கார்ஸ்
Published:Updated:

யமஹாவின் எந்திரன் 2.0

யமஹாவின் எந்திரன் 2.0

சார்லஸ்

 ##~##

'இதோ... அதோ’ என்று தள்ளிக்கொண்டே போன புதிய ஆர்-15 பைக், ஒரு வழியாக செப்டம்பர் மாதம் சாலைகளைச் சந்திக்க இருக்கிறது. 'ஆர்-15 வெர்ஷன் 2.0’ என பிரபலப்படுத்தப்படும் இந்த புதிய ஆர்-15 பைக்கில், இன்ஜினில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை யமஹா. அதற்குப் பதில் தோற்றத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்திருக்கிறது.

ஹோண்டா சிபிஆர்-250 ஆர் மற்றும் கவாஸாகி நின்ஜா-250ஆர் ஆகிய பைக்குகளின் மீது, இளைஞர்களின் கவனம் அதிகம் செல்வதே புதிய ஆர்-15 பைக் அறிமுகப்படுத்துவதற்கான காரணம். ஆர்-15 பைக்கில் அதிகம் விமர்சனத்துக்குள்ளான பைக்கின் ஒல்லியான டயர்கள் மாற்றப்பட்டு, அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே உரிய வகையில் ஸ்ப்ளிட் சீட் பொருத்தப்பட்டு இருப்பதோடு, பின் இருக்கையின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸாஸ்ட் பைப், 10 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் என புதிய மாற்றங்கள் ஆர்-15 வெர்ஷன் 2.0-வில் பளிச்சிடுகின்றன.

யமஹாவின் எந்திரன் 2.0

புதிய ஆர்-15 பைக்கில் இருக்கும் பெரிய மாற்றமே இதன் பின்பக்கத் தோற்றம்தான். பைக்கின் டெயில் முழுவதுமாக மேலே தூக்கப்பட்டு, ரேஸ் பைக் போலக் காட்சி தருகிறது. எல்ஈடி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மழைக் காலத்தில் டயரிலிருந்து சேறு வெளியே சிதறாமல் தடுக்க, பின் பக்க டயரில் 'டயர் ஹக்கர்’ இடம் பெற்றுள்ளது.

பெரிய டயர் மற்றும் புதிய மாற்றங்களால் பைக்கின் எடை கூடி இருப்பதால், பர்ஃபாமென்ஸை சரிக்கட்ட சிறிய அளவில் பைக்கின் பவர் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்-15 பைக் தயாரிக்கத் தேவையான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே அதிக அளவில் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது யமஹா. இதனால் புதிய ஆர்-15 பைக்கின் விலையும் இப்போது விற்பனையில் இருக்கும் பைக்கைவிட 8,000 முதல் 10,000 ரூபாய் வரை விலை குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது!