கார்ஸ்
Published:Updated:

ஆல்ட்டோவுக்கு ரியல் போட்டி!

ஹூண்டாயின் புத்தம் புது சின்ன கார்!

 ##~##

ல்ட்டோவுடன் போட்டி போட, முதன் முறையாக ஒரு காரை வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். இந்தியாவில் எத்தனையோ சின்ன கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டும், ஆல்ட்டோவின் விற்பனையை முந்தும் கார் இதுவரை இந்தியாவுக்குள் வரவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக விற்பனையில் நம்பர் ஒன் காராக இருக்கும் ஆல்ட்டோவின் கோட்டைக்குள் நுழைந்திருக்கிறது ஹூண்டாய். தீபாவளி ரிலீஸாக விரைவில் வெளிவர இருக்கிறது இந்த ஹூண்டாயின் புத்தம் புதிய 800 சிசி சின்ன கார். 

'HA’ என்ற குறியீட்டு எண்ணால் அழைக்கப்படும் இந்த சின்ன காருக்கு 'ஹூண்டாய்- வீ5’ எனப் பெயரிடலாம் அல்லது ஆல்ட்டோ, சான்ட்ரோ, நானோ என சின்ன கார்கள் 'ஓ’ எழுத்துடன் முடிவடைவதால், அந்த வரிசையில் புதிய பெயர் வைக்கலாம் எனத் தெரிகிறது.

ஆல்ட்டோவுக்கு ரியல் போட்டி!

தற்போது வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான, 'கியா’ நிறுவனம் தயாரிக்கும் 'பிக்கான்டோ’ என்ற காரை அடிப்படையாகக் கொண்டே இந்த சின்ன கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. சின்ன கார் அதுவும் ஆல்ட்டோவுக்குப் போட்டியாளர் என்பதால், டிசைனில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஹூண்டாயின் தற்போதைய டிசைன் தத்துவமான 'ஃப்ளூயிடிக்’ டிசைன் கான்செப்ட்டில் இந்த காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சரிய செய்தி. தரத்தில் ஹூண்டாய் ஐ10 காருக்கு இணையாக இருக்கிறது ஹூண்டாய் HA.

சான்ட்ரோவின் அதே 'எப்சிலியான்’ இன்ஜினில் ஒரு சிலிண்டரை வெட்டி, சிசி மற்றும் பவரைக் குறைத்து, இந்த சின்ன காருக்குள் புகுத்தி இருக்கிறது ஹூண்டாய். இது அதிகபட்சமாக 50 தீலீஜீ சக்தியை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை வண்ண டேஷ் போர்டு, ஏ.ஸி, பவர் ஸ்டீயரிங், ஆடியோ சிஸ்டம், யூஎஸ்பி போர்ட், முன் பக்க பவர் விண்டோஸ் என பல வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஹூண்டாய் ஐ10-ல் இருக்கும் ஸ்டீயரிங்குக்கு இணையான ஸ்டீயரிங்கே ஹூண்டாயின் சின்ன காரிலும் இடம் பிடித்துள்ளது.

ஆல்ட்டோவுக்கு ரியல் போட்டி!

தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்காக டாடா நானோ, எட்டியோஸ் லிவா போன்று சென்டர் கன்ஸோலில் டயல்களை வைக்காமல், ஸ்டீயரிங்குக்குப் பின்னாலேயே வைத்திருக்கிறது ஹூண்டாய். எடை குறைவான, சிசி குறைவான, பவர் குறைவான இந்த கார் லிட்டருக்கு 20 கி.மீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலையைப் பொறுத்தவரை, ஆல்ட்டோவின் விலையை ஒட்டியே இந்த சின்ன காரை 2.5 - 3 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது ஹூண்டாய். முதன்முறையாக மாருதியின் கோட்டைக்குள் நுழைந்திருக்கும் ஹூண்டாய், ஆல்ட்டோவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை!