மலைப்பு... மயக்கம்... மர்மம்....7

மணாலியில் இருந்து 'லே’ 475 கி.மீ தூரம். அதிகாலை 5 மணிக்கு மணாலியில் இருந்து புறப்பட்டு, பல கணவாய்களைக் கடக்கும்போது இயற்கை, வாகனம், நமது உடல் போன்றவற்றால், இடையூறுகள் ஏதும் இல்லாதிருந்தால்.. இரவு 9 மணிக்கு 'லே’ நகரத்தை அடையலாம். ஆனால், அதில் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. இமயமலைத் தொடர்களின் மையப் புள்ளியாகவும், இயற்கையின் மாயாஜாலமாகவும், சாகசப் பிரியர்களின் அதிகபட்ச இலக்காகவும் அமைந்துள்ள மணாலி - லே பயணத்தை, இரண்டு அல்லது மூன்று நாட்களாகத் திட்டமிட்டு அமைப்பதே பயணத்தைச் சிறப்பானதாக ஆக்கும். மலைத் தொடர்களின் அழகைப் பதற்றமின்றி ரசிப்பதுடன், இயற்கையுடன் நமது உடலும் ஒன்றிவிடும். இரவில் தங்குவதற்கு கெலாங், ஜிஸ்பா, டார்ச்சா, பரத்பூர், சார்ச்சு, பங் ஆகிய இடங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர கிராமங்கள் உள்ளன. இவற்றுள் சார்ச்சு மற்றும் பங் ஆகிய இரண்டும் அபாயகரமானவை எனத் தெரிந்திருந்தாலும், அங்கு சென்ற பிறகுதான் முழுமையாக உணர முடிந்தது.

ஆறாம் நாள் தங்கிய சார்ச்சுவின் இரவுப் பொழுதில், பெரும்பாலானோர்க்கு உடல் பல உபாதைகளைக் காண்பித்தது. ஆக்ஸிஜன் குறைபாட்டால் இரவு முழுக்க சுவாசப் பிரச்னை. உறக்கத்துக்கும் மரணத்துக்குமான போராட்டமாக அதை என்னால் உணர முடிந்தது. 6 டிகிரி செல்சியஸில் வீசிய குளிர்காற்றில், கூடாரங்கள் சப்தம் எழுப்பிக்கொண்டே இருந்தன. இருப்பினும், அந்தப் பலமான குளிர்காற்றிலும் ஆக்ஸிஜன் அளவு குறைவாகவே இருந்தது. ஆக்ஸிஜன் ஸ்ப்ரேக்களின் உதவியே இரவை விடியச் செய்தது. சார்ச்சுவின் விடியலுக்காக, ஒட்டுமொத்தக் குழுவுமே உறக்கமின்றி காத்திருந்தது. ''பலபேர் ஒன்றுகூடி தண்ணீரில் அமுக்குவதைப்போல இருந்தது'' என ஸ்வாமிபாலா எனும் நண்பர் குறிப்பிட்டார். ''சுத்தியலால் பின் மண்டையில் ஓங்கி அடிப்பதைப்போல உணர முடிந்தது'' என்றார் சாரு நிவேதிதா. எங்கள் குழுவில் 60 வயதை நெருங்கியவர், அவர் ஒருவர்தான். மற்றவர்கள் 40-க்கும் குறைவு. மணாலியில் புறப்பட்டபோது, டூர் ஆபரேட்டரின் கவனம் முழுக்க சாரு மீதுதான் இருந்தது. சார்ச்சுவில் இருந்து ஏழாம் நாள் காலை ஏழு மணி அளவில் 'லே’ நகரத்தை நோக்கிப் புறப்பட்ட போதுதான், அனைவருக்குள்ளும் நிலவிய ஒருவித பதற்றம் தணிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலைப்பு... மயக்கம்... மர்மம்....7

இமாச்சல் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களின் எல்லைதான் இந்த சார்ச்சு. ராணுவ முகாமும், இலவச மருத்துவ முகாமும் உள்ளன. இரவு முழுக்க மூச்சுத் திணறலில் அவதிப்பட்ட நாங்கள், கால்பந்தும் கிரிக்கெட்டும் மூச்சிரைக்க விளையாடிக்கொண்டிருந்த ராணுவ வீரர்களைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டோம்!

மணாலி நகரைக் கடந்ததுமே செல்போன் அலைவரிசை துண்டிக்கப்பட்டுவிடும். சார்ச்சுவின் ராணுவ மையத்தில் உள்ள தொலைபேசி நிலையத்தில், அவசரக் கால தேவைக்காக சுற்றுலாப் பயணிகள் பேச அனுமதி உண்டு. குடும்பத்தினருடன் பேசுகிறோமா அல்லது தோழிகளுடன் மொக்கை போடுகிறோமா என்பதை, ராணுவ வீரர் ஒருவர் முறைத்தபடியே கண்காணித்துக்கொண்டிருப்பார். விரைந்து பேசி முடித்து, அடுத்தவருக்கு வழிவிடுவது நலம். வாகனப் பரிசோதனை மையத்தில் பதிவு செய்துகொண்டு, சற்றுநேரப் பயணத்துக்குப் பிறகு சாலையின் குறுக்கே பாயும் நதியைக் கடந்து 'லடாக்’ பிராந்தியத்தின் முதலாவது மலையின் அடிவாரத்தைச் சென்றடைந்தோம்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....7

சாலையை அரித்துக்கொண்டிருந்த நதியானது 'ஸுரு சமவெளி’ நோக்கிப் பாய, மலை ஏற்றத்தின் முதலாவது கொண்டை ஊசி வளைவில் 'யு டர்ன்’ எடுத்தோம். இந்த மலையின் உச்சியை அடைந்து மறுமுனை செல்ல வேண்டுமெனில், 22 கொண்டை ஊசி வளைவுகளை தலைச்சுற்றலுடன் கடக்க வேண்டும். இந்த வளைவுகளுக்கு 'கட்டா லூப்’ என்று பெயர். மலை இறங்கியதும் அங்கிருந்த ஒற்றைக் கூடார உணவகத்தில் காலை உணவு அருந்தினோம். திபெத்திய ஸ்பெஷலான மொமொ இங்குக் கிடைத்தது. ஜிஞ்சர் ஹனி டீயும் பருகிவிட்டு அடுத்த மலையைக் கடக்கத் தயாரானோம். இந்தப் பகுதியின் முக்கிய கணவாய்கள் - நகீ லா(15,500 அடி) மற்றும் லா சுலுங் லா (16,600 அடி). 'பங்’ எனும் எங்களது அடுத்த நிறுத்தத்துக்கு முன்பாக, சாலைகள் மிக மோசமாக இருந்தன. சில இடங்களில் சாலையே கிடையாது. ஆங்காங்கே சில சிற்றாறுகள் சாலைக்குப் பக்கவாட்டில் இணைந்துகொண்டன. சில இடங்களில் சாலைகள் குறுகியபோது சிற்றாறுகளின் பாதையே, வாகனங்கள் பயணிக்கும் பாதையாக மாறியது. கோடைக்காலம் என்பதால், உறைபனி முற்றிலும் உருகி மலைகளும், ஆற்றுப் படுகைகளும் வறண்டுகிடந்தன. எனவே, சிக்கல் இன்றிப் பயணித்தோம். அதேசமயம், ஆறு முழுக்க வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது, எப்படிப் பயணிப்பார்கள் எனும் ஆர்வமும் தொற்றிக் கொண்டது.

இப்போது மலைகளின் வடிவமும், நிறமும், தன்மையும் மாறியிருந்தன. சிறிது தூரத்துக்கு மிகப் பெரிய பாறைகளால் ஆன செந்நிற மலைகளாகவும், பின்னர் கடினமான மணல் மேடுகளால் ஆன மலைகளைப் போலவும் காட்சியளித்தன. காற்றினால் அரிக்கப்பட்டு கூர்மையாகச் செதுக்கப்பட்ட மண் சிற்பங்கள்போல பலவித வடிவங்களால் ஆன மலைகள் வழிநெடுக வரவேற்றன.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....7

நண்பகலில் 'பங்’ (15,100 அடி) எனும் இடத்தை அடைந்து தேநீர் பருகி சற்று ஓய்வெடுத்தோம். இங்கும் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. முந்தின நாள் இரவில் தூக்கமின்மை, Acute Mountain Sickness  மற்றும் மோசமான சாலைகளால், அனைவருக்கும் உடல் சோர்வு தொற்றிக்கொண்டது. இடைவிடாது தண்ணீரும், பழச்சாறுகளும் பருகிக்கொண்டே இருந்தோம். ஒரே ஆறுதலாக 'பங்’-ல் இருந்து அடுத்த 30 கி.மீ தூரத்துக்குச் சாலை நன்றாக இருந்தது. ஆனாலும், அடுத்த மலையேற்றம் ஆரம்பமான சற்று நேரத்தில் மீண்டும் சாலைகளில் புழுதி பறந்தது. சிதறிக் கிடந்த கற்கள் மீது புல்லட்டின் சக்கரங்கள் தள்ளாடின. இப்போது நாங்கள் ஏறத் துவங்கிய மலையின் உச்சி 'டங் லங் லா.’ இதன் உயரம் 17,480 அடி. அதாவது மோட்டார் வாகனங்கள் பயணிக்கக்கூடிய உலகின் இரண்டாவது அதிகபட்ச உயரம் கொண்ட உச்சி இது. கணவாயின் உச்சியை அடைந்தபோது, சுற்றியிருந்த மலைத் தொடர் முழுக்க முழுக்க சாம்பல் நிறமாக மாறியிருந்தது. அங்கு, நடமாடும் தேநீர் கடைகள் சில தென்பட்டன. சாலைப் பணியாளர்கள் சிலர் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அடுத்த இரண்டு மணி நேரப் பயணம், மலை இறங்குவதில் கடந்துபோனது. 'டங் லங் லா’-வில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள 'உப்ஷி’ எனும் கிராமத்தை அடைந்தபோது, மாலை 3 மணியைக் கடந்திருந்தது. இங்கு தங்கும் விடுதிகளும், தொலைபேசி மையங்களும் உள்ளன. இளைப்பாறுதலுடன் மதிய உணவை இங்கே உட்கொண்டோம்.  இந்தக் கிராமத்தின் மறுமுனையில் சிந்து நதியைக் கடந்து லே நகர் செல்ல வேண்டும். இங்கிருந்து சுமாராக 50 கி.மீ தூரத்தில் லே நகர். சற்று நேரப் பயணத்தில் சாலையில் வலதுபுறம் சிந்து நதி இணைந்துகொண்டது. மூன்று நாட்கள் பயணத்துக்குப் பிறகு, இப்போதுதான் மனிதர்கள் நடமாட்டத்தையும், கால்நடைகளையும், விவசாய நிலங்களையும் கண்டோம்.

லே நகரத்துக்கு 35 கி.மீ முன்பாக, 'காரு’ எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ள பரிசோதனை மையத்தில், மீண்டும் ஒருமுறை வாகனத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். நமது அடையாள அட்டையினையும் அவசியம் காண்பிக்க வேண்டும். இந்த நகரைக் கடந்ததும் லே நோக்கிய சாலையில், சிந்து நதி இப்போது சாலையின் இடதுபுறமாகப் பாய்ந்து எங்களுடனேயே பயணித்தது. இதுவரை பார்த்து வியந்த இமயமலைத் தொடர்களுக்கும், லே நகர எல்லையில் இருந்து வரவேற்கும் இமயமலைக்கும் பெரும் வேறுபாட்டினை உணர முடிந்தது. இந்த மலைகள் மிகவும் வறண்டு கற்களாலும், மண்பாறைகளாலும் சூழப்பட்டிருந்தன.

நகருக்கு முன்னதாகவே கணிசமான அளவில் ராணுவ வாகனங்கள் ரோந்துப் பணியில் இருந்தன. பிரமாண்டமான ராணுவ முகாம்கள் பீரங்கிகளுடன் எங்களை வரவேற்றன. லே நகரைச் சென்றடைந்த போதுதான், மூன்று நாட்கள் பயணத்தின் பாதுகாப்பு இல்லாத அச்ச உணர்வு எங்களிடம் இருந்து சற்று நீங்கியது!

(சிகர்ர்ரூம்...)