கார்ஸ்
Published:Updated:

புதிய மாருதி ஸ்விஃப்ட் 140 மாற்றங்கள் நிஜமா?

உதய்பூரில் ஒரு டெஸ்ட் டிரைவ்MARUTI SWIFT NEW

  வேல்ஸ்

 ##~##

டந்த ஆறு ஆண்டுகளாக நம் நாட்டின் சாலைகளை ஆட்சி செய்த மாருதி ஸ்விஃப்ட், இப்போது தன்னிடமிருந்த நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு, புதிய காராகப் புறப்பட்டு வந்திருக்கிறது. அதை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக உதய்பூர் சென்றோம்!

உதய்பூரிலிருந்து மௌண்ட் அபுவுக்குச் செல்லும் நெடுஞ்சாலை, டெஸ்ட் டிரைவ் செய்வதற்காகவே அமைக்கப்பட்டதைப்போல, ஆளரவமில்லாமல் எப்போதுமே அமைதியாக இருக்கிறது. ராஜஸ்தான் என்பதால் பாலைவனமாக இருக்கும் என்று நினைத்தால், அதற்கு மாறாக பச்சைப் பசேல் என மரங்களாலும், செம்மண் பூமியாலும் செழிப்பான பிரதேசமாகவே இருக்கிறது உதய்பூர்!

18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவிகார் அரண்மனையின் உப்பரிகையில் இருந்து பார்த்தபோது, தூரத்தில்... பிளேஸ் ரெட், டார்க் ப்ளூ, கிளிஸ்டரிங் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள் கம்பீரமாக நிறுத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. அவற்றோடு சில்க்கி சில்வர், மிட் நைட் பிளாக், ஆர்க்டிக் வொய்ட் ஆகிய வண்ணங்களிலும் ஸ்விஃப்ட் கார்கள் டெஸ்ட் டிரைவுக்காகக் காத்திருந்தன.

புதிய மாருதி ஸ்விஃப்ட் 140 மாற்றங்கள் நிஜமா?

நகரச் சாலைகள், கிராமச் சாலைகள், சினிமா, ஓட்டல், திருமணம் என நாம் எங்கே சென்றாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கே நம்மைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட், இப்போது மாறியிருக்கிறது என்றால்.... அது எப்படி மாறியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் எழாமல் இருக்குமா? மாருதி ஸ்விஃப்ட் வருகைக்கு முன்பு வரை 'பிரீமியம் காம்பேக்ட்’ என்ற செக்மென்டே கிடையாது. ஆனால், இப்போதோ ரிட்ஸ், விஸ்டா, ஃபேபியா, மைக்ரா, ஃபிகோ, போலோ, ஜாஸ், புன்ட்டோ, யுவா, லிவா என கார் மார்க்கெட்டில் 24 சதவிகிதம் இவைதான் விற்பனையாகிறன. மாருதி ஸ்விஃப்ட் என்ற தனி காரை எடுத்துக் கொண்டால், இதுவரை ஆறு லட்சம் ஸ்விஃப்ட் கார்கள் சாலைகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்தியா முழுக்க மாதத்துக்கு 12,000 கார்கள் விற்பனையாகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் மாதத்துக்கு ஆயிரம் ஸ்விஃப்ட்டுகள் விற்பனையாகி வந்தன. இந்த நிலையில் மாருதி ஸ்விஃப்ட் புதிய மாருதி ஸ்விஃப்ட்டாக வந்திருப்பதால், அதைப் பார்ப்பதற்கு எல்லா டெஸ்ட் டிரைவர்களும் முண்டியடித்துக் கொண்டு, கார்கள் நின்றிருந்த இடத்துக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றோம்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் 140 மாற்றங்கள் நிஜமா?

'அப்பாடா! புதிய ஸ்விஃப்ட்டில் பழைய ஸ்விஃப்ட்டில் இருக்கும் அடிப்படைத் தன்மை எதுவுமே மாறவில்லை’ என்று நமது காதில் விழுந்த கமென்ட் முற்றிலும் உண்மை. என்றாலும், ஸ்விஃப்டில் புதுப் பொலிவு தெரிந்தது. அதன் ஸ்போர்ட்டியான ஏரோடைனமிக் கோடுகளை இப்போது மேலும் அழுத்தம் திருத்தமாகப் பதித்திருக்கிறார்கள். அதன் 'தேன்கூடு’ அமைப்பிலான கிரில், தேன்கூடாகவே இருந்தாலும் அதிலும் மாற்றங்கள் தெரிகின்றன. பக்கவாட்டுக் கண்ணாடிகள் இரண்டிலும் வைர கற்கள் போன்ற இண்டிகேட்டர் விளக்குகள். அசத்தலான ஆன்டெனா, காருக்கு உயரமான தோற்றத்தைத் தரும் பெரிய ஹெட் லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ். ஃபென்டர் வளைவுகள், பம்பர், பின் கதவு, பனி விளக்குகள், வீல் கேட் என எல்லாவற்றிலும் கவனித்துப் பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய மாற்றங்கள்! பழைய ஸ்விஃப்ட்டின் 'டிஎன்ஏ’-வில் இருந்து மாறாமல், புதிதாக வடிவமைக்கப்பட்டு இருப்பது புரிகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் 140 மாற்றங்கள் நிஜமா?
புதிய மாருதி ஸ்விஃப்ட் 140 மாற்றங்கள் நிஜமா?

550 கோடி ரூபாய் செலவு செய்து ஸ்விஃப்ட்டை அப்படி என்னதான் மாற்றியிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தோடு காரின் கதவைத் திறந்தோம். பழைய ஸ்விஃப்ட்டைவிட புதிய ஸ்விஃப்ட் 90 மிமீ நீளத்திலும், 40 மிமீ வீல் பேஸிலும் அதிகமாகி இருப்பதோடு, அகலம் 1695 மிமீ அளவுக்கு மாறியிருக்கிறது. 'ஸோ... வாட்..?’ என்று கேட்டால், பின் சீட்டில் உட்காரும்போது கால் முட்டி முன் சீட்டில் இடிக்கவில்லை. கால்களை வைக்கவும் இப்போது அசௌகரியமாக இல்லை.

புதிய மாருதி ஸ்விஃப்ட் 140 மாற்றங்கள் நிஜமா?

சென்டர் கன்ஸோலில் பளிச்சென்று தெரிகிறது மாற்றம். அருவியைப் போன்ற வடிவில் இருக்கும் சென்டர் கன்ஸோலில், முதலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம் புதிய ஸ்பீடோ மீட்டர் க்ளஸ்டர். கவர்ச்சியான கறுப்பு வண்ணம் வியாபித்திருக்கும் உள்ளலங்காரத்தில் ஆங்காங்கே சில்வர் கீற்றுகள். அடுத்தது நமது உயரத்துக்கும், வசதிக்கும் ஏற்ற வகையில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய டில்ட் ஸ்டீயரிங். ஸ்டீயரிங்கிலேயே 6 ஸ்பீக்கர் மியூஸிக் சிஸ்டத்தின் ஒளிரும் கன்ட்ரோல் சுவிட்சுகள். நெடுஞ்சாலையில் வேகமாகப் போகும்போது... லேன் மாறும் தருணங்களில் இண்டிகேட்டர் சுவிட்சுகளை லேசாகத் தொட்டாலே போதும், இண்டிகேட்டர் ஒளிர்வதுடன் சற்று நேரத்தில் விளக்குகள் தானாகவே அணைந்து விடுகின்றன. கதவுகள், டேஷ் போர்டு என பல இடங்களிலும் பாட்டில், செல்போன், பேனா ஆகியவற்றை வைக்க ஏராளமான இடங்கள். டிரைவர் சீட்டின் உயரத்தை வசதிக்கு ஏற்ற வகையில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் போனஸ். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் அற்புதமாக வேலை செய்கிறது.

சரி, எத்தனை நேரம்தான் கண்காட்சி மாதிரி பார்த்துக் கொண்டே இருப்பது. முதலில் டீசல் ஸ்விஃப்ட்டை ஸ்டார்ட் செய்தோம். முன்பைவிட இன்ஜின் சத்தம் குறைவாகி இருப்பதை உணர முடிந்தது. NVH எனப்படும் Noise, Vibration மற்றும் Harshness  குறைவாகவே இருக்கிறது என்றாலும், 'சத்தம் சுத்தமாகக் கேட்கவில்லை’ என்று சொல்ல முடியவில்லை. 4 சிலிண்டர்களைக் கொண்ட இதன் 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின், 4000 ஆர்பிஎம்-ல் 75 bhp சக்தியை வெளிப்படுத்தியது. 2000 ஆர்பிஎம்-ல் 19.30 kgm டார்க் அளிக்கிறது. பழைய ஸ்விஃப்ட்டைவிட இது 30 கிலோ அளவுக்கு எடை குறைந்திருப்பதாலும், புதிய இன்ஜினின் கைங்கரியத்தாலும் இதன் மைலேஜ் 6 சதவிகிதம் அளவுக்கு மேம்பட்டு இருப்பதாக மாருதி

புதிய மாருதி ஸ்விஃப்ட் 140 மாற்றங்கள் நிஜமா?

சொல்கிறது. அதாவது, லிட்டருக்கு 22.9 கி.மீ மைலேஜ் கொடுப்பதாக மாருதி சொல்கிறது. நாம் முழுமையான டெஸ்ட் டிரைவ் செய்யும் போது இதன் உண்மையான மைலேஜ் தெரியும்! கியர்கள் ஸ்மூத்தாக இயங்குகின்றன. லைட்டாக இருக்கும் ஸ்டீயரிங் சொல் பேச்சுக் கேட்கிறது. இதன் டாப் ஸ்பீடான 140 கி.மீ வேகத்தைத் தொடுவதற்கு, உதய்பூரின் மௌண்ட் அபுவுக்குச் செல்லும் சாலை தாராளமாக இடம் கொடுத்தது.

மௌண்ட் அபு சாலையிலிருந்து ஓட்டல் தேவிகார் அரண்மனை ஓட்டலுக்குத் திரும்பி, டீசல் ஸ்விஃப்ட்-ல் இருந்து பெட்ரோல் ஸ்விஃப்ட்-க்கு மாறினோம். டீசலைவிட பெட்ரோல் நிச்சயம் நிசப்தமாக இருந்தது. இன்ஜினும் ஸ்மூத்தாக இருந்தது. ஆனால், டீசல் அளவுக்கு இன்ஜின் பெப்பியாக இருந்தது என்று சொல்ல முடியாது. 4 சிலிண்டர்கள் கொண்ட 1197 சிசி 'கே சீரிஸ்’ VVT  இன்ஜின் புதியது. இது 6000 ஆர்பிஎம்-ல் 87 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 4000 ஆர்பிஎம்-ல் 11.6 kgm டார்க் அளிக்கிறது. பழைய பெட்ரோல் ஸ்விஃப்ட்டைவிட இந்த புதிய ஸ்விஃப்ட் 4 சதவிகிதம் அதிக மைலேஜ் கொடுப்பதாக மாருதி சொல்கிறது (லிட்டருக்கு 18.6 கி.மீ!)

புதிய ஸ்விஃப்ட்டில் விலை குறைந்த வேரியன்டுகளில்கூட பல கூடுதல் அம்சங்களைச் சேர்த்திருக்கிறார்கள். எரிபொருள் அளவு குறைந்தால், அதை புதிய ஸ்விஃப்ட் நினைவுப்படுத்துகிறது. அதேபோல, காரில் சாவியை வைத்துவிட்டு கீழே இறங்கினாலும், இது நமக்கு சத்தம் எழுப்பி உஷார் படுத்துகிறது. ZXi மற்றும் ZDi ஆகிய டாப் எண்ட் வேரியன்டுகளில் 15 இன்ச் அலாய் வீல்களும் உண்டு.

ஸ்விஃப்ட்டின் விலை உயர்ந்த வேரியன்டுகளில் ஏர் பேக் மற்றும் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. வளைவுகளில் வேகமாகத் திரும்பும் போதும் இதன் நிலைத்தன்மை அருமையாகவே இருக்கிறது. ஒரே வரியில் சொன்னால், பழைய ஸ்விஃப்ட்டை ஓட்டுவதை விட புதிய ஸ்விஃப்ட் ஓட்டுவது பரவச அனுபவமாக இருக்கிறது. பெட்ரோல் பேஸிக் வேரியன்டில் 8000 ரூபாயும், டீசல் பேஸிக் வேரியன்டில் 20,000 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது!