Published:Updated:

மாறியிருக்கிறதா பெர்ஃபாமென்ஸ்?

வேல்ஸ்

சின்ன ஹேட்ச்பேக் கார் வாங்க நினைப்பவர்களுக்கு, சாய்ஸ் அதிகம். நல்ல பெர்ஃபாமென்ஸ் கொண்ட ஹேட்ச்பேக் கார் வேண்டும் என்பவர்களுக்குத்தான் சாய்ஸ் குறைவு! பெர்ஃபாமென்ஸ் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், போலோ GT மாடலை கடந்த ஆண்டு அறிமுகப் படுத்திய ஃபோக்ஸ்வாகன், இப்போது அதில சில மாற்றங்களைச் செய்திருக்கிறது.

போலோ GT என்பது, வேகத்தோடும் பெர்ஃபாமென்ஸோடும் தொடர்புகொண்டது என்பதால், அதன் முழு வீச்சையும் சோதித்துப் பார்க்க, புனேவை அடுத்துள்ள மலைப் பிரதேசமான லோனவாலாவில், டெஸ்ட் டிரைவ் செய்ய ஏற்பாடு செய்திருந்தது ஃபோக்ஸ்வாகன். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், லோனவாலாவை அடுத்திருக்கும் ஆம்பிவேலி எனும் சொகுசு நகரத்தில் வசிப்பவர்களுக்காக, பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் விமான ஓடு பாதையில்தான் போலோ GT TSI மற்றும்  GT TDI டெஸ்ட் டிரைவ்.

மாறியிருக்கிறதா பெர்ஃபாமென்ஸ்?

இந்த ஓடுதளத்தில், எந்தத் தயக்கமும் இல்லாமல் டாப் ஸ்பீடை டெஸ்ட் செய்யலாம். 0 - 100 வேகத்தை அடைய கார் எத்தனை விநாடிகள் எடுத்துக்கொள்கிறது என்பதை அளக்கலாம். டயர் பொசுங்கும் அளவுக்கு சடர்ன் பிரேக் அடித்துப் பரிசோதிக்கலாம். 90 டிகிரி வளைவுகளில்கூட வேகத்தைக் குறைக்காமல் ஜாங்கிரி பிழிவது மாதிரி ஸ்டீயரிங்கைச் சுற்றிச் சுழற்றி ஓட்டலாம். அதனால், உற்சாகமாக டெஸ்ட் டிரைவுக்கு ஆயத்தமானோம்.

வெளித்தோற்றம்

பழைய போலோவுக்கும், பழைய போலோ GT வேரியன்ட்டுக்கும் வெளித்தோற்றத்தில் அதிக வித்தியாசம் தெரியாது. அதேபோல்தான், புதிய போலோவுக்கும் புதிய போலோ GT வேரியன்ட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. புதிய போலோவையும், புதிய போலோ GT வேரியன்ட்டையும் அருகருகே வைத்துப் பார்ப்பவர்களுக்கு, முதலில் தென்படும் வித்தியாசம், கிரிலில் பளிச் என்று தெரியும் GT என்ற எழுத்துகள். இந்த சில்வர் கலர் எழுத்துகள் பழைய GT வேரியன்டில் இடதுபக்கம் இருக்கும். இப்போது இது வலதுபக்கத்துக்கு இடம் மாறியிருக்கிறது. காரின் பின்பக்கம் மட்டுமல்ல, காரின் கதவைத் திறந்தால், காலடியில் அதே ஸ்டைலில் GT என்ற சில்வர் கலர் எழுத்துகள் இப்போது இடம் பெற்றிருக்கின்றன. கறுப்பு நிறத்தில் காட்சி தரும் ஸ்பாய்லரும், ரியர் வியூ மிர்ரரும் (OVRM)  அடுத்த மாற்றங்கள்.

ரீ-டிஸைன் செய்யப்பட்ட பம்பர், பனி விளக்குகள் ஆகியவையும் GT வேரியன்டுக்கு தனி அடையாளத்தைத் தருகின்றன. புதிய போலோவில் இடம்பெற்றிருக்கும் அலாய் வீலைப் போல அல்லாமல், பழைய GT வேரியன்ட்டில் இடம்பெற்றிருந்த அதே கவர்ச்சிகரமான 10 ஸ்போக்ஸ் அலாய் வீல்களை இதில் பொருத்தியிருக்கிறார்கள்.

மாறியிருக்கிறதா பெர்ஃபாமென்ஸ்?

உள்ளலங்காரம்

இரட்டை வண்ண டேஷ்போர்டுக்குப் பதில், முழுக்க முழுக்க கறுப்பு வண்ணத்தில் மட்டுமே காட்சி தருகிறது புதிய போலோ GT. பீஜ் வண்ணத்தில் இருந்த சீட்டுகள் இப்போது இரட்டை வண்ணத்துக்கு மாறியிருக்கின்றன. இது பெர்ஃபாமென்ஸ் கார் என்பதைப் பறைசாற்றுவதைப்போல கிளட்ச், பிரேக், ஆக்ஸிலரேட்டர் பெடல்கள் அனைத்தும் சில்வர் கலரில் ஜொலிக்கின்றன. மற்றபடி புதிய போலோவின் ஹை-லைன் வேரியன்ட்டுக்கும் இதற்கும் உள்ளலங்காரத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

மாறியிருக்கிறதா பெர்ஃபாமென்ஸ்?

இன்ஜின்

முதலில், டீசல் இன்ஜின் கொண்ட போலோ GT:  1.5 லிட்டருக்குக் குறைவானதாக இருந்தால்தான் 'சின்ன கார்’ வரிச் சலுகைகள் கிடைக்கும். அதனால், 1.6 லிட்டர் TDI இன்ஜினின் போர் அளவை சற்றே சிறிதாக்கி, 1.5 லிட்டர் இன்ஜினாக மாற்றியிருக்கிறார்கள். என்றாலும், ஆங்காங்கே சில சித்து வேலைகளைச் செய்து 1.6 லிட்டரில் கிடைத்த அதே 103 bhp சக்தியை வெளிப்படுத்தும் வகையில், இந்த இன்ஜினை வடிவமைத்திருக்கிறார்கள். 5 கியர்கள்கொண்ட கியர்பாக்ஸில் குறை சொல்ல எதுவும் இல்லை. இது 0 - 100 வேகத்தைத் தொடுவதற்கு 10.52 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், பழைய போலோ GT TDI இந்த வேகத்தை எட்ட எடுத்துக்கொண்ட நேரம், 10.51 விநாடிகள் மட்டுமே!

இதுவே ஸ்டாண்டர்டு போலோ TDI என்றால், 89 bhp சக்திதான் வெளிப்படும். போலோ GT TDI-யில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா 14 bhp சக்திக்காக, எத்தனை பேர் கூடுதலாக சுமார் 60,000 ரூபாய் கொடுப்பார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.

மாறியிருக்கிறதா பெர்ஃபாமென்ஸ்?

இப்போது பெட்ரோலுக்கு வருவோம். பழைய போலோ GT TSI  வேரியன்ட்டில் இருந்த அதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் புதிய போலோ GT TSIலும். இது பழைய போலோ GT TSI போலவே 103bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ சார்ஜர்கொண்ட இந்த இன்ஜின், மிட் ரேஞ்சில் போதுமான சக்தியைக் கொடுக்கிறது. 7 கியர்கள்கொண்ட DGS கியர்பாக்ஸ் அற்புதமாக தன் வேலையைச் செய்கிறது.

விலை

பழைய போலோ GT TSI மாடலைவிட, புதிய போலோ GT TSI காரில் கூடுதலான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், விலையில் எந்த மாற்றமும் இல்லை. போலோ GT TSI மற்றும் போலோ GT TDI என்ற இரண்டு வேரியன்ட்டுகளுமே. 7.99 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம்) விற்பனைக்கு வந்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு