Published:Updated:

சின்ன பத்மினி!

மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: ரா.வருண் பிரசாத்

அம்பானியானாலும் அம்பாஸடர் வைத்திருந்த காலத்தில், புயல்போல புகுந்த கார் ஃபியட். அம்பாஸடர் ஹீரோ என்றால், , பத்மினிதான் ஹீரோயினி. இந்தியர்களின் முதல் காதல் கார் என்றும் பத்மினியைச் சொல்லலாம். இந்த பத்மினியின் மினி வடிவம்தான் ஃபியட் 1100.

சின்ன பத்மினி!

காலங்கள் மாறிவிட்டாலும் காலத்தால் அழிக்க முடியாத காராக விளங்கும் இந்த காருக்கு, இப்போதும் செம டிமாண்ட்!

முதன்முதலில் ஃபியட் 500 மாடல்தான் இந்தியாவில் 1951-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்புதான், 1100 விற்பனைக்கு வந்தது.

ஃபியட் நிறுவனத்திடம் அனுமதி பெற்று 1964-ம் ஆண்டில் இருந்து பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் தயாரித்த கார், ஃபியட் 1100 டிலைட் என்ற பெயரிலும் பிறகு, 1973-ம் ஆண்டு முதல் பிரீமியர் பத்மினி என்ற பெயரிலும் விற்பனையானது.

பின்னர் அதன் வடிவம் மற்றும் இன்ஜின் ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ஃபியட் 1100d என விற்பனை செய்யப்பட்டது. இதன் இன்ஜின் 1,089 சிசி கொண்டது. முதன் முதலில் 1100 ஆக அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில், இதில் 'சூசைட் டோர்ஸ்’ பொருத்தப்பட்டிருந்தன. இந்திய கார் சந்தையில் தனிபெரும் காராக கோலோச்சிக்கொண்டிருந்த அம்பாஸடருக்குப் போட்டியாக, இதன் விற்பனை உயர்ந்தது. அதற்குக் காரணம் இதன் சிறிய, எளிமையான வடிவமைப்பும், அதிக சக்தியும்தான். அந்தக் காலகட்டத்தில் டாக்டர்கள், இன்ஜினீயர்கள், அதிகாரிகள் போன்றவர்களுக்கு ஃபியட்டின் எளிய வடிவம் பிடித்திருந்தது. இந்தியச் சாலைகளை அம்பாஸடர்களும், ஃபியட்களும் ஆக்கிரமித்திருந்த காலம் அது.

ஃபியட் 1100ஞி (Delight) கார்களில், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட இன்ஜின்கள்தான் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் தயாரிப்பு தொடங்கப்பட்ட பின்புதான் ஃபியட் பத்மினியாகப் பெயர் பெற்றது. இது 40 bhp பவரை அளித்தது. 2 3 என்ற சீட் அமைப்பு, 308 லிட்டர் பூட் வசதி என அப்போது போதுமான வசதிகளுடன் இருந்தது இந்த கார். பெட்ரோல் இன்ஜினாக அறிமுகமான இந்த கார் 1996-ம் ஆண்டுக்குப் பிறகுதான் டீசல் இன்ஜினிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

சின்ன பத்மினி!

புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு சுஸ¨கி, ஃபோர்டு, ஹோண்டா, ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், பத்மினி கார்கள் சந்தையில் இருந்து வெளியேற வேண்டியதாயிற்று. புதிய கார்களின் வரவும், அவற்றின் நவீனத் தோற்றமும் மக்களின் மனதை மாற்ற ஆரம்பித்தன.

ஆனாலும், இன்றைக்கும் மதிப்பான, நீண்ட ஆயுள் கொண்ட கார் என்றால், அது ஃபியட் 1100 கார்தான். சரியாகப் பராமரித்துவந்தால், எந்தப் பிரச்னையும் இன்றி ஓடிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு இந்த காரை, ஒரு புதிய பைக் வாங்கும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்பதும் இதன் பலம்.

ஃபியட் 1100 காருக்கு நாடு முழுக்க காதலர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒரு சில பிரத்யேகமான இணையதளங்கள் ஒருங்கிணைத்துள்ளன. அவர்களில் சென்னையில் உள்ள இருவரைச் சந்தித்தோம். சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் அனந்தகுமார் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரும் நண்பர்கள். அனந்தகுமாரிடம் ஃபியட் 1100 சூப்பர் செலெக்ட் (1962) மாடலும், நவீன்குமாரிடம் 1100D (1968) மாடலும் இருக்கின்றன. அவர்களிடம் பேசினோம்.

'ஃபியட் காரைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகுதான் இதன் கிளாஸிக் வரலாறு தெரியவந்தது. அதன் பின்பு, பல இடங்களில் தேடிக் கண்டுபிடித்து இந்த 1100 கார்களை வாங்கி வந்தோம். நவீன கார்களில் கிடைப்பதுபோல இதன் மைலேஜ் நகருக்குள் 12 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 15 கி.மீ-யும் கிடைக்கிறது. 50,000 முதல் 1 லட்ச ரூபாய்க்குள் சிறந்த காரை வாங்கிவிட முடியும். பார்ப்பதற்குப் பழைய காராகத் தெரிந்தாலும் இதன் சரித்திரமும் அருமையான வடிவமைப்பும், சிக்கல் இல்லாத பராமரிப்பும் உங்களைக் கவர்ந்துவிடும்.  இந்த கார்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள். எனவே, இதன் உரிமையாளராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு