கார்ஸ்
Published:Updated:

லிவா Vs பிகோ எது பெஸ்ட்?

டெஸ்ட் ரிப்போர்ட்

சார்லஸ்

 ##~##

'எங்கள் ரேஞ்சுக்குக் குறைவான கார்களை எல்லாம் தயாரிக்க மாட்டோம்'' என கெத்துடன் இருந்தவர்கள் எல்லாம், இன்றைக்கு இறங்கி வந்து விட்டார்கள். 'இந்தியாவைப் பொறுத்தவரை சின்ன கார் மார்க்கெட்டில் இல்லை என்றால், கார் மார்க்கெட்டில் இருப்பதே வீண்’ என்பது ஃபோர்டு, டொயோட்டா ஆ கி ய நிறுவனங்களுக்கு லேட்டாகத்தான் புரிந்திருக்கிறது! கிட்டத்தட்ட இந்தியாவில் தொழிற்சாலை துவங்கி பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டு நிறுவனங்களும் சின்ன கார்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன!

ஃபோர்டு நிறுவனமே எதிர்பார்க்காத வகையில் 'ஃபிகோ’வுக்கு மக்களிடையே செம ரெஸ்பான்ஸ்! மாதந்தோறும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் 'டாப் டென்’ கார்கள் வரிசையில் இடம் பிடிக்கும் ரெகுலர் காராக இருக்கிறது ஃபிகோ. எட்டியோஸ் என்ற மிட் சைஸ் காரை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டை பல்ஸ் பார்த்த டொயோட்டாவும், எட்டியோஸ் லிவா என்ற பெயரில் சின்ன காரை விற்பனைக்குக் கொண்டு வந்து விட்டது. டொயோட்டாவுக்கு இருக்கும் பிராண்ட் இமேஜ் மூலமாகவே விற்பனையில் முன்னேற ஆரம்பித்து விட்டது எட்டியோஸ் லிவா.

லிவா Vs பிகோ எது பெஸ்ட்?
லிவா Vs பிகோ எது பெஸ்ட்?

அமெரிக்காவின் ஃபோர்டு ஃபிகோ வாங்குவதா? அல்லது ஜப்பானின் டொயோட்டா எட்டியோஸ் லிவா வாங்குவதா? இரண்டில் எந்த கார், கொடுக்கும் பணத்துக்குச் சரியான காராக இருக்கும்?

பர்ஃபாமென்ஸ்

டொயோட்டா எட்டியோஸின் இன்ஜின் தொழில்நுட்ப விவரங்கள் எந்த வகையிலும் உங்களை மயக்க வைக்காது. 5600 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 79 bhp சக்தி, 3100 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 10.6 kgm டார்க், 5-ஸ்பீடு கியர் பாக்ஸ் என சாதாரணமான மற்றும் ஒரு சின்ன கார்தான். இருந்தாலும், வேகத்தில் லிவா முன்னேறக் காரணம், இதன் எடை குறைவு என்பதுதான். இதனால், ஃபோர்டு ஃபிகோவைவிட பவர்ஃபுல் காராக இருக்கிறது லிவா. 2000 ஆர்பிஎம் வரை கார் மந்தமாக இருந்தாலும், 2000 ஆர்பிஎம்-ஐ கடந்துவிட்டால் புதிய வேகத்துடன் பறக்கிறது லிவா. நகர நெருக்கடிகளுக்குள் ஓட்டும் அளவுக்கு இன்ஜின் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருப்பதால், பவர் அதிகம் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால், வேகமாகப் போக வேண்டும் என்று நீங்கள் ஆக்ஸிலரேட்டரை மிதிக்க ஆரம்பித்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். நெடுஞ்சாலையில் வேகம் பிடிக்க, அடிக்கடி கியர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. டாப் ஸ்பீடான மணிக்கு 169 கி.மீ வேகத்தைத் தொடாமல் விட மாட்டேன் என்று நீங்கள் முடிவெடுத்தால், அதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை தேவை. ஆனால், போட்டி காரான ஃபிகோவைவிட டொயோட்டோ எட்டியோஸ் லிவாவின் வேகம் அதிகம். 0-100 கி.மீ வேகத்தைக் கடக்க 15.93 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது லிவா. இது ஃபிகோவைவிட அரை விநாடி குறைவு.

லிவாவின் கியரிங் 'செட்- அப்’ நகர ஓட்டுதலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. கியர்கள் மாற்றுவதற்கு ஸ்மூத்தாக இருப்பதால், கியர்களை மாற்றிக் கொண்டு இருப்பது ஒரு ஜாலியான அனுபவமாகவே இருக்கிறது. வேகம் கூடக் கூட இன்ஜினில் இருந்து சத்தம் கொஞ்சம் அதிகரித்தாலும், அதிர்வுகள் இல்லை என்பது லிவாவின் பலம்!

லிவா Vs பிகோ எது பெஸ்ட்?

போட்டி போடும் ஃபிகோ!

எட்டியோஸ் மாதிரியே  1196 சிசி திறன் கொண்ட கார்தான் ஃபிகோ. ஆனால், லிவாவைவிட 9 bhp சக்தி குறைவான காராக இருக்கிறது. குறைவான வேகத்தில் நகருக்குள் பயணிக்கும்போது, இந்த பவர் குறைபாடு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், வேகம் பிடிக்க முடிவெடுத்து ஆக்ஸிலரேட்டரை மிதிக்க ஆரம்பித்தால், ஃபிகோ நம் பொறுமையைச் சோதிக்கிறது. 0-100 கி.மீ வேகத்தைக் கடக்க 16.36 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது ஃபிகோ. எட்டியோஸைவிட பவர் குறைவான ஃபிகோவின் டாப் ஸ்பீடு மணிக்கு 145 கி.மீ.

ஆனால், ஆக்ஸிலரேட்டரை எவ்வளவு மிதித்தாலும் இன்ஜின் கோபம் அடைந்து சத்தம் எழுப்பவே இல்லை. அதிர்வுகளும் இல்லை என்பது ஃபோர்டின் இன்ஜின் தரத்தை நிரூபிக்கிறது. வெளிக்காற்றுச் சத்தமும் காருக்குள் அதிகம் கேட்கவில்லை.

நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருக்க வேண்டும் என்பது டொயோட்டாவின் சட்டம். அதற்கு ஏற்றபடி எவ்வளவு வேகமாகச் சென்றாலும் ஆட்டம் எதுவும் இல்லாமல் ஸ்டேபிளாக இருக்கிறது லிவா. எடை குறைவான கார் என்பதற்காகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் குறைவு என்பதோடு, பவர் ஸ்டீயரிங் தொட்டவுடன் திரும்புவதால், லிவா நகருக்குள் வளைத்துத் திருப்பி ஓட்ட சிறப்பான காராக இருக்கிறது.

லிவா Vs பிகோ எது பெஸ்ட்?
லிவா Vs பிகோ எது பெஸ்ட்?

ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் ஃபோர்டு ஃபிகோதான் பெஸ்ட். மேடு, பள்ளங்களில் அலுங்கல் குலுங்கல் இல்லாத பயணத்தைத் தருகிறது ஃபிகோ. ஓட்டிக்கொண்டே இருக்கத் தூண்டும் உற்சாகமான ஓட்டுதல் தரம் கொண்ட காராகவும் இருக்கிறது ஃபிகோ. ஸ்டீயரிங் நம் விரல்கள் திரும்பும் திசையில் துல்லியமாகத் திரும்புகிறது. பிரேக்குகள் சிறப்பாக இருந்தாலும், காலுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பிரேக் பெடலை மிதித்தால் தான் காரை சட்டென நிறுத்த முடிகிறது!

டிசைன்!

வெளித்தோற்றத்தைப் போலவே டொயோட்டா எட்டியோஸ் லிவாவின் உள்பக்கத் தோற்றமும் டல்தான். டயல்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், சென்டர் கன்ஸோலில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஸி வென்ட்டுகளை நாம் விரும்பும் திசைக்கு ஏற்ப திருப்ப முடியாது. ஏஸி

லிவா Vs பிகோ எது பெஸ்ட்?

வேண்டாம் என்றால், முழுவதுமாக மூடி விடும் வகையிலேயே வென்ட்டுகள் டிசைன் செய்யப்பட்டுள்ளன. டேஷ் போர்டு பிளாஸ்டிக்குகள் டொயோட்டா காருக்கான தரத்துடன் இல்லை என்பதோடு, பழைய காலத்து கார்களில் இருப்பது போல ஏ.ஸி கன்ட்ரோல்கள் இருக்கின்றன. இருக்கைகள், கியர் நாப்பில் எல்லாம் எதற்காக சிவப்பு நிறம் என்பது டொயோட்டாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஃபிகோவின் டேஷ் போர்டு, ஆடம்பரம் எதுவும் இல்லாமல் சிம்பிளாக இருக்கிறது. ஸ்டீயரிங் பட்டன்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் பார்ப்பதற்கு டல்லாக இருந்தாலும், நீடித்து உழைக்கக் கூடிய தரத்துடன் இருக்கின்றன. ஆறடி உயரமானவர்கள் கூட டிரைவர் இருக்கையில் வசதியாக உட்கார்ந்து ஓட்ட முடியும். முன் பக்க விண்ட் ஸ்கிரீன் தாழ்வாக இருப்பதால், வெளியே முழுச் சாலையையும் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங்கை உயரத்துக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்யும் வசதி இல்லை. 'பீச்’, கறுப்பு என இரண்டு வண்ண டேஷ் போர்டு ஆப்ஷனுடன் கிடைக்கிறது ஃபிகோ.

