Published:Updated:

ஆல்ரவுண்டர் ஆல்-வீல் டிரைவ்!

ரெனோ டஸ்ட்டர் AWD தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ஆல்ரவுண்டர் ஆல்-வீல் டிரைவ்!

ரெனோ டஸ்ட்டர் AWD தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருக்குமே தவிர, கரடுமுரடான வேலைக்குச் சரிப்பட்டு வராது’ என்று டஸ்ட்டருக்கு இருக்கும் இமேஜை மாற்ற ரெனோ முற்பட்டிருப்பதால், டஸ்ட்டர் 'ஆல் வீல் டிரைவ்’ மாடலை அறிமுகப்படுத்துகிறது. ஆஃப் ரோடிங்கைச் சமாளிக்கிறதா டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ்?

ஆல்ரவுண்டர் ஆல்-வீல் டிரைவ்!

இந்திய மார்க்கெட்டுக்குத்தான் டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடல் புதியது. ஆனால், சென்னை தொழிற்சாலையில் டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலை ஆரம்பத்தில் இருந்தே தயாரித்து வந்திருக்கிறது ரெனோ. இவைதான் ஏற்றுமதி செய்யப்பட்டு, இங்கிலாந்தில் டேசியா டஸ்ட்டராக விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண ஃப்ரன்ட் வீல் டிரைவ் டஸ்ட்டரையும், இந்த ஆல் வீல் டிரைவ் டஸ்ட்டரையும் வெளிப்புற தோற்றத்தில் வித்தியாசப்படுத்த, ஒரு சில டிஸைன் அம்சங்களே உள்ளன. டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் RxZ வேரியன்ட்டில் க்ரே கலர் அலாய் வீல்கள், கருப்பு வண்ண B பில்லர்கள், கறுப்பு வண்ணம் சேர்க்கப்பட்ட ஹெட்லைட்ஸ் க்ளஸ்டர்கள், 'AWD’ ஸ்டிக்கர்கள் என வித்தியாசம் காட்டுகிறது ரெனோ. ஆனால், ஃப்ளிப்-அப் ஸ்டைல் கதவு கைப்பிடிகள் பயன்படுத்த சுமாராக இருக்கின்றன. சுமார் 13 லட்சம் ரூபாய் காரில் 'புல்’ டைப் கொடுக்காமல் 'ஃப்ளிப்-அப்’ ஸ்டைல் கதவு கைப்பிடிகளை ஏன் ரெனோ கொடுத்திருக்கிறது என்று புரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரின் வெளியே வித்தியாசங்கள் குறைவு என்றாலும், உள்ளே புதிய  இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டூயல் டோன் க்ரே மற்றும் சிவப்பு வண்ண இருக்கைகள், சாஃப்ட் டச் பிளாஸ்டிக்ஸ் கொண்ட டேஷ்போர்டு என அசத்துகிறது டஸ்ட்டர் AWD. ரியர் ஏ.சி வென்ட் இப்போது இல்லை.

மூன்று மீடியம் சைஸ் சூட்கேஸ் உடன் மேலும் பல பொருட்களை எடுத்துச் செல்லும் அளவுக்கு டிக்கியில் இடவசதி அதிகரித்துள்ளது.

ஆல்ரவுண்டர் ஆல்-வீல் டிரைவ்!

காரின் வெளிப்புறம் உட்புறம் தவிர, கண்ணுக்குப் புலப்படாத மெக்கானிக்கல் பகுதியில்தான் மிக முக்கியமான மாற்றம் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் மூலம் இயங்கும் புதிய 4ஙீ4 சிஸ்டம்தான் அது. இன்னொரு முக்கிய அம்சம், காரின் நான்கு வீல்களுக்கும் இண்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் இருப்பது. சாதாரண டஸ்ட்டரின் பெரிய மைனஸ் பாயின்ட்டாக இருந்த கிளட்ச், இப்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. கிளட்ச் இப்போது லைட்டாக இருப்பதால், மிதிக்க வசதியாக இருக்கிறது. கியர்பாக்ஸின் ரேஷியோவை முன்பைவிட நெருக்கி அமைத்திருக்கிறது ரெனோ. இதனால், முதல் கியர் மணிக்கு 30 கி.மீ வேகத்திலேயே முடிந்துவிடுகிறது. இப்படி செட் செய்வதற்குக் காரணம், ஆஃப் ரோடிங்கின்போது உயரமான மேடுகளில் ஏறுவதற்குத்தான். டிராக்‌ஷன் கன்ட்ரோல் இருப்பதால், வழுக்கலான இடங்களில் சமாளிக்க முடிகிறது. மேலும், காரின் ECUவை குறைந்த ஆர்பிஎம் சக்தி வெளிப்பாடுக்கு ஏற்றவாறு டியூன் செய்திருப்பதால், மிக உயரமான மேடுகளைக்கூட எளிதாகக் கடக்கிறது டஸ்ட்டர் AWD. இதனால், கியரைக் குறைக்காமல் பல இடங்களில் சமாளிக்கலாம்.

இதன் ஃபோர் வீல் டிரைவ் சிஸ்டத்தை கார் ஓடும்போதும்கூட ஃப்ரன்ட் வீல் டிரைவில் இருந்து, ஆல் வீல் டிரைவாக மாற்றிக்கொள்ளலாம். அதுவும் 'ஆட்டோ’ மோடு இருப்பதால், பின்பக்க வீல்களுக்கு சக்தி தேவைப்படும் நேரத்தில், கார் தானாகவே மாற்றிக்கொள்ளும். சேறு, உயரமான மேடு, சிறிய ஓடை என ஆஃப் ரோடிங்கில் ஈடுபடும்போது, நன்றாகவே இயங்கியது டஸ்ட்டரின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம். 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், கொஞ்சம் பயப்படாமல் ஆஃப் ரோடிங் செய்யலாம். அதற்காக, ஒரு ப்ரொஃபஷனல் ஆஃப் ரோடிங் காரில் செய்யக்கூடிய சாகசங்களை டஸ்ட்டரில் எதிர்பார்க்கக் கூடாது. இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் இருப்பதால், எவ்வித சாலைகளையும் அசராமல் கடக்கிறது டஸ்ட்டர் AWD. இந்தியச் சந்தையில் ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கும் கார்களில் ஒன்று இந்த டஸ்ட்டர் AWD.

ஆல்ரவுண்டர் ஆல்-வீல் டிரைவ்!

வழக்கமான டஸ்ட்டரைவிட சுமார் 1 லட்சம் ரூபாய் அதிக விலையுடன் விற்கப்பட இருக்கிறது ஆல் வீல் டிரைவ் மாடல். டஸ்ட்டரின் பாரம்பரிய பிளஸ் பாயின்ட்டுகளுடன், ஆஃப் ரோடிங் வசதியும் சேர்ந்திருப்பதால், இப்போதுதான் ஒரு முழுமையான எஸ்யுவியாக மாறியிருக்கிறது டஸ்ட்டர். சாதாரண சாலையில் சிறப்பான ஓட்டுதல் தரம், ஆஃப் ரோடிங்கிலும் சாகசம். 15 லட்ச ரூபாய்க்குள் இந்த இரு ப்ளஸ் பாயின்ட்டுகளும் ஒரு சேர இருக்கும் கார் டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடல்தான். எனவே, சாதாரண டஸ்ட்டரின் விலை உயர்ந்த மாடலை வாங்க இருப்பவர்கள், இந்த காருக்காக சற்று பொறுத்திருக்கலாம்.