கார்ஸ்
Published:Updated:

டிவிஎஸ்ஸின் ஏபிஎஸ்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ABS

சார்லஸ், சுரேன்

 ##~##

ந்தியாவில் கார்களில் மட்டுமே இருந்த ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை முதன்முறையாக மோட்டார் சைக்கிளுக்கும் கொண்டு வந்திருக்கிறது டிவிஎஸ். அப்பாச்சி 150, ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 160 எஃப்.ஐ, அப்பாச்சி 180 என நீண்டு கொண்டே போகும் அப்பாச்சி பைக்குகளின் லிஸ்ட்டில், இப்போது சூப்பர் ஜூனியர் ஆர்டிஆர் 180 ஏபிஎஸ்.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏபிஎஸ் பிரேக்கை மோட்டார் சைக்கிளில் அறிமுகம் செய்தது. அதனால், இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் இல்லை என்றாலும், இன்ஜின் திறன் (சிசி) குறைவான பைக்குக்கு, அதுவும் இந்தியச் சாலைகளுக்கு ஏபிஎஸ் எப்படி பயன்படப் போகிறது என்ற கேள்விக்கு விடை காண, அப்பாச்சி ஏபிஎஸ் பைக்கை டெஸ்ட் செய்தோம்.

ஏபிஎஸ் எப்படி வேலை செய்யும்?

ஜெர்மனியின் கான்டினென்ட்டல் ஏஜி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏபிஎஸ் பிரேக்ஸைத் தயாரித்திருக்கிறது டிவிஎஸ்.

2 - சேனல் ஏபிஎஸ் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது டிவிஎஸ் அப்பாச்சி 180. ஒரு ஸ்பீடு சென்ஸார், இரண்டு வால்வுகள், அக்குமுலேட்டர், இரண்டு வீல்களுக்கும் ஒரு பம்ப் பொருத்தப்பட்டு, அது எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ்ஸின் ஏபிஎஸ்!

சாதாரணமாக பிரேக் அடிக்கும்போது, முதல் வால்வு திறந்து பைக்கை நிறுத்தும். வீல் 'லாக்’ ஆகி பைக் 'ஸ்கிட்’ ஆகப் போகிறது என்ற தகவல் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டுக்கு வந்துவிட்டால், இரண்டாவது வால்வு மூடி, உடனடியாக பிரேக் லீவரை லாக் ஆக விடாமல் தடுத்து, விட்டு விட்டு பிரேக் பிடிக்கும் வகையில் வேலை செய்யும். நீங்கள் பதற்றத்தில் தொடர்ந்து பிரேக் லீவரைப் பிடித்து அழுத்திக்கொண்டே இருந்தாலும், பிரேக் லீவர் விட்டு விட்டு வீலைப் பிடிக்குமே தவிர, தொடர்ந்து வீலை லாக் செய்யாது. இதனால், டயர் ஸ்கிட் ஆகாது என்பதோடு, நீங்கள் பைக்கை வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் திருப்ப முடியும். மேலும், நேராக மற்ற வாகனத்தின் மீதோ அல்லது வேறு ஏதாவது பைக் மீதோ மோதுகிற ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்!

டிவிஎஸ்ஸின் ஏபிஎஸ்!

மேலும், அப்பாச்சியின் ஏபிஎஸ் சிஸ்டத்தில் 'ரியர் வீல் லிஃப்ட் ஆஃப் புரடக்ஷன்’ (ஸிலிறி) எனும் தொழில்நுட்பம் உள்ளது. இதன்படி, எப்போது சடர்னாக பிரேக் அடித்தாலும், பின் பக்க வீல் தூக்கினால், சிஸ்டத்தில் இருக்கும் சென்ஸார்கள் உடனடியாக வேலை செய்து, பின் பக்க வீலைத் தூக்காமல் தடுக்கும்.

ஏபிஎஸ் பிரேக்ஸ், வெளிநாடுகளில் பனி படர்ந்த சாலைகளுக்குச் சரியாக இருக்கும். ஆனால், ஊர்ந்து கொண்டே செல்லும் டிராஃபிக் நெருக்கடி மிகுந்த இந்தியச் சாலைகளுக்கு, எப்படி இந்த ஏபிஎஸ் சரியாக இருக்கும் என்ற கேள்விக்கும் விடை சொல்லியிருக்கிறது டிவிஎஸ்.

மிதமான வேகத்துக்கு ஏற்றபடி ஏபிஎஸ் பிரேக்ஸ் செட்டிங் இருக்கிறது. மேலும், ஏபிஎஸ் இருக்கிறதே என்று தைரியமாகச் சென்று பிரேக் அடிக்கும்போது ஏபிஎஸ் வேலை செய்யவில்லை என்றால்? அதற்கும் வழி இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கில் கோளாறு இருந்தால் ஏபிஎஸ் பிரேக் விளக்கு ஒரே விநாடியில் இருமுறை ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்துவிட்டு தொடர்ந்து எரிய ஆரம்பித்துவிடும். இந்த விளக்கு தொடர்ந்து எரிந்தால்,  ஏபிஎஸ் வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

அதேபோல், ஏபிஎஸ் தேவையில்லாத நேரங்களில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனை சுவிட்ச் மூலம் ஆஃப் செய்துவிடும் வசதியும் இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 180 ஏபிஎஸ் பைக்கை, சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக், தண்ணீர் நிரம்பிய சாலைகள், சாதாரண சாலைகள் என மூன்று வகையான சாலைகளிலும் டெஸ்ட் செய்தோம்.

ரேஸ் டிராக்கில் அப்பாச்சி ஏபிஸ் பைக்கை ஓட்டுவதைவிட, சாதாரண சாலைகளில் ஓட்டும்போது அதிக தன்னம்பிக்கையுன் பிரேக் அடிக்க முடிந்தது. வீல் ஸ்கிட் ஆகவில்லை.

புதிதாக பெரிய பைக் வாங்கப் போகிறவர்கள் பயம் இல்லாமல் ஓட்ட அப்பாச்சி ஏபிஎஸ் நல்ல சாய்ஸாக இருக்கும்!