Election bannerElection banner
Published:Updated:

எதை வாங்கலாம்?

மாருதி சியாஸ் Vs ஹோண்டா சிட்டிதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

எதை வாங்கலாம்?

மிட் சைஸ் செடான் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அளவுகோலாக, நீண்ட நாட்களாக இருந்துவருவது ஹோண்டா சிட்டி. அதனால், புதிதாக வந்திருக்கும் மாருதி சியாஸை அதோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும். இந்த செக்மென்ட்டில் தனக்கு நிலையான ஓர் இடத்தைப் பிடிக்க பெலினோ, SX4 என்று ஏற்கெனவே மாருதி இரண்டு முயற்சிகளை எடுத்து, நிறைய பாடம் கற்றுக்கொண்டிருப்பது சியாஸை டெஸ்ட் டிரைவ் செய்தபோது புலப்பட்டது.

வெளித் தோற்றம்

இந்த இரண்டு கார்களிலும் மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரண்டு பெட்ரோல் வேரியன்ட்டுகள் இருக்கின்றன. ஆனால், டீசல் வேரியன்ட்டைப் பொறுத்த வரை, இரண்டு கார்களுக்குமே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதனால், ஹோண்டா சிட்டியின் டீசல் வேரியன்ட்டான 1.5 VX காருடன் மாருதி சியாஸின் 1.3 ZDi+  மாடலை இங்கே ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொண்டோம்.

பார்க்க பரவசம் ஏற்படுத்தும் கார் இல்லை சியாஸ். ஆனால், நீள அகல விகிதங்கள் கனகச்சிதமானவை. இதன் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், 16 இன்ச் வீல், சி பில்லர் என கவனத்தை ஈர்க்கக்கூடிய சில அம்சங்கள் இதில் இல்லாமல் இல்லை.  பின்பக்கம் இருந்து பார்த்தால், சியாஸுக்கும் சிட்டிக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். அந்த அளவுக்கு இவை இரண்டும்  ஒரே மாதிரி இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இரண்டு காரின் பூட் கொள்ளளவும் 510 லிட்டர்தான்.

இப்போது ஹோண்டா சிட்டிக்கு வருவோம். இதன் கிரில்லில் அளவுக்கு அதிகமாக இருக்கும் க்ரோம் பூச்சுக்கள் அத்தனை ரசனையான டிஸைனாகத் தெரியவில்லை. ஸ்போர்ட்டியாகக் காட்சி தரும் பக்கவாட்டு கிரீஸ் கோடுகள்தான் சிட்டியின் ஹை-லைட். எல்லாவற்றுக்கும் மேலாக, சிட்டியின் கட்டுமஸ்தான தோற்றத்தோடு, இதன் 15 இன்ச் டயர்கள் பொருத்தமாக இல்லை.

எதை வாங்கலாம்?
எதை வாங்கலாம்?

உள்ளலங்காரம்

சிட்டி அறிமுகமானபோது, இதன் பின்னிருக்கைகளின் இடவசதியைப் பார்த்து அனைவரும் வாய் பிளந்தார்கள். இப்போது சியாஸின் பின்னிருக்கை இடவசதியைப் பார்த்து, வாய் பிளந்தவர்கள் எல்லாம் மூடிக்கொண்டு விட்டார்கள். ஆம், பின்னிருக்கை இடவசதியில் சிட்டியைத் தோற்கடித்து விட்டது சியாஸ். சியாஸின் இடவசதி நன்றாக இருந்தாலும், இருக்கைகள் சொகுசாக இல்லை. காரணம், சியாஸின் இருக்கைகள் தடிமனாகவும், தொடைகளுக்கு சப்போர்ட் குறைவானதாகவும் இருக்கின்றன. ரூஃப் தாழ்வாக இருப்பதால், உயரமாக இருப்பவர்களுக்குத் தலை இடிக்க வாய்ப்பு இருக்கிறது.

சிட்டியின் பின்னிருக்கைகளின் சிறப்பம்சமே அந்த இருக்கைகளின் சொகுசுதான். சோஃபா போன்ற குஷன் இருப்பதால், 'மெத்’ என்று இருக்கிறது.  

இரண்டு கார்களிலுமே ரியர் ஏ.சி வென்ட், ரியர் சார்ஜிங் போர்ட், சென்டர் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை இருக்கின்றன. ஆனால், இரண்டு கார்களிலுமே அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய ரியர் ஹெட் ரெஸ்ட்டுகள் இல்லை.

சியாஸின் கேபினில் ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோஸ் சுவிட்சுகள் ஆகியவற்றை ஏற்கெனவே சில மாருதி கார்களில் நாம் பார்த்திருந்தாலும், ஒட்டுமொத்த அப்பீல், உயர்தரமாக இருக்கிறது. டேஷ் போர்டில் ஏகப்பட்ட கன்ட்ரோல்கள் இல்லாமல், சிம்பிளாக இருக்கிறது. 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் பயன்படுத்த மிக வசதியாக இருக்கிறது. சியாஸின் இருக்கைகள் சற்று உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், உயரமான ஓட்டுநர்களுக்குச் சரியான டிரைவிங் பொசிஷன் கிடைப்பது கடினமாக இருக்கலாம்.

சிட்டியின் முன்னிருக்கைகள் கச்சிதமாக இருக்கின்றன. டேஷ்போர்டு உயரமாக இருந்தாலும், வியூ நன்றாகவே இருக்கிறது. ஆனால், சிட்டியின் டேஷ்போர்டு சற்று வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருப்பதால், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சிட்டியின் டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் இருப்பதால், கார் ஓட்டும்போது கவனக் குறைவு ஏற்படுகிறது.

எதை வாங்கலாம்?

வசதிகளைப் பொறுத்தவரை, இரண்டு கார்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இரண்டிலும் லெதர் இருக்கைகள், கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏ.சி வென்ட், ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ, போன் பட்டன்கள், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கீ-லெஸ் என்ட்ரி, ரியர் வியூ கேமரா (சிட்டியில் சென்ஸார்கள் இல்லை), இரண்டு காற்றுப் பைகள் போன்றவை இருக்கின்றன. சிட்டி VX மாடலில் சன் ரூஃப் இருக்க, சியாஸில் ஆன்  போர்டு சேட்டிலைட் நேவிகேஷன் இருக்கிறது.

இன்ஜின்

சியாஸில் இருக்கும் ஃபியட்டின் மல்டிஜெட் டீசல் இன்ஜின் வெறும் 89 bhp சக்தியை அளிக்கிறது. ஆனால், ஹோண்டா சிட்டியின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 98.6 bhp சக்தியை அளிக்கிறது. சியாஸின் இன்ஜின் பெப்பியாக இல்லை என்றாலும் வீக்காகவும் இல்லை. மாருதி இந்த இன்ஜினை நன்றாகவே டியூன் செய்திருப்பதால், டர்போ லேக் குறைவாகவே தெரிகிறது. 5  ஸ்பீடு கியர்பாக்ஸும் ஸ்மூத்தாக ஷிஃப்ட் ஆகிறது. 1,800 ஆர்பிஎம்-ல் இருந்து 5,300 ஆர்பிஎம் வரை சக்தியை சீராக வெளிப்படுத்துகிறது இந்த இன்ஜின்.

ஹோண்டாவின் இன்ஜின் 4,250 ஆர்பிஎம் வரைதான் சிரமம் இல்லாமல் ரெவ் ஆகிறது. ஆனால், செம ரெஸ்பான்ஸிவ்வாக இருக்கிறது இந்த இன்ஜின். 2,000 ஆர்பிஎம்-க்குக் கீழே நல்ல பவர் டெலிவரி இருப்பதால், சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட சுலபமாக இருக்கும். மணிக்கு 100 கி.மீ வேகத்தில், 5-வது கியரில் செல்லும்போது, 2,300 ஆர்பிம்-ல் சுழல்கிறது சியாஸ். ஆனால் சிட்டி, 6-வது கியரில் இதே வேகத்தில் செல்லும்போது, 2,000 ஆர்பிஎம்-ல்தான் இயங்குகிறது.  

0 - 100 கி.மீ வேகத்தை சிட்டி 14.75 விநாடிகளில் கடக்க, சியாஸ் 12.99 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இன்ஜின் சத்தம் குறைவாக இருப்பது சியாஸில்தான்.

எதை வாங்கலாம்?
எதை வாங்கலாம்?

ஓட்டுதல் தரம், கையாளுமை

சியாஸின் சஸ்பென்ஷன் சூப்பர். நெடுஞ்சாலையில் தேவையில்லாத ஆட்டம் எதுவும் இல்லாமல், சீராகச் செல்கிறது சியாஸ். சிட்டியின் சஸ்பென்ஷன் மோசம் இல்லை என்றாலும், சியாஸ் அளவுக்கு இல்லை. ஷார்ப்பான மேடு பள்ளங்களையும் சியாஸ்தான் அமைதியாகக் கடக்கிறது.

ஓட்டுதல் தரத்தில் சியாஸ் வென்றுவிட்டாலும், கையாளுமையில் நமது வோட்டைப் பெறுவது சிட்டிதான். அருமையான ஃபீட்பேக் அளிக்கும் சிட்டியின் ஸ்டீயரிங் பிடித்து வளைத்துத் திருப்ப நன்றாக இருக்கிறது. சியாஸின் ஸ்டீயரிங் நல்ல எடை கொண்டிருந்தாலும், ஓட்ட ஜாலியாக இல்லை.

எதை வாங்கலாம்?

மாருதியின் கேபின் விசாலமாக இருக்கிறது, ஆனால், சிட்டியின் கேபின் சொகுசாக இருக்கிறது. சியாஸின் இன்ஜின் நன்றாக இருந்தாலும், எளிதாக இயக்கக் கூடியது என்னவோ சிட்டியின் இன்ஜின்தான். சியாஸ் ஓட்டுதல் தரத்தில் வெல்ல, சிட்டி ஹேண்ட்லிங்கில் 'வெயிட்’ காண்பிக்கிறது. மாருதி இன்னும் சியாஸ் காருக்கான விலையைச் சொல்லவில்லை. சிட்டியின் விலையைவிட குறைவாக இருக்கும் என்று மட்டும் தெரிகிறது. விலையை டெஸ்ட் ட்ரைவின்போதே சொல்லியிருந்தால், இப்போதே தீர்ப்பை எழுதி இருக்கலாம். எனவே, ஹோண்டா சிட்டி ஒரு நல்ல தயாரிப்பு. ஆனால், மாருதி சியாஸ் ஒரு நல்ல பேக்கேஜாக இருக்கிறது.

எதை வாங்கலாம்?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு