கார்ஸ்
Published:Updated:

சூப்பர் கார் - ஷெல்பி டுயட்டாரா

சூப்பர் கார் - ஷெல்பி டுயட்டாரா

சார்லஸ்

 ##~##

லகின் வேகமான கார் எது என்கிற கோதாவில், புகாட்டியுடன் முட்டி மோதுகிறது ஷெல்பி! 'நான்தான் உலகின் வேகமான கார்!’ என ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ஒரு அங்கமான புகாட்டி வெய்ரான் கார் முஷ்டி முறுக்க... அதற்குப் போட்டியாக இப்போது, 'உலகின் வேகமான கார்’ என்ற அடைமொழியுடன் புதிய காரை அறிமுகப்படுத்தத் தயாராகி இருக்கிறது அமெரிக்காவின் ஷெல்பி சூப்பர் கார்ஸ் நிறுவனம்.

டுயட்டாரா என்ற பெயரில் அறிமுகமாக இருக்கும் இந்த கார், ஷெல்பி சூப்பர் கார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது கார். ஏற்கெனவே ஏரோ என்ற பெயரில் மணிக்கு 411 கி.மீ வேகம் வரை பறக்கக்கூடிய காரைத் தயாரித்து அசத்தியிருக்கிறது இந்த நிறுவனம். இதன் புதிய காரைப் பார்த்து அரண்டு கிடக்கின்றன சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனங்கள்!

சூப்பர் கார் - ஷெல்பி டுயட்டாரா

தற்போது, உலகிலேயே வேகமாகச் செல்லக்கூடிய காரான புகாட்டி வெய்ரான் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 431 கி.மீ. ஆனால், டுயட்டாரா மணிக்கு 442 கி.மீ வரை பறக்கும் என சவால் விடுகிறது ஷெல்பி. டுயட்டாரா என்பது ஒரு வகையான முதலை இனத்தின் பெயர்.

சின்ன வகை போர் விமானம் போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது டுயட்டாரா. எடை குறைவாக இருப்பதற்காக வீல்கள் உட்பட கார் முழுக்க முழுக்க கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஸ்போர்ட்ஸ் காரான இதில் பொருட்கள் வைக்க டிக்கி எல்லாம் இல்லை. ரிமோட் பட்டனைத் தட்டினால் கார் திறக்குமே தவிர, கதவுகளைத் திறக்க ஹேண்டில் கிடையாது. வீல்களும் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டு இருப்பதால், நான்கு வீல்களின் ஒட்டுமொத்த எடை வெறும் 11.6 கிலோ தான்.

கார் இன்னும் முழுமையாக அறிமுகப்படுத்தபடாததால், காருக்குள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லாமல் ரகசியம் காக்கிறது ஷெல்பி. ஆனால், முந்தைய ஏரோ மாடலுடன் ஒப்பிடும்போது இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த காருக்குள் ஏஸி, சீட் பெல்ட்டுகளைத் தவிர பெரிய வசதிகள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. மணிக்கு 400 கி.மீ-க்கு மேல் பறப்பவர்கள் எங்கிருந்து பாடல்கள் எல்லாம் கேட்கப் போகிறார்கள் என்பது ஷெல்பியின் வாதம்!

7 லிட்டர் DOHC, V8இன்ஜினைக் கொண்டிருக்கிறது டுயட்டாரா. டுவின் டர்போ இன்ஜின் கொண்ட இந்த கார், அதிகபட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 1350 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 0-100 கி.மீ வேகத்தை வெறும் இரண்டே விநாடிகளில் கடக்கும் டுயட்டாரா, அதிகபட்சமாக மணிக்கு 442 கிமீ வேகத்தைத் தொட்டு, கார் உலகில் புதிய சாதனை படைக்கும் என்கிறது ஷெல்பி!

உலகின் வேகமான இந்த காரில் டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ், பிரம்போ கார்பன் செராமிக்ஸ் பிரேக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரை இந்தியச் சாலைகளில் ஓட்ட முடியுமா என்பது சந்தேகமே? இந்த காரை ஓட்டக்கூடிய அளவுக்கு நம் நாட்டில் சாலைகள் இல்லை.

உலகின் வேகமான இந்த காரின் விலை 5 கோடி ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், புகாட்டி வெய்ரான் காரின் விலையோ 11 கோடியே 40 லட்சம் ரூபாய்!

விலை குறைவாகவும், அதே சமயம் வேகமான சூப்பர் காராகவும் இருக்கும் ஷெல்பி டுயட்டாராவுக்காகக் காத்திருக்கிறது கார் ரசிகர் கூட்டம்!