Published:Updated:

லிட்டில் டெர்மினேட்டர்!

ரீடர்ஸ் ரெவ்யூ ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 கு.நெல்சன் மேத்யுஸ் மதுரம், படங்கள்: இரா.யோகேஷ்வரன்

கல்லூரிக் காலத்தில் இருந்தே அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகரின் 'டெர்மினேட்டர்’ ரசிகன் நான். அதனால், ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது அதீத ஆர்வம் உண்டானதில் ஆச்சரியம் இல்லை. ஹார்லி போன்ற ஸ்போர்ட்ஸ், குரூஸர் வகை பைக்குகளைப் பார்த்தால் விசாரிக்காமல் இருக்கமாட்டேன். ஹார்லியின் தனித்துவமான டிஸைன் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், எப்படியாவது வாழ்க்கையில் ஹார்லி பைக் வாங்கிவிட வேண்டும் என லட்சியத்தோடு இருந்தேன்.

லிட்டில் டெர்மினேட்டர்!

ஏன்  ஹார்லி ஸ்ட்ரீட் 750?

இதற்கு முன்பு கரீஸ்மா பைக்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். அடுத்து ஸ்போர்ட்ஸ் அல்லது குரூஸர் பைக் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தபோது, ஹார்லியில் ஸ்ட்ரீட் 750 பைக் வரவிருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பதால், விலையும் குறைவாக இருக்கும் என்று காத்திருந்தேன். நான் எதிர்பார்த்ததைப் போலவே எல்லா சிறப்பம்சங்களுடன் ஸ்ட்ரீட் 750 அறிமுகம் ஆனது. அதனால், உடனே ஹார்லியை வாங்கிவிடுவது என முடிவு எடுத்தேன். மேலும், ஹார்லி வாங்குவது என் நெடுநாள் கனவு. அது நனவாகும் தருணம் இனிதானதுதானே?!

ஷோரூம் அனுபவம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கோரமண்டல் ஹார்லி ஷோரூமில் பைக்கைப் பார்க்கச் சென்றேன். அங்கு ஸ்ட்ரீட் 750 பைக் எப்படியெல்லாம் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை விளக்கினார்கள். ஹார்லியின் மற்ற பைக்குகளோடு ஒப்பிடுகையில், ஸ்ட்ரீட் 750-தான் விலை குறைவு. நான் எதிர்பார்த்த எல்லா சிறப்பம்சங்களும் பைக்கில் இருந்தன. கடந்த ஜூலை மாதம் பைக்கை புக் செய்தேன். ஆகஸ்ட் மாதமே டெலிவரி கொடுத்துவிட்டார்கள். முதல் சர்வீஸுக்கு 7,000 ரூபாய் செலவானது. கஸ்டமர் சர்வீஸ் நல்லபடியாகவே இருக்கிறது.

லிட்டில் டெர்மினேட்டர்!

பிடித்தது

உட்கார்ந்து ஓட்ட வசதியாக இருக்கிறது. எவ்வளவு தூரம் லாங் டிரைவ் போனாலும் உடம்பில் சின்ன அலுப்புக்கூடத் தெரிவது இல்லை. பைக்கின் ஸ்மூத்னெஸ் இன்னொரு ப்ளஸ். எப்படிப்பட்ட சாலையாக இருந்தாலும் ஜெர்க் இல்லாமல், ஸ்டெபிளிட்டி அருமையாக இருக்கிறது. இதன் அட்டகாசமான இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், சூப்பர் பைக்குக்கான ஃபீல் கொடுக்கிறது. இதன் கம்பீரமான தோற்றம், டிஸைன் நம்மைத் தனித்துக் காட்டுகிறது. ஹார்லியில் பயணம் செய்யும்போது, சாலையில் செல்வோர் பைக்கைக் கவனிப்பது பெருமிதமாக இருக்கிறது.

பிடிக்காதது

பைக்கின் பிரேக்கிங் சிஸ்டம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. விலையைக் குறைப்பதற்காக, பைக்கின் பிரேக்ஸ் பாகங்கள் சாதாரண பைக்கில் இருப்பதுபோல இருக்கின்றன.

எப்படி இருக்கிறது உங்கள் ட்ரீம் ஹார்லி?

ஆரம்பத்தில், பைக்கின் 56 bhp பவரைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தில், பைக்கை ஓட்டுவதற்கே பயமாக இருந்தது. ஆனால், இப்போது சாலை நெரிசல்களிலும் சின்ன சந்துகளில்கூட புகுந்து புறப்பட்டுச் செல்லும் அளவுக்கு தோழன் போலப் பழகி விட்டது. இதுவரை 3,000 கி.மீ வரை ஓட்டிவிட்டேன். பலமுறை நீண்ட தூரப் பயணம் போய்வந்துவிட்டேன். எல்லாப் பயணமும் மிக ஸ்மூத்தாக அமைந்தது. ஆரம்பத்தில் மைலேஜைப் பற்றி சரியாகத் தெரியவில்லை. இப்போது  சீராக லிட்டருக்கு 18 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. என் பைக்கை ஓட்டிப் பார்க்கும் நண்பர்கள் அனைவரும் வியந்துபோகிறார்கள். ஹார்லி, எப்போதுமே ஒரு பைக்கரின் ட்ரீம் பைக்காக இருப்பது அதனால்தானே?!

அடுத்த கட்டுரைக்கு