கார்ஸ்
Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக் - சேலம்

எல்லோருமே மெக்கானிக்தான்!

வீ.கே.ரமேஷ்>> எம்.விஜயகுமார்

 ##~##

''வாடிக்கையாளருக்கும் மெக்கானிக்குக்கும் இடைவெளி இருக்கக் கூடாது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனது வாகனத்தின் மெக்கானிசத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். தன்னுடைய பைக்கில் என்ன பிரச்னை, அது எப்படி ஏற்பட்டது, அதை எவ்வாறு சரி செய்துள்ளேன் என்பது முதல் எனது வாடிக்கையாளருக்கு விளங்க வைத்து விடுவேன். அதுதான் என் பலம்!'' என்கிறார் சேலம் ஐந்து ரோடு பகுதியில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கும் பைக் மெக்கானிக் இளஞ்சேரன். 

அவரைச் சந்தித்தபோது, ''வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்றதைப்போல, எங்கப்பா கல்வி அதிகாரியா இருந்தாலும் எனக்குப் படிப்பு மேல நாட்டம் வரலை. பத்தாம் வகுப்பு ஃபெயில் ஆயிட்டேன். அப்பா டுடோரியல்ல சேர்ந்து படி படின்னு சொல்லுவாரு. 'வராத படிப்பை வா வான்னா எப்படி வரும்’னு அப்பாகிட்ட கேட்க முடியுமா?! நானும் அப்பா சொன்ன மாதிரி டுடோரியலில் சேர்ந்து இரண்டு மூன்று அட்டெம்ப்ட் அடிச்சுப் பார்த்தேன். பாஸ் பண்ண முடியலை. சீ... சீ.. இந்தப் படிப்பு ரொம்ப போர்னு விட்டுட்டேன்!

நம்ம ஊரு மெக்கானிக் - சேலம்

பிறகு, ஃப்ரெண்ட்ஸ்கூட ஊரைச் சுத்திட்டு இருந்தேன். அப்பதான் இன்ஜீனியர் ஒருத்தர் அறிமுகமானார். அவர் என்னை ஹீரோ ஹோண்டா ஷோ ரூமில் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஷோ ரூம்-ல நட்டு போல்ட் கழட்றது, வாட்டர் சர்வீஸ் பண்றது, ஷோரூமை கிளீன் பண்றதுன்னு எடுபிடி வேலைகள்தான் செஞ்சேன். பல மெக்கானிக்குகளைப் பார்த்து நானும் பைக் மெக்கானிக் ஆகணும்னு ஆசை வந்தது. ஆனா, ஷோ ரூமில் இருந்த மெக்கானிக் கிட்ட சந்தேகம் கேட்டா சொல்லித் தர மாட்டாங்க. அதை எடு, இதை எடுன்னுதான் சொல்லுவாங்க. இருந்தாலும் மெக்கானிக் ஆசையில இதையெல்லாம் தாங்கிட்டு இருந்தேன்.

நம்ம ஊரு மெக்கானிக் - சேலம்

எங்க ஷோ ரூம் ஓனர் ரொம்ப நல்லவர். அவர் அப்பப்ப பைக் டிரெய்னிங் போயிட்டு வந்தா, ஷோ ரூம்ல இருக்கிற எல்லாத்துக்கும் வாரத்துல மூணு நாள் கிளாஸ் எடுப்பார். அந்த வகுப்புல முதலில் பைக்கை எப்படி சர்வீஸ் பண்றது, எலெக்ட்ரானிக் சர்க்யூட் எப்படி வேலை செய்யுது, கார்புரேட்டர் மெத்தேட், அது எப்படி ஃபங்ஷன் ஆகுது, சிடிஐ, டைம் லைட், மல்டி மீட்டர், டேக்கோ மீட்டர், ஆர்பிஎம், ஏர் ஸ்குரு, கிளீனிங்ன்னு ஒவ்வொரு பார்ட்டையும் எப்படி சர்வீஸ் செய்றதுன்னும் சொல்லிக் கொடுப்பார். நமக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் எக்ஸ்ப்ளைன் பண்ணி டவுட்டை கிளியர் பண்ணுவார். அவர் மூலமாதான் படிப்படியாக பைக்குல இருக்கிற எல்லா ஸ்பேர் பார்ட்ஸையும் பிரிச்சு மேயுற அளவுக்குக் கத்துக்கிட்டேன்.

இப்படி எட்டு வருஷமா ஹீரோ ஹோண்டா ஷோ ரூமில் மெக்கானிக்கா இருந்த பிறகு, 1994-ல தனியா 'ஹோண்டா கிளினிக்’ சர்வீஸ் சென்டர் ஆரம்பிச்சேன். அப்போ எந்த ஒரு கஸ்டமர் அறிமுகமும் கிடையாது. ஆரம்பத்தில் மூணு மாசம் பெரிசா யாரும் வரலை. ஆனா, வந்த கஸ்டமரோட கம்ப்ளெய்ன்ட்டை முழுமையா கிளியர் செஞ்சு கொடுத்தேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமா என்னோட பேரு வெளிய தெரிய ஆரம்பிச்சு, நிறைய பேர் வர ஆரம்பிச்சாங்க!

இந்தத் தொழிலுக்கு விளம்பரமே கஸ்டமருங்கதான். எவ்வளவு லட்சம் செலவழிச்சு விளம்பரம் பண்ணினாலும், கஸ்டமர் ஒருத்தர் நம்மைப் பத்திச் சொல்றதுக்கு ஈடாகாது. பைக்கை சர்வீஸுக்கு விடும்போது அவங்க சொல்ற சின்னச் சின்ன கம்ப்ளெய்ன்டைக் குறிச்சுக்கிட்டு சரி பண்ணிடுவேன். பைக்கை டெலிவரி எடுக்க வரும்போது, அவங்க சொன்ன கம்ப்ளெய்ன்ட் என்ன? எப்படி ரிப்பேர் செய்தேன்... பிரச்னை எதனால ஏற்பட்டதுன்னு விளக்கமா சொன்ன பிறகுதான் பைக்கை ஒப்படைப்பேன். இதனால, என்கிட்ட வர்ற ஒவ்வொரு கஸ்டமரும் தன்னோட பைக்கைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்குவாங்க. வேற இடத்துக்கு சர்வீஸ் செய்யப் போனாலும், அங்க இந்த மாதிரி விளக்கம் கிடைக்காது. அதனால, அடுத்த முறை என்கிட்டேயே திரும்ப வருவாங்க.

இப்போ என்கிட்ட ஆறு பேர் வேலை செய்றாங்க. இதுக்கு முன்னாடி அஞ்சு பேர் தொழில் கத்துக்கிட்டு தனியா சர்வீஸ் சென்டர் போட்டிருக்காங்க. இப்பவும் பைக்குல ஏதாவது சந்தேகம் இருந்ததுன்னா கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க. இப்படித்தான் கஸ்டமர் போன் பண்ணிக் கேட்டா, சின்னச் சின்னப் பிரச்னையை அவங்களே சரி செஞ்சுக்கிற அளவுக்கு கத்துக் கொடுத்திருக்கேன்!'' என்கிறார் இளஞ்சேரன்.