இடவசதி

எட்டியோஸ் லிவாவின் துருப்புச் சீட்டே இடவசதிதான். முன் மற்றும் பின் இருக்கைகள் பெரியதாகவும் அகலமாகவும் உள்ளன. கால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்து, தலை தட்டும் என்ற பயம் இல்லாமலும் லிவாவில் பயணிக்க முடிகிறது. அதேபோல், பின் இருக்கையில் மூன்று பேர் தாராளமாக உட்கார்ந்து பயணிக்க முடியும். பயணிகள் உட்காருவதற்கான இடம் மட்டும் அல்ல... பொருட்கள் வைக்கும் இடமும் எட்டியோஸ் லிவாவில் அதிகம். தண்ணீர் பாட்டில்களை சில்லென வைத்திருக்கிற கூல்டு க்ளோவ் பாக்ஸ் வசதி மட்டும் அல்லாமல், கதவு கைப்பிடிகளில் பொருட்கள் வைக்க ஏராளமான இடம் உண்டு. ஆனால், டிக்கியில் பொருட்கள் வைக்கும் இடம் மட்டும் ஃபிகோவைவிட குறைவு. வெறும் 251 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியே லிவாவில் இருக்கிறது!

ஃபோர்டு ஃபிகோவில் ப்ளூ டூத் கனெக்டிவிட்டி, டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் மூலம் எவ்வளவு கி.மீ தூரம் பயணிக்க முடியும் என்ற விவரம் உள்ளிட்ட, லிவாவில் இல்லாத சிறப்பம்சங்கள் ஃபிகோவில் உண்டு. ஆனால், நான்கரை லட்ச ரூபாய் காரில் பின் கதவில் பவர் விண்டோஸ் இல்லை என்பது பெரிய மைனஸ். அதோடு பின் இருக்கையில் உட்காருபவர்கள் தண்ணீர் பாட்டில், காபி கப் போன்ற பொருட்கள் வைத்துக் கொள்ள அதிக இடம் இல்லை. ஆனால், 284 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபிகோவின் டிக்கியில் தாராள இடம். விலை உயர்ந்த வேரியன்ட்டில் ஏபிஎஸ் மற்றும் காற்றுப் பை வசதி உண்டு.

லிவா Vs பிகோ எது பெஸ்ட்?

விலை வித்தியாசம்

சென்னையில் ஃபோர்டு ஃபிகோ ஆரம்ப மாடலின் விலை 4,45,341 ரூபாய். டொயோட்டா எட்டியோஸ் லிவா ஆரம்ப மாடலின் விலை 4,88,202 ரூபாய். ஏபிஎஸ், காற்றுப் பைகள் கொண்ட ஃபிகோவின் விலை உயர்ந்த மாடலின் விலை 5,82,166 ரூபாய். டொயோட்டா எட்டியோஸ் லிவாவின் விலை உயந்த மாடலின் விலையோ 7,02,277 ரூபாய். லிவாவுக்கு, ஃபிகோவைவிட அதிக விலை கொடுப்பது அதிகம்தான் என்றாலும், மைலேஜில் சரிகட்டி விடுகிறது எட்டியோஸ் லிவா!

ஃபோர்டு ஃபிகோ நகருக்குள் லிட்டருக்கு 10.9 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 15.4 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. எடை குறைவான, ஃபிகோவைவிட பவர் அதிகமான எட்டியோஸ் லிவா நகருக்குள் 12.1 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 16.7 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது!

லிவா Vs பிகோ எது பெஸ்ட்?
லிவா Vs பிகோ எது பெஸ்ட்?

ஃபிகோவின் பரபர விற்பனைக்குக் காரணமே விலை, பர்ஃபாமென்ஸ், மைலேஜ், டிசைன், ஓட்டுதல் மற்றும் கையாளுமை என அனைத்து ஏரியாக்களிலும் நிறைவான காராக இருப்பதே! எட்டியோஸ் லிவாவும் அதிக மைலேஜ், அதிக பர்ஃபாமென்ஸ், அதிக இடவசதி என சின்ன கார்களில் சிறந்த காராக இருந்தாலும் பில்டு குவாலிட்டி, இன்ஜின் தரம் மற்றும் வடிவமைப்பில் ஃபிகோவிடம் தோற்றுப் போகிறது என்பதோடு, எட்டியோஸ் லிவாவின் தரத்துக்கு டொயோட்டா சொல்லும் விலையும் ரொம்ப அதிகம்!