கார்ஸ்
Published:Updated:

அந்நியன்!

ALIEN BIKE

  சு.சுரேஷ்குமார்

 ##~##

 மார்க்கெட்டில் புதியதாக ஒரு பைக் வாங்கி, அதை ரீ-மாடல் செய்து டெவில், பிரடேட்டர் எனப் பயங்கரமாகப் பெயர் வைத்துக் கொள்பவர்கள் மத்தியில், ஒருவர் நிஜமாகவே ஒரு பயங்கர ஏலியன் பைக்கை உருவாக்கியிருக்கிறார். 'யாருப்பா அது... நமக்குத் தெரியாம’ என்று யோசித்துத் தேட ஆரம்பிக்க வேண்டாம். இதைத் தயாரித்தவர் சென்னை புதுப்பேட்டைக் காரர் இல்லை. இவர் 54 வயது ரூங்ரோஜ்ன சங்வோங்ப்ரிசரன் எனும் தாய்லாந்துக்காரர்.

'கோ ஆர்ட் ஷாப்’ என்ற பெயரில் தாய்லாந்தில் நான்கு இடங்களில் ஷோ ரூம் வைத்திருக்கும் இவரது தொழிலே இது போன்ற ரீ-மாடல் பைக்குகளை உருவாக்குவதுதான். இதில் சிறப்பு என்னவென்றால், இவர் உருவாக்கும் பைக்குகள் அனைத்தும் உபயோகித்து தூக்கி எறியப்பட்ட வாகனங்களின் உதிரி பாகங்களில் இருந்து உருவானவை. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி என பல நாடுகளிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் உண்டு. இவரது ஒவ்வொரு தயாரிப்புக்கும் எக்கச்சக்க டிமாண்ட்!

அந்நியன்!

இவரது படைப்புகளிலேயே மிகவும் அட்டகாசமான, பிரபலமான ஒன்றுதான் இந்த ஏலியன் பைக். பயங்கரமான தோற்றம், கூர்மையான பற்கள், சங்கிலியைப் போன்ற கூந்தல் என்று ஏலியன் போலவே கில்லர் லுக்கோடு ஸ்டைலாகக் காட்சியளிக்கிறது இந்த பைக். இது 'ஏலியன்ஸ் Vs பிரடேட்டர்ஸ்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் வந்த ஏலியன் உருவங்களின் சாயலில் இருப்பதால், 'ஏலியன் பைக்’ என்று பெயர் சூட்டிவிட்டன பத்திரிகைகள்.

இதற்கு முன்பும் இது போல எத்தனையோ பைக்குகள் தயாரிக்கப்பட்டும் இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு வரவேற்பு? இதற்கு முன் சயின்ஸ் பிக்ஷன் படங்களால் உந்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அத்தனை பைக்குகளையும் வெறுமனே காட்சிப் பொருளாகத்தான் வைக்க முடிந்தது. ஆனால், இதனை நீங்கள் சாலையில் ஓட்டிச் செல்லலாம்.

இந்த பைக் பற்றிய செய்தி வெளியான நாளில் இருந்து பலர் இதனை தங்கள் கனவு பைக்காக எண்ணி ஏங்கினாலும், இன்னொருபுறம் சிலர் இதை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். இதன் பயங்கர தோற்றம், கூர்மையான உலோகங்களின் பயன்பாடு மற்றும் சங்கிலி போன்று துருத்திக் கொண்டு இருக்கும் ஹேண்டில் பார் பகுதி போன்றவற்றால் சாலையில் செல்வோர் மட்டுமல்லாமல், ஓட்டுபவரின் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம் என்று சொல்லி இதை சாலையில் ஓட்ட தடை கோருகிறார்கள்.

எது எப்படியோ, இந்த பைக்குக்குத்தான் தாய்லாந்தில் இப்போது பயங்கர டிமாண்ட், அதிலும் குறிப்பாக தாய்லாந்து பெண்கள் மத்தியில் இப்போது இதுதான் ஹிட் பைக்!