Election bannerElection banner
Published:Updated:

ஏன் இந்த வீழ்ச்சி!

மார்க்கெட் ப்ளான் ஃபோக்ஸ்வாகன்சார்லஸ்

 உலகின் டாப் டென் கார் தயாரிப்பாளர்கள் பட்டியலில் டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் ஃபோக்ஸ்வாகன்.

ஆடி, சியட், ஸ்கோடா, பென்ட்லி, போர்ஷே, புகாட்டி, லம்போகினி என ஏழு கார் தயாரிப்பு நிறுவனங்கள், டுகாட்டி எனும் பைக் தயாரிப்பு நிறுவனம், ஸ்கானியா மற்றும்  MAN எனும் கமர்ஷியல் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் ஃபோக்ஸ்வாகன் குழுமத்தைச் சேர்ந்தவை. உலகின் அதிக விலை கொண்ட காரான புகாட்டி முதல், மிகவும் விலை குறைவான கார் வரை தயார் செய்து வரும் ஃபோக்ஸ்வாகனின் அசுர பலம், இந்தியாவில் இன்னும் எடுபடவில்லை என்பதுதான் உண்மை.

ஏன் இந்த வீழ்ச்சி!

3,800 கோடி ரூபாய் முதலீடு, 17 மாதங்களில் மகாராஷ்டிராவின் சக்கான் நகரில் 3,500 ஏக்கரில் கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்ட தொழிற்சாலை, ஆண்டுக்கு 1.30 லட்சம் கார்கள் தயாரிப்பு என கலர்ஃபுல் கனவுகளில் துவங்கிய ஃபோக்ஸ்வாகனின் பயணம், தடுமாற்றம் கண்டது ஏன்? கடந்த 2013 - 2014-ம் ஆண்டில் 46 சதவிகிதம் விற்பனையில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன் இந்தியா.

என்ன தவறு நடந்தது?    

இந்திய வாடிக்கையாளர்களையும், இந்திய ஆட்டோமொபைல் சந்தையையும் ஜெர்மானியக் கண் கொண்டு பார்த்ததுதான் ஃபோக்ஸ்வாகன் செய்த முதல் தவறு. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைக் கூட அறிந்து உணராமல், வேக வேகமாகக் களம் இறங்கியது ஃபோக்ஸ்வாகன். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களுக்குப் போட்டியாக சிறந்த கார்களைக் கொண்டுவருவதற்குப் பதில், பிராண்டை இந்தியாவில் ஆழப் பதிய வைக்க வேண்டும் என்று, பல்லாயிரம் கோடிகளைக் கரைத்தது ஃபோக்ஸ்வாகனின் இந்திய நிர்வாகம். டாக்கிங் நியூஸ் பேப்பர், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்ஸர் என காற்றில் கரைந்தது இதன் விளம்பர பட்ஜெட்.

போலோவும், வென்ட்டோவும் இந்தியாவில் விற்பனைக்கு வந்த உடனே விற்பனை கிராஃபில் தடதடவென ஏறின. ஆனால், இந்த விற்பனையை இறக்கி விடுவதில் ஃபோக்ஸ்வாகனின் பல டீலர்கள் ஆர்வம் காட்டியதால், திடீர் வெற்றி காணாமல் போனது. மேலும் ஃபோக்ஸ்வாகனின் ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிகம். இதனால், சர்வீஸுக்கு கார்கள் போகப் போக, விற்பனை குறைய ஆரம்பித்தது. தரமான ஜெர்மன் கார்கள் என்பதைச் சொல்லி மட்டும் காரை விற்பனை செய்துவிட முடியுமா? தரத்துக்கும், பில்டு குவாலிட்டிக்கும்தான் அதிகப் பணம் என்னும் ஃபோக்ஸ்வாகனின் வாதத்தை, இந்தியாவின் சராசரி வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

ஏன் இந்த வீழ்ச்சி!

ஏன் விலை அதிகம்?

போலோவின் டேஷ்போர்டை இந்தியாவிலேயே தயாரித்தால், காரின் விலையைக் குறைக்கலாம் எனத் திட்டமிட்டு இந்திய நிறுவனங்களிடம் பணியைக் கொடுத்தது ஃபோக்ஸ்வாகன். ஆனால், அந்த டேஷ் போர்டு, 'ஸ்க்ராட்ச் விழாமல் இருக்க வேண்டும்’ என்கிற ஃபோக்ஸ்வாகனின் நிபந்தனையைப் பூர்த்தி செய்யவில்லை என்பதோடு, அதில் உடல் நலக் குறைபாடுகளை வரவழைக்கும் 'வாலட்டைல் ஆர்கானிக்’ பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால், மீண்டும் வெளிநாட்டில் இருந்தே பாகங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.

போலோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு என்பதோடு, இன்ஜின் ஆயில் சம்ப் கீழே இருக்க, உடைந்த ஆயில் சம்ப்புகளுடன் பல கார்கள் சர்வீஸ் சென்டர் தேடி ஓடின. அதன் பிறகுதான் அதற்குத் தனியாக ஒரு பாதுகாப்புச் சாதனத்தை (Guard) அமைக்க வேண்டும் என்று புரிந்தது ஃபோக்ஸ்வாகன் இன்ஜினீயர்களுக்கு. காலம் கடந்து வந்த சிந்தனை.

10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஃபோக்ஸ்வாகனிடம் இரண்டு கார்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த செக்மென்ட் தான் இந்தியாவில் 60 சதவிகிதம் மார்க்கெட் ஷேரை வைத்திருக்கிறது. ஆனால், இதில் மினி எஸ்யுவி, காம்பேக்ட் செடான் போன்று இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் எதிலும் ஃபோக்ஸ்வாகன் இறங்கவில்லை. இதற்கிடையே, விற்பனையின் மந்தத்துக்குத் தலைமை நிர்வாகிகள்தான் காரணம் என உயர் அதிகாரிகள் பலரையும் வீட்டுக்கு அனுப்பியது தாய்க் கழகமான ஃபோக்ஸ்வாகன் ஜெர்மனி.

ஏன் இந்த வீழ்ச்சி!

என்ன வழி?

இந்தியாவில் பாகங்களைத் தயாரிப்பது தான் ஒரே வழி. இனியும் 'இந்தியாவில் எங்களின் தரத்துக்கு யாரும் பாகங்களைத் தயாரிப்பதில்லை’ என்று சொல்ல முடியாது. ஃபோர்டு, டொயோட்டா, ரெனோ, நிஸான் எனப் பல நிறுவனங்கள் இந்தியாவில்தான் 90 சதவிகித பாகங்களைத் தயாரிக்கின்றன. இப்போது 240 கோடி ரூபாய் முதலீட்டில் டீசல் இன்ஜின் தயாரிப்பு ஆலையை இந்தியாவில் துவக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இங்கே இந்தியாவுக்கு என ஸ்பெஷலாக 1.5 லிட்டர் இன்ஜினைத் தயாரிக்க இருக்கிறார்கள்.

ஹூண்டாய் வெர்னா டீசல் ஆட்டோமேட்டிக், மார்க்கெட்டில் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதால், வென்ட்டோ டீசலில் ஆட்டோமேட்டிக் டிஎஸ்ஜி கியர் பாக்ஸை அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இது தவிர, டிஸைனில் இந்தியாவுக்கான எதிர்கால கார்களை முற்றிலும் புதிதாக வடிவமைக்க 550 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

55 கோடி ரூபாய் முதலீட்டில், வென்ட்டோவை நான்கு மீட்டருக்குள் சுருக்கி, புதிய டிஸைனில் இந்தியாவுக்குள் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிடப் பட்டிருக்கிறது. டிசையர், அமேஸ், எக்ஸென்ட் கார்களுக்கு இது போட்டியாக இருக்கும். ஆனால், இது தவிர, இந்தியாவுக்கென ஸ்பெஷலாக புதிய கார்கள் எதுவுமே ஃபோக்ஸ்வாகனிடம் இல்லை.

புதிய தரமான கார்களைக் கொண்டுவந்து, சர்வீஸ் நெட்வொர்க்கை அதிகப்படுத்தி, ஸ்பேர் பார்ட்ஸுகளின் விலையைக் குறைத்தால் மட்டுமே இந்தியாவில் தாக்குப் பிடிக்கும் ஃபோக்ஸ்வாகன்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு