கார்ஸ்
Published:Updated:

இது வேறு XXX பைக் கிளப்

புதுச்சேரி பைக் கிளப்

நா.இள.அறவாழி>> எஸ்.தேவராஜன்

 ##~##

புதுச்சேரியில் நண்பர்கள் குழாம் ஒன்று  பைக் கிளப் ஆரம்பித்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர்களைத் தேடினோம். அவர்கள் சந்திக்க வரச் சொன்ன அந்த அதிகாலையில், கடற்கரைச் சாலை மிக ரம்மியமாக இருந்தது. சற்று நேரத்தில் கடற்கரைச் சாலை மீது படையெடுத்து வருவது போல உறுமிக்கொண்டே வந்து சேர்ந்தது ஒரு பைக் குரூப். இவர்கள்தான் புதுச்சேரியின் 'ட்ரிபிள் எக்ஸ் பைக் கிளப்’ உறுப்பினர்கள்! 

கிளப்பில் மொத்தமே ஒன்பது பேர்தான். அதில் நான்கு பேர் கல்லூரிப் படிப்பை முடித்த சீனியர்ஸ்; ஐந்து பேர் கல்லூரிக்குக் காலடி எடுத்து வைத்துள்ள ஜூனியர்ஸ். முத்து, வாசு, கிருஷ்ணா, விமல், இளவேங்கை, விஷ்ணு, சசி, குமரன், கதிரவன் என கிளப் உறுப்பினர்கள்... அப்பாச்சி, ஸ்ப்ளெண்டர், பல்ஸர், டிஸ்கவர் என்று ஒவ்வொரு பைக்குகள் வைத்திருப்பதால் இந்த கிளப்புக்கு, 'காக்டெயில் கிளப்’ என்று பெயர் வைத்திருந்தாலும் பொருத்தமாகவே இருந்திருக்கும்!

இது வேறு XXX பைக் கிளப்

''பைக் கிளப் ஆரம்பிக்க எப்படி ஐடியா வந்தது?'' என்று ஒரு கேள்வியை வீசியதும், அக்கறையான குரலில் பேச ஆரம்பித்தார் கிருஷ்ணா. ''லீவு நாட்கள்ல ஈசிஆர் ரோட்டுல வர்ற பல குரூப்புகளைப் பாத்திருக்கேன். முதல்ல அவங்கெல்லாம் ஏதோ ஜாலிக்காக ஊரைச் சுத்துறாங்கன்னுதான் நெனைச்சேன். ஆனா, குரூப்புக்கு ஒரு பேரு வெச்சு, ரூல்ஸ் எல்லாம் போட்டு பக்காவா இருக்குறதை விசாரிச்சப்பத்தான் சுர்ருன்னு இருந்துச்சு. சென்னையில இருக்குற பைக் கிளப் குரூப்புகளுக்கு புதுச்சேரி ஒரு முக்கியமான ஸ்பாட். ஆனா, புதுச்சேரிக்குன்னு பைக் கிளப் இல்லையேன்னு யோசிச்சு, பைக் கிளப் ஆரம்பிக்க முடிவெடுத்தோம்!'' என எமோஷனலாகப் பேசினார்.

''புதுச்சேரிக்கு நெறைய வெளிநாட்டுக்காரங்க வருவாங்க. அவங்கெல்லாம் இங்குள்ள பைக்குகளை ரொம்ப விருப்பமா வாடகைக்கு எடுத்துச் சுத்துறதைப் பார்த்தா எங்களுக்கு வேடிக்கையா இருக்கும் அதுவும் புல்லட்டுக்கு வெறித்தனமா உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்குறதைக் கேள்விப்பட்ட பிறகுதான், நமக்கே நம்மளோட அருமை தெரியலையேன்னு வருத்தமா இருந்துச்சு. முதலியார் குப்பம் போட் ஹவுஸுக்கு வாரா வாரம் ஒரு சூப்பர் பைக் டீம் வருது. அதை ஒரு தடவை பார்த்தப்போ அசந்துட்டோம். ஒவ்வொரு பைக்கோட விலையைக் கேட்டு தலை சுத்தி விழுந்துட்டோம். நாங்க வெச்சிருக்கிற பைக்குங்க சாதாரண பைக்குங்கதான். எதிர்காலத்துல நாங்களும் அந்த மாதிரி பைக்குகள வாங்காமலா போயிடுவோம்'' என்று கண்கள் மின்னப் பேசினார் விமல்.  

''பராமரிப்பு, பாதுகாப்பு விஷயத்துல இருந்து பைக்கை எப்படி ஓட்டணும், ரோட்டுல நடந்து போறவங்களுக்கு எந்தச் சிரமமும் தராம இருக்கணும்,... இப்படி பைக் கிளப்புக்கான நெறிமுறைகளைப் படிச்சுப் பார்த்ததும் ஆச்சரியமாயிடுச்சு. இது ஏதோ விளையாட்டான விஷயமில்லைங்கிறது புரிஞ்ச பிறகுதான் ஒண்ணு சேர முடிவெடுத்தோம்!'' என்ற சசியைத் தொடர்ந்து பேசிய விஷ்ணு, ''சமீபத்துல எங்க ஊர்ல வின்டேஜ் கார் ராலி நடந்தது. எங்க ஊர் மக்கள் அதை அவ்வளவு ஆர்வமா வேடிக்கை பார்த்தாங்க. ஆட்டோமொபைல் உலகம் ரொம்ப பெரிசு... அதுல ஒரு கையளவாவது தெரிஞ்சுக்குவோம்கிறதுதான் எங்க நோக்கம்!'' என்று டச்சிங்காகப் பேசி முடித்தார் கதிரவன்!