Election bannerElection banner
Published:Updated:

கார் பழசு... வேல்யூ பெரிசு!

ஹோண்டா சிவிக் - பழைய கார் மார்க்கெட்சார்லஸ்

கார் பழசு... வேல்யூ பெரிசு!

கார் பிரியர்களுக்குத்தான் புதிய கார்கள். கார் வெறியர்களைக் கணிக்க முடியாது. சில சமயம் அவர்கள் பழைய கார்கள் பக்கமும் திரும்புவார்கள். ஐந்து லட்ச ரூபாய்க்கு ஹூண்டாய் ஐ10, மாருதி ஸ்விஃப்ட் போன்ற கார்களைத் தான் வாங்க முடியும் என ஒருவர் கணக்குப் போட்டால், அவர் கார் பிரியர். அதே 5 லட்சம் ரூபாய்க்கு ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டேவியா வாங்கலாம் என பிளான் போட்டால், அவர் கார் வெறியர்.’

பார்வையிலேயே ஏங்கவைக்கும் பல கார்களை, புதிய கார் மார்க்கெட்டில் வாங்க முடியாது. ஜஸ்ட் மூன்று ஆண்டுகள் பொறுத்தால், பழைய கார் மார்க்கெட்டில் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் நல்ல காரை வாங்க முடியும். பழைய கார் மார்க்கெட்டில் இப்போதைய ஹிட், ஹோண்டா சிவிக்.

2006-ம் ஆண்டு, முதன்முதலில் சிவிக் காரை ஹோண்டா இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்தபோது, சொகுசு கார் பிரியர்கள் மத்திய செம கிரேஸ். தாழ்வான பானெட், நீளமான வீல்பேஸ், அகலமான டிஸைன் என இந்திய கார் மார்க்கெட்டில் யுனிக் அடையாளத்துடன் வந்ததுதான் பாப்புலாரிட்டி அதிகரிக்கக் காரணம். டொயோட்டா கரோலா, ஸ்கோடா ஆக்டேவியா எனப் போட்டியாளர்களை விட ஸ்டைலிலும், பெர்ஃபாமென்ஸிலும், தரத்திலும் சிறந்த காராக இருந்தது சிவிக். இப்போது இந்த கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டு, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவிக் விற்பனை சரிய ஒரே காரணம் -  டீசல் இன்ஜின் இல்லாததுதான்.

ஆனால், இப்போது பார்க்கும்போது ஸ்டைலான, இடவசதி அதிகம்கொண்ட, பெர்ஃபாமென்ஸில் சிறந்த, நல்ல மைலேஜ் கொடுக்கும் காராக இருப்பதோடு, எல்லோரும் வாங்கக்கூடிய விலைக்குக் கிடைப்பதால், பழைய கார் மார்க்கெட்டில் ஹிட் அடித்திருக்கிறது சிவிக்.

2006-ம் ஆண்டு சிவிக் விற்பனைக்கு வரும்போது, அதன் விலை - 12 லட்சம் ரூபாய்! பிறகு 16 லட்சம் வரை உயர்ந்த சிவிக், இப்போது 4 முதல் 6 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கிறது.

கார் பழசு... வேல்யூ பெரிசு!

என்ன பலம்?

ஹோண்டாவின் பலம் வாய்ந்த 1.8 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இன்ஜின்தான் சிவிக்கில் இடம் பிடித்திருக்கிறது. இது, ஹோண்டாவின் மிகவும் ஸ்மூத்தான, உலகத் தரம் வாய்ந்த இன்ஜின். ஆரம்ப வேகத்தில் பவர் இருப்பதுபோலத் தெரியாது. ஆனால், நெடுஞ்சாலைகளில் பறக்கும் பெர்ஃபாமென்ஸ் கார் சிவிக். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் உண்டு என்பதால், பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களை ஓட்டுவதுபோன்ற உணர்வைத் தரும்.

திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டும்போது உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தைத் தருவதோடு, ஆக்ஸிலரேட்டரை மிதிக்கும் ஒவ்வொரு கணமும், நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது இன்ஜின் பெர்ஃபாமென்ஸ். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல், 0 - 100 கி.மீ வேகத்தை 9.59 விநாடிகளிலும், ஆட்டோமேட்டிக் மாடல் 11.33 விநாடிகளிலும் எட்டிவிடுகிறது.

மைலேஜைப் பொறுத்தவரை, சிவிக் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் நகருக்குள் லிட்டருக்கு 9.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 13.2 கி.மீ மைலேஜ் தரும். சிவிக் ஆட்டோமேட்டிக் நகருக்குள் 8.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 11.9 கி.மீ மைலேஜ் தரும்.

பலவீனம் என்ன?

ஸ்போர்ட்ஸ் கார் போன்று மிகவும் தாழ்வாக இருப்பதால், வயதானவர்கள் காருக்குள் போவதும், வருவதும் கொஞ்சம் சிரமம். ஸ்டிஃப் ஆன சஸ்பென்ஷன் என்பதால், குறைவான வேகத்தில் மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அலுங்கல் குலுங்கல்கள் காருக்குள் அதிகமாகத் தெரிகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸும் குறைவு. நம் ஊர் மெகா, மகா ஸ்பீடு பிரேக்கர்களைத் தாண்டும்போது கவனம் தேவை.

கவனிக்க வேண்டியவை!

பழைய கார்களை வாங்கும்போது, முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் - இன்ஜினின் ஆயுட்காலமும், நிறுவனத்தின் நம்பகத்தன்மையும்தான். ஹோண்டாவின் இந்த 1.8 லிட்டர் இன்ஜின், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிற, எந்தப் பிரச்னைகளும் இல்லாத இன்ஜின். ஹோண்டா கார் என்பதால், தரத்திலும் பிரச்னை இல்லை. டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, அதிர்வுகள் காருக்குள் அதிகமாகத் தெரிகிறதா என்று கவனியுங்கள். அதிர்வுகள் அதிகமாக இருந்தால், இன்ஜின் மவுன்ட் அதாவது இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள போல்ட்டுகள் தளர்ந்து, பழசாகி இருக்கலாம். பொதுவாக, 25,000 கி.மீ மேல் ஓடிய கார்களில் இந்தப் பிரச்னை இருக்கும். இதைச் சரிசெய்ய 9,000 ரூபாய் வரை செலவாகும். அதேபோல், டயர்களில் தேய்மானம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். டயர்களை மாற்ற 15,000 ரூபாய் வரை செலவாகும்.

ஹோண்டா, 5,000 கி.மீ-க்கு ஒருமுறை வீல் அலைன்மென்ட் செய்யச் சொல்கிறது. இதனால், சர்வீஸ் ஹிஸ்டரியில் வீல் அலைன்மென்ட் தொடர்ந்து செய்யப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்வது நல்லது. வீல் அலைன்மென்ட் ஒழுங்காகச் செய்திருக்கவில்லை என்றால், பால் ஜாயின்ட் மற்றும் டை-ராடு பழுதாகியிருக்கும். இதனால், காரின் சஸ்பென்ஷனில் பிரச்னை வரும். இதைச் சரி செய்ய 16,000 ரூபாய் வரை செலவாகும்.

சிவிக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவு என்பதால், காரின் அடியில் ஸ்கிராட்ச்சஸ் அதிகம் இருக்கிறதா, எக்ஸாஸ்ட் பைப்பில் லீக் இருக்கிறதா என்று கவனமாகப் பார்க்க வேண்டும். எக்ஸாஸ்ட் பைப்பில் லீக் இருந்தால், காரின் மைலேஜ் குறையும்; பெர்ஃபாமென்ஸும் அடிவாங்கும். புதிதாக எக்ஸாஸ்ட் செட் மாற்ற 10,000 ரூபாய் வரை செலவாகும்.

சிவிக்கை 5,000 கி.மீ-க்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். பொதுவாக ஒருமுறை சர்வீஸ் செய்ய 5,500 ரூபாய் வரை ஆகும். சிவிக் காருக்கான இன்ஷூரன்ஸ் ஆண்டுக்கு 20,000 ரூபாய் வரை போகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு