கார்ஸ்
Published:Updated:

வி என்ஜாய் திஸ் ரைடு!

விழிப்பு உணர்வுப் பயணம்

இரா.மோகன்

 ##~##

றட்சி பூமியான ராமநாதபுரத்தில் இருந்து வளர்ந்த நகரமான சென்னை வரை, உலக வெப்பமயமாதலுக்கு எதிராக மோட்டார் சைக்கிள் பிரசாரம் நடத்தியிருக்கிறது இளைஞர்கள் குழு ஒன்று.

இந்தப் பயணம் குறித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் கண்ணன். ''பெருகி வரும் உலக வெப்பமயமாதலைத் தடுக்க நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் வழியாக உருவானதுதான் இந்தப் பயணத் திட்டம். முதலில் நான் மட்டுமே பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தேன். இதனை அறிந்த எனது நண்பர்களும் என்னுடன் வர விரும்பினர். இந்தப் பிரசாரப் பயணத்தில் பழனிவேல், செந்தில்நாதன், சக்கரவர்த்தி, சதீஷ்குமார், விக்னேஷ்வரன், புவனேஷ், பழனிகுமார், சரவணன், தமிழரசன், பிரபு, ரவி என 12 பேர் பங்கெடுத்தனர்.

வி என்ஜாய் திஸ் ரைடு!

ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், பிளாட்டினா, சுஸ¨கி ஜி.எஸ், டிவிஎஸ் வீகோ உள்ளிட்ட ஏழு இரு சக்கர வாகனங்களில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். முதல் நாளில் திருச்சி வரை சென்ற நாங்கள், இடையில் உள்ள முக்கிய நகரங்களில் வெப்பமயமாதலின் பாதிப்புகள், அதனைத் தடுப்பதற்கு மரங்களை வளர்த்தல், நீர் வளம் பெருக்க வன வளத்தைக் காக்க வேண்டிய அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம். மறுநாள் சென்னை சென்ற எங்கள் குழு கல்லூரிகள், மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று எங்கள் பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கினோம். புதுவை முதல்வர் ரங்கசாமியும் எங்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நாகப்பட்டினம், வேளாங்கன்னி வழியாக 25-ம் தேதி ராமநாதபுரத்தை வந்தடைந்தோம்'' என பிரசாரப் பயணத்தை விளக்கினார்.

வி என்ஜாய் திஸ் ரைடு!

பயணக் குழுவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் பேசும்போது, '’எங்க டீம் லீடர் கண்ணன் சுற்றுச்சூழல் மீது அதீத ஆர்வம் கொண்டவர். கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லின் யுனிவர்சிட்டியில் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வை தொலைத் தொடர்புக் கல்வி மூலம் மேற்கொண்டுள்ளார். தான் ஒரு மாற்றுத் திறனாளியாக இருந்த போதிலும், வெப்பமயமாதலுக்கு எதிராகப் போராட தன்னந்தனியாகப் பயணம் மேற்கொள்ளத் துணிந்த அவரின் நம்பிக்கை எங்களையும் இதில் ஈடுபட வைத்தது. எங்கள் பயணக் குழு புதுச்சேரியை நோக்கிச் சென்றபோது, கண்ணனின் டிவிஎஸ் வீகோ பழுதடைந்து விட்டது. அதனைச் சரி செய்ய மெக்கானிக்கை அழைத்து வந்தோம். அதைச் சரி செய்த பின் பயணத்தைத் தொடங்க நினைத்தபோது, எங்களுக்கு உதவியாக வந்த இண்டிகா கார் பஞ்சராகி விட்டது. ஒரு வழியாக அதனைச் சரி செய்து புதுச்சேரியை அடைந்தோம்!'' என்றார்.

பயணத்தின்போது இப்படிப் பல சங்கடங்களைச் சந்தித்தாலும், நல்ல விஷயத்துக்காக நண்பர்களோடு சேர்ந்து ஊர்வலம் வந்தது உற்சாகமளிப்பதாகச் சொன்னார் கண்ணன்!