கார்ஸ்
Published:Updated:

சென்னையில் நடந்த டெரர் ரேஸ்!

ஆசியன் ஜீபி ரேஸ்

அருண்ரூப பிரசாந்த்  ச.இரா.ஸ்ரீதர்

 ##~##

'இருங்காட்டுக்கோட்டையில் அனல் பறக்கும் ரேஸைப் பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்று நொந்து கொண்டவர்களை, 'இதுதாண்டா ரேஸ்’ என பரவசப்படுத்தியது ஆசியன் ஜீபி பைக் ரேஸ்! மலேசியா, இந்தோனேஷியாவைத் தொடர்ந்து, ஆசிய பைக் ரேஸ் பந்தயத்தின் மூன்றாவது சுற்று ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் மைதானத்தில் நடைபெற்றது.

அண்டர்போன் 115 சிசி

முதலில், 115 சிசி அன்டர் போன் ரேஸ் போட்டி நடைபெற்றது. யமஹா, ஹோண்டா அணிகள் கலந்துகொண்ட இந்த ரேஸில், இந்தியாவின் சார்பில் கடைசி நேரத்தில் கலந்து கொண்ட அணி டிவிஎஸ். இந்த அணியின் சார்பில் மலேசிய வீரர் எல்லி எலியாஸும், இந்திய வீரர் ஜெகன் குமாரும் கலந்து கொண்டனர். ஆனால், தகுதிச் சுற்றின்போது இன்ஜின் சொதப்ப... ஜெகன்குமார் ரேஸிலேயே கலந்து கொள்ளவில்லை.

மலேசியா, இந்தோனேஷியா ரேஸில் முதலிடம் பிடித்த யமஹா அணியின் ரஃபித் டோப்பனின் பைக்கே சென்னையிலும் உறுமியது. 10 லேப்புகள் கொண்ட இந்தப் போட்டியில் கவாஸாகி அணியின் ஹாடி விஜயாவைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார் ரஃபித் டோப்பன். பெட்ரோனாஸ் யமஹா அணியின் ரம்தான் ராஸ்லி மூன்றாம் இடம் பிடித்தார். டிவிஎஸ் அணியின் எல்லி எலியாஸ், பைக் இன்ஜின் சொதப்பலால் மூன்றாவது லேப்பிலேயே வெளியேறினார்.

சென்னையில் நடந்த டெரர் ரேஸ்!

இரண்டாவது ரேஸிலும் ரஃபித் டோப்பன் முதலிடம் பிடிக்க, கவாஸாகியின் ஹாடி விஜயா இரன்டாம் இடம் பிடித்தார். இரண்டாவது ரேஸிலும் இன்ஜின் சீஸ் ஆனதால் டிவிஎஸ்ஸின் எல்லி எலியாஸ் ஐந்தாவது லேப்பிலேயே வெளியேறினார்.  

சூப்பர் ஸ்போர்ட்ஸ் - 600 சிசி

இந்தியாவின் பைக் ரேஸ் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணன் ரஜினி, இந்த ரேஸில் கலந்து கொண்டதால் இந்திய ரேஸ் ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்! 'மோட்டோ ரெவ் இந்தியா’ அணியின் சார்பில் கிருஷ்ணன் ரஜினியோடு, முன்னாள் ஆசிய பைக் ரேஸ் சாம்பியன் ஹமாகுச்சியும் கலந்துகொண்டார்.

மலேசியா, இந்தோனேஷியாவில் நடைபெற்ற நான்கு ரேஸ்களிலும் வெற்றி பெற்று அசத்திய கவாஸாகியின் கட்ஸுவாக்கி ஃபுஜிவாராவுக்கு, சென்னை ரேஸ் டிராக் அலர்ஜியாகிவிட்டது. தகுதிச் சுற்றில் ஆறாவது இடமே பிடித்தார் ஃபுஜிவாரா. யமஹா தாய்லாந்து அணியின் டெச்சா க்ரெய்சாட் முதலிடத்தில் இருந்தும், யமஹா மலேசியா அணியின் மொஹமது ஸாம்ரி பாபா இரண்டாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். மோட்டோ ரெவ் இந்தியா அணியின் டொஷியுக்கி ஹமாகுச்சி பத்தாவது இடத்தில் இருந்தும், மண்ணின் மைந்தன் கிருஷ்ணன் ரஜினி 17-வது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். 21 வீரர்கள் கலந்து கொண்ட இந்த ரேஸில், மோட்டோ ரெவ் இந்தியா அணியின் மற்றொரு வீரர் கௌதம் மயில்வாகனன் கடைசி இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

சென்னையில் நடந்த டெரர் ரேஸ்!

