கார்ஸ்
Published:Updated:

வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

 ##~##
வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

வெட்டலை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஒன்று திரண்டு இருக்கிறார்கள் ஃபார்முலா-1 ரேஸின் மற்ற அணி வீரர்கள். இந்த ஆண்டு நடந்து முடிந்த முதல் எட்டு ரேஸ் போட்டிகளில், ஆறில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட வெட்டலுக்கு, இப்போது தொடர் சறுக்கல். கடைசியாக நடந்து முடிந்திருக்கும் மூன்று ரேஸ்களிலும், வெட்டலை வீழ்த்தி ஃபார்முலா-1 ரேஸுக்குப் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது அலான்சோ, ஹாமில்ட்டன், ஜென்சன் பட்டன் ஆகியோரின் மூவர் கூட்டணி! 

ஃபார்முலா-1 ஜெர்மனி

ஃபார்முலா-1 பந்தயத்தின் பத்தாவது சுற்று, கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி ஜெர்மனியின் நர்பர்கிரிங் ரேஸ் மைதானத்தில் நடைபெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் ரேஸைக் காண ட்ராக்கில் திரண்டிருந்தனர். ஃபார்முலா-1 சாம்பியன் பட்டியலில் முன்னிலையில் செபாஸ்ட்டியன் வெட்டல், முன்னாள் உலக சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர், ரெனோ அணியின் நிக்கோ ரோஸ்பெர்க், ஃபோர்ஸ் இந்தியா அணியின் ஆட்ரியான் சுட்டில் என ஜெர்மனியின் நான்கு முன்னணி ரேஸ் வீரர்களையும் காண, ஜெர்மனி ரசிகர்கள் பெரும் அளவில் திரண்டிருந்ததுதான் கூட்டத்துக்குக் காரணம். நர்பர்கிரிங் ரேஸ் மைதானம் இந்திய ரேஸ் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி சொல்லவும் காத்திருந்தது. நரேன் கார்த்திகேயனுக்கு ஹிஸ்பானியா அணியில் ரேஸ் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், லோட்டஸ் அணியின் டெஸ்ட் டிரைவரான கரூண் சந்தோக்குக்கு ஜெர்மனி ரேஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது!

வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

ரெட்புல் அணி வீரர் மார்க் வெப்பர் முதலிடத்தில் இருந்தும், மெக்லாரன் அணியின் லூயிஸ்

வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும், செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார்கள். 24 பேர் கலந்து கொண்ட இந்த ரேஸ் போட்டியில் 20-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார் இந்தியாவின் கரூண் சந்தோக்.

முதல் லேப்பிலேயே... முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மார்க் வெப்பரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னோக்கிப் பறந்தார் லூயிஸ் ஹாமில்ட்டன். இரண்டாம் இடத்துக்கு மார்க் வெப்பருக்கும், அலான்சோவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அலான்சோவும், வெப்பரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தார் வெட்டல். இதற்கிடையே 35-வது லேப்பின்போது ஜென்சன் பட்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரேஸில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் பட்டன்.

முதல் லேப்பிலேயே முன்னேறிவிட்ட லூயிஸ் ஹாமில்ட்டனை இறுதிவரை யாராலும் பிடிக்க முடியவில்லை. 60 லேப்புகள் கொண்ட ஜெர்மன் ரேஸ் போட்டியில், வெற்றிக் கோட்டை முதலில் தொட்டு வெற்றி பெற்றார் இங்கிலாந்துக்காரரான லூயிஸ் ஹாமில்ட்டன். ஃபெர்னாண்டோ அலான்சோ இரண்டாம் இடம் பிடிக்க, மார்க் வெப்பர் மூன்றாவது இடம் பிடித்தார். சொந்த நாட்டு வீரரான செபாஸ்ட்டியன் வெட்டல் நான்காவது இடமே பிடித்தார். இதனால் நர்பர்கிரிங் ரேஸ் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அப்செட்!

வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

இந்த ஆண்டு முதன்முறையாக ஜெர்மனி ரேஸில் கலந்துகொண்டு ஓட்டிய கரூண் சந்தோக், எந்த இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினாரோ... அதே இடத்தை 'தக்க’ வைத்துக் கொண்டார்! நான்கு ரேஸர்கள் விபத்து, இன்ஜின் கோளாறால் பாதியிலேயே வெளியேறியதால், கரூண் சந்தோக் தான் கடைசியாக ரேஸை முடித்தார்.

ஃபார்முலா-1 ஹங்கேரி

ஹங்கேரியில் ஃபார்முலா-1 பந்தயத்தின் பதினோறாவது சுற்று கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி நடைபெற்றது. மீண்டும் ஃபார்முக்கு வந்தவராக முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல். மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும், ஜென்சன் பட்டன் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.  

ரேஸ் நடப்பதற்கு முன்பு மழை பெய்திருந்ததால், ஈரமான ரேஸ் டிராக்கில் விபத்துகளுக்கான அறிகுறிகளுடனேயே ரேஸ் துவங்கியது. முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய செபாஸ்ட்டியன் வெட்டலை ஓரங்கட்ட மெக்லாரன் வீரர்கள் ஹாமில்ட்டன், பட்டன் ஆகிய இருவருமே முயன்றதால், ரேஸில் அனல் பறந்தது. முதல் இடத்தில் வெட்டல் சென்று கொண்டிருக்க... இரண்டாம் இடத்தை முதலில் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள் ஹாமில்ட்டனும் பட்டனும். நான்காவது லேப்பின்போது ஹாமில்ட்டனை முந்திவிட்டு வெட்டலை விரட்டும் முயற்சியில் இறங்கினார் ஜென்சன் பட்டன். இதற்கிடையே 23-வது லேப்பின்போது 14-வது இடத்தில் சென்று கொண்டிருந்த ரெனோ அணியின் நிக்கோ ஹெட்ஃபிட்டின் கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காரின் பின்பக்கம் முழுவதுமாக எரிந்துவிட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் நிக்கோ ஹெட்ஃபெட். இன்ஜின் ஓவர் ஹீட்தான் கார் தீப்பற்றி எரிந்ததற்குக் காரணம்.

வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

இதற்கிடையே, இரண்டாவது இடத்துக்கான போட்டியில் ஒரே அணி வீரர்களான ஹாமில்ட்டனும், ஜென்சன் பட்டனும் கடுமையாக மோதிக் கொள்ள ஆரம்பித்தனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இருவரது கார்களுமே உரசிக்கொண்டு பறக்க... இதை 'பிட்’டில் நின்றபடி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது மெக்லாரன் அணி நிர்வாகம். இருவருக்குமான மோதல் உச்சகட்டத்தைத்

வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

தொட... பட்டனின் காரோடு வேகமாக மோதியதில் பின்னுக்குத் தள்ளப்பட்டது லூயிஸ் ஹாமில்ட்டனின் கார். சட்டென வேகம் பிடித்த ஜென்சன் பட்டன், வெட்டலை முந்திச் சென்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். வெட்டல் இரண்டாம் இடம் பிடிக்க, ஃபெராரி அணியின் ஃபெர்னாண்டோ அலான்சோ மூன்றாவது இடம் பிடித்தார். இறுதிவரை முயன்றும் லூயிஸ் ஹாமில்ட்டனுக்கு நான்காவது இடமே கிடைத்தது.  

இதுவரை 11 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், செபாஸ்ட்டியன் வெட்டல் 234 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். மார்க் வெப்பர் 149 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லூயிஸ் ஹாமில்ட்டன் 146 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ரெட்புல் அணியை மிஞ்சியிருக்கும் 8 ரேஸ் போட்டிகளிலும் ஓரங்கட்டி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது மெக்லாரன். வெட்டலைத் தோற்கடித்து எப்படியாவது சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டனும், லூயிஸ் ஹாமில்ட்டனும். இருவரின் கனவும் பலிக்குமா? அல்லது வெட்டல் மீண்டும் வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வாரா? அனல் பறக்கும் கிளைமாக்ஸ் நோக்கிப் பறக்கிறது ஃபார்முலா-1.

வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!
வெட்டலுக்கு மூன்று எதிரிகள்!

ஆஸ்திரேலியா 27-03-2011

ஃபார்முலா-1 ரேஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் நடப்பு சாம்பியன் செபாஸ்ட்டியன் வெட்டல். இந்த ரேஸில் மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தையும், ரெனோ அணியின் பெட்ரோவ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்!

மலேசியா 10-04-2011

மலேசியாவில் நடைபெற்ற இரண்டாவது ரேஸிலும் வெற்றி பெற்று அசத்தினார், ரெட்புல் அணியின் செபாஸ்ட்டியன் வெட் டல். இந்த ரேஸில் மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன் இரண்டாவது இடம் பிடித்தார்!

 சீனா 17-04-2011

வெட்டலின் தொடர் வெற்றிக்கு சீனாவில் முற்றுப் புள்ளி வைத்தார் முன்னாள் சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன். வெட்டலை இரண்டாவது இடத்துக்குப் பின் தள்ளி 2011-ம் ஆண்டின் முதல் வெற்றியை ருசித்தார் லூயிஸ் ஹாமில்ட்டன்!

துருக்கி 08-05-2011

துருக்கியில் வெப்பரைத் தோற்கடித்து முதலிடம் பிடித்தார் செபாஸ்ட்டியன் வெட்டல். ஃபெராரியின் அலான்சோ மூன்றாம் இடம் பிடித்தார்.

ஸ்பெயின் 22-05-2011

ஸ்பெயினில் நடைபெற்ற விறுவிறு ரேஸ் போட்டியில் வெறும் 0.6 விநாடிகள் வித்தியாசத்தில் ஹாமில்ட்டனை முந்திச் சென்று முதலிடம் பிடித்தார் செபாஸ்ட்டியன் வெட்டல்.

மொனாக்கோ 29-05-2011

மொனாக்கோ ஸ்ட்ரீட் ரேஸில் மீண்டும் வெற்றி பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல். அலான்சோ இரண்டாம் இடம் பிடிக்க, பட்டன் மூன்றாம் இடம் பிடித்தார்.

கனடா 12-06-2011

கனடாவில் நடைபெற்ற ரேஸில் மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன் வெற்றி பெற்றார். வெட்டல் இரண்டாம் இடம் பிடித்தார்.

ஸ்பெயின் 26-06-2011

ஸ்பெயினில் நடைபெற்ற ரேஸில், ரெட்புல் அணியின் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற, பெராரியின் அலான்சோ இரண்டாம் இடம் பிடித்தார்.

இங்கிலாந்து 10-07-2011

இங்கிலாந்தில் ஃபெராரியின் அலான்சோ வெற்றி பெற, ரெட்புல் அணியின் செபாஸ்டியன் வெட்டலுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. மார்க் வெப்பர் மூன்றாம் இடம் பிடித்தார்.