Election bannerElection banner
Published:Updated:

ஸ்டைலிஷ் ஸ்கார்ப்பியோ!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோதொகுப்பு: சார்லஸ்

ஸ்போர்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள் என்கிற மார்க்கெட்டை, இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்திய கார் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவின் இந்த எஸ்யுவி, வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படும் அளவுக்கு செம ஹிட். 2002-ம் ஆண்டு முதல் ஸ்கார்ப்பியோ விற்பனையில் இருக்கிறது. தொடர்ந்து சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும், காரின் ஒட்டுமொத்த டிஸைனே மாறும் அளவுக்கு, கடந்த 12 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது முதன்முறையாக காரின் ஒட்டுமொத்த டிஸைனையே மாற்றி, புதிய ஸ்கார்ப்பியோவாக வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா.

ஸ்டைலிஷ் ஸ்கார்ப்பியோ!

புதிய ஸ்கார்ப்பியோவை அவசர அவசரமாக வெளியிட்டுவிடக் கூடாது என்பதில், மிகக் கவனமாக இருந்தது மஹிந்திரா. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சென்னை மறைமலைநகரில் உள்ள தனது ஆராய்ச்சிக் கூடத்தில், ஒரு அங்குலம்கூட விடாமல் புதுமையான பல விஷயங்களைச் சேர்த்து, காரைக் கடுமையாகச் சோதித்த பின்புதான் விற்பனைக்கு இறக்கியிருக்கிறது மஹிந்திரா.

டிஸைன்

பழைய ஸ்கார்ப்பியோவில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட காராக இல்லாமல், அதேசமயம் பல புதுமையான மாற்றங்களை காரின் டிஸைனில் கொண்டு வந்திருக்கிறார்கள். பழைய ஸ்கார்ப்பியோவுக்குக் கொஞ்சம் முரட்டுத் தோற்றம் உண்டு. புதிய ஸ்கார்ப்பியோ கொஞ்சம் ஸ்டைலான மிரட்டல் இளைஞனாக மாறியிருக்கிறது. பழைய ஸ்கார்ப்பியோவில் குண்டு குண்டாக இருந்த ஹெட்லைட் விளக்குகள், புதியதில் அழகாக பானெட்டில் பதிந்திருக்கிறது. ஹெட்லைட் விளக்குகளுக்கு உள்ளேயே கண் இமைபோல எல்இடி விளக்கை ஒளிர விட்டிருப்பது ஈர்க்கிறது. பானெட் க்ரில்லுக்கு நடுவே மஹிந்திராவின் லோகோ, அதன் கீழே இரண்டு க்ரோம் பட்டை, இரண்டு பக்கமும் மூன்று மூன்று க்ரோம் பட்டைகள் என வடிவமைக்கப்பட்டிருக்கும் பானெட் டிஸைன், பழைய ஸ்கார்ப்பியோவில் இருந்து புதிய ஸ்கார்ப்பியோவை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

ஸ்டைலிஷ் ஸ்கார்ப்பியோ!

பின்பக்கத்தைப் பொறுத்தவரை பழைய ஸ்கார்ப்பியோவில் சீரியல் லைட்டுகள் போல் இருந்த பின்பக்க 'ஸ்டாப்’ விளக்குகள், புதிய ஸ்கார்ப்பியோவில் பக்கத்துக்கு இரண்டு என ஸ்டைலாக மாறியிருக்கின்றன. 17 இன்ச் அலாய் வீல்கள் ஸ்டைலாக இருந்தாலும், வீலுக்கும் காரின் வீல் ஆர்ச்சுக்கும் இடையே இடைவெளி அதிகம் இருப்பதால், சின்ன வீல்களைக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.

உள்ளே

காரின் வெளிப்பக்கத்தைவிட ஸ்கார்ப்பியோவின் உள்பக்கம் அரதப் பழைய டிஸைன். இதை ஸ்டைலாக மாற்றுவதற்குத்தான் மஹிந்திரா கடுமையாக உழைத்திருக்கிறது. புத்தம் புதிய டேஷ்போர்டு, புதிய இருக்கைகள், ஏராளமான சிறப்பம்சங்கள் என காரின் உள்பக்கம் ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. ஒழுங்கற்ற முறையில் இருந்த பழைய ஸ்கார்ப்பியோவின் டேஷ்போர்டு, மிக மிக ஸ்டைலிஷாக மாறியிருக்கிறது. பழைய ஸ்கார்ப்பியோவில் சென்டர் கன்ஸோலிலேயே இருந்த பவர் விண்டோஸ் பட்டன்கள் மற்ற கார்களைப் போல கதவுகளிலேயே பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், டீசல் டேங்க் மூடியைத் திறக்கும் பட்டனும் கைக்கு எட்டும் வகையில் ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னாலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டைலிஷ் ஸ்கார்ப்பியோ!

டேஷ்போர்டின் மேல்பக்கம் கறுப்பு வண்ணத்திலும், அதற்குக் கீழே பீஜ் வண்ணமும் கொடுக்கப்பட்டிருப்பது, ஐரோப்பிய கார் என்பது போன்ற லுக்கைத் தருகிறது. XUV 500 காரில் இருந்த அதே 6 இன்ச் டச் ஸ்க்ரீன் ஸ்கார்ப்பியோவுக்கும் இடம் பெயர்ந்திருக்கிறது. இதில் இன்பில்ட் ஜிபிஎஸ் சிஸ்டமும் உண்டு. நெடுஞ்சாலையில் அதிகம் பயணிக்கப்படக்கூடிய கார் என்பதால், இதில் டயர் டெம்ப்ரேச்சர் மற்றும் பிரஷர் சென்ஸார்கள் கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் எந்த டயரில் காற்று குறைந்தாலும், சூடு அதிகமானலும் உடனடியாகத் தெரிந்துவிடும். அதற்கு ஏற்றபடி காற்றின் அளவைக் குறைக்கலாம், கூட்டலாம். ரிவர்ஸ் கேமரா இதில் இல்லை. அதற்குப் பதில் ரிவர்ஸ் சென்ஸார்கள் உள்ளன. க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல்ஸும் உள்ளன.

எர்கானமிக்ஸ்

கண்ணைக் குளிர்விக்கும் அம்சங்கள் பல ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், சீட்டிங் பொசிஷன் உள்ளிட்ட எர்கானமிக்ஸ் விஷயங்களில் பழையபடியே சொதப்பியிருக்கிறது மஹிந்திரா. முன்பக்கப் பயணிகள் தண்ணீர் பாட்டில்கள் வைத்துக்கொள்ள இடம் இல்லை. கியர் லீவருக்கு அருகில் பாட்டில் ஹோல்டர் உள்ளது. ஆனால், இங்கேதான் செல்போன், பர்ஸ் உள்ளிட்ட விஷயங்களை வைக்க வேண்டியிருக்கும். அதனால், தண்ணீர் பாட்டிலுக்கு இடம் கிடைக்காது.

புதிய ஸ்கார்ப்பியோவில் மிக முக்கியமான தவறு, முன்பக்க இருக்கைகள் மிகவும் குறுகலாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். கதவுகளுக்கு மிக மிக அருகில் இருக்கைகள் இருக்கிறது. இதனால், சௌகரியமாக உட்கார முடியவில்லை. மேலும், கதவு பாக்கெட்டுகளில் வைக்கும் சின்னச் சின்னப் பொருட்களை எடுக்கக்கூட ஒவ்வொரு முறையும் கதவைத் திறந்து மூட வேண்டும். பாகங்களின் தரத்தில் பழைய ஸ்கார்ப்பியோவில் இருந்து முன்னேற