ஹோண்டா, சுஸ¨கி, யமஹா, கவாஸாகி என நான்கு பைக்குகள் களத்தில் இருந்தாலும், 'கவாஸாகியும், சுஸ¨கியும் கொஞ்சம் ஓரமா நில்லுங்க... நாங்க ரேஸ்ல மோதிக்கிறோம்’ என யமஹாவும், ஹோண்டாவும் சென்னை ரேஸ் டிராக்கில் முழு ஆதிக்கம் செலுத்தியது. சென்னை ரேஸ் டிராக் சர்வதேச வீரர்களுக்குக் கொஞ்சம் அலர்ஜியான டிராக்காகவே இருந்தது என்பதற்கு அடையாளமாக ஏராளமான விபத்துகள். கிருஷ்ணன் ரஜினி, ஹமாகுச்சி இருவரும் கீழே விழுந்து எழுந்து ரேஸ் ஓட்டினர். ஒன்பதாவது லேப்பின் போது கவாஸாகி அணியின் ஃபக்ருதீன் பைக் கட்டுப்பாட்டை இழந்து ரேஸ் டிராக்கில் பல்டி அடிக்க... ரேஸ் நிறுத்தப்பட்டது. ஒன்பது லேப் வரைக்குமான லீடிங் கணக்கிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. யமஹா தாய்லாந்தைச் சேர்ந்த டெச்சா கிரைசாட் முதலிடமும், ஹோண்டா அணியின் அஸ்லான் ஷா இரண்டாம் இடமும், மலேசியா யமஹாவைச் சேர்ந்த ஜம்ரி பாபா மூன்றாம் இடமும் பிடித்தனர்.

சென்னையில் நடந்த டெரர் ரேஸ்!
சென்னையில் நடந்த டெரர் ரேஸ்!

இரண்டாவது ரேஸில் கிரை சார்ட்டும். ஜம்ரி பாபாவும் முதல் இரண்டு இடங்களை அசால்ட்டாகத் தட்டிச் செல்ல... மூன்றாம் இடத்துக்கான ரேஸ் 'வாழ்வா சாவா’ என்ற நிலையில் இருந்தது. ஒரு த்ரில்லர் படத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாத திருப்பங்களோடு மூன்றாம் இடத்துக்கு ஐந்து ரேஸர்கள் போட்டி போட்டனர். ஒவ்வொரு வளைவிலும் மயிரிழையில் உயிர் தப்பி ரேஸர்கள் பறக்க... யமஹா இந்தோனேஷியாவின் ஆரோன் மோரிஸ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

மோட்டோ ரெவ் இந்தியாவின் ஹமாகுச்சியால் நான்காம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

பத்தாவது லேப்பின்போது, ரஜினி விபத்தில் சிக்கி ரேஸில் இருந்து வெளியேறினார். இதனால் பெரும் எதிர்பார்ப்போடு வந்த சென்னை ரசிகர்கள் வாடிய முகத்துடன் ரேஸ் டிராக்கைவிட்டு வெளியேறினர்.

சென்னையில் நடந்த டெரர் ரேஸ்!

சூப்பர் பைக் சாம்பியன் கிரைசாட், பௌத்த முறைப்படி தன் டீம் சீனியர்களுக்கு நன்றி சொன்னது; அண்டர் போன் சாம்பியன் டோப்பன், போடியத்தில் தனது கேர்ள் ஃப்ரெண்டிடம் ப்ரப்போஸ் செய்தது என சென்ட்டிமென்ட்களுக்கும் பஞ்சமேயில்லாமல் நடந்து முடிந்தது ஆசியன் ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப்!

மூன்று சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், 114.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் கவாஸாகி அணியின் கட்ஸுவாக்கி ஃபுஜிவாரா. 84 புள்ளிகளுடன் அஸ்லான் ஷா இரண்டாவது இடத்தில் உள்ளார். மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ஹமாகுச்சி 47 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்!