Election bannerElection banner
Published:Updated:

நடுங்க வைத்த நாகரஹொலே!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்தமிழ், படங்கள்: எம்.விஜயகுமார்

நடுங்க வைத்த நாகரஹொலே!

மோட்டார் விகடன் பார்த்துதான் நான் ஹோண்டா சிட்டி எடுத்தேன்! மோ.வி.க்கு நன்றி!'' - பிப்ரவரி 14.

''என் ஹோண்டா சிட்டியில் மோ.வி-யுடன் கிரேட் எஸ்கேப் போக ஆசை!'' - ஜூன் 20.

''ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்பில் கலந்துகொள்ளாமல் விடமாட்டேன்!'' - ஜூலை 15.

''நானும் எனது சிட்டியும் காத்திருக்கிறோம்!'' - ஆகஸ்ட் 16.

ஹோண்டா சிட்டியை புக் செய்ததில் இருந்து, சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைப் புளியம்பட்டியைச் சேர்ந்த வாசகர் சக்திவேல் நமக்கு அனுப்பிய வாய்ஸ் ஸ்நாப் மெசேஜ்கள் இவை. இந்த முறை கண்டிப்பாக சிட்டியில்தான் நமது பயணம் என்று முடிவெடுத்து சத்தியமங்கலத்துக்கு விரைந்தோம். புஞ்சைப் புளியம்பட்டி கிராமத்தில், தனது வெள்ளை நிற ஹோண்டா சிட்டியோடு சிரித்தபடி வரவேற்றார் சக்திவேல். ''ஒரு வழியா புடிச்சுப்போட்டையே மச்சான்!'' என்று உற்சாகமாகப் பயணத்துக்கு அவருடன் தயாரானார் சிவக்குமார். இவர் சக்திவேலின் நண்பர் ரியல் மச்சான்.

''சிட்டிக்குள்ள சிட்டியை வெச்சு பட்டையைக் கிளப்பலாம்னு கேள்விப்பட்டிருப்பீங். ஆனா, நாம ஃபாரஸ்ட்டுக்குள்ளே கிரேட் எஸ்கேப் போகப் போறோமுங்! கிளம்பலாமுங்ளா?'' என்று சிட்டியின் சாவியை நம்மிடம் ஒப்படைத்தார் சக்திவேல். பழைய சிட்டிக்கும் புதிய சிட்டிக்கும் டேஷ்போர்டில் எக்கச்சக்க மாற்றங்கள். அதே நீளம், அகலம், உயரம். ஆனால், வீல்பேஸைக் கூட்டி இருப்பதால், கேபினுக்குள் கொஞ்சம் இடம் அதிகமாகி இருக்கிறது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட சிட்டியை ஸ்டார்ட் செய்தோம். வழக்கம்போல, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் கொஞ்சம் அதிர்வுடன் இயங்கியது.

''கர்நாடகாவுல நாகரஹொலேனு ஒரு இடம். ஃபாரஸ்ட் ஏரியா... சஃபாரி... ஜிபிஎஸ்-ல ரூட் செட் பண்ணிட்டேன். ஓகே.தானுங்ளே?'' என்றார் சக்திவேல்.

நெடுஞ்சாலையில் சிட்டியின் பவரைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. சத்தியமங்கலம் மலைப் பாதைகளில் ஏற 100 bhp பவர் சூப்பராக கை கொடுத்தது. 20.39kgm டார்க் இருப்பதால், டீசலுக்கே உரிய பிக்-அப் சிட்டியில் அம்சமாகக் கிடைத்தது. கொண்டை ஊசி வளைவுகளில் அநாயாசமாக ஏறியது சிட்டி. லோ ரேஞ்சில் திணறல் இல்லை. எனவே, டர்போ லேக் அவ்வளவாகத் தெரியவில்லை. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஹோண்டா சிட்டிக்குப் பெரிய ப்ளஸ்.

நடுங்க வைத்த நாகரஹொலே!

காலை நேரம் தாண்டியிருந்ததால், புள்ளி மான்களைத் தவிர எதுவும் தென்படவில்லை. 27 ஹேர்பின் வாளைவுகள் தாண்டி திம்பம் பகுதி வந்ததும், மனதில் லேசான பயம் பரவியது. காரணம் - சிறுத்தை. தாளவாடியைச் சேர்ந்த முகமது இலியாஸ் என்ற வேன் டிரைவர், சிறுத்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் நடந்த இடம் இதுதான். இரும்புக் கம்பிகள் ஏற்றி வந்த லாரி ஒன்று தடம்புரண்டு நின்றதைக் கண்டு, தனது வேனில் இருந்து இலியாஸ் இறங்கியபோது, இந்தச் சம்பவம் நடந்ததாகச் சொன்னார்கள்.

இரவு நேரம் என்பதால், மங்கலான வெளிச்சத்தில் தன்னைத் தாக்க வந்த மிருகம் என்று நினைத்துதான் இலியாஸ் மீது சிறுத்தை பாய்ந்திருக்கிறது என்கின்றனர் வனத்துறையினர். பெரும்பாலும் சிறுத்தைகள் இறைச்சியைவிட ரத்தத்தையே விரும்பும்; எனவே, ஒரு தடவை மனித ரத்தத்தின் சுவையை மிருகங்கள் அறிந்துவிட்டால் தொடர்ந்து ஆபத்து என்றும் சொன்னார்கள். அதனால், இங்கு இரவு நேரத்தில் வாகனங்களில் இருந்து கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த ஒரே ஒரு டீக் கடையையும் 5.30 மணிக்குள் மூடி விடுகிறார்களாம்.

கொஞ்ச நேரத்தில் ஆசனூர் வந்தது. ஆசனூரும் யானைகள் அதிகம் உலவும் இடம். தமிழக எல்லை தாண்டி, கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் மதிய உணவு அருந்திவிட்டு, இடதுபுறமாகத் திரும்பினோம். குண்டல்பேட் தாண்டி சில கி.மீ-களில் வருகிறது நுகு எனும் ரிசர்வாயர். 1947-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணை, அப்போது 310.75 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டதாம். 90 அடி உயர அணையில் இருந்து அணை நீர் வழிவது, மிகப் பிரம்மாண்டமான அருவியைப்போன்ற  உணர்வைக் கொடுக்கிறது. கிட்டத்தட்ட 380 சதுர மைல்களுக்குப் பரவி ஓடுகிறது இந்த அணை நீர்.

அந்தப் பிரதேசத்தையே, 'தண்ணீர் தேசம்’ என்று அழைக்கலாம்; அந்தளவுக்கு எங்கு திரும்பினாலும் குட்டிக் குட்டியாகவும் பெரிதாகவும் அணைகள், ஏரிகள் மற்றும் ஜாலியாகப் பாயும் நீர்நிலைகள். ''இவ்வளவு ஸ்பீடா போறீங்க... ஆனா, தமிழ்நாட்டுக்கு மட்டும் அவ்வளவு சுலபத்துல வந்துப்புடமாட்டோம்னு அடம்புடிக்கிறீங்ளே?'' என்று ஓடுகிற நீரைப் பார்த்து, சின்னப் பையன்போல பேச்சுவார்த்தை நடத்தினார் சக்திவேல்.

நாகரஹொலேவுக்கு இரவில் செல்வது ஆபத்து என்பதால், மைசூருக்குச் சென்று தங்குவதே சிறந்தது என்று மைசூரில் உள்ள கைடுகள் வலியுறுத்தினார்கள். மைசூரில் தடுக்கி விழுந்தால், வழிகாட்டிகள் கிடைக்கிறார்கள். சுற்றுலாவை நம்பியே மைசூர் இருப்பதால், சாதாரண ஹோட்டல் ரூம்கள் முதல் சொகுசு காட்டேஜ்கள்  வரை எதற்கும் பஞ்சம் இல்லை.

நடுங்க வைத்த நாகரஹொலே!

மைசூரில் லலித் மஹால் பேலஸ் மிகவும் பிரசித்தம். மஹாராஜா கிருஷ்ணராஜா உடையாரால், அந்தக் கால வைஸ்ராய்கள் தங்குவதற்காக எழுப்பப்பட்ட இந்த அரண்மனை, இன்னமும் பாதி பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. முன்னால் நீச்சல் குளம், இரவு நேரத்தில் வர்ண ஜாலங்கள் காட்டும் விளக்குகள் என கொஞ்சூண்டு நவீனப்படுத்தியிருக்கிறார்கள். இங்கும் ரூம்கள் கிடைக்கின்றன. இங்கு ஒரு நாளைக்கு 15,000 முதல் 50,000 வரை வாடகை. ''கருணாநிதி, கமல், ரஜினி, மோகன்லால்னே வி.ஐ.பி.குளோ பந்துரே இள்ளிடா ஜாகே மாட்தாரே!'' என்று 50,000 ரூபாய் வாடகை ரூம்களைச் சுற்றிக் காட்டினார் பேலஸ் கைடு ஒருவர்.

'ஜோடி, சந்திரமுகி, படையப்பா என்று பல படங்களில் இந்த அரண்மனையைப் பார்த்திருப்பீங்களே’  என்று அந்த கைடு எடுத்துக் கொடுக்க..., ''ஞாபகம் வந்துடுச்சுங்... 'படையப்பா’ படத்துல சிவாஜி கட்டிப்புடிச்சு அழுவாருங்ளே... அந்தத் தூணுதானுங்ளே இது?'' என்று உற்சாகமானார் சிவக்குமார்.

இரவை மைசூரில் கழித்துவிட்டு, மறுநாள் கிளம்பினோம். மைசூரில் இருந்து 18 கி.மீ தூரத்தில், காவிரி நதியில் நடுவே உள்ள ரங்கனதிட்டு எனும் பறவைகள் சரணாலயத்தில் சிட்டியை நிறுத்தினோம்.

ஆசியாவின் முக்கிய பறவைகள் சரணாலயங்களில் இதுவும் ஒன்று. பல சதுர கி.மீ-க்களுக்குப் பரந்து விரிந்து கிடக்கும் ரங்கனதிட்டு, குழந்தைகளுடன் குதூகலிக்கச் சிறந்த இடம். இங்குள்ள ஏரியில் போட்டிங் வசதி உண்டு. சிறியவர்களுக்கு 50 ரூபாய், பெரியவர்களுக்கு 100 ரூபாய், ஒரு குடும்பத்துக்குத் தனி படகு வசதி என்றால், 1,300 ரூபாய் கட்டணம். எட்ட நின்று மட்டுமே பார்க்க முடிகிற பறவைகளை போட்டிங்கின்போது, கிட்ட நின்று ரசிக்கும் சுகம் குதூகலமானது.

நடுங்க வைத்த நாகரஹொலே!

மூச்சு மோதினாலே உடைந்துவிடும் முட்டைகளை ஒரு புங்கை மரத்தின் உச்சாணிக் கொம்பில் லாவகமாக விட்டுச் சென்ற பெயர் தெரியாப் பறவைகள், சிற்பியின் உழைப்பை நினைவுப்படுத்தும் மரங்கொத்திப் பறவைகள், தலை கீழாய்த் தொங்கும் தூக்கணாங்குருவிகள், அப்போதுதான் பறக்கக் கற்றுக்கொண்டிருந்த கிளிகள் என்று கலர் கலராக கண்களுக்கு ஜாலம் நிகழ்த்தின பறவைகள்.

''மனிதன் சிறகு முளைத்தபின் பூமியைக் கலைத்துவிட்டு வீட்டைக் கட்டிக்கொள்கிறான்; பறவைகளோ கூட்டைக் கலைத்துவிட்டு பூமியைக் கட்டிக் காக்கின்றன!'' என்று யாரோ ஒரு கவிஞர் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தன. இந்த காவிரி ஆற்றில் முதலைகளுக்கும் பஞ்சம் இல்லை என்றார்கள். நினைத்ததுபோலவே, நீரிலும் கரையிலும் நான்கைந்து முதலைகள் சோம்பலுடன் கண்களை மூடிப் படுத்திருந்தது, படகுப் பயணத்தில் பீதியைக் கிளப்பியது.

அற்புதமான படகுப் பயணத்தை முடித்துவிட்டு, மறுபடியும் சிட்டியின் ஸ்டீயரிங்கைப் பிடித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து நாகரஹொலே காட்டுப் பகுதி நம்மை வரவேற்றது. வழக்கமான சோதனைகளுக்குப் பிறகே உள்ளே அனுமதி கிடைத்தது. புலிகள் சரணாலயம் என்பதால், மாலை 5 மணிக்கு மேல் உள்ளே அனுமதி கிடையாது. மோசமான சாலை, ஹோண்டா சிட்டியின் சஸ்பென்ஷனுக்குச் சவால் விட்டது. குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால், அடிக்கடி காரின் கீழே உள்ள ஆயில் சம்ப்பைப் பதம் பார்த்தன மேடு - பள்ளங்கள். ''ஹோண்டால எனக்குப் பிடிக்காத விஷயங்கள்ல இதுவும் ஒண்ணுங்!'' என்றார் சக்தி.

ஆளரவமற்ற காட்டுப் பகுதியில், ஒற்றையாகத் தடதடத்துக் கொண்டிருந்தது ஹோண்டா சிட்டி. ஆரம்பத்திலேயே தரிசனம் தந்தன நூற்றுக்கணக்கில் மான்கள். காலையில் நிச்சயம் விலங்குகள் வரலாம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தார் செக் போஸ்ட் அதிகாரி. சுதந்திரமாக மேய்ந்துகொண்டிருந்த காட்டெருமைகள் நமது டீசல் இன்ஜினின் உறுமல் கேட்டு காட்டுக்குள் ஓட ஆரம்பித்தன. திடீரென நமக்கு முன்னே எக்கோஸ்போர்ட், மஹிந்திரா தார், வென்ட்டோ என்று வரிசையாக கார்கள் ரிவர்ஸில் வர, தடாலென நாமும் ரிவர்ஸ் கியரைப் போட்டுப் பின்னோக்கி நகர... காடே அதிரும் அளவுக்குப் பிளிறியபடி வாகனங்களைத் துரத்தியபடி வந்தது அந்த ஒற்றை யானை.

''யானைகளின் பிளிறலில், கும்பலைக் கூட்டும் தந்திரம் உண்டு. மஹிந்திரா தார் ஜீப் டிரைவர், அந்த யானையை ஓவர்டேக் செய்ய முயன்றதுதான் அதன் கோபத்துக்குக் காரணமாக இருக்கும்'' என்றார் அடிக்கடி காட்டுப் பயணம் மேற்கொள்ளும் சிவக்குமார்.

''பொதுவாக, காட்டுப் பாதையில் யானைகளை ஓவர்டேக் செய்ய நினைப்பது தவறு; காரிலோ, பைக்கிலோ செல்லும்போது யானைகள் எதிரே வந்தால், பதற்றம் இல்லாமல் இன்ஜினை ஐடிலிங்கில் வைத்தபடியே நின்றுவிடலாம்; டீசல் வாசம் யானைகளுக்குப் பிடிக்காது; இன்ஜினை ஆஃப் செய்தால், டீசல் வாடை நிச்சயம் அடிக்கும்; கோபமாக வரும் யானைகளை எதிர்கொள்ள ஹெட்லைட்டுகளை ஆன் செய்யலாம்; யானைகள் திரும்பிச் செல்ல வாய்ப்பு இருக்கிறது; எப்போதும் யானைகள் பாதையை கிராஸ் செய்தபிறகு செல்வதே நலம்'' என்று நிறைய டிப்ஸ் கொடுத்தார் சிவக்குமார்.

நடுங்க வைத்த நாகரஹொலே!

''ஹோண்டா சிட்டியில எனக்குப் பிடிக்காத இன்னொரு விஷயம் - ரிவர்ஸ் கியர். ரிவர்ஸ் கியர் போடோணும்னா ரொம்ப திணற வேண்டியிருக்குதுங்க... என் ஃப்ரண்டு ஒருத்தனுங்க.. மலைப் பாதைச் சரிவுல ரிவர்ஸ் கியர் போட முடியாமத் திக்கித் திணறி உசுருக்குப் போராடி பொழைச்சு வந்தானுங்!'' என்றார் சக்திவேல்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகே நமக்கு வழி விட்டன யானைகள். மக்கள் தொகை அதிகமில்லாத, ஆரவாரமில்லாத, எந்தவிதத் தொலைதொடர்பும் இல்லாத, போக்குவரத்து வசதிகள் இல்லாத, மின்சாரம் இல்லாத அழகான கிராமம் நாகரஹொலே. இங்குள்ள மக்கள் கூர்க் போன்ற காபி, டீ எஸ்டேட்டுகளில் கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டுவதாகச் சொன்னார்கள். மின்சாரம் இல்லாததால், கோடி ரூபாய் கொடுத்தால்கூட ஆறு மணிக்கு மேல் வேலை பார்க்க மாட்டோம் என்றார்கள். விரைவில், கர்நாடக அரசு நாகரஹொலேவில் வீட்டுக்கு ஒரு டார்ச் லைட் திட்டம் கொண்டு வரப் போகிறதாம்.

நாகரஹொலேவில் ஜங்கிள் சஃபாரி போவது த்ரில்லிங் அனுபவம். ஒரு நபருக்கு 150 ரூபாய் கட்டணம். முன்பு யானை சஃபாரி இருந்ததாகவும், சில பிரச்னைகள் காரணமாக இப்போது வேன் சஃபாரி மட்டுமே நடைமுறையில் இருப்பதாகவும் சொன்னார்கள் அதிகாரிகள். வேன் சஃபாரியில் நிச்சயம் புலி, சிறுத்தை, கரடியைப் பார்ப்பதற்கு கேரன்ட்டி என்றார்கள். நாம் சென்றபோது, மழையின் காரணமாக சஃபாரியை ஒத்தி வைத்திருந்தார்கள். ''த்ரில்லிங்கான காட்டுப் பயணம் போகோணும்னா நாகரஹொலே வரலாம்... சரிதானுங்?'' என்றார் சக்திவேல்.

நாகரஹொலேவில் இருந்து மறுபடியும் கிளம்ப ஆரம்பித்தபோது, லேசாக வானம் பம்மியிருந்தது. அந்த யானைக் கூட்டமும் அதே வளைவில் பம்மியிருந்தன.

வாசகர்களே!

நீங்களும் இதுபோல் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி (044 - 66802926) தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு