குக்கு (Nicolas Hayek) வந்தது. அவருடைய மூளையில் உதித்த ஸ்மார்ட் ஐடியாதான், இன்று 'ஸ்மார்ட்’ கார்களாக உருவெடுத்து இருக்கின்றன. இந்தக் கட்டுரை எழுதப்படும் போதுதான் புதிய தலைமுறை ஸ்மார்ட் 'ஃபார் டூ’ (For Two) மற்றும் 'ஃபார் ஃபோர்’ (For Four) கார்கள் அறிமுகமாகி இருக்கின்றன. சரி, இந்த ஸ்மார்ட் பிராண்டின் தனித்துவம், கார்களின் சிறப்பம்சங்கள் என்ன?

சிட்டி ஸ்மார்ட்!

மெர்சிடீஸ் பென்ஸ் பிராண்டை வைத்திருக்கும் அதே டெய்ம்லர் குழுமத்தின் கைகளில்தான் ஸ்மார்ட் பிராண்டும் இப்போது இருக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக உலக ஆட்டோமொபைல் சந்தையில் இருந்தாலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி இந்த கார்களுக்குப் பெரிய ரீச் இல்லை.

இந்த கார்களின் யுஎஸ்பி என்பது அதிக மைலேஜ், ட்ராஃபிக்கில் சிக்காமல் ஈஸியாகத் தப்பிக்கலாம், பார்க்கிங் இடம் குறைவு, ஸ்மார்ட் ஸ்டைலிங் என இதற்கான பலங்கள் அதிகம். நம் உடையின் வண்ணத்துக்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்களின் பாடி பேனல்களை மாற்றிக்கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் அட்ராக்ஷன்.

ஆனால், இவை கேட்க நன்றாக இருந்தாலும், யதார்த்த வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. முதலில், காரை பார்க்கிங் செய்வதற்காக யாரும் வாங்க மாட்டார்கள். இரண்டாவது, மைலேஜ் நன்றாக இருந்தாலும், ஸ்மார்ட் கார்களின் பெர்ஃபாமென்ஸ்  ரொம்ப சுமாராக இருந்தது. இதில் இருந்த ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனைப் பலரும் திட்டித் தீர்க்கிறார்கள். மூன்றாவது, ஸ்டைலிங்! பார்க்க பெப்பியாக இருந்தாலும், உடையுடன் பொருத்தமாக இருக்க, காரின் பேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும் அளவுக்கு யாருக்கு நேரம் இருக்கும்? மேலும், காரின் சைஸைப் பார்த்து, 'விபத்து ஏற்பட்டால், உள்ளே இருப்பவர்கள் நிச்சயம் பிழைக்கமாட்டார்கள்’ என எண்ண ஆரம்பித்தார்கள். இதற்காகவே, ஸ்மார்ட் கார்களில் இருக்கும் Tridion Cell எனும் ஸ்டீலால் ஆன பாதுகாப்புக் கட்டமைப்பை அதிகமாக விளம்பரப்படுத்தியது ஸ்மார்ட். வழக்கமான சின்ன கார்களைவிட, ஸ்மார்ட் கார் பாதுகாப்பானதாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் பெரிய வாகனங்களோடு மோதும்போது, பாதுகாப்பாக இருக்கும் எனச் சொல்ல முடியாது அல்லவா?

சிட்டி ஸ்மார்ட்!

ஒருவகையில் ரத்தன் டாடாவுக்கு, ஸ்மார்ட் கார்களைப் பார்த்துக்கூட நானோவை உருவாக்க வேண்டும் எனத் தோன்றியிருக்கலாம். ஆனால், ஸ்மார்ட் கார்களின் தோல்வியைச் சற்று ஆராய்ச்சி செய்திருந்தாலே நானோ ஜெயித்திருக்குமோ என்று தோன்றுகிறது. இந்த இரண்டு கார்களுமே உலகின் பெர்ஃபெக்ட் சிட்டி கார்களாக சந்தைப்படுத்தப்பட்டவை; இரண்டுமே அளவில் மிகச் சிறியவை; இரண்டிலுமே இன்ஜின் பின்பக்கம்; இரண்டிலுமே ரியர் வீல் டிரைவ்; இரண்டிலுமே பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்தன; இரண்டிலுமே சக்தி குறைவான இன்ஜின்கள்; இரண்டுமே தயாரித்த நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டத்தைத்தான் அளித்தன. ஆட்டோமொபைல் உலகில் அதிக முதலீடு, விளம்பரங்களோடு தயாரிக்கப்பட்டு, மகா தோல்வியைக் கண்ட கார்கள் என்றும் சொல்லலாம்.

ஆனால், நானோவைவிட ஸ்மார்ட், டெக்னிக்கலாக 'ஸ்மார்ட்’ கார்தான். ஸ்மார்ட் கார்களில் டர்போ சார்ஜர் பொருத்தப்பட்ட இன்ஜின், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட  Tridion Safty, பிரத்யேக ஏபிஎஸ் சிஸ்டம். ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அலுமினியத்தால் ஆன பாகங்கள் என ஸ்பெஷலான கார்தான் ஸ்மார்ட். ஆனால், 1997-ல் வெளிவந்த ஸ்மார்ட் 'ஃபார் டூ’ (For Two) கார், ஓர் ஆண்டில் 2 லட்சம் கார்கள் விற்கும் என எண்ணியது டெய்ம்லர். கடைசிவரை இந்த எண்ணம் பலிக்கவில்லை. 'முதல் தலைமுறை ஸ்மார்ட் ஃபார் டூ காரை உருவாக்கி விற்பனை செய்ததில், 3.35 பில்லியன் யூரோக்கள் நஷ்டம். ஒவ்வொரு காருக்கும் 4,470 யூரோக்களை இழந்தது ஸ்மார்ட்’ என்கிறது பெர்ன்ஸ்டெய்ன் ரிஸர்ச் நிறுவனம்.

சிட்டி ஸ்மார்ட்!

2015 ஸ்மார்ட் For Two/For Four

வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களைப் படித்த பின்புதான், புதிய தலைமுறை 2015 ஸ்மார்ட் ஃபார் டூ, ஃபார் ஃபோர் கார்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது ஸ்மார்ட். மெக்கானிக்கலாக, ரெனோவின் 'ட்விங்கோ’ காரை அடிப்படையாகக்கொண்டது புதிய ஸ்மார்ட் கார்கள். டிஸைனைப் பொறுத்தவரை ஸ்மார்ட் 'ஃபோர் ஜாய்’ (Four Joy) கான்செப்ட்டை வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. புதிய ஸ்மார்ட் ஃபார் டூ கார் 2.69 மீட்டர் நீளமும், ஃபார் ஃபோர் 3.49 மீ நீளமும் கொண்டிருக்கின்றன.

சிட்டி ஸ்மார்ட்!

இரண்டு கார்களுக்குமே 2 மற்றும் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 70 bhp சக்தியையும், 900சிசி டர்போ பெட்ரோல் இன்ஜின் 89 bhp சக்தியையும் அளிக்கின்றன. சில மாதங்கள் கழித்து 59 bhp சக்தியை அளிக்கும் பெட்ரோல் இன்ஜின் ஒன்றும் விற்பனைக்கு வரும். பழைய மாடலில் இருந்த ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனை எடுத்துவிட்டு, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், Twinamic 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸையும் அளிக்கிறது ஸ்மார்ட். ட்விங்கோ காரைப் போலவே புதிய ஸ்மார்ட் கார்களும் ரியர் இன்ஜின், ரியர் வீல் டிரைவ்தான். 'க்ராஸ்விண்ட் அஸிஸ்ட்’ எனும் பாதுகாப்பு தொழில்நுட்பம் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது. மற்றபடி, ஏகப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் புதிய ஸ்மார்ட் கார்களில் உள்ளன.

  ஸ்மார்ட் கார்கள், இந்திய மதிப்பில் சுமார் 8.5 லட்சத்துக்குள் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் கார்கள் ஸ்மார்ட்டாக விற்பனை ஆகின்றனவா என்பது, இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு