கார்ஸ்
Published:Updated:

பாதிக்கப்படுகிறதா பழைய கார் மார்க்கெட்?

பெட்ரோல் விலை ஏற்றம்

எஸ்.ஷக்தி  தி.விஜய்

 ##~##

ட்டோமொபைல் சந்தையில் இது முக்கிய தருணம்! உயர்ந்து நிற்கும் எரிபொருள் விலையால், இந்தியாவில் வாகன விற்பனை கணிசமாகக் குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் பேசுகின்றன. இந்தச் சூழலில் 'பழைய கார் மார்க்கெட் எப்படி இருக்கிறது?’ கோவை பழைய கார் மார்க்கெட்டில் ஒரு வலம் வந்தோம்.

''எரிபொருள் விலையேற்றம் மக்கள் மத்தியில நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துடுச்சு. எங்களுக்குத் தெரிஞ்சு கோவையில உள்ள பெரிய கம்பெனிகளே 'பஸ்’ வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. அதாவது, ஏ.ஸி வசதி செய்யப்பட்ட இந்த பஸ்கள்லதான் அந்த கம்பெனிகளோட உயரதிகாரிகள்

பாதிக்கப்படுகிறதா பழைய கார் மார்க்கெட்?

ஆஃபீஸுக்குப் போய் வர ஆரம்பிச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இவங்க தன்னோட கார்கள்ல தனித் தனியா ஆஃபீஸுக்குப் போயிட்டு வந்துட்டிருந்தவங்க! பெரிய கம்பெனிகளே இப்படி சிக்கன நடவடிக்கையில இறங்குறப்ப... சாதாரண தனிக் குடும்பங்கள் கார் வாங்க, அதுவும் பழைய கார் சந்தைக்கு வர்றது குறையுறது இயல்புதானே!'' என்கிறார்கள்.

ஆனால், இதை மறுத்துப் பேசும் 'மன்னடியார் ப்ரீ ஓன்ட் கார்ஸ்’ நிறுவன மேலாளரான அசைன் அலி, ''பழைய கார் சந்தை எந்தப் பிரச்னையும் இல்லாம ரொம்ப ஸ்மூத்தா முன்னேறிக்கிட்டே இருக்குது. எரிபொருள் விலையேற்றத்தாலே எந்தப் பெரிய பாதிப்புகளும் உருவாகலை. காரெல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியல்ல சேர்ந்து வெகு காலமாகிப் போச்சு! அதனால, கார்களைத் தவிர்க்கவே முடியாது. புது கார் ஷோ ரூம்களுக்கு இணையாவே பழைய கார் ஷோ ரூம்களும் ரொம்ப பிஸியா இருக்குது. ஒரே வித்தியாசம் என்னன்னா... பெட்ரோல் கார்களுக்குப் பதிலா டீசலைத் தேட ஆரம்பிச்சுட்டாங்க மக்கள். ஆனா, ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களோட விலை மட்டுமில்லை... பராமரிப்புச் செலவும் ஜாஸ்தி!

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க மட்டுமில்லை, நல்ல வசதி வாய்ப்பு இருக்கிறவங்களே

பாதிக்கப்படுகிறதா பழைய கார் மார்க்கெட்?

இப்போல்லாம் பழைய கார்களை விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க. காரணம், 'எல்லா வெரைட்டி கார்களும் என் போர்டிகோவைத் தொட்டிருக்குது’-ன்னு பெருமை பேச விரும்புறாங்க மக்கள். முன்னாடியெல்லாம் புதுசா வாங்கப்பட்ட கார், பழைய கார் ஷோ ரூமுக்கு வர்றதுக்கு அஞ்சு வருஷமாகும். பிறகு, அது ரெண்டு வருஷமா மாறுச்சு. ஆனா, இப்போ அதுக்கும் முன்னாடியே வந்துடுது. கார் தயாரிப்பு நிறுவனங்களும் பழைய கார் மார்க்கெட் பரபரன்னு இருக்கிறதுக்கு இது முக்கிய காரணம். அதாவது, ஒரு புது காரை அறிமுகப்படுத்திய கொஞ்ச நாட்களிலேயே அதே காரை இன்னும் அப்டேட் பண்ணி களமிறக்குறாங்க. இந்த விஷயம் கார் பிரியர்களை புதுப் புது கார்களுக்குப் பின்னாடி ஓட வைக்குது.

இதுக்கு பிஎம்டபிள்யூ, ஆடி கூட விதிவிலக்கில்லை. வாங்கி ஒரே வருஷமாகி இருந்த 1.25 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார், எங்க ஷோ ரூமுக்கு வந்து ஒரு கோடிக்குச் சில லட்சங்கள் குறைவா விற்பனையாச்சு! இதே மாதிரி 2009-ம் ஆண்டு மாடல் ஆடி ஏ4 ஒண்ணும் வந்திருக்குது. இந்த காருக்கும் செம டிமாண்ட் இருக்குது!'' என்றவரிடம் ''எந்த நிறுவன கார்களுக்கு இந்தச் சந்தையில அதிக டிமாண்ட் இருக்கிறது?'' என்று கேட்டோம்.

பாதிக்கப்படுகிறதா பழைய கார் மார்க்கெட்?

''மாருதி, ஹூண்டாய், டாடா மூணு கம்பெனி கார்களுக்கும் நல்ல ஆஃபர் இருக்குது. அதேபோல ஹோண்டா, டொயோட்டாவுக்கு நல்ல டிமாண்ட்! இதற்குப் பிறகுதான் பிஎம்டபிள்யூ, ஆடியெல்லாம். எந்த கார் ரொம்ப ஸ்லோவா விற்பனையாகுதோ, அந்த கார் ரொம்ப ஸ்லோவாதான் பழைய கார் மார்க்கெட்டுக்கு வரும். காரணம், ரீ-சேல் வேல்யூ ரொம்ப குறைவா இருக்குறது தான்!

மாருதி மட்டும்தான் 'ட்ரூ வேல்யூ’ ஷோ ரூம் வெச்சிருந்தாங்க. ஆனா, இப்போ டாடா உள்ளிட்ட மற்ற கம்பெனிகளும் இந்த ஃபீல்டுக்கு வந்துட்டாங்க. கூடவே எல்லாரும் அவங்க தயாரிப்பு கார்களை மட்டுமில்லாம, பிற கம்பெனி கார்களையும்கூட இந்த ஷோ ரூம்கள்ல விற்கிறாங்க. இதுல இருந்தே புரியலையா... பழைய கார் மார்க்கெட் எவ்வளவு ஹாட்டா இருக்குதுன்னு?!'' என்கிறார் அசைன் அலி.

 புதிய கார்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது பழைய கார் மார்க்கெட்

பெட்ரோல் - டீசல் எரிபொருள்களின் விலை உயர்வு ஒரு பக்கம் பயமுறுத்த... மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களை புதிய கார்கள் பக்கம் வர விடாமல் மிரட்டுகிறது கார் கடன் வட்டி விகிதம். இதனால், புது கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைய, பழைய கார் மார்க்கெட் டாப் கியரில் பறக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் புதிய கார் வாங்குபவர்களைவிட பழைய கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள்.

தற்போது ஆண்டுக்கு 18 லட்சம் பழைய கார்கள் இந்தியாவில் விற்பனையாகின்றன. இது 2015-ம் ஆண்டுக்குள் 40 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய கார் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பதால், பழைய கார்களின் ரேட்டும் எகிற ஆரம்பித்திருக்கிறது. இதனால், பழைய கார் மார்க்கெட்டில் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி ஆல்ட்டோ, மாருதி வேகன்-ஆர் ஆகிய கார்களின் விலை அதிகமாக ஆரம்பித்திருக்கிறது.  இன்னும் மூன்று மாதங்கள் கடந்தால், பழைய கார்களின் விலை இன்னும் அதிகரிக்கும். பழைய கார் வாங்கும் முடிவில் இருப்பவர்கள் கார் வாங்க இது சரியான நேரம். அதே நேரம், பழைய காரை விற்றுவிட்டு புது கார் வாங்கும் முடிவில் இருப்பவர்கள் இன்னும் 3-4 மாதங்கள் பொருத்திருந்தால், உங்கள் காரை இன்னும் கூடுதல் விலைக்கு விற்கலாம்!