Published:Updated:

எது பெஸ்ட்?

காம்பேக்ட் செடான்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ழந்த வெற்றியை மறுபடியும் பிடிக்க வந்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். காம்பேக்ட் செடான் செக்மென்ட்டை உருவாக்கியதே டாடா மோட்டார்ஸ்தான். நான்கு மீட்டருக்குள் இண்டிகோ CS காம்பேக்ட் செடானாக அறிமுகமாக, மாருதி அந்த ஃபார்முலாவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறிவிட்டது. ஆனால், அதன் பின்பு களமிறங்கிய ஹோண்டாவும், ஹூண்டாயும் சந்தையைப் பிரித்து மேய்கின்றன.

எது பெஸ்ட்?
எது பெஸ்ட்?

இப்போது ஜெஸ்ட் அறிமுகமா கிவிட்டதால், முதல் இடத்தைப் பிடிக்க முன்பைவிட தீவிரமான முயற்சிகளில் இருக்கிறது டாடா. ஆனால், ஹோண்டா அமேஸ், மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸென்ட் ஆகிய கார்களில் தனித்துவமான ப்ளஸ் பாயின்ட்டுகள் இருப்பதால், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுத்து மூன்றுமே வாங்கக்கூடிய கார்களாக இருக்கின்றன. இப்படி சிக்கலான போட்டியாளர்களுடன் எப்படிப் போட்டி போடப் போகிறது ஜெஸ்ட்? (இங்கு ஒப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் பெட்ரோல் கார்கள்!)

டாடா ஜெஸ்ட்

எது பெஸ்ட்?

டிஸைன்  ஸ்டைலான ஹெட்லைட்ஸ், கான்செப்ட் காரில் இருந்து கொண்டு வரப்பட்ட க்ரில், க்ரோம் ஸ்டைலிங், LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் ஆகியவை, பழைய மான்ஸாவை மறக்கடிக்க டாடா செய்திருக்கும் முயற்சிகள். ஆனால், நீளமான பானெட், பெரிய பாடியுடன் இதன் சிறிய பூட் சேரும்போது, பார்க்க கச்சிதமாக இல்லை.

உள்பக்கம்  கேபின் டிஸைனைப் பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ் டீம் கடுமையாக உழைத்திருக்கிறது. இதுவரை டாடா கார்களில் இல்லாத ஒரு டிஸைன் அப்பீல் ஜெஸ்ட்-டில் இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் மற்றும் டயல்கள் பார்க்க சூப்பர் ஸ்மார்ட். ஆடியோ சிஸ்டம் சிறப்பாக சென்டர் கன்ஸோல் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மான்ஸாவுடன் ஒப்பிடும்போது, இது பன்மடங்கு அழகாகியிருக்கிறது.

வசதிகள்  ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED ரன்னிங் லைட்ஸ், டச் ஸ்க்ரீன் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என செக்மென்ட்டிலேயே இந்த வசதிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறது ஜெஸ்ட். தொழில்நுட்பங்கள் நிறைய இருந்தாலும், இவற்றைப் பயன்படுத்த சற்று சிக்கலாகவே இருக்கின்றன.

இருக்கைகள்  டாடா ஜெஸ்ட்டின் முன்பக்க இருக்கைகள் வசதியாக இருக்கின்றன. பின்பக்க இருக்கைகள் சோஃபா போல மிகவும் சொகுசானவை. நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்ற இருக்கை அமைப்புகளாக இவை இருக்கின்றன. அகலமான கேபின் என்பதால், ஐந்து பேர் பயணிக்க ஏற்ற கார், ஜெஸ்ட். பின்பக்கம் ஹெட்ரூம், லெக்ரூம் ஆகியவை சூப்பர். ஆனால், பின்பக்க இருக்கைகளுக்கு இடையே ஆர்ம் ரெஸ்ட் இல்லை.

எது பெஸ்ட்?

இடவசதி மற்றும் ப்ராக்டிக்காலிட்டி  கேபின் விசாலமாக இருந்தாலும், டிக்கி இடவசதி 360 லிட்டர் மட்டுமே! இது டிசையரைவிட அதிகமாக இருந்தாலும், பொருட்களை ஏற்றி இறக்க சிரமமாக இருக்கிறது. காருக்குள் பொருட்களை வைக்க இடங்கள் சிறிதாக இருக்கின்றன. உள்ளே ஒரே ஒரு கப் ஹோல்டர்தான்.

பெர்ஃபாமென்ஸ்  எண்களின் அடிப்படையில் பார்த்தால், நல்ல சக்தி மற்றும் டார்க். ஆனால், ஓட்டுவதற்கு த்ரில்லாக இல்லை. 0 - 100 கி.மீ வேகத்தை அடைய, 13.7 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது ஜெஸ்ட். இது டிசையர் எடுத்துக்கொள்ளும் அதே நேரம். எக்ஸென்ட்டைவிட சற்று வேகமாக இருந்தாலும், அமேஸைக்கு ஒரு படி கீழேதான் இருக்கிறது. இன்ஜினின் மிட் ரேஞ்சும் சுமார்தான். மூன்று டிரைவிங் மோடுகளில் உள்ள வித்தியாசத்தை, முழு ஆக்ஸிலரேஷனில்தான் உணர முடிகிறது.

கையாளுமை  வளைத்துத் திருப்பி ஓட்டும்போது பாடி ரோலை உணர முடிந்தாலும், கையாளுமை மோசமாக இல்லை. புதிய எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் மிக நன்றாக இருக்கிறது. நேர்கோட்டில் வேகமாகச் செல்லும் போது கொஞ்சம் லைட்டான ஃபீல் இருந்தாலும், நல்ல ஃபீட்பேக் இருக்கிறது.

ஓட்டுதல் தரம்  மோசமான சாலைகளை மிகச் சாதாரணமாகச் சமாளிக்கிறது ஜெஸ்ட். சஸ்பென்ஷனில் இருந்து சத்தம் உள்ளே கேட்பது இல்லை. நீளமான வீல்பேஸ், 'டூயல் பாத்’ (Dual Path) டாம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட வீல் ஜியாமெட்ரி ஆகியவை ஓட்டுதல் தரத்தைப் பன்மடங்கு முன்னேற்றி இருக்கின்றன.

ஹூண்டாய் எக்ஸென்ட்

எது பெஸ்ட்?

டிஸைன்  டிசையர், ஜெஸ்ட்டைவிட கச்சிதமான அளவுகளுடன் எக்ஸென்ட் இருக்கிறது. ஆனால், காரின் அகலம் குறைவு என்பதால், மற்ற கார்களைவிட ஒருபடி சிறிதாகத் தெரிகிறது. இதன் டயமண்ட் கட் அலாய் வீல்கள் செம ஸ்டைலிஷ்!

உள்பக்கம்  எக்ஸென்ட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாகங்களின் தரம் நன்றாக இருக்கிறது. கேபின், செக்மென்ட் விலை அதிகமான கார் போன்று தோற்றமளிக்கிறது. டேஷ்போர்டு டிஸைன் பார்க்க கச்சிதமாக, தெளிவாக இருக்கிறது. எர்கானமிக்ஸும் அருமை. விலை உயர்ந்த மாடலில் அளிக்கப்படும் லெதர் ஸ்டீயரிங் வீல், பிரீமியம் உணர்வை அளிக்கிறது.

வசதிகள்  ஜெஸ்ட்-ல் டச் ஸ்க்ரீனெல்லாம் இருந்தாலும், பயன்படுத்துதலையும், கூடுதல் வசதிகளையும் பொறுத்தவரை எக்ஸென்ட்தான் சூப்பர். கூல்டு க்ளோவ் பாக்ஸ், ரியர்வியூ கேமரா, ரியர் ஏ.சி வென்ட், ஆன் போர்டு மியூஸிக் ஸ்டோரேஜ் போன்ற வசதிகள் மற்ற கார்களில் இல்லை.

