Published:Updated:

மலைப்பு... மயக்கம்... மர்மம்....8

இமயமலையில் ஒரு பயணம்!கணேசன் அன்பு

லடாக் எனும் வார்த்தைக்கு 'அதி உயர கணவாய்களின் நிலம்’ என்று பொருள். நம்மில் பலர் லடாக் என்பதை ஓர் இடம் அல்லது ஊர் என்றே அறிந்திருப்போம். அது ஒரு பிராந்தியம். கொங்குநாடு, தெலுங்கானா, மலபார் போல லடாக் என்பதும் ஒரு பிராந்தியம். பூகோள அமைப்பு, கலாசாரம் மற்றும் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலமானது மூன்று முக்கியப் பிராந்தியங்களாகப் (ஜம்மு, காஷ்மீர், லடாக்) பிரித்து அறியப்படுகிறது. 'குட்டி’ திபெத் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லடாக் பிராந்தியத்தில், பெரும்பாலானோர் புத்த மதத்தினர். பல நூறு ஆண்டுகள் பழைமை கொண்ட மடாலயங்கள் இந்தப் பிராந்தியத்தின் தொன்மையையும், வரலாற்றையும் இன்றளவும் பறைசாற்றுகின்றன. லடாக் பிராந்தியத்தின் மிக முக்கிய வணிக, கலாசார, நிர்வாக, சுற்றுலா நகரமாகத் திகழ்வது 'லே’ (உயரம் 11,500 அடி). இதற்கு அடுத்தபடியான மற்றொரு நகரம், கார்கில்!

மலைப்பு... மயக்கம்... மர்மம்....8

பயணத்தின் ஏழாம் நாள் மாலை 'லே’ நகரத்தை அடைந்தபோது, அனைவரும் மிகுந்த களைப்பில் இருந்தோம். எங்களுக்கான டூர் ஆபரேட்டர் மூலமாக ('லே’வுக்குத் தனி டூர் ஆபரேட்டர்) தங்கும் விடுதி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தது. அறை ஒன்றின் வாடகை சுமாராக 1,500 ரூபாய். இதனைக் காட்டிலும் குறைவான கட்டணத்திலும் விடுதிகள் உள்ளன. நகர மக்கள் பலரும் தங்கள் வீட்டின் ஒரு பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடுகின்றனர். வீட்டுச் சமையல் உட்பட நல்லதொரு உபசரிப்பிலும் அசத்துகின்றனர். தவிர, பிரபல நட்சத்திர விடுதிகளும் இந்த நகரில் உள்ளன. நாங்கள் விடுதியை அடைந்த மாலை வேளையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. விடுதி மேலாளரிடம் அதுபற்றி விசாரித்தபோது, இங்கு ''மின் உற்பத்தி மிகவும் குறைவு. ஜெனரேட்டர் மூலமாகவே பெருமளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும்'' என்றார். களைப்பு தீர வெந்நீர் குளியல், சுறுசுறுப்புக்கு லெமன் டீ பருகிவிட்டு, வீதிகளில் நடக்க ஆரம்பித்தோம்.

அப்போது, மின் இணைப்பு கிடைக்கப் பெற்று 'லே’ நகரின் வீதிகள் மஞ்சள் வண்ணத்தில் மின்னிக்கொண்டு இருந்தன. திரும்பும் திசை எங்கும் டிராவல் ஏஜென்ஸிகளும், இன்டர்நெட் மையங்களும், கேளிக்கை விடுதிகளும் வியாபித்து இருந்தன. நகர் முழுக்க பெரும்பாலும் வெளிநாட்டினரே நிரம்பி இருந்தனர். அதற்கு அடுத்தபடியாக ராணுவ வாகனங்களில், இயந்திரத் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 'மால் ரோட்’ நடை பாதையில் இருந்த கடைகளில் ஃப்ரெஷ்ஷான பழங்களும், கேரட், வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளும் இரவு உணவில் சேர்ப்பதற்காக வாங்கிக்கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். விடுதியில் சுவையான பஃபே உணவு தயாராக இருந்தது. இனி, பயணத்தின் எட்டாம் நாளில் 'லே’ நகரில் பார்வையிட்ட முக்கிய இடங்கள் பற்றிய டிட் பிட்ஸ்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....8

ஹெமிஸ் மோனஸ்ட்ரி

தற்போது முழுவடிவமாக இருக்கும் இந்த மடாலயம் கட்டப்பட்டது, கி.பி 17-ம் நூற்றாண்டு. லடாக் பிராந்தியத்தின் மிகப் பெரிய மடாலயம் இது. நகரின் மையத்தில் இருந்து மணாலி நோக்கிய தென் திசையில் 50 கி.மீ தொலைவில் உள்ளது ஹெமிஸ். சிந்து நதியை அடிவாரமாகக் கொண்ட மலையின் மத்தியில் இந்த மடாலயம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய போர்க் கருவிகள், நாணயங்கள், மக்கள் பயன்படுத்திய உபகரணங்கள் போன்றவை இங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டுள்ளன. இங்கு இருந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள் இன்றளவும் தனது வண்ணம் குலையாமல் அழகு நயத்துடன் அணிவகுக்கின்றன. மடாலயத்தால் நடத்தப்பட்ட உணவகத்தில் சுவையான பல நாட்டு உணவு வகைகள் கிடைக்கின்றன. தவிர, இலவச மருத்துவ முகாம் ஒன்றும் இங்கு உள்ளது. இமயமலைகளைக் கண்டு ரசித்த ஆச்சரியம் கலந்த அனுபவம் ஒருபுறம் இருக்க, 300 ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் கலைநயம் குறையாமல் காட்சியளிக்கும் இது போன்ற மடாலயங்களைப் பார்ப்பதே பரவசம் கொடுக்கும் ஓர் அனுபவம்!

மலைப்பு... மயக்கம்... மர்மம்....8

திக்ஸே கோம்பா

'லே’ நகரில் இருந்து 19 கி.மீ தொலைவில், ஹெமிஸ் மோனஸ்ட்ரி செல்லும் வழியில் உள்ளது இந்த திக்ஸே கோம்பா. முழுக்க முழுக்க கலைநயத்துடன் கூடிய மற்றொரு மடாலயம். இதன் உச்சியில் இருந்து சிந்து நதி பாயும் பள்ளத்தாக்கின் அழகைக் கண்டு ரசிக்கலாம். பனிப் பாலை நிலமாகக் காட்சி அளிக்கும் மலைகளுக்கு நடுவே, சிந்து நதியின் பசுமையான ஆற்றுப் படுகையின் அழகு ரம்மியமானது.

இவற்றைத் தவிர லே பேலஸ், ஷே பேலஸ் போன்றவற்றின் அழகை நேரமின்மை காரணமாக வெளியில் இருந்தபடியே ரசித்துவிட்டு, விடுதி திரும்பியபோது இரவு 7 மணியை நெருங்கியிருந்தது.

விடுதி மேலாளரிடம் பேசியதில் இருந்து 'லே’ நகரைக் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடிந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆசியாவின் மிக முக்கிய வர்த்தக நகரமாகவும், வழித் தடமாகவும் இருந்து வருகிறது. 'லே’ நகரின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 50,000. நகரின் வருமானம் சுற்றுலாவை நம்பியே உள்ளது. ஆண்டின் பெரும்பகுதி குளிர் காலமாகவே இருப்பதால், குறைந்த அளவிலேயே விவசாயம் நடைபெறுகிறது.  குளிர்காலம் துவங்கி பனிப்பொழிவு ஆரம்பமானதும், ஸ்ரீநகர் மற்றும் மணாலியில் இருந்து தரைவழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிடும். வருடத்தில் ஆறு மாதங்கள் உலகின் மற்ற பகுதிகளில் இருந்து சென்றடைய முடியாத தனிமைப்படுத்தப்பட்ட நகரமாகிவிடுகிறது 'லே’.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....8

தலைநகர் டெல்லியில் இருந்து அவ்வப்போது விமான சேவை இருந்தாலும், வானிலை காரணமாக பெரும்பாலும் அவை ரத்துசெய்யப்பட்டு விடுகின்றன. காலநிலை கைகொடுக்கும் பட்சத்தில், மக்களுக்குத் தேவையான பசுமை மாறாத காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் விமானம் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நகர மக்கள் பெரும்பாலும் உலர்த்திப் பாதுகாக்கப்பட்ட காய்கறிகளையே உண்டு வாழ்கின்றனர்.

தவிர, குளிர் காலங்களில் சுற்றுலா தொழிலும் படுமந்தமாகிவிடும். நகர் முழுக்க உறைபனி படர்ந்துவிடும். சில நட்சத்திர விடுதிகள் மட்டுமே இயங்கும். அதிலும்கூட குறிப்பாக ஸான்ஸ்கர் சமவெளி, ஸுரு சமவெளி போன்றவற்றில் குளிர் கால ட்ரெக்கிங் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளே தென்படுவர். இதுபோன்ற ட்ரெக்கிங் மேற்கொள்ள கடும் மனோபலமும், உடல்பலமும் வேண்டும்.

'லே’ பற்றி பெருமையான பல விஷயங்கள் இருந்தாலும், ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு சற்று மன வருத்தத்தைக் கொடுத்தது. பயணத்தில் நாங்கள் தங்கிய சிம்லா, மணாலி போன்ற சுற்றுலா நகரங்களைப் போல இல்லாமல், இங்குள்ள மக்கள் வெளிநாட்டினருக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். இன்டர்நெட் மையம், எஸ்.டீ.டி பூத், உணவகம், அழகு ஆபரணக் கடை வீதிகள் என எங்கு சென்றாலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ராஜமரியாதையுடனும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றால் சற்று அலட்சியமாகவும் நடத்தப்படுகிறார்கள்.  நல்ல வேளையாக, டிராவல் ஏஜென்ட்களும், ஓட்டுநர்களும் இதுபோல் பாகுபாடு காட்டவில்லை.

'லே’ நகரை அடைந்தபிறகு, லோக்கல் விசிட் தவிர லடாக் பிராந்தியத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்: பெங்காங் ஏரி, கர்துங் லா, நூப்ரா பள்ளத்தாக்கு, பனாமிக் (சியாச்சின் அடிவாரம்), ஸோ கர், ஸோ மொரிரி. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம் என்னவென்றால், மணாலி அல்லது ஸ்ரீநகர் வழியாக தரை மார்க்கத்தில் 'லே’ நகரை அடைந்தால், நமது உடலும் சிறிது சிறிதாக மலைகளின் உயரத்துக்குப் பழக்கப்பட்டுவிடும். விமானம் மூலமாக நேரடியாக 'லே’ நகரை அடையும் பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகரில் தங்கிய பிறகு மற்ற இடங்களுக்குச் செல்வது பாதுகாப்பாக அமையும். ஏனெனில், 'லே’ நகர் கடல் மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரத்தில் இருக்கிறது. மேலே குறிப்பிட்ட மற்ற பகுதிகளின் சராசரி உயரம் 15,000 அடி!

(சிகர்ர்ரூம்)