கார்ஸ்
Published:Updated:

கிரேட் எஸ்கேப்: சென்னை to ஜவ்வாது மலை

ஜவ்வாது மலை ரகசியம்!

கா.பாலமுருகன்  பொன்.காசிராஜன்

 ##~##

பெயரிலேயே மணக்கும் மலை, ஜவ்வாது மலை! கிழக்கு மலைத் தொடரில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமும் கூட! திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தன எல்லையைப் பரப்பி இருக்கும் இந்த மலைத் தொடரில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள காடுகளில் யானை, மான், காட்டெருமை, மயில் போன்ற உயிரினங்களும் வசிக்கின்றன.

சிறப்புகள் பல இருந்தாலும் சுற்றுலாவாசிகளின் பட்டியலில் இது இடம் பெறுவதே இல்லை. அதனால் அதன் பெருமையை ஊர் உலகிற்குச் சொல்ல ஜவ்வாது மலைக்கு ஹூண்டாயின் ஆல் நியூ வெர்னாவில் பயணப்பட்டோம்.  இதே வெர்னாவின் டீசல் இன்ஜின் கொண்ட காரை திருச்சி கல்லணை வரை ஓட்டி விட்டதால், இந்த முறை பெட்ரோலைத் தேர்ந்தெடுத்தோம். பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த கார் மலைப் பகுதியில் எப்படிச் செயல்படுகிறது என்பதை டெஸ்ட் செய்ய விரும்பினோம்.

கிரேட் எஸ்கேப்: சென்னை to ஜவ்வாது மலை

ஜவ்வாது மலைக்குச் செல்ல பல வழிகள் இருக்கின்றன. திருவண்ணாமலை, போளூர் வழி; வேலூர், போளூர் வழி; வாணியம்பாடி ஆலங்காயம் வழி என எங்கிருந்து புறப்படுகிறோம் என்பதைப் பொருத்து வழியைத் தேர்ந்தெடுக்கலாம். நாம் சென்னையில் இருந்து நால்வழிச் சாலை வழியாக மேல்மருவத்தூர் சென்று, அங்கிருந்து பிரியும் வந்தவாசி, போளூர் ஆகிய ஊர்களின் வழியாக ஜவ்வாது மலையின் மைய நகராக விளங்கும் ஜமுனாமரத்தூர் செல்வது என்று தீர்மானித்தோம். இந்த வழி, சற்று தூரம் குறைவு என்பதும் ஒரு காரணம்.

அதிகாலையில் வெர்னாவை மேல்மருவத்தூர் நோக்கி நால்வழிச் சாலையில் விரட்டினோம். அழகான, வசதியான ஆல் நியூ வெர்னா  படகு போல மிதக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. இருக்கைகள் உட்கார்ந்து செல்ல வசதியாகவும், சொகுசாகவும் உள்ளன. சிக்னல்களில் நிற்கும்போது இன்ஜின் இயங்குகிறதா என்பதை ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்துத்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. இன்ஜின் இயங்குவதே தெரியாமல், அதிர்வுகள் அற்று அமைதி காப்பது ஆச்சரியம். நகர நெருக்கடியில் வளைத்து நெளித்து ஓட்ட மிக சுலபமாகவும், வசதியாகவும் இருக்கிறது ஹூண்டாய் வெர்னா!

கிரேட் எஸ்கேப்: சென்னை to ஜவ்வாது மலை

பழைய வெர்னாவுடன் இதை எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது. தரத்திலும், ஸ்டைலிலும், வடிவமைப்பிலும் பல படிகள் முன்னே இருக்கிறது புதிய வெர்னா. சிறப்பாக ட்யூன் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின், கீ லெஸ் என்ட்ரி நவீன வசதிகள் நிரம்பிய கார். கியர் மாற்றுவது படு லாவகமான அனுபவம். பட்டர் ஸ்மூத் கியர் பாக்ஸ் என்று இதைச் சொல்லலாம்.

திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே மேல்மருவத்தூரை அடைந்து, வந்தவாசி சாலையில் திரும்பினோம். இது இருவழிச் சாலைதான். ஆங்காங்கே மேடு பள்ளங்களுக்கும், ஸ்பீடு பிரேக்கர்களுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், வெர்னாவின் சஸ்பென்ஷன்கள் இவற்றுக்குச் சிறப்பாகவே ஈடுகொடுத்தன. வந்தவாசி வழியாக போளூர் அடைந்து மதிய உணவை முடித்தோம். அங்கிருந்து தூரத்தில் தெரிந்த நீலமலைத் தொடரை இலக்காக வைத்துக் கொண்டுச் சென்ற சாலையைப் பிடித்தோம்.  

கிரேட் எஸ்கேப்: சென்னை to ஜவ்வாது மலை

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரம் கொண்ட இந்த மலைத் தொடரில் தமிழ் பேசும் பழங்குடி இனத்தவர்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். தரைப் பகுதியில் இருக்கும் போளூரில் இருந்து 43 கி.மீ தூரத்தில் இருக்கும் ஜமுனாமரத்தூர்தான் இந்த மலைக் கிராமங்களின் தாய் நகரம். இதே ஊரிலிருந்து மலையில் இன்னொரு பகுதி வழியாக இறங்கினால் 43 கி.மீ தூரத்தில் வாணியம்பாடி!

போளூரில் இருந்து சுமார் 10 கி.மீ தூரம் வயல் வெளியே வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் சென்றால், சடாரென ஆரம்பிக்கிறது மலைப் பாதை. ஆனால், அழகான மலைச் சாலை என்றே இதைச் சொல்லலாம். காரணம் - திடீர்த் திருப்பங்கள், கொண்டை ஊசி வளைவுகள், மேடு பள்ளங்கள் என சவாலான சாலையாக இருந்தாலும், சாலை கச்சிதமாகப் பராமரிக்கப்பட்டு இருப்பதால், காரோட்டிச் செல்ல அவ்வளவு இலகுவாக இருக்கிறது. வளைத்து நெளித்து ஓட்ட ஆவலைத் தூண்டிய சாலை என்றும் இதைச் சொல்லாம்.

ஜவ்வாது மலைச் சாலையில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் விறுவிறுவென முன்னேறியது வெர்னா. சட்டென்று எதிர்ப்படும் வாகனத்தைக் கண்டதும், பிரேக்கில் கால் வைத்த நொடியில் கட்டுக்குள் அடங்கிவிடுவது ஆச்சரியம். மேலும், ஆச்சரியமாக வன கிராமங்களுக்குச் செல்லும் சின்னச் சின்னச் சாலைகள் எல்லாம் கச்சிதமாகவும், சுத்தமாகவும் இருக்கின்றன.

மலைப் பாதையில் ஏறிக்கொண்டு இருக்கும்போது ஓரிடத்தில் பள்ளத்தாக்கு நம்மை வசீகரிக்க... காரை நிறுத்திப் பார்த்தோம். நடுவே ஒரு மலை இருக்க... 'வி’ வடிவில் தரைப் பகுதி தெரிந்தது. அதுவழியாகக் கடந்துபோன கிராமவாசி ஒருவர், 'இடது பக்கம் தெரிவது போளூர், வலது பக்கம் தெரிவது திருவண்ணாமலை’ என்றவர், 'திருவண்ணாமலை தீபத்தை இங்கிருந்துதான் நாங்கள் பார்ப்போம்’ என்று ஆச்சரியப்படுத்தினார்.

ஜமுனாமரத்தூர் நுழையும் முன்பே நம்மை வரவேற்கிறது சின்னக் குன்றின் மீதுள்ள முருகன் கோயில். மூன்றே தெருக்கள், ஒரு பஸ் நிலையம், கடை வீதி, பெட்ரோல் பங்க் என ஒரு மலை கிராமத்துக்கான எல்லா அடையாளங்களுடன் இருக்கிறது. ஜமுனாமரத்தூரில் உள்ள ஏரியில் படகு குழாம் ஒன்றும் செயல்படுகிறது. அதையட்டி சிறுவர் பூங்காவும் உண்டு. இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் அருவியும் இருக்கிறது. இதை 'பீமன் அருவி’ என்கின்றனர். அதேபோல், இங்கிருந்து 34 கி.மீ தூரம் பயணித்தால் 'அமிர்தி அருவி’ என்ற இடமும் உண்டு. சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகம் இல்லை. அதனால், ஒரே ஒரு தங்கும் விடுதிதான் மொத்த ஜவ்வாது மலைக்கும் இருக்கிறது. அதனால், ஜவ்வாது மலையில் தங்க நினைப்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து செல்வது நலம். மொத்த மலையும் தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ட்ரெக்கிங் செல்ல, வனத்தில் நுழைய - வனத்துறையின் முன் அனுமதி தேவை.

நாம் முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதியில் அன்றிரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். ஜவ்வாது மலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். பழங்குடியினர் மட்டுமே வசிக்கும் பகுதி என்பதால், உண்டு உறைவிடப் பள்ளிகளை வனத் துறையும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நடத்துகின்றன. அப்படி இருந்து பள்ளிக்கு வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டு காட்டுக்குள் சுற்றித் திரியும் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து, கல்வி போதிக்கும் பணியும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

கிரேட் எஸ்கேப்: சென்னை to ஜவ்வாது மலை

இங்கு முக்கிய விவசாயம் என்றால் சாமை, பலா, சீத்தாப்பழம் ஆகியவைதான். அதன் பிறகு, தேன் சேகரிப்பு மிக முக்கியமான தொழில். பொதுவாக பழங்குடியினருக்கு விளைவிக்கத் தெரிந்த அளவுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது என்பதால், பல வியாபாரிகளிடம் ஏமாந்து கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்று நிலமையே வேறு. இங்கு சேகரிக்கப்படும் தேனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டுள்ளார்கள். தேனைச் சுத்திகரிக்கும் இயந்திரம் தென்னிந்தியாவில் இங்கு மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர்.

அது மட்டுமல்லாமல், ஜவ்வாதுமலையில் விளைந்த சந்தன மரத்துக்கு உலகளாவிய தனித்துவமும், முக்கியத்துவமும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை. காரணம், இப்போது ஜவ்வாது மலையில் சந்தன மரங்களே இல்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

ஜமுனாமரத்தூரில் இருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ள மண்டப்பாறை என்ற இடத்திலும், 18 கி.மீ தொலைவில் பட்டறைக்காடு என்ற இடத்திலும் குள்ள மனிதர்கள் வாழ்ந்த கல் வீடுகள் இருக்கின்றன. பெரிய பாறையின் மீது, ஆயுதங்களே இல்லாத காலத்தில் உருவானவை இந்த வீடுகள். அதாவது, சதுரமாக பாறைகளை வெட்டி, நாற்புறமும் சுவர் அமைத்து அதன் மீது இன்னொரு சதுர பாறையை வைத்தால் வீடு... உள்ளே சென்று வர வட்ட வடிவில் ஒரு துளை... இதுதான் குள்ள மனிதர்களின் வீடு என்கிறார்கள். ஏராளமாக இது போன்ற வீடுகள் எந்தக் கவனிப்பும், கேட்பாரற்றும் சிதைந்து கொண்டு இருக்கின்றன. இங்குள்ள பழங்குடியினர் இந்த வீடுகளை 'பாலியர் கூடாரம்’ என்று சொல்கின்றனர்.

கிரேட் எஸ்கேப்: சென்னை to ஜவ்வாது மலை

அதேபோல், 22 கி.மீ மேல்பட்டு என்ற இடத்தில் இருக்கும் 'நீர்மத்தி’ மரம் 500 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். இந்த மரத்தைச் சுற்றி வளைக்க வேண்டுமென்றால், 14 பேராவது வேண்டும். அதாவது 13 மீட்டர் சுற்றளவு கொண்டது இந்த மரம்!

ஜமுனாமரத்தூரில் இருந்து 11 கி.மீ தூரத்தில் இருக்கிறது காவலூர். ஜவ்வாது மலையில் நாம் சந்தித்த மோசமான சாலை இது மட்டுமே! காவலூரில் உள்ள 'வைனு பாப்பு அப்சர்வேட்டரி’ மிகவும் புகழ் பெற்றது. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த அப்சர்வேட்டரியில் இருக்கும் டெலஸ்கோப், ஆசியாவில் உள்ள இரண்டாவது பெரிய டெலஸ்கோப் ஆகும். இதைத் தொடங்கி வைத்தது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. வரும் ஜனவரி மாதத்தில் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது இந்த டெலஸ்கோப்.

வானியல் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இந்த தொலைநோக்கி பெரிதும் பயன்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், சிறிதும் பெரிதுமாக ஆறு டெலஸ்கோப்புகள் தனித் தனி கோபுரங்களில் கம்பீரமாக நிற்கின்றன. சனிக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரைக்கும் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி. பார்வையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக உள்ள டெலஸ்கோப்பில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்கலாம். பெரிய டெலஸ்கோப் ஆராய்ச்சிக்கு மட்டுமே என்பதால், டெலஸ்கோப்பைப் பார்க்கவும், அதைப் பற்றி விளக்கம் பெறவும் மட்டுமே முடியும்.

ஜவ்வாது மலையில் அதிகக் குளிரும் இல்லை; அதிக வெப்பமும் இல்லை. ஆனால், வெயில் காலத்தில் சீதோஷ்ணம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. வெயில் காலத்தில் மலை காய்ந்து, ஓடைகள் வறண்டு விடுமாம். அதனால், ஜவ்வாது மலைக்குச் செல்ல ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களே ஏற்றது.

அரசு மனது வைத்தால், ஜவ்வாது மலையை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றலாம். அதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்கினால்தான் சுற்றுலாப் பயணிகளைக் கவர முடியும். சமீபத்தில் பிரபலமான ஏலகிரி மலையைப் போல எல்லா சிறப்புகளுடன் இருக்கிறது ஜவ்வாதுமலை.

அதேபோல், இங்குள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையே 9 தான் என்கிறார்கள். பொதுவாக, யானைகள் தனது குடும்பத்துக்குள் இன விருத்தி செய்யாது. இங்குள்ள மொத்த யானைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தால், இன்னும் சிக்கல்! வேட்டையாடுபவர்கள் சூறையாடிய பிறகு, விட்டு வைத்துள்ளவற்றில் மான்களும், காட்டெருது போன்ற விலங்குகளும் மிகவும் சொற்பமான அளவில்தான் இருக்கின்றன என்கிறார்கள். இதையெல்லாம் பாதுகாத்தால்தான் காடு என்பதன் உண்மையான அர்த்தம் பூர்த்தியாகும்.  

ஜவ்வாது மலையை முழுவதுமாகச் சுற்றி விட்டு மீண்டும் போளூர் வழியாக இறங்கி, வந்த வழியே சென்னை திரும்பினோம். மொத்தம் 554 கி.மீ தூரம் பயணித்திருப்பதாக வெர்னாவின் ட்ரிப் மீட்டர் சொன்னது. இந்தப் பயணத்தில் நால்வழிச் சாலை, இருவழிச் சாலை, ஒருவழிச் சாலை, மலைச் சாலை என பல்வேறு சவால்களைச் சாதாரணமாகவே எதிர்கொண்டது ஹூண்டாய் வெர்னா!