Published:Updated:

மாருதி... ரெடர் டேர் ராலி!

கா.பாலமுருகன்

மாருதி... ரெடர் டேர் ராலி!

கா.பாலமுருகன்

Published:Updated:

ரேஸ் ட்ராக்கில் உறுமும் ரேஸ் போட்டிகளைவிட த்ரில்லானது ராலி. இந்தப் போட்டிக்கு, சாலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை எல்லாம் இல்லை. கிராமச் சாலை, மலைச் சாலை, மண் சாலை, சாலையே இல்லாத காடு, பாலைவனம்... இப்படி எதில் வேண்டுமானாலும் ராலி போட்டிகள் நடக்கும். சமீபத்தில் மாருதி நிறுவனம் 'மாருதி தக்ஷின் டேர்’ என்ற பெயரில் ஒரு மெகா ராலியை ஐந்து தினங்கள் நடத்தியது. பெங்களூருவில் துவங்கி கோவாவில் நிறைவு பெற்ற இந்த ராலியில், பார்வையாளராகப் பங்கேற்றேன்.

மாருதி... ரெடர் டேர் ராலி!

மாருதிக்கு இது ஆறாவது ராலி. தென்னிந்தியாவில் வட கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக இந்த ராலி நடைபெற்றது. எக்ஸ்ட்ரீம், எண்ட்யூரன்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளில், மாருதி ஜிப்ஸி முதல் ஹோண்டா சிட்டி வரை அனைத்து வகை கார்களும் கலந்துகொண்டன. இதில், எக்ஸ்ட்ரீம் பிரிவில் பைக்குகளும் ஸ்கூட்டர்களும் கலந்து கொண்டதுதான் ஆச்சரியம். ராலி என்பது சாலையில் நடக்கும் ரேஸ் போட்டி அல்ல. இது முற்றிலும் மாறுபட்டது. ராலி ஆரம்பிப்பது பொதுமக்கள் புழங்கும் சாலையில் இருந்துதான் என்றாலும், ஒரே சமயத்தில் அனைத்து வாகனங்களும் புறப்படுவது இல்லை. 10 நிமிடங்கள் இடைவெளியில் ஒவ்வொரு வாகனமாக அனுப்புகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுச்சாலையில் நடத்தப்படும் எண்ட்யூரன்ஸ் பிரிவுக்கு, அதிகபட்ச வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வந்தால், பெனால்ட்டி வழங்கி பாயின்ட்டில் கை வைத்து விடுவார்கள். எனவே, பொதுச் சாலையில் எண்ட்யூரன்ஸ் பிரிவுக்கு அதிகபட்ச வேகமே மணிக்கு 45 கி.மீ-தான். இந்தப் பிரிவை TSD எக்ஸ்ட்ரீம் பிரிவு, முற்றிலும் வேறுபட்டது. இந்தப் பிரிவில் பொதுச்சாலையில் எந்த போட்டியும் கிடையாது. அது டிரான்ஸ்போர்ட் ஏரியா மட்டுமே! போட்டி நடைபெறும் இடத்தில் 100 சதவிகிதம் போக்குவரத்து மூடப்பட்டு இருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட தூரத்தில், யார் மிக விரைவாகக் கடக்கிறார்களோ, அவர்கள்தான் வின்னர். அந்த தூரம் 10 கி.மீ முதல் 30 கி.மீ தூரம் வரைகூட இருக்கும். ஆனால், இந்தச் சாலை எப்படிப்பட்ட சாலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதாவது, சாலையே இல்லாமல் வெறும் மண் பாதையாகக்கூட இருக்கும்.

மாருதி தக்ஷின் டேர் ராலி, இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. எண்ட்யூரன்ஸ் பிரிவுக்கு முதல் இரண்டு நாட்கள் வேறு ரூட். முதல் நாள் 331 கி.மீ பயண தூரம். பெங்களூரு டு மைசூர் என்றாலும் வழக்கமான ரூட் அல்ல. இரண்டாவது நாள், மைசூர் டு ஷிமோகா. மூன்றாவது நாள், ஷிமோகா டு ஹாஸ்பேட் என எக்ஸ்ட்ரீம் பிரிவுடன் வந்து மூன்றாவது நாள் இணைந்துகொண்டது. என்றாலும்,, எண்ட்யூரன்ஸ் பிரிவின் பயணப் பாதை முற்றிலும் வேறு என்பதால், இரண்டு பிரிவுகளும் ஒரே சமயத்தில் வேறு வேறு இடங்களில் மாருதி நடத்தியது அபாரம். காரணம், போட்டியாளர்கள் மட்டுமே சுமார் 100 பேர் இருப்பார்கள். போட்டி நடத்தும் ஸ்போர்ட்ஸ் கிளப் கண்காணிப்பாளர்கள், மார்ஷல்கள், பாதுகாவலர்கள், மீட்புப் பணியாளர்கள், மெக்கானிக்குகள், மருத்துவக் குழுவினர், பத்திரிகையாளர்கள், எரிபொருள் வாகனம், மீட்பு வாகனம் வயர்லெஸ் மைக் சகிதம் பெரும்படையே இந்த ராலியில் பங்குகொண்டது.

மாருதி... ரெடர் டேர் ராலி!

டெல்லி, பாம்பே, கொல்கத்தா, மைசூர், பெங்களூர், கொச்சி என எல்லா மாநிலங்களில் இருந்தும் கலந்துகொண்ட ராலி வீரர்களில் கணிசமானவர்கள் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். இங்கிருந்து மட்டும் 12 பேர் வரை இந்த ராலியில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிததக்கது.

எண்ட்யூரன்ஸ், எக்ஸ்ட்ரீம்  எனும் இந்த இரு பிரிவுகளில் எக்ஸ்ட்ரீம் பிரிவுதான் படு த்ரில்லாக இருக்கும் என்பதால், அந்த அணியுடன் இணைந்துகொண்டேன். எக்ஸ்ட்ரீம் பிரிவு ராலி பெரும்பாலும் விண்ட் மில் நிறைந்த மலைச் சாலைகளில்தான் நடந்தது. முதல் நாள் பெங்களூருவில் அதிகாலை புறப்பட்டு, நால்வழிச் சாலையில் தும்கூர் வழியாக சித்ரதுர்கா அடைந்ததும், பக்கவாட்டுச் சாலையில் பிரிந்து நின்றோம். நீண்ட மலைத் தொடர். அதில் வரிசையாக விண்ட் மில்கள். மலை மீது விண்ட் மில் அமைப்பதற்காகப் போடப்பட்டச் சாலைகள்தான், எக்ஸ்ட்ரீம் ராலிக்கான டெரர் டேர். ராலி துவங்கும் இடத்தில் இருந்து திருவிழாவுக்கான ஏற்பாடு போல பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்களோ, வேறு வாகனங்களோ அந்தச் சாலையில் வந்துவிடாதபடி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வளைந்து நெளிந்து, ஏறி இறங்கிச் சென்ற மலைச் சாலையில், ஒரு மலையின் உச்சியில் பாதுகாப்பான இடத்தில் எங்களை இறக்கிவிட்டனர்.

ராலி தொடங்கிவிட்டால், அது முடியும்வரை சாலைக்குள் வரக் கூடாது. காலை 7 மணிக்கு பலமான குளிர் காற்றும் அவ்வப்போது சாரலும் நடுங்க வைத்தன. காலை 8 மணிக்கு முதல் கார் சீறிக்கொண்டு வரும் சத்தம் கேட்டது. அனைவரும் ஆர்வமாக சாலையைப் பார்த்தபடி இருக்க... உயரமான இன்னொரு மலை மீதிருந்து இறங்கிக்கொண்டிருந்தது அந்த கார். அருகே வர வர ஆர்வம் தாங்காமல் சாலையின் ஓரம் வந்து நிற்க... அந்த மண் சாலையில் புழுதியையும் சிறு சிறு கற்களையும் சிதறடித்தபடி வந்தது மாருதி ஜிப்ஸி. வந்த வேகத்தில் சாலையின் ஓரம் நின்றவர்கள் மீது கற்கள் தெறிக்க... ஓட்டம் பிடித்தோம். அப்போதுதான் எங்களை ஏன் பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்கள் என்பது புரிந்தது. அடுத்தடுத்த கார்கள் சீறியபடி வர.. வளைவுகளில் ட்ராக் ஆகி சுதாரித்து நேராகிப் பறந்தன. கொஞ்சம் பிசகினால், அந்தரத்தில் கார் பறந்து பாதாளத்தில் விழுந்துவிடும்.

பாதுகாப்பு உடைகள் மட்டுமல்ல, காரிலும் சேஃப்ட்டி கேஜ் பொருத்தப்பட்டிருப்பது இந்த எக்ஸ்ட்ரீம் ராலிக்கு முக்கியமான அம்சம். முதல் நாள் ராலியில் ஒரு ஹோண்டா சிட்டி மலைச் சரிவில் இருந்த சின்னப் பள்ளத்தில் பாய்ந்துவிட்டது. காரில் இருந்த டிரைவருக்கும் நேவிகேட்டருக்கும் எந்தக் காயமும் இல்லை. இரண்டாவது நாள் தாவணகெரெ அருகே ராலி. மூன்றாவது நாள் ஹம்பி அருகே இருக்கும் ஜிந்தால் டவுன் ஷிப்பைச் சுற்றி நடந்தபோது, ஹூண்டாய் ஆக்ஸென்ட் கார் ஒன்று, மேடான பகுதியில் இருந்து இறக்கத்தில் இறங்கும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்குள் அந்தரத்தில் பறந்து, பாறையில் விழுந்தது. இதன் பின்னால் வந்த ஜிப்ஸியும் கன்ட்ரோல் இழந்து பாறையில் மோத... இந்த பெரும் விபத்தில் யாருக்கும் சிறு காயம்கூட இல்லை என்பதுதான் அதிசயம்.

மாருதி... ரெடர் டேர் ராலி!

பைக்குகளும் ஸ்கூட்டர்களும் உறுமியபடி மேடு பள்ளங்களில் அந்தரத்தில் பறந்த காட்சி காணக் கண் கொள்ளவில்லை. ஐந்தாவது நாள் கொப்பல் என்ற இடத்தில் ராலி முடிந்ததும் ஹூப்ளி, கார்வார் வழியாக கோவா மாநிலத்துக்குள் நுழைந்தது ராலி. மறுநாள் வெற்றியாளர் அறிவிப்பு.  

ஐந்து நாட்களிலும் மாறி மாறி முன்னிலையில் இருந்தவர்கள் மொத்தக் கணக்கீடுகளின்படி, இறுதியாக எக்ஸ்ட்ரீம் கார் பிரிவில் சந்தீப் சர்மா - வருண் தவேஸார் ஜோடி முதல் இடத்தைப் பிடித்து கோப்பைகளை வென்றது. சஞ்சய் அகர்வால் - வேணு ரமேஷ்குமார் ஜோடி இரண்டாம் இடத்தையும், அமன் ப்ரீத் - சந்தீப் ஹால்டர் ஜோடி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

எக்ஸ்ட்ரீம் பைக் பிரிவில் மோஹித் வர்மா முதல் இடத்தைப் பிடித்து கோப்பையை வென்றார். நடராஜ் இரண்டாம் இடத்தையும், பிரமோத் ஜோஸ்வா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

எண்ட்யூரன்ஸ் கார் பிரிவில் ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக் மாருதி - சங்கர் ஆனந்த் ஜோடி முதல் இடத்தைப் பிடித்து கோப்பைகளை வென்றது. சச்சின் சிங் - ப்ரதிமா ஜோடி இரண்டாம் இடத்தையும், கணேஷ் மூர்த்தி - நாகராஜன் ஜோடி மூன்றாம் இடத்தையும் பிடித்து பரிசுகளைப் பெற்றனர்.

ஐந்து நாள் நிகழ்விலும் போட்டியாளர்கள் தங்களுக்குள் அன்பாகவும் நண்பர்களாகவும் வளைய வந்தது மற்றொரு ஆச்சரியம். வெற்றியாளர்களுக்குப் பலத்த கைத்தட்டல்கள் போட்டியாளர்களிடம் இருந்துதான் ஓங்கி ஒலித்தன. அடுத்த ராலி எங்கே நடக்கும் என்று ஆவலாகக் காத்திருக்கிறேன்.