Published:Updated:

பெண்களுக்கு பெஸ்ட்! ஜெஸ்ட்

TVS SCOOTY ZEST 110 தமிழ், படங்கள்: ப.சரவணகுமார்

பெண்களுக்கு பெஸ்ட்! ஜெஸ்ட்

TVS SCOOTY ZEST 110 தமிழ், படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
பெண்களுக்கு பெஸ்ட்! ஜெஸ்ட்

1993-ம் ஆண்டு, ஆண்களுக்குச் சமமாக பெண்களும் சாலையில் 'விர்ர்ரூம்’மெனப் பறக்க முடியும் என நிரூபித்த ஆண்டு. காரணம், டிவிஎஸ் மோட்டார்ஸ். காலேஜ் மற்றும் ஆபீஸ் டியூட்டிக்குச் செல்லும் பியூட்டிகளை மையமாகவைத்துக் களமிறங்கிய '2 ஸ்ட்ரோக்’ ஸ்கூட்டி பிறந்தது இந்த ஆண்டில்தான். ஆண்கள் பல்ஸர் வாங்கி ஆணாதிக்கத்தை நிரூபித்தால், பெண்கள் ஸ்கூட்டி வாங்கி தங்கள் இருப்பை அறிவித்தார்கள். பிறகு, 1996-ல் ஸ்கூட்டி ES, 2003-ல் ஸ்கூட்டி பெப், 2005-ல் பெப் ப்ளஸ், 2007-ல் ஸ்கூட்டி டீன்ஸ், 2009-ல் ஸ்கூட்டி ஸ்ட்ரீக் என்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பைக்கர்களைப் பல்லிளிக்கவைத்திருக்கும் ஸ்கூட்டி, இப்போது ஆறாவது தலைமுறையாக 2014-ல் 'ஸ்கூட்டி ஜெஸ்ட்’ என்ற பெயரில் களமிறங்கி வந்திருக்கிறது. கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் டிஸைனாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி ஜெஸ்ட், இப்போது ஆன்-ரோடில் ஆஜர். ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில், ஸ்கூட்டி ஜெஸ்ட்டை ஃபர்ஸ்ட் டிரைவ் செய்தேன்.

ஸ்டைல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைய ஸ்கூட்டி ஃபேமிலியின் புது மெம்பர் என்று ஜெஸ்ட்டைப் பார்த்தவுடனேயே சொல்லிவிடலாம். ஆனால், இப்போது இது மேலும் பெப்பியாக இருக்கிறது. முன்பக்க வீல் ஆர்ச், 'டீன்ஸ்’ மற்றும் 'ஸ்ட்ரீக்’ போல கூர்மையான ஏரோ-டைனமிக் டிஸைனாக இல்லாமல், ஆரம்பகால ஸ்கூட்டி போலவே லேசான 'மொழுக்’ டிஸைனுக்கு மாறியிருக்கிறது..

ஹெட்லைட் டிஸைன் பழசுதான். ஆனால், பாடி முழுவதும் ஆங்காங்கே உள்ள வளைவு - நெளிவுகள், பெண்களை மனதில் வைத்தே டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. ஹெட்லைட் சுவிட்ச், இண்டிகேட்டர், மஞ்சள் நிற ஹார்ன் சுவிட்ச், சிவப்பு நிற பட்டன் ஸ்டார்ட் என்று எந்தக் குழப்பமும் இல்லாமல், இதன் டிஸைன் கச்சிதமாக இருக்கிறது. முதன்முறையாக, கார்களில் இருப்பதுபோன்று, இதன் ஸ்பீடோ மீட்டர் டயல்கள் 'பேக்லிட்’-மஞ்சள் நிறத்தில் ஒளிர்வது, இரவில் அம்சமாக இருக்கும். டிவிஎஸ் டிரேட்மார்க்கான 'எக்கோ’ மற்றும் 'பவர் மோட்’ சாய்ஸ் ஜெஸ்ட்டிலும் உண்டு. இதன் இரட்டைத் தையல் வேலைப்பாடுகள் கொண்ட சீட், கொஞ்சம் பருமனான பெண்களும் உட்காரும் அளவுக்கு அகலமாகவும், நீளமாகவும் இருக்கிறது. பின் பக்கம் எல்.இ.டி டெயில் லைட்ஸ், இரவு நேரத்தில் பளீரென்று செக்கச்செவேரென்றும், சாதாரண விளக்குகளைவிட அதிகம் உழைக்கும் என்றும் சொல்கிறது டிவிஎஸ்.

