கார்ஸ்
Published:Updated:

பசுமைப் பயணம்!

மோட்டார் சைக்கிள் டைரி

  தி.விஜய்

 ##~##

விதவிதமான பைக் பயணிகளைப் பார்த்துள்ளோம்; கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கோவையில் இரண்டு இளைஞர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு பைக் பயணத்தை சமீபத்தில் துவங்கி உள்ளனர். பயண நாட்கள் எவ்வளவு தெரியுமா? இரண்டு ஆண்டுகள்!

ஆம், நம் நாட்டிலுள்ள இயற்கை வேளாண்மை மற்றும் மாற்றுக் கல்வி முறைகளைத் தெரிந்துகொண்டு, அதை ஆவணப் படமாக்கும் முயற்சியின் ஆர்வம்தான் இந்தப் பயணம். கோவையைச் சேர்ந்த தீபன், முன்னாள் ரேடியோ ஜாக்கி; திருப்பூரைச் சேர்ந்த முத்துகுமார், அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இந்தப் பயணத்துக்காக, இவர்கள் இருவரும் தங்களின் வேலையை உதறி விட்டார்கள்!

ஆறு மாதங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இவர்களின் பயணத் திட்டம், படிப்படியாக நிறைவேறிய கதையைச் சொன்னார் தீபன். ''எங்கள் பயணத்தில் முக்கிய ஆதாரமாக விளங்குவது பைக்தான். எனவே, எந்த பைக் என்பதை நண்பர்களின் ஆலோசனை, விவாதங்களுக்குப் பிறகு ராயல் என்பீஃல்டு புல்லட் என்பதைத் தீர்மானித்தோம். அது நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டுமே என அதைத் தேடி அலைந்து, கடைசியில் சென்னையில் வாங்கினோம். அது 2006 மாடல் ராயல் என்ஃபீல்டு எலான்ட்ரா பைக். 4 ஆண்டுகளில் வேறும் 8,000 கி.மீ மட்டும்தான் ஓட்டப்பட்டு இருந்தது.

பசுமைப் பயணம்!

'டுவின் ஸ்பார்க் ப்ளக் இன்ஜின் கொண்ட இந்த பைக், தொலை தூரப் பயணத்துக்கு ஏற்றது அல்ல’ என்று சில நண்பர்கள் அக்கறையோடு ஆலோசனை கூறினார்கள். ஆனால், கோவை மெக்கானிக் புல்லட் மோகன், பயணத்துக்கு ஏற்ற வகையில் பைக்கைத் தயார் செய்து தர முன் வந்தார். பைக்கின் பெட்ரோல் டேங்க், சேஸியைத் தவிர மற்ற அனைத்து பாகங்களும் பயணத்துக்கு ஏற்றதுபோல் மாற்றி அமைக்கப்பட்டது. பயணத்தில் பெரிய பிரச்னையே லக்கேஜ்தான். அதற்காகவே பிரத்யேகமாக ஒரு லக்கேஜ் கேரியரைத் தயாரித்து, அதை பலமுறை பரிசோதித்து பைக்கில் பொருத்தினோம். முதலில், பைக்கை பயணத்துக்கு ஏற்ப மாற்றுவதற்கு இருபதாயிரம் ரூபாய்தான் பட்ஜெட் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால், அது மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் வரை ஆகி விட்டது.

பசுமைப் பயணம்!

பயணத்துக்குத் தேவைப்படும் ஆடைகள், லேப்டாப், கேமரா உபகரணங்கள் அடங்கிய கிட் மற்றும் தேவையான பொருட்களை வைப்பதற்காக செய்யப்பட்ட கேரியர் 140 கிலோ எடையைத் தாங்கும் வண்ணம் செய்யப்பட்டது. இதற்கு மட்டுமே ரூ.15,000 ஆனது.

கடந்த மாதம் ஆரம்பமான எங்களின் பசுமைப் பயணம் பொள்ளாச்சி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் என்று வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள இயற்கை வேளாண் விவசாயிகளைச் சந்தித்துள்ளோம். பயணம் ஆரம்பித்ததில் இருந்து 1500 கி.மீ. ஓட்டி உள்ளோம். இது வரை பைக்கில் எந்தப் பிரச்னையும் ஏற்பட வில்லை. அப்படியே ஏதாவது பிரச்னை வந்தாலும் கவலையில்லை. ஏனென்றால், இந்தியா முழுக்க பரவிக் கிடக்கும் மிகச் சிறந்த புல்லட் மெக்கானிக்குகளின் முகவரிப் பட்டியல் எங்கள் கையில் இருக்கிறது!'' என்று சந்தோஷமாகச் சொல்லி முடித்தார் தீபன்.