இருக்கைகள்  ஹூண்டாய் எக்ஸென்ட்டின் முன்/பின் இருக்கைகள் ஆஜானுபாகுவான ஆட்களுக்கு வசதியாக இருக்காது. ஆனால், தரமான இருக்கைகள் இவை. எக்ஸென்ட்டின் பின் இருக்கையில் இரண்டு பேர் மட்டுமே வசதியாக அமர முடியும். ஹெட்ரூம் அளவு சுமார்தான். எக்ஸென்ட்டில் மட்டும்தான் பின்பக்கம் ஏ.சி வென்ட்டுகள் இருக்கின்றன.

இடவசதி மற்றும் பிராக்டிக்காலிட்டி  இந்த செக்மென்ட்டிலேயே 407 லிட்டர் இடவசதியுடன் அதிக டிக்கி இடவசதி கொண்டிருப்பது எக்ஸென்ட்தான். கேபினில் பொருட்களை வைக்க இடம் குறைவுதான். ஆனால், அமேஸ் அளவுக்கு அதிகமான கப் ஹோல்டர்கள் இல்லை என்றாலும், சமாளிக்க முடியும்.

எது பெஸ்ட்?

பெர்ஃபாமென்ஸ்  எக்ஸென்ட்டில் இருக்கும் 1.2 லிட்டர் kappa2 பெட்ரோல் இன்ஜின் செம பெப்பியாக இருக்கிறது. ரெஸ்பான்ஸிவாக இருப்பதால், நகர டிராஃபிக்கில் கொஞ்சம் ஜெர்க் இருப்பது போலத் தெரியும். இருப்பினும் பழகிவிட்டால், இது பெரிய பிரச்னையாகத் தெரியாது. 0 - 100 கி.மீ வேகத்தை அடைய 14.2 விநாடிகள் ஆனாலும், ஓட்டும்போது வேகமான உணர்வை அளிக்கிறது எக்ஸென்ட்.

கையாளுமை  ஹூண்டாய் எக்ஸென்ட்டுக்கு அளித்திருக்கும் செட்-அப் நகர டிராஃபிக்கில் சிறப்பாக இருக்கிறது. ஸ்டீயரிங் மிக லைட்டாகவும், திருப்ப எளிதாகவும் இருக்கிறது. ஆனால், நெடுஞ்சாலையில் இது ப்ளஸ் பாயின்ட்டாக இல்லை. ஸ்டீயரிங் ஃபீட்பேக் குறைவுதான். ஆனால், மற்ற ஹூண்டாய் கார்களைவிட இதில் பாடி கன்ட்ரோல் நன்றாகவே இருக்கிறது.

ஓட்டுதல் தரம்  வழக்கமான ஹூண்டாய் கார்களைவிட நல்ல சஸ்பென்ஷன் செட்-அப் கொண்டிருக்கிறது எக்ஸென்ட். மேடு பள்ளங்களின் பாதிப்பு காருக்குள் அதிகம் இருக்கிறது. அதிகக் காற்று வீசும்போது, சற்று அலைபாய்கிறது எக்ஸென்ட்.

ஹோண்டா அமேஸ்

எது பெஸ்ட்?

டிஸைன்  ஹோண்டா அமேஸ்தான் பார்க்க மிகக் கச்சிதமாக இருக்கும் காம்பேக்ட் செடான். எல்லா காம்பேக்ட் செடான்களின் டிஸைன்களும் பின்பக்கத்தில் சொதப்பலாக இருக்க, ஹோண்டா சரியான அளவுகளில் அமேஸின் பின்புற டிஸைனை உருவாக்கி இருக்கிறது. வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டிருப்பது, பார்த்தாலே தெரிகிறது. ஆனால், மற்ற கார்களைப் போல 15 இன்ச் வீல்களைக் கொடுக்காமல், 14 இன்ச் வீல்களைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா.