பெண்களுக்கு பெஸ்ட்! ஜெஸ்ட்

ஆனால், ஆக்டிவாவில் இருப்பதுபோல மூடும் வசதிகொண்ட க்ளோவ்பாக்ஸ் இதில் இல்லை. தண்ணீர் பாட்டில் மற்றும் சின்னச் சின்னப் பொருட்கள் போன்றவற்றுக்குப் பாதுகாப்பு கிடையாது. மற்றபடி, ஹேண்ட் பேக் மாட்டும் ஹூக்கை மடித்துக்கொள்ளும் வசதி உண்டு. சீட்டைத் திறந்தால், 19 லிட்டர் இடவசதி கொண்ட ஸ்டோரேஜ் பாக்ஸ் தாராளமாக இருக்கிறது. இதுவே ஜூபிட்டர் மற்றும் ஆக்டிவாவில், முறையே 17 மற்றும் 18 லிட்டர் இடவசதிதான். ஆண் வாகன ஓட்டிகளும் பயன்படுத்த வேண்டும் என்பதால், இதில் ஒரு பெரிய ஹெல்மெட்டை வைத்து மூடும் அளவுக்கு இடவசதி இருக்கிறது. பின் பக்கம் சைலன்ஸருக்கு மேலே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கார்டு மஃப்ளர், ஒரு பைக் லுக் தருகிறது. நீலம், வெள்ளை, சிவப்பு, கறுப்பு என்று நான்கு வண்ணங்களில் கலர்ஃபுல்லாகக் கிளம்ப இருக்கிறது ஜெஸ்ட்.

பெண்களுக்கு பெஸ்ட்! ஜெஸ்ட்

இன்ஜின்

டிவிஎஸ் வீகோ மற்றும் ஜூபிட்டரில் இருக்கும் அதே 4 ஸ்ட்ரோக், 110 சிசி இன்ஜின்தான் இதிலும். ஆனால், இதில் பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜுக்காக கொஞ்சம் ட்யூன் செய்திருப்பதாகச் சொல்கிறது டிவிஎஸ். 109.7சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்கூல்டு மற்றும் கார்புரேட்டர் இன்ஜின்கொண்ட ஜெஸ்ட்டை, பட்டன் மற்றும் கிக் ஸ்டார்ட் மூலம் உயிர்ப்பிக்கலாம். ஆக்ஸிலரேட்டரை முறுக்கியவுடன் 7,500rpm-ல், 7.9bhp பவரும் அப்படியே பின் பக்க வீலுக்கு டிரான்ஸ்பர் ஆகிறது. டிவிஎஸ்ஸின் CVTi டிரான்ஸ்மிஷன் இருப்பதால், பிக்-அப்பிலும், மைலேஜிலும் நிச்சயம் நெகட்டிவ்வாக இருக்காது. ஜெஸ்ட் பெண்கள், 'செமயா சீறுது’ என்று சீன் போடலாம். 108 கிலோ ஜூபிட்டர் மற்றும் 104 கிலோ வீகோவுக்குமே இந்த பவர் போதுமானதாக இருக்கும்போது, 98 கிலோ எடைகொண்ட ஜெஸ்ட்டுக்கு, நிச்சயம் இந்த சங்கதிகள் தாறுமாறானதாகவே இருக்கும். 5,500 rpm-ல், 0.89 kgm டார்க், பிக்-அப்பில் எந்தக் குறைவும் வைக்கவில்லை. ஸ்கூட்டர் செக்மென்ட்டிலேயே 0-60 கி.மீ-யை வெறும் 11.1 விநாடிகளில் கடப்பது ஜெஸ்ட் மட்டுமே என்கிறது டிவிஎஸ்.

இதில் ஆட்டோ சோக் சிஸ்டம் இருப்பதால், ஸ்ட்ரீக் மற்றும் டீன்ஸ் ஸ்கூட்டர்களில் இருப்பதுபோன்ற ஸ்டார்ட்டிங் பிரச்னைகள் இருக்காது என்று நம்பலாம். ஜெஸ்ட்டில் 60 கி.மீ வரை முக்காமல் முனகாமல் மென்மையாகப் பறக்கலாம். ஆக்ஸிலரேட்டரை முழுமையாக முறுக்கினால், 90 கி.மீ வேகம் வரை பறக்கிறது ஜெஸ்ட். இதுவே ஜெஸ்ட்டில் நமக்குக் கிடைத்த டாப் ஸ்பீடு.

பெண்களுக்கு பெஸ்ட்! ஜெஸ்ட்

கையாளுமை, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்ஸ்

ஜெஸ்ட்டின் மிகப் பெரிய பலம் - ஹேண்ட்லிங்தான். காரணம் - இதன் லேசான எடை. 98 கிலோதான் என்பதால், ஒல்லியான பெண்கள் கூட 'ஜஸ்ட் லைக் தட்’ ஜெஸ்ட்டைக் கையாளலாம். வளைவு - நெளிவுகள், சந்து பொந்துகள், டிராஃபிக் என்று புகுந்து புறப்பட ஜாலியாக இருக்கிறது ஜெஸ்ட். பழைய ஸ்கூட்டர்களில், சென்டர் ஸ்டாண்டு போடுவதற்கு பெண்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு, ஜெஸ்ட்டில் செவி சாய்க்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பெயரே ஈஸி சென்டர் ஸ்டாண்டு என்கிறது டிவிஎஸ். சென்டர் ஸ்டாண்டை காலால் லேசாக அழுத்தி, சீட்டுக்குப் பின்புறம் உள்ள க்ரோம் கிராப் ரெயிலை கைகளால் லேசாகப் பற்றினாலே, பின் பக்கம் தானாக அமர்ந்துகொள்கிறது ஜெஸ்ட். இதில் சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் கிடையாது; ஆனால், அலாரம் உண்டு. முன்பக்கம் கால் வைக்க தாராளமான இடமும், கீழே சொரசொரப்பான 'டெக்சர்டு ஃப்ளோர் மேட்’டும் இருப்பதால், கால்களை கிரிப்பாக வைத்து ஓட்ட முடிகிறது. இந்த ஃப்ளோர் மேட், பைக்கின் ஆன்-ரோடு விலையிலேயே வருகிறது. சில டீலர்கள் 'எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ்லதான் வரும்’ என்று சொன்னால் நம்ப வேண்டாம். பெட்ரோல் போடும்போது, ஸ்கூட்டரில் இருந்து கீழே இறங்கி, சீட்டைத் திறந்துதான் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்பது, கொஞ்சம் அலுப்பைத் தரக்கூடிய விஷயம்.

முன் பக்கம் - வழக்கம்போல டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன்தான். ஆனால், பின் பக்கம் - பைக்குகளைப்போல ஹைட்ராலிக் மோனோஷாக் சஸ்பென்ஷன் இருப்பதால், மேடு-பள்ளங்களில் ஏறி இறங்கும்போது  ஸாஃப்ட்டாக இருக்கிறது. முன் பக்கம் 110 மிமீ டிரம்; பின் பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்ஸ், ஜெஸ்ட்டுக்குப் போதுமானது. ஜூபிட்டர், ஆக்ஸஸ் போன்ற ஸ்கூட்டர்களில் இருப்பதுபோல சில்வர் கலர் பிரேக் லாக் கிளாம்ப் இருப்பதால், சரிவுகளில் ஸ்கூட்டரை ஈஸியாக பார்க்கிங் செய்யலாம். முன்னும் பின்னும் டியூப்லெஸ் டயர்கள் தடிமனாக இருப்பதால், செம கிரிப்பைத் தருகின்றன. எடை குறைவான பைக்குகள், அதிக வேகத்தில் காற்றில் அலைபாயும் ஆபத்து உண்டு. ஆனால், ஜெஸ்ட்டில் க்ரிப்புள்ள டயர்கள் பைக்கை ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொள்கின்றன.

பெண்களுக்கு பெஸ்ட்! ஜெஸ்ட்

மைலேஜ்

ஸ்கூட்டர் செக்மென்ட்டிலேயே அதிகமாக, லிட்டருக்கு ஜெஸ்ட் 62 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது டிவிஎஸ். ஆனால், நாம் இதை முழுமையாக டெஸ்ட் டிரைவ் செய்யும்போதுதான் உறுதிப்படுத்த முடியும். ஸ்பீடோ மீட்டரில் உள்ள 'எக்கோ’ மோட் விளக்கு மைலேஜுக்கு பெரிதும் உதவுகிறது. நீண்ட நேரம் ஐடிலிங்கில் நின்றாலோ, கதறக் கதற ஸ்கூட்டரை விரட்டினாலோ 'பவர் மோட்’ ஒளிர்ந்து நம்மை எச்சரிக்கை செய்வது நல்ல ஆப்ஷன். ஜெஸ்ட், பெண்களுக்கு பெஸ்ட்டாக இருக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.