கார்ஸ்
Published:Updated:

ஹீரோ இனி? Hero

ஹீரோ ஹோண்டாவின் புது அவதாரம்!

சார்லஸ்

கடந்து வந்த பாதை 

 ##~##

சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ நிறுவனம், 1984-ம் ஆண்டு ஜப்பான் ஹோண்டா நிறுவனத்துடன் கூட்டணி போட்டு, மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் முதன்முறையாக அடியெடுத்து வைத்தது. முதன்முறையாக 1985-ம் ஆண்டு 'சிடி டான்’ மோட்டார் சைக்கிளைத் தயாரித்து வெளியிட்டது ஹீரோ ஹோண்டா! விலை குறைவான பைக் என்பதோடு நகர, கிராமப் பகுதிகளில் பயன்படுத்துவதற்கு சிறந்த வாகனமாக இருந்த சிடி டான் செம ஹிட்! விற்பனைக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் ஒரு லட்சம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகின. 1989-ம் ஆண்டு முதல்

ஹீரோ இனி? Hero

பைக் வெளிவந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஸ்லீக்’ என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது ஹீரோ ஹோண்டா. 10 ஆண்டுகள் கழித்து 1994-ம் ஆண்டு ஹீரோ ஹோண்டாவின் விற்பனையைத் தூக்கி நிறுத்திய 'ஸ்ப்ளெண்டர்’ பைக் அறிமுகம் செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு, 'உலகிலேயே அதிமாக விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்’ என்ற உச்சத்தைத் தொட்டது ஸ்ப்ளெண்டர். அதன் பிறகு, ஹீரோ ஹோண்டாவின் விற்பனைப் புள்ளி விவரங்கள் அனைத்துமே உச்சத்தைத் தொடும் சாதனைகள்தான். உலகிலேயே அதிக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக ஹீரோ ஹோண்டா உயர்ந்தது. அதே காலகட்டத்தில், 2001-ம் ஆண்டு முதல், தனியாக இந்தியாவில் கடை திறந்தது ஹோண்டா.

இந்தியாவில் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஹோண்டா நிறுவனம், லாபத்தைப் பங்கு போட விரும்பாததே தனியாக கடை திறக்கக் காரணம்! தனியாக வந்தாலும் 'முதலில் ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரிக்கப் போகிறோம். அதனால், மோட்டார் சைக்கிள் விற்பனையுடன் போட்டி போடப் போவதில்லை’ என்று சமரசம் சொன்னது ஹோண்டா. ஆனால், 2005-ம் ஆண்டு முதன்முதலாக 'யூனிகார்ன்’ எனும் 150 சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது. இது, நேரடியாக ஹீரோ ஹோண்டாவின் 'சிபிஸீ’ மோட்டார் சைக்கிளுக்குப் போட்டியாக இறங்க... அப்போதே ஹோண்டாவுக்கும், ஹீரோவுக்கும் பிரிவு உறுதியானது.

ஹீரோ இனி? Hero

ஒரு பக்கம், இந்திய நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஹோண்டா நிறுவனத்துக்கு விருப்பம் இல்லை. மறுபக்கம், மோட்டார் சைக்கிள் தயாரிப்பு தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்ட பிறகு ராயல்ட்டியாக பல ஆயிரம் கோடிகளைத் தர ஹீரோ நிறுவனம் தயாராக இல்லை. இதுவே இரண்டு பேருக்கும் இடையே பெரிய பகையை உண்டு பண்ணியது. இதற்கிடையே, ஸ்பேர் பார்ட்ஸ் தொழிலை ஹோண்டா தங்களது ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்திடம் தந்து விடும்படி ஹீரோ நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தியது. இதற்கு ஹீரோ நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை.

இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதி காத்து வந்த ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் பிரிந்துவிடப் போவதாக கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில் ஹோண்டா வைத்திருந்த 26 சதவிகிதப் பங்குகளையும், ஹீரோ நிறுவனத்தின் முஞ்சால் குடும்பமே 3,800 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஹீரோ நிறுவனமும் ஹோண்டா நிறுவனமும் முறைப்படி பிரிந்து விட்டாலும், 1994-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 2014-ம் ஆண்டு வரை ஹோண்டா, ஹீரோ நிறுவனத்துடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஹீரோ இனி? Hero

ஹீரோ இனி..

ஹோண்டாவை விட்டுப் பிரிந்து விட்டதால், ஹீரோ நிறுவனம் மீண்டும் ரேஸில் முதலில் இருந்து துவங்கத் தயாராகி இருக்கிறது. அதற்கு முதலில் 'ஹீரோ மோட்டோ கார்ப்’ என்ற தனது புதிய பெயரை பிரபலப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. முதல் கட்டமாக ஆகஸ்ட் 9-ம் தேதி லண்டனில் உள்ள புகழ் பெற்ற 'ஓ2 அரினா’ அரங்கில் புதிய மோட்டார் சைக்கிள்களையும், பிராண்டையும் அறிமுகம் செய்தது ஹீரோ. இம்பல்ஸ் மற்றும் மேஸ்ட்ரோ எனும் இரண்டு வாகனங்களும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஷாரூக்கான், ரன்பீர் கபூர், அனுஷ்கா ஷர்மா, பாப் பாடகர் ஏகான், முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் என பலரையும் அழைத்து வந்து விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது ஹீரோ. இதற்கிடையே ஹீரோவின் புதிய தீம் பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துப் பாடியிருக்கிறார்.

ஹீரோ இம்பல்ஸ்

ஹீரோ ஹோண்டா சிபிஸீ எக்ஸ்ட்ரீம் மற்றும் ஹங்க்கில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே 149.2 சிசி இன்ஜின்தான் இம்பல்ஸ் மோட்டார் சைக்கிளிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது மற்ற பைக்குகளைப்போல் இல்லாமல், கேடிஎம் பைக்குளைப் போல 'ஆன்/ஆஃப்’ ரோடு பைக்காக வெளிவந்திருக்கிறது. முன் பக்கம் டிஸ்க், பின் பக்கம் டிரம் பிரேக்குகளைக் கொண்ட இந்த பைக்கில், பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் மீட்டரில் சர்வீஸ் இடைவெளி குறித்த எச்சரிக்கை இண்டிகேட்டரும் உண்டு. இது பிரேசில் நாட்டுக்காக ஹோண்டா தயாரித்த என்.எக்ஸ்.ஆர் - 150 பைக்கின் மறு உருவம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ மேஸ்ட்ரோ

ஹோண்டா ஆக்டிவாவில் இருக்கும் 110 சிசி இன்ஜின்தான் ஹீரோ மேஸ்ட்ரோவில் இடம் பிடித்திருக்கிறது. டிஜிட்டல் மீட்டர், மைக்ரோ ப்ராஸர் இக்னீஷியன், டஃப் அப் ட்யூப்ஸ் என பல நவீன வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது ஹீரோ.

புதிய மோட்டார் சைக்கிள்கள் எப்போது வெளிவரும், அதன் விலை எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், போட்டி நிறுவனங்களான பஜாஜ் மற்றும் டிவிஎஸ், ஹோண்டாவைவிட இரண்டு மடங்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் ஹீரோ நிறுவனம், மார்க்கெட்டை இழக்காமல் இருக்க... புதிய மோட்டார் சைக்கிள்களின் விலையை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கலாம்!