உள்பக்கம்  அமேஸின் டேஷ்போர்டு டிஸைன் மிகச் சாதாரணமாக இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் ஒரு செக்மென்ட் கீழே உள்ள கார்களில் உள்ளதுபோல இருக்கிறது. சுழற்றும் வகையிலான ஏ.சி கன்ட்ரோல்களைப் பயன்படுத்தும்போது அதே உணர்வுதான் ஏற்படுகிறது.

வசதிகள்  அமேஸின் டேஷ் போர்டு மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சுமாராக இருக்கிறது. விலை உயர்ந்த மாடலில்கூட கிளைமேட் கன்ட்ரோல் அளிக்கப்படவில்லை. மேலும் சிடி பிளேயர், ப்ளூ-டூத் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை என்கிறபோது, பார்க்கிங் சென்ஸார் இல்லையே என்று கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. ஆனால், ஹிஷிஙி/கிஹிஙீ மியூசிக் சிஸ்டத்துக்கான கன்ட்ரோல்கள் ஸ்டீயரிங்கில் கொடுக்கப்பட்டிருப்பதை நினைத்து ஆறுதல்படலாம்.

இருக்கைகள்  காரின் உள்பக்கம் எப்படி இடவசதியை அதிகப்படுத்துவது என்பதை, ஹோண்டாவிடம் இருந்து மற்ற கார் நிறுவனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பின்னிருக்கையில் கால் வைக்க இடம் தாராளமாக இருக்கிறது. நல்ல ஹெட்ரூம் இருக்கிறது. இதன் சிறிய இருக்கைகள் ஜெஸ்ட், டிசையர் அளவுக்கு சொகுசாக இல்லை என்றாலும், மோசம் கிடையாது. டிரைவிங் பொசிஷன் பெர்ஃபெக்ட்.

எது பெஸ்ட்?

இடவசதி மற்றும் பிராக்டிக்காலிட்டி  ஹோண்டா அமேஸில் இருப்பது 400 லிட்டர் இடவசதி கொண்ட டிக்கி. இந்த செக்மென்ட்டில் அதிக லெக்ரூம் கொண்டதும் அமேஸ்தான். கேபின் விசாலமாக இருக்கிறது. மொத்தம் 7 பாட்டில் ஹோல்டர்கள் அமேஸில் இருக்கின்றன. ஆங்காங்கே பொருட்கள் வைப்பதற்கும் இடங்கள் உள்ளன.

பெர்ஃபாமென்ஸ்  அமேஸின் பெட்ரோல் இன்ஜின் 4,000 ஆர்பிஎம்-க்கு மேல் மிக ஸ்போர்ட்டியாக இயங்குகிறது. ஆனால், குறைந்த ஆர்பிஎம்களில் சக்தி வெளிப்பாடு சற்று மந்தமாக இருப்பதால், டிராஃபிக் நெரிசலில் ஓட்ட கடுப்பாக இருக்கும்.

எது பெஸ்ட்?

கையாளுமை  ஸ்டீயரிங் லைட்டாக இருந்தாலும், நல்ல ஃபீட் பேக்கை அளிக்கிறது அமேஸ். சஸ்பென்ஷன் ஓட்டுதல் தரத்துக்கும், கையாளுமைக்கும் சரியான பேலன்ஸில் இருக்கிறது. ஆனால், சிறிய டயர்கள் காரின் க்ரிப்பைக் குறைத்துவிடுகின்றன. டிசையர், ஜெஸ்ட் அளவுக்கு க்ரிப்பான கார் என்று சொல்ல முடியாது.

ஓட்டுதல் தரம்  ஓட்டுதல் தரம் சற்று இறுக்கமாக இருந்தாலும், உள்ளே பயணிப்பவர்களுக்கு அல்லல்படும் அளவுக்கு இல்லை. அதிக வேகங்களில் ஸ்டேபிளாகச் செல்கிறது. ஆனால், கேபின் இன்சுலேஷன் மோசம் என்பதால், காருக்கு உள்ளே இன்ஜின், டயர், சாலை சத்தம் என எரிச்சலைத் தருகிறது.

மாருதி டிசையர்

எது பெஸ்ட்?

டிஸைன்  இந்த செக்மென்ட்டிலேயே பார்க்க மிகச் சுமாரான கார், ஸ்விஃப்ட் டிசையர். இங்கிருக்கும் அனைத்து கார்களும் அடிப்படையில் ஹேட்ச்பேக்குகள்தான். இதை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது பொருந்தாத டிசையரின் டிஸைன்தான்.

உள்பக்கம்  எக்ஸென்ட்டைப் போலவே எர்கானமிக்ஸை முன்னிருத்தி டிசையரின் கன்ட்ரோல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்டர் கன்ஸோல் பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கிறது. பீஜ் வண்ண பட்டன்கள் விரைவில் அழுக்காகிவிடும் தன்மை கொண்டவை.

வசதிகள்  ஒரு காம்பேக்ட் செடான் காருக்கான அடிப்படையான வசதிகள் டிஸையரில் உள்ளன. ஆனால், எக்ஸென்ட்டுடன் ஒப்பிடும்போது, ஒரு படி குறைவான காராகவே டிசையர் இருக்கிறது. கிளைமேட் கன்ட்ரோல், USB, CD/AUX ப்ளேயர் போன்றவை இருந்தாலும், ப்ளூ-டூத் இல்லை. இதன் 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் நன்றாக இருந்தாலும், டாடா ஸெஸ்ட்டின் 8 ஸ்பீக்கர் ஆடியோ தரம் இதில் இல்லை.

இருக்கைகள்  டிசையரின் முன்னிருக்கைகள் மிக வசதியானவை. ஆனால், பின்பக்கம் லெக்ரூம், ஹெட் ரூம் ஆகியவை மிகக் குறைவுதான். காம்பேக்ட் செடான் என்று பார்த்தால், இட வசதியில் டிசையர் ஒரு ஹேட்ச்பேக்தான்.

எது பெஸ்ட்?

இடவசதி மற்றும் பிராக்டிக்காலிட்டி  இந்த நான்கு கார்களில் மிகக் குறைவான டிக்கி இடவசதி டிசையரில்தான். வெறும் 316 லிட்டர். அதனால், குடும்பத்துடன் தொலைதூரப் பயணங்களில் சற்று சிரமமாக இருக்கும். கேபினில் இட வசதி சற்று அதிகமாக இருப்பதைக் கண்டு ஆறுதல் படலாம். ஏ.சி வென்ட்டுகளுக்கு நேராக கப் ஹோல்டர்கள் இருப்பது நைஸ் டச்!

பெர்ஃபாமென்ஸ்  டிசையரில் இருக்கும் K12 இன்ஜின் இந்த செக்மென்ட்டின் சிறந்த பெட்ரோல் இன்ஜின்களில் ஒன்று. குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்து டாப் எண்ட் வரை சீரான சக்தி வெளிப்பாடு இருக்கிறது. அதிகமாக ரெவ் செய்தாலும் சோர்ந்து போகாத இன்ஜின் இது.

கையாளுமை  மாருதியின் பொறியாளர்கள் சஸ்பென்ஷன் டியூனிங்கில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு உதாரணம், டிசையர். ஓட்ட ஜாலியாகவும், அதேசமயம் பயணிக்க சொகுசாகவும் இருக்கிறது டிசையர். கையாளுமையில் வெற்றி பெறுகிறது டிசையர்.  

ஓட்டுதல் தரம்  மோசமான சாலைகளிலும் கட்டுக்குலையாமல் செல்லக்கூடிய கார், மாருதி டிசையர். ஆனால், ஜெஸ்ட்டின் ஓட்டுதல் தரம் இப்போது ஸ்விஃப்ட்டைவிட ஒரு படி நன்றாக இருக்கிறது. மெதுவான வேகங்களில் கொஞ்சம் அசைந்தாடினாலும், வேகம் கூடக்கூட சரியாகிவிடுகிறது. உலகம் முழுக்க ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் நல்ல பேலன்ஸைக் கொண்ட காராகச் சொல்லப்படும் ஸ்விஃப்ட்டை அடிப்படையாகக் கொண்டதனால் கிடைத்த நன்மை இது.

ஹோண்டா, ஹூண்டாய், மாருதி ஆகியவற்றின் கார்கள் மிக நெருக்கமான ப்ளஸ் பாயின்ட்டுகளைக் கொண்டிருப்பவை. அதனால், தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தே இவற்றில் எது பெஸ்ட் என முடிவு செய்ய முடியும். ஆனால், டாடா ஜெஸ்ட் காரை இவற்றுடன் சேர்க்கும்போது, முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

எது பெஸ்ட்?

டிசையரை வாங்கிப் பயன்படுத்துவது, இப்போதைக்கு இந்தியாவிலேயே தொல்லையில்லாத ஒன்றாக உள்ளது. நல்ல ஓட்டுதல் தரம், கையாளுமை. அருமையான இன்ஜின், மாருதியின் நம்பகமான சர்வீஸ் ஆகியவை பெரிய பலம். ஆனால், டிசையர் முழுமையான காம்பேக்ட் செடான் காராக இன்னும் மாறவில்லை. டிக்கி, பின்பக்க இடவசதி, பின்பக்க டிஸைன் என அனைத்திலும் இது ஹேட்ச்பேக் காரோ என சந்தேகத்தைக் கிளப்பும் காராகவே உள்ளது. மேலும், இந்த செக்மென்ட்டிலேயே பழைய டிஸைன் கார், டிசையர்தான்.

ஒரு கார் ஆர்வலருக்கு ஏற்றது, ஹோண்டா அமேஸ். நன்கு ரெவ் ஆகும் இன்ஜின், ஓட்டத் தூண்டும் டைனமிக்ஸ், நல்ல இடவசதி ஆகியவை இதன் பெரிய ப்ளஸ் பாயின்ட்ஸ். சாலையின் சத்தம், ஈர்க்காத கேபின் ஆகியவற்றை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியும் என்றால், அமேஸ் உங்களுக்கான கார். ஹோண்டா கார்களின் நம்பகத்தன்மையும் அதிகம்.

டாடா கார்களின் நம்பகத்தன்மை சுமார்தான் என்பது ஊரறிந்தது. ஜெஸ்ட் கார் மூலம் இந்த இமேஜை உடைக்க டாடா விரும்புகிறது. டாடாவின் நம்பிக்கைகளைக் காப்பாற்றக்கூடிய காராகத்தான் இருக்கிறது ஜெஸ்ட். அருமையான ஓட்டுதல் தரம், நல்ல வசதிகள், அருமையான இடவசதி, சொகுசு ஆகியவை இதன் ப்ளஸ்கள். டாடா என்பதால் விலையும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த தரம் சுமார்தான் என்றாலும், முன்புபோல மோசமாக இல்லை. இன்ஜின் நன்றாக இருக்கிறது. ஒரு பேக்கேஜாகப் பார்க்கும்போது, ஜெஸ்ட் ஒரு நம்பிக்கையான போட்டியாளராக இருக்கிறது.

ஹூண்டாய் எக்ஸென்ட் காருக்கு, வழக்கமான ஹூண்டாயின் ப்ளஸ் பாயின்ட்டுகள்தான். நிறைய வசதிகள், தரமான கேபின், நல்ல இடவசதி, பெப்பியான இன்ஜின், எளிதான ஓட்டுதல், பிரீமியம் உணர்வு, அதிக டிக்கி கொள்ளளவு என இந்த செக்மென்ட்டின் வின்னராக நிமிர்ந்து நிற்கிறது எக்ஸென்ட்!

எது பெஸ்ட்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு