Published:Updated:

இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் தமிழ், படங்கள்: பா.காளிமுத்து

இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் தமிழ், படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

இறைவன் படைப்பில் என்றும் மிளிர்கிற குழந்தையின் சிரிப்பைப்போல, மனிதன் படைத்து இன்னும் அதன் 'கெத்து’ குறையாமல் இருப்பது ஜீப் மட்டும்தான். கரெக்ட்டா..?'' என்று தனது மாருதி ஜிப்யைத் தடவிக்கொடுத்தார் வெங்கடேஸ்வரன். இந்த மாதம் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் பகுதிக்கு, தனது ஜிப்ஸியில்தான் பயணிக்க வேண்டும் என்று அடம்பிடித்து, நம்மை மதுரைக்கு வரவழைத்திருந்தார் வெங்கடேஸ்வரன். ''கார்ல போகணும்னா ரோடு வேணும்; ஆனா, ரோடே இல்லைன்னா ஜீப்லதான் போகணும்! அதுவும் நம்ம ஜிப்ஸியில, கடற்கரை மணல்ல, தனுஷ்கோடிக்கு ஒரு ட்ரிப் வந்து பாருங்க... அப்புறம் உங்களுக்கு கார்ல போறதே பிடிக்காது!'' என்று தனது ஜிப்ஸியின் மேல் சபதம் செய்தார்.

இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையில் 'குவாலிட்டி கார் கேர்’ என்ற பெயரில் பழைய கார் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் செய்து வரும் வெங்கடேஸ்வரன், ஜீப் பிரியர். ''என்னை 'ஃபோர் வீல் டிரைவ்’ வெறியன்னு சொல்லலாம். சீக்கிரம் ஒரு ஆஃப் ரோடு கிளப்கூட ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!'' என்றார். ''மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் வழியா தனுஷ்கோடி 193 கி.மீ-னு நினைக்கிறேன்!'' என்றவாறு ரூட் மேப்பைக் கையிலெடுத்தார் வெங்கடேஸ்வரன்.

''நண்பா... என்னை மறந்துடாத... கிரேட் எஸ்கேப்புக்காகவே பொறந்தவன் நான்!'' என்று தனது ஃபோர் வீல் டிரைவ் பொலேரோவை பச்சக்கென நம் முன் நிறுத்தினார் வினோத். வெங்கடஸ்வேரனின் நண்பரான வினோத், 'மோட்டார் விகடனுடன் பயணம்’ என்கிற வாட்ஸ்-அப் மெசேஜ் கிடைத்தவுடன், இரவோடு இரவாக பொலேரோவில் சென்னையில் இருந்து மதுரைக்குப் பறந்து வந்திருந்தார்.

1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட ஜிப்ஸியும், 1.5 லிட்டர் டீசல் பொலேரோவும் 'நாங்க ரெடி... நீங்க கிளம்புங்க’ என்பதுபோல நின்றிருந்தன. இரண்டு வாகனங்களிலுமே பக்கா கியர்பாக்ஸ் உள்ளன. சாதாரண சாலைகளில் டூ வீல் லோ - ஹை, கரடுமுரடான ஆஃப் ரோடுகளில் ஃபோர் வீல் லோ - ஹை என நான்கு விதமான வசதிகளில், தேவைக்கேற்ப தேர்வு செய்து ஓட்டலாம். 80bhp கொண்ட ஜிப்ஸியும் 63bhp கொண்ட பொலேரோவும், டூ வீல் டிரைவ் ஆப்ஷனில் கிட்டத்தட்ட 130 கி.மீ வரை, செடான் கார்களுக்கு இணையாகப் பறக்கின்றன. ஆனால், இரண்டுமே ஏரோ-டைனமிக் டிஸைனில் 'வீக்’ என்பதால், அதிக வேகங்களில் ஜிப்ஸியும் பொலேரோவும் காற்றில் அலைபாய்கின்றன.

இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

மானாமதுரை தாண்டி பரமக்குடியில் மதிய உணவை அருந்திவிட்டு மறுபடியும் பயணம். ராமநாதபுரம் தாண்டியதும், ராமேஸ்வரத்துக்கு 56 கி.மீ முன்பாக இடது பக்கம் திரும்பினால், அரியமான் கடற்கரை வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட், இந்த அரியமான். ஏனென்றால், அலைகள் மிக மிக ஜென்ட்டிலாக, அமைதியாகக் கரையைத் தழுவுவதால், குளிப்பதற்கு இங்கு தடை இல்லை. 'குஷி பீச்’ என்றும் இதற்குப் பெயர் உண்டு. வேர்க்கடலை, மீன் வறுவல், பாப்கார்ன், மாங்காய், சுண்டல் என்று புரோட்டீன் தின்பண்டங்களை மென்றபடி மக்கள் குஷியாக இருக்கிறார்கள். எந்த நேரமும் கண்ணாடி போலவே ஜொலிக்கும் அரியமான் கடற்கரையில் இன்னொரு விசேஷம் - இதற்கு இரண்டு கரைகள். கரையிலிருந்து நீந்திச் சென்றால், கொஞ்சூண்டு கடல் தாண்டி இன்னொரு கரை வருகிறது. நீச்சல் தெரிந்த ஜாம்பவான்கள் சிலர் தைரியமாக நீந்திச் சென்று, மணல் திட்டு போன்று காணப்படும் அந்த நடுக்கரையில் நின்று, இளம் பெண்களை இம்ப்ரஸ் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அரியமானில் 'பாரா செய்லிங்’ எனப்படும் பாராசூட் விளையாட்டும் உண்டு என்றார்கள். விரைவில் வாட்டர் தீம் பார்க் ஒன்று கட்டுவதற்குத் திட்டம் தீட்டியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. கடற்கரையைச் சுற்றியுள்ள கசாரினா (casuarina) என்று சொல்லப்படும் சவுக்கு மரங்கள், அரியமானுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

நாம் சென்றபோது, டொயோட்டா இனோவா ஒன்று கசாரினா மரங்களுக்கு நடுவே மணலில் சிக்கி, சக்கரங்கள் மணல் புதைகுழியை ஏற்படுத்தி, வெளியே வர முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. தடாலென ஜிப்ஸியில் ஃபோர் வீல் டிரைவ் கியரை செலக்ட் செய்து, வீல் ஹப்களை லாக் செய்து, ரெஞ்ச் எனப்படும் ஹூக் வசதிகொண்ட கம்பியின் மூலம் இனோவாவை மணல் புதைகுழிக்கு மேலே எழுப்பியதில், அரியமான் உற்சாகமானது.

இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

''கார் நமக்கு நல்ல நண்பன் மாதிரி. ஒரு வீரனை போரிலும், யோக்கியனை கடனிலும், மனைவியை வறுமையிலும், நண்பனைக் கஷ்டகாலத்திலும் தெரிஞ்சுக்கலாம்!'' என்று தத்துவம் சொன்னார் வெங்கடேஸ்வரன்.

குஷியுடன் குஷி பீச்சில் என்ஜாய் செய்துவிட்டு, நெடுஞ்சாலையில் டூ வீல் டிரைவ் மோடில் பறந்தோம். மாலை மங்குவதற்குள் ராமேஸ்வரம் வந்திருந்தது. மாலை வேளையில் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் மீது நின்று, மென்மையாக மிதக்கும் மீன்பிடிப் படகுகளையும், சூரிய அஸ்தமனத்தையும் காண்பதுபோல சும்மா கற்பனை செய்து பார்த்தாலே, அம்புட்டு அழகாக இருக்கும். நிஜத்தில் இன்னும் பிரமாதமாக இருந்தது. பொதுவாக, பாலங்களில் கனரக வாகனங்கள் செல்லும்போது, சின்னதாக ஒரு ஜெர்க் கிடைக்குமே... அது ராமேஸ்வரத்தில் கூடுதல் பயம் கலந்த சுகம்.

'தனுஷ்கோடி காலையிலதான் போட்டோவுக்கு அழகா இருக்கும்!’ என்று முடிவெடுக்கப்பட்டதால், இரவு ராமேஸ்வரத்தில் கழிந்தது. ''ராமேஸ்வரம் வந்துட்டு கருவாட்டுக் குழம்பும் மீனும் சாப்பிடலேன்னா மோட்சம் கிடைக்காது!'' என்றார் பொலேரோ வினோத். மீன் வறுவல் சாப்பிட்டு தங்கிவிட்டு, மறுநாள் அதிகாலை தனுஷ்கோடிக்குக் கிளம்பினோம். 12 கி.மீ தாண்டி முகுந்தராயன் சத்திரம். இதுதான் தனுஷ்கோடியின் நுழைவு வாயில் மற்றும் செக்போஸ்ட். செக்போஸ்ட்டில் ஃபோர் வீல் டிரைவ் வாகனம்தானா என்று உறுதி செய்த பிறகே உள்ளே அனுப்புகிறார்கள். அனுமதி கிடைத்தாலும், டூ வீல் டிரைவ் கார்களால் அடிக்கணக்கில்கூட நகர முடியாது. அந்த அளவு மணல் பாலை. ராமேஸ்வரத்தில் இருந்து பஸ்ஸில் தனுஷ்கோடிக்கு வர வேண்டுமென்றால், முகுந்தராயன் சத்திரத்திலேயே இறக்கி விட்டுவிடுகிறார்கள். அதற்குப் பிறகு, ஃபோர் வீல் டிரைவ் வேன்கள், ஜீப்களில்தான் தனுஷ்கோடிக்குச் செல்ல வேண்டும். தலைக்கு 150 முதல் 200 வரை வசூலிக்கிறார்கள்.

இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

சின்ன கியர் லீவரை 'ஃபோர் லோ’வில் செட் செய்து ஆக்ஸிலரேட்டரை மிதித்ததில், குபுகுபுவென டார்க் பொங்கி வழிந்து சீறியது ஜிப்ஸி. பொலேரோ பின்தொடர, பொட்டல் காடாக காலை வெயிலில் மின்னியது தனுஷ்கோடி. ''இந்த த்ரில்லிங் ரைடுக்காகவே மஹிந்திராவில் ஃபோர் வீல் டிரைவ் கியர் ஆப்ஷன் ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்கினேன். ஆன்-ரோடு 6.75 லட்சம் ஆச்சு!'' என்று உற்சாகமாக ஆக்ஸிலரேட்டரை மிதித்தார் வினோத். சாதாரண சாலைகளில் செல்வதுபோல, முக்காமல், முனகாமல் சீறியது பொலேரோ. சீமைக் கருவைப் புதர்களுக்கு நடுவே சேற்றை வாரியிறைத்தபடி ஜிப்ஸி முன்னேற, இரண்டாம் உலகமாக விரிந்து கொண்டிருந்தது தனுஷ்கோடி.

திடும்மென ஒரு மணல் மேடு... சுற்றிலும் கடல் சிப்பிக் கடைகள்.... எதிரே பிரம்மாண்டத்தின் எச்சமாக, பாதி இடிந்த நிலையில் ஒரு கட்டடம். ''இதுதாங்க தனுஷ்கோடி ரயில்வே ஸ்டேஷன். 1964-க்கு முன்னால, சென்னையிலேருந்து நேரா கொழும்புக்கு டிக்கெட் உண்டு. தனுஷ்கோடியில இறங்கி கப்பல்ல தலைமன்னார் போய், அங்கிருந்து கொழும்புக்குப் போயிரலாம்!'' என்று தழும்பாக மாறியிருந்த ரயில் தண்டவாளத்தைக் காண்பித்தார் உள்ளூர்வாசி ஒருவர்.

இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

1964 - டிசம்பர் 22 அன்று, அந்தமானில் உருவான புயல் தனுஷ்கோடியைச் சூறையாடியதற்கு முன்பு வரை, சுறுசுறுப்பான நகரம் தனுஷ்கோடி. பயணிகள் போக்குவரத்தைத் தாண்டி, சரக்குப் போக்குவரத்திலும் துறைமுக நகரமாக விளங்கியதாகச் சொன்னார்கள்.

சிதைந்துபோன அஞ்சல் நிலையக் கட்டடத்துக்குப் பக்கத்தில், பவளப் பாறைகளால் கட்டப்பட்ட இன்னொரு கட்டடம். பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய சர்ச் என்றார்கள். கல் பாறைகள், பவளப் பாறைகள், செங்கல் என்று கலந்து கட்டி, பாதி இடிந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்தது. கட்டடங்களுக்குப் பின்புறம் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி அலை அடித்துக் கொண்டிருந்தது கடல்.

சர்ச்சுக்குப் பக்கத்தில் மொத்தம் நாலே நாலு குடிசைகளில் குடும்பங்கள் இருந்தன. இங்கு பயணிப்பதற்குச் சாலை வசதி இல்லை; பஸ் போக்குவரத்து இல்லை;  வெளிச்சத்துக்கு மின்சாரம் இல்லை; அவசரத்துக்கு ஆஸ்பத்திரி இல்லை. ஆனாலும், சந்தோஷமாகவே இருக்கிறார்கள் தனுஷ்கோடிவாசிகள்.

''வூட்டுக்காரரும் கொளுந்தனாரும் வள்ளத்துக்குப் போயிருக்காக... மீன் பிடிச்சு ராமேஸ்வரத்துல வித்துப்புட்டு வருவாக... இப்போ கவர்மென்ட்டுல ஏதோ அடுப்பு, ஃபேன்லாம் தர்றாகளாம்ல... ஆனா, எங்களுக்குத்தான் அட்ரஸு, கரன்ட் எதுவும் இல்லீங்களே... 'ஊள’ மீன் கொழம்பு வெக்கிறேன்... ரெண்டு வாய் சாப்புடுறீயளா?'' என்று வெள்ளந்தியாகச் சொன்னார், அங்கே மீன் ஆய்ந்து கொண்டிருந்த தனம் என்ற பெண்மணி.

இரண்டாம் உலகம் தனுஷ்கோடி!

மறுபடியும் சேறு, சகதி, சீமைக் கருவைப் புதர்கள், மணல் முகடுகள், கிட்டத்தட்ட இரண்டடி ஆழ ஈர மணலில் மீண்டும் நமது பாலைவனப் பயணம் ஆரம்பமானது. தூரத்தில் சில தனுஷ்கோடிவாசிகள் தண்ணீர் தேடி குடங்களோடு அலைந்து கொண்டிருந்தனர். ''யாரு... பத்திரிகைக்காரவுகளா... காசு பணம்லாம் வேணாம். கவருமென்ட்ல சொல்லி ஒரு தண்ணிக் குழாய் மட்டும் போட்டுத் தரச் சொன்னீயன்னா புண்ணியமாப்போகும். ஒரு கிலோ மீட்டரு அப்பால ஊத்துத் தண்ணி வரும்... இப்போதைக்கு மொண்டு மொண்டு குடத்தை ரொப்பிக்கிட்டு வாரோம்!'' என்றார் ஒரு கர்ப்பிணிப் பெண்.

சில கி.மீ தாண்டி, 'இதுக்கு மேல வழியில்லை’ என்பது மாதிரி கடல் முட்டியது. இதை சங்கமம் என்றும், அரிசல்முனை என்றும் சொல்கிறார்கள். வெயிலில் தகதகவென மூன்று பக்கமும் மின்னியது கடல். காதலர்களின் ரகசியங்களையும், குழந்தைகளின் குதூகலங்களையும், தனுஷ்கோடி மக்களின் தீராத ரணங்களையும் நன்கு உணர்ந்த அலை ஒன்று, பயணத்தின் முடிவில் நமக்கு விடை கொடுப்பதுபோல, நம் காலடியில் நுரைகளை விட்டுச் சென்றது.

வாசகர்களே!

நீங்களும் இதுபோல் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி (044 - 66802926) தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!