Published:Updated:

ராஸ்பெர்க்குக்கு தடை... ஹாமில்ட்டனுக்கு வழி விடு!

சார்லஸ்

என்னதான் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றாலும், லூயிஸ் ஹாமில்ட்டனால் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்துக்கு வர முடியவில்லை. 13 ரேஸ்களில் 6 ரேஸ்களில் வெற்றி பெற்றுவிட்டார் லூயிஸ் ஹாமில்ட்டன். ஆனால், இரண்டாவது, மூன்றாவது என போடியம் ஃபினிஷ் செய்தே, சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் நிக்கோ ராஸ்பெர்க். கடந்த மாதம் பெல்ஜியம் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற ரேஸ்களில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இங்கே!

ராஸ்பெர்க்குக்கு தடை... ஹாமில்ட்டனுக்கு வழி விடு!

பெல்ஜியம்

ஆகஸ்ட் 24-ம் தேதி ஃபார்முலா-1 ரேஸின் 12-வது சுற்று, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்து ரேஸைத் துவக்கினார் நிக்கோ ராஸ்பெர்க். லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும்,  வெட்டல் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பேய் வேகத்தில் பறந்த லூயிஸ் ஹாமில்ட்டனுக்கும், அதே மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க்குக்கும் இடையே போர் மூண்டது. லூயிஸ் ஹாமில்ட்டன் மீது செம கடுப்பில் இருந்த நிக்கோ ராஸ்பெர்க், 39-வது லேப்பின் போது ஹாமில்ட்டனின் கார் டயரின் மீது உரசிக்கொண்டே முன்னேற, லூயிஸின் கார் டயர் பஞ்சர் ஆனது. இதனால், ரேஸைவிட்டு பரிதாபமாக வெளியேறிய லூயிஸ் ஹாமில்ட்டன், ராஸ்பெர்க் வேண்டும் என்றே இடித்தார் என செய்தியாளர்களிடம் பேசினார். இறுதியில் ரெட் புல் ரெனோ அணியின் டேனியல் ரிச்சியார்டோ முதல் இடம் பிடித்து வெற்றி பெற, நிக்கோ ராஸ்பெர்க் இரண்டாம் இடமும், வில்லியம்ஸ் அணியின் பொட்டாஸ் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

ராஸ்பெர்க்குக்கு தடை... ஹாமில்ட்டனுக்கு வழி விடு!

இத்தாலி

நிக்கோ ராஸ்பெர்க்கை இந்த ரேஸில் கிட்டவே நெருங்கவிடக் கூடாது என்கிற வெறியை லூயிஸ் ஹாமில்ட்டனின் முகத்தில் பார்க்க முடிந்தது. 2014-ம் ஆண்டு ஃபார்முலா-1 சீஸனின் 13-வது ரேஸ் இத்தாலியில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் லூயிஸ் ஹாமில்ட்டன் முதல் இடம் பிடிக்க, அவரது பரம எதிரி நிக்கோ ராஸ்பெர்க் இரண்டாம் இடம் பிடிக்க, பொட்டாஸ் மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதிபெற்றனர். 53 லேப்புகள் கொண்ட இந்தப் போட்டியில் ஹாமில்ட்டனுக்கும், ராஸ்பெர்க்குக்கும் இடையேதான் போட்டி. ஆனால், கடந்த ரேஸில் ஹாமில்ட்டனை இடித்ததால், இந்த ரேஸில் ஹாமில்ட்டனுக்கு வெற்றியைத் தரவேண்டியது ராஸ்பெர்க்கின் கடமை என டீம் ஆர்டர் போட்டது வெட்டவெளிச்சமானது. முதல் லேப்பின் முதல் வளைவிலேயே ஹாமில்ட்டனுக்கு அழகாக வழி கொடுத்து விலகினார் ராஸ்பெர்க். இதனால், எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார் ஹாமில்ட்டன்.

13 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், சாம்பியன்ஷிப் பட்டியலில் 238 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார் ராஸ்பெர்க். ஹாமில்ட்டன் 216 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டேனியல் ரிச்சியார்டோ 166 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இன்னும் ஆறு சுற்றுகள் மீதம் இருக்கும் நிலையில், சின்னப் பிள்ளைகள் போல இடித்து விளையாடாமல், ஒழுங்காக ரேஸ் ஓட்டினால் ஹாமில்ட்டனா, ராஸ்பெர்க்கா? யார் உண்மையான சாம்பியன் எனத் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு