கார்ஸ்
Published:Updated:

வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

'உலகின் மிகப் பெரிய சின்ன கார் சந்தை என்ற அந்தஸ்தைத் தாண்டி, உலகுக்கே சின்ன கார்களை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் கேந்திரமாக உருவெடுக்கும் வாய்ப்பு, நம் நாட்டுக்குப் பிரகாசமாக இருக்கிறது’ என்ற நம்பிக்கை, கடந்த ஒரு சில மாதங்களாக சந்தேகத்துக்கு உட்பட்டு வருகிறது. காரணம், முப்பது மாதங்களாக ஏறுமுகமாக இருந்து வந்த நம் நாட்டின் கார் மார்க்கெட்டின் வேகம் இப்போது குறைந்திருப்பதுதான். எரிபொருள் விலை ஏற்றம், வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிப்பு என இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்தத் தடைகளை எல்லாம் மீறி, ஒரு சில கார் நிறுவனங்கள் தங்களது விற்பனை வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் காட்டி இருக்கின்றன. இதுபோல, ஏற்றங்களைக் காட்டி இருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே, புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

இதில் முக்கியமானது... சென்ற இதழில் நாம் டெஸ்ட் டிரைவ் செய்திருந்த செவர்லே பீட் டீசல் கார். செவர்லேயின் விற்பனை சூடு பிடிக்க இந்த டீசல் கார் முக்கியக் காரணம். இதை அடுத்து, எப்போதுமே கார் விற்பனையில் முதலிடத்தில் இருந்து வரும் மாருதி, தொடர்ந்து உச்சியிலேயே இருக்கும் பொருட்டு, ஸ்விஃப்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆறு லட்சம் ஸ்விஃப்ட் கார்கள் இங்கே விற்பனையாகி இருக்கின்றன என்றால், அது நம் நாட்டின் அடையாளமாகவே மாறியிருக்கிறது என்றுதானே அர்த்தம்! மக்களின் மனக் கண்ணில் நன்றாகப் பதிந்துவிட்ட காரை, புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறோம் என்ற பெயரில், அதன் தோற்றத்தை மாற்றாமல் ஸ்விஃப்ட்டின் அடையாளத்தை மேலும் அழுத்தமாகப் பதித்துள்ளது. வீல் பேஸ், நீளம் ஆகியவற்றை அதிகப்படுத்தி, பெட்ரோல்/டீசல் ஆகிய இரண்டு இன்ஜின்களையுமே அதிக மைலேஜ் கொடுக்கும் அளவுக்கு மேம்படுத்தி, மேலும் பல வசதிகளை அதிகரித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது மாருதி. மாதத்துக்கு பன்னிரெண்டாயிரம் ஸ்விஃப்ட் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்குத் திறன் படைத்திருக்கும் மாருதி, அதை பதினாறாயிரமாக உயர்த்தி இருக்கிறது என்றால், அதற்கு ஸ்விஃப்ட்டின் மீதிருக்கும் நம்பிக்கை மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

'இறக்கத்திலும் ஏற்றம் காண முடியும்’ என்று வார்த்தைகளை நமது எல்லா கார் நிறுவனங்களுமே உறுதியாக நம்புகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது, புதிய ஜெட்டாவை அறிமுகப்படுத்தி இருக்கும் ஃபோக்ஸ்வாகன். சின்ன கார் உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல, சொகுசு கார் உற்பத்தியாளர்களும் இந்தியாவின் வாகனச் சந்தையின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உடனடி அடையாளம் பிஎம்டபிள்யூ. இது இப்போது தனது எக்ஸ்-3 காரை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை கமர்ஷியல் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்து வந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ், இப்போது பதினொரு லட்சம் ரூபாய்க்கு ஒரு புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது. மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களோடு இந்த 'ஃபோர்ஸ் ஒன்’ எஸ்யூவி போட்டி போட இருக்கிறது.

இந்த நம்பிக்கை, கார் மார்க்கெட்டைத் தாண்டி மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டிலும் தொடர்வதைப் பார்க்க முடிகிறது. இதுவரை ஹோண்டாவோடு கைகோர்த்துச் செயல்பட்டு வந்த ஹீரோ நிறுவனம், 'ஹீரோ மோட்டோ கார்ப்’ என்ற புதிய பெயரில் புத்துணர்ச்சியுடன் மலர்ந்திருப்பதோடு, அதே வேகத்தில் இம்பல்ஸ், மேஸ்ட்ரோ என இரண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இது போன்ற எதிர் நீச்சல்தான் நம் ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் மிகப் பெரிய பலம்!

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்.