கார்ஸ்
Published:Updated:

டாப் கியரில் பறக்கிறார் கேஸி ஸ்டோனர்!

ஹோண்டாதான் நம்பர் ஒன்!

சார்லஸ்

 ##~##

ந்த ஆண்டு, டுகாட்டி அணியில் இருந்து ஹோண்டா அணிக்குத் தாவிய கேஸி ஸ்டோனருக்கு எல்லாமே சக்ஸஸ்தான்! அமெரிக்கா, செக் குடியரசு என கடந்த மாதம் நடந்த மூன்று ரேஸ்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் ரேஸில் முன்னிலையில் இருக்கிறார் கேஸி ஸ்டோனர்!

மோட்டோ ஜீபி -அமெரிக்கா

டாப் கியரில் பறக்கிறார் கேஸி ஸ்டோனர்!

மோட்டோ ஜீபி ரேஸ் பந்தயத்தின் பத்தாவது சுற்று, அமெரிக்காவில் உள்ள லகுனா செக்கா ரேஸ் மைதானத்தில் ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. ரேஸ் துவங்குவதற்கு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ரேஸின்போது, நடப்பு சாம்பியனான ஜார்ஜ் லாரன்சோ விபத்தில் சிக்கினார்.

கட்டுப்பாட்டை இழந்த அவர், ரேஸ் டிராக்கில் உருண்டதில், 'லாரன்சோ இந்த ரேஸில் அவுட்’ என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கினார் யமஹா அணியின் ஜார்ஜ் லாரன்சோ. ஹோண்டா அணியின் கேஸி ஸ்டோனர் இரண்டாவது இடத்தில் இருந்தும், டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

டாப் கியரில் பறக்கிறார் கேஸி ஸ்டோனர்!

ரேஸ் துவங்கியதில் இருந்தே ஜார்ஜ் லாரன்சோவை யாரும் நெருங்க முடியவில்லை. இரண்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய கேஸி ஸ்டோனரை முந்தி விட்டு, இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் டேனி பெட்ரோஸா. இரண்டாவது இடத்துக்கு முன்னேறினாலும் டேனி பெட்ரோஸாவால், லாரன்சோவை முந்த முடியவில்லை. இதற்கிடையே மூன்றாவது இடத்தில் வந்து கொண்டிருந்த கேஸி ஸ்டோனர் - பெட்ரோஸாவையும், லாரன்சோவையும் முந்த சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். மொத்தம் 32 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் 17-வது சுற்றில் டேனி பெட்ரோஸாவை முந்தினார் கேஸி ஸ்டோனர். இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஸ்டோனர், லாரன்சோவைத் துரத்த ஆரம்பித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது. யமஹாவும், ஹோண்டாவும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு பறந்தன. ரேஸ் முடிய ஐந்து லேப்புகளே இருந்த நிலையில் ஜார்ஜ் லாரன்சோவை முந்தினார் கேஸி ஸ்டோனர். அதன்பின் இறுதிவரை லாரன்சோவால் கேஸி ஸ்டோனரைப் பிடிக்க முடியவில்லை. 43 நிமிடம் 52 விநாடிகளில் வெற்றிக் கோட்டைக் கடந்து வெற்றி பெற்றார் ஸ்டோனர். ஜார்ஜ் லாரன்சோ இரண்டாம் இடத்தையும், டேனி பெட்ரோஸா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

டாப் கியரில் பறக்கிறார் கேஸி ஸ்டோனர்!

மோட்டோ ஜீபி -செக் குடியரசு

செக் குடியரசில் மோட்டோ ஜீபியின் பதினோறாவது சுற்று, ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 22 லேப்புகள் 118 கி.மீ தூரம் கொண்ட இந்த ரேஸ் போட்டியை, ஹோண்டா அணியின் டேனி பெட்ரோஸா முதலிடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார். யமஹா அணியின் ஜார்ஜ் லாரன்சோ இரண்டாவது இடத்தில் இருந்தும், கேஸி ஸ்டோனர் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். முன்னாள் சாம்பியனும் டுகாட்டி அணியின் ரேஸருமான வாலன்டினோ ராஸி ஆறாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார்.

டாப் கியரில் பறக்கிறார் கேஸி ஸ்டோனர்!

முதல் லேப்பிலேயே டேனி பெட்ரோஸாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பின்னால் வந்த பைக்கோடு டேனி பெட்ரோஸாவின் பைக் மோத... பின்னுக்குத் தள்ளப்பட்டார் பெட்ரோஸா. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி முதல் இடத்துக்கு முன்னேறினார் நடப்பு சாம்பியன் ஜார்ஜ் லாரன்சோ. இருப்பினும், லாரன்சோவால் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைக்க முடியவில்லை. மூன்றாவது இடத்தில் இருந்து சீறி வந்த கேஸி ஸ்டோனர், மூன்றாவது லேப்பின்போது லாரன்சோவை முந்தினார். கேஸி ஸ்டோனரின் வேகம் ஒரு புறம் அதிகரிக்க, இரண்டாவது இடத்தில் இருந்த லாரன்சோ நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

22 லேப்புகளின் முடிவில் 43 நிமிடம் 16 விநாடிகளில் வெற்றிக் கோட்டைக் கடந்து முதலிடம் பிடித்தார் கேஸி ஸ்டோனர். ஹோண்டா அணியின் மற்றொரு வீரர் ஆண்ட்ரியா டோவிஸியோஸோ இரண்டாவது இடத்தையும், ஹோண்டா கிரஸினி அணியின் மார்க்கோ சைமென்செல்லி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். முதல் மூன்று இடங்களையுமே ஹோண்டா பைக்குகளே பிடித்ததால், செம கொண்டாட்டத்தில் இருந்தது ஹோண்டா அணி. வாலன்டினோ ராஸி தகுதி சுற்றைப் போலவே ரேஸிலும் ஆறாவது இடமே பிடித்தார்.

11 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஹோண்டா அணியின் கேஸி ஸ்டோனர் 218 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நடப்பு சாம்பியன் ஜார்ஜ் லாரன்சோ 186 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஹோண்டா அணியின் டோவிஸியோஸோ 163 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். வாலன்டினோ ராஸி 118 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன், ஆகஸ்ட் 28-ம் தேதி அமெரிக்காவின் இன்டியானாபோலிஸ் நகரில் மோட்டோ ஜீபியின் அடுத்த சுற்று நடைபெற்று முடிந்திருக்கும்!

டாப் கியரில் பறக்கிறார் கேஸி ஸ்டோனர்!