Election bannerElection banner
Published:Updated:

யெட்டியின் ஸ்பெஷல் என்ன?

SKODA YETI 4X4தொகுப்பு: சார்லஸ்

யெட்டியின் ஸ்பெஷல் என்ன?

யெட்டி.... இது வியர்க்க விறுவிறுக்க வீதிகளில் விளையாடப்படும் கிரிக்கெட் மாதிரி இல்லை. கொஞ்சம் ராயலானவர்கள் ஆடும் பில்லியர்ட்ஸ் போன்றது. சின்ன வகை சொகுசு எஸ்யுவி/க்ராஸ்ஓவர் கார்களுக்கான மார்க்கெட், இந்தியாவில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் என பலம் வாய்ந்த போட்டியாளர்கள் மோதும் இந்த மார்க்கெட்டில், படு தைரியத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறது ஸ்கோடா யெட்டி.

ஆனால், யெட்டி... இந்தியாவில் வெற்றியை ருசிக்காத கார். இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் யெட்டி அதிகம் விற்பனையானது. ஸ்கோர் என்ன தெரியுமா? 7 கார்கள். அடுத்தடுத்த மாதங்களில் 3, 2 எனக் குறைந்து வந்த யெட்டி காரின் ஜூலை, ஆகஸ்ட் மாத விற்பனை, பூஜ்ஜியம். இந்த நிலையில் யெட்டியில் புதிய அம்சங்களைச் சேர்த்து, யெட்டி ஃபேஸ் லிஃப்ட்டைக் கொடுத்திருக்கிறது ஸ்கோடா. வெற்றி பெறாத காருக்கு எதற்கு ஃபேஸ்லிஃப்ட் என்ற உங்கள் கேள்விக்கான விடை, இந்தக் டெஸ்ட் ரிப்போர்ட்டின் முடிவில்!

டிஸைன்

ஸ்கோடா கார்களிலேயே, ஸ்கோடாவின் விதிமுறை டிஸைன்களில் இருந்து கொஞ்சம் முரண்பட்ட எஸ்யுவி, யெட்டி! குறிப்பாக, பல மடங்கு அடுக்காக டிஸைன் செய்யப்பட்டிருக்கும் ஹெட்லைட்ஸ். அதைக் கொஞ்சம் மாற்றி புதிய யெட்டியில் வழக்கமான ஸ்கோடாவின் சாஃப்ட் டிஸைனுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். எல்இடி விளக்குகளால் அடங்கிய புதிய செவ்வக வடிவ ஹெட்லைட்ஸுக்குள், புரஜெக்டர் விளக்குகளும் பொருத்தப்பட்டு, ஸ்கோடாவின் கச்சிதமான பட்டர்ஃபிளை க்ரில்லில் பதிக்கப்பட்டிருக்கிறது.

யெட்டியின் ஸ்பெஷல் என்ன?

சில்வர் கலர் பக்கவாட்டு விளக்குகள், C வடிவ எல்இடி பின்பக்க விளக்குகள், கதவுகளில் க்ரோம் பட்டை என புதிய யெட்டியில் சில டிஸைன் அம்சங்கள் மாறியிருக்கின்றன. அலாய் வீல்கள் பழையபடியே 16 - இன்ச்தான் என்றாலும், 2 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் மாடல்களுக்கு ஏற்ப, டிஸைனில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.

உள்ளே..

யெட்டியின் ஸ்பெஷல் என்ன?

புதிய யெட்டியில் முன்பக்க இருக்கைகள் வசதியாகவும், பின் பக்க இருக்கைகள் சொகுசாகவும் இருக்கின்றன. பின்பக்க இருக்கைகளை 60:40:60 என்ற அளவில் முழுமையாக மடக்கிவிடும் வசதி இருப்பதால், அதிகப் பொருட்களை காருக்குள் கொண்டு செல்ல முடியும். ஆட்டோமேட்டிக் சீட் அட்ஜஸ்ட் வித் மெமரி, ஆட்டோமேட்டிக் பக்கவாட்டுக் கண்ணாடிகள், கீ-லெஸ் என்ட்ரி, ப்ளூ-டூத் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் என சொகுசு காருக்குத் தேவையான அத்தனை சிறப்பம்சங்களும் உண்டு. ஆனால், 5 சீட்டுகள் மட்டுமே கொண்ட விலை அதிகமான கார் யெட்டி!

இன்ஜின்

இன்ஜினில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 2 லிட்டர் TDI டீசல் இன்ஜின், 2 வீல், 4 வீல் டிரைவ் மாடல்களுக்கு ஏற்ப 109bhp மற்றும் 138bhp என இரண்டுவிதமான பவர் வேரியன்ட்டுகளில் வெளிவருகிறது. பழைய யெட்டியில் கிளட்ச் மிகவும் டைட்டாக இருந்ததால், சரியான கியர்களுக்கு உடனடியாக மாறவில்லை என்றால், கார் நின்றுவிடும். இந்தக் குறையை புதிய யெட்டியில் நீக்க முயற்சித்திருக்கிறார்கள். கிளட்ச் மிகவும் லைட்டாக இருக்கிறது. பழையபடி கார் ஆஃப் ஆகவில்லை என்றாலும், கொஞ்சம் தாமதித்தால், இந்தப் பிரச்னை மீண்டும் எழுகிறது. புதிய யெட்டியிலும் பெட்ரோல் மாடல் இல்லை என்பதோடு, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலும் இல்லை என்பதுதான் ஆச்சரியம். நகருக்குள் அதிகம் பயன்படுத்தக்கூடிய இந்தச் சின்ன எஸ்யுவியில் பெட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் வந்தால், அது விற்பனைக்கு உதவும் என்பதை ஏனோ ஸ்கோடா கண்டுகொள்ளாமலேயே இருக்கிறது.

யெட்டியின் ஸ்பெஷல் என்ன?

புதிய யெட்டியில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை மாற்றியிருக்கிறார்கள். ஹால்டெக்ஸ் (Haldex) நிறுவனத்தின் 4 வீல் டிரைவ் சிஸ்டம், பழைய யெட்டியின் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தைவிட எடை குறைவாக இருக்கிறது. மேலும் டேஷ்போர்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆஃப் ரோடு ஆப்ஷன் பட்டன் மூலேமே, ஆஃப் ரோடு டிரைவிங்குக்கு இன்ஜின் ஆட்டோமேட்டிக்காக ட்யூன் ஆகிவிடுகிறது. பட்டனைத் தட்டியவுடனே இன்ஜின், கியர்பாக்ஸ், பிரேக்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆகியவை ஆஃப் ரோடு பயணத்துக்கு ஏற்றபடி மாறிவிடுவதுதான், யெட்டியின் 4 வீல் டிரைவ் ஸ்பெஷல்.

2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலின் 109bhp சக்திகொண்ட இன்ஜினின் ஆரம்ப வேகம் சிறப்பாக இருக்கிறது. இதனால், நகருக்குள் ஈஸியாக ஓட்டலாம். ஆனால், நெடுஞ்சாலையில் வேகமாகப் பறக்கும்போது போதிய பவர் இல்லை. இதற்கு நேர்மாறாக, நெடுஞ்சாலைகளில் பவர்ஃபுல்லாகவும், நகருக்குள் அதிக டர்போ லேக்-உடனும் இருக்கிறது 138bhp சக்திகொண்ட 4 வீல் டிரைவ் மாடல். ஆனால், இரண்டு மாடல்களிலுமே மிட் ரேஞ்சில் நல்ல பவர் கிடைக்கின்றன. இதனால், மற்ற கார்களை ஓவர்டேக் செய்ய, அதிக சிரமப்பட வேண்டியது இல்லை.

கையாளுமை

யெட்டியின் பலமே இதன் ஓட்டுதல் மற்றும் கையாளுமைதான்.  சின்ன செடான் காரை ஓட்டுவது போன்ற ஈஸி டிரைவிங் இல்லை என்றாலும், இவ்வளவு எடை அதிகமான, உயரமான எஸ்யுவி என்கிற நினைவே வராமல் செய்துவிடுகிறது இதன் ஓட்டுதல் தரம். மேடு பள்ளங்களை காருக்குள் எந்த ஆட்டமும் இல்லாமல் சமாளிக்கிறது யெட்டியின் சஸ்பென்ஷன். முக்கியமாக, காரின் ஸ்டெபிளிட்டி மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதனால், நெடுஞ்சாலையில் எந்த பயமும் இல்லாமல் காரை ஓட்டலாம்.

இந்தியர்களின் மனநிலை என்பது, 'கண்ணுக்குத் தெரியாத தரத்துக்கு ஏன் அதிக விலை’ என்பதுதான். கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் என்பது காரின் பில்டு குவாலிட்டி, நெடுஞ்சாலைப் பயணத்துக்கான ஸ்டெபிளிட்டி, டேஷ்போர்டு தரம் மற்றும் சஸ்பென்ஷன். கண்ணுக்குத் தெரிந்த விஷயங்கள் என்பது ஸ்டைல், வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் அதிக மைலேஜ். இரண்டாவது விஷயம்தான் இந்தியாவில் அதிகமாக வொர்க் அவுட் ஆகும் என்பதற்கான உதாரணங்கள் அதிகம்.

யெட்டியின் ஸ்பெஷல் என்ன?

5 பேர்தான் உட்கார்ந்து செல்ல முடியும்; பெட்ரோல் இன்ஜின் இல்லை; ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை என்பதோடு, யெட்டியின் விலையும் அதிகம்.

யெட்டியின் ஸ்பெஷல் என்ன?

25,16,145 ரூபாய்க்கு சென்னையில் விற்பனைக்கு வருகிறது யெட்டி 4X4. கட்டுரையின் ஆரம்பத்தில் மாதத்துக்கு ஒற்றை இலக்கங்களில் விற்பனையாகும் காருக்கு எதற்கு ஃபேஸ்லிஃப்ட் என்பதற்கு ஸ்கோடா அளிக்கும் பதில் ரொம்ப சிம்பிள். 'மாதத்துக்கு எவ்வளவு கார்கள் விற்பனையாகிறது என்பது அல்ல எங்கள் நோக்கம். எங்கள் கார்கள் தரமாகவும், இன்ஜினீயரிங்கில் சிறந்ததாகவும், பெர்ஃபாமென்ஸில் குறைவில்லாததாகவும் இருக்கும்’ என்கிறது ஸ்கோடா. புதிய யெட்டி விற்பனையில் டபிள் டிஜிட்டைத் தொடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யெட்டியின் ஸ்பெஷல் என்ன?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு