VIP வண்டி மோஃபா

ஹேய்... எதைப் பாத்து டப்பா வண்டினு சொல்றே... என் வண்டி லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் ஓடும்... நான் டிராஃபிக் ஜாம்ல பூந்து பூந்து போவேன்... நீ போவியா, என் வண்டி நின்னுடுச்சுன்னா பெடல் பண்ணிட்டே வீட்டுக்குப் போயிடுவேன்... உன்னால முடியுமா?'' என்று தனுஷ் அமலாபாலிடம் சவால் விட... 'அட ஆமாம்ல... இது என்ன வண்டி’ என்கிற கேள்விதான் எல்லோர் மனதிலும் எழும். இது என்ன வண்டி?

VIP வண்டி மோஃபா

'வேலையில்லா பட்டதாரி’ படத்தில், தனுஷ் பயன்படுத்தும் மொபெட்டின் பெயர் மோஃபா. இந்த மொபைட்டைத் தயாரித்தது எந்த நிறுவனம் தெரியுமா? புல்லட், தண்டர்பேர்டு என பார்க்க முரட்டுத்தனமான டூரிங் பைக்குகளை மட்டுமே தயாரிப்போம் என்று சொல்லும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 1980-களின் தயாரிப்புதான் இந்த மோஃபா.  

22 சிசி இன்ஜின், டாப் ஸ்பீடு மணிக்கு 30 கி.மீ வேகம் பெடல் செய்தும் ஓட்டலாம் என அப்போது கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வெளி வந்த இந்த மொபட்டின் அப்போதைய விலை 2,995 ரூபாய். ''இந்த மொபெட்டை 30 ஆண்டுகள் கழித்து சினிமாவில் பயன்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?'' என படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான வேல்ராஜிடம் கேட்டோம்.

''பெர்ஃபாமென்ஸ் பைக் ஓட்டும் இன்றைய தலைமுறையினருக்கு, இந்த மொபெட் காமெடியாகத்தான் தெரியும். ஆனால், அந்தக் காலகட்டத்தில் சைக்கிள் வைத்திருப்பதே பெரிய விஷயம். மொபெட் வைத்திருந்தால், அவருக்குக் கிடைக்கும் மரியாதையே தனி. கதையின் பின்னணிக்கு ஏற்ப, பள்ளிக்குச் செல்லும் மகனுக்குத் தந்தை தரும் அன்பளிப்பாக இந்த மொபெட் மிகவும் பொருந்தியது. காரணம், இந்த மொபெட்டுக்கு பதிவு எண், லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் என எதுவும் வாங்க வேண்டியது இல்லை. இந்த மொபெட் பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால், படத்துக்காகக் கிடைக்குமா எனத் தேடிப் பார்த்தேன். ஆன் லைன் மூலமாக நாகர்கோவிலில் இந்த மொபெட் இருக்கும் தகவல் தெரிந்தது. அங்கிருந்து இந்த மொபெட்டை வாங்கி வந்தோம்.

VIP வண்டி மோஃபா

கிளாஸிக், விண்டேஜ் வகையாக மாறிவிட்ட இந்த பைக்கை  ஷூட்டிங்கிற்காக 40,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கினோம்.

சரி, மொபெட் வாங்கி வந்து விட்டோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஓடுமா, ஓடாதா என்ற

VIP வண்டி மோஃபா

சஸ்பென்ஸுடன் ஸ்டார்ட் செய்ய பெடல் செய்தபோது... கிர்ர்ர்ர் சத்தத்துடன் ஸ்டார்ட் ஆனது. எல்லோருக்கும் அது இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனுஷ் உட்கார்ந்து ஓட்டும்போது உண்மையிலேயே அவரை வைத்து நன்றாக இழுத்தது. ஆனால் விவேக், தனுஷூடன் டபுள்ஸ் போகும் காட்சியில், விவேக்  உட்கார்ந்ததும் மொபெட்டும் உட்கார்ந்துகொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு, டிவிஎஸ் 50 இன்ஜினை மாற்றிச் சமாளித்துப் பார்த்தோம். ஆனால், அதுவும் சரிவராமல் போனதால், சில காட்சிகளில் மொபெட்டைக் கயிறு கட்டி இழுத்து அட்ஜஸ்ட் பண்ணி எடுத்தோம்!'' எனச் சிரிக்கிறார் வேல்ராஜ்.

மோஃபாவுக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்திட்டீங்களே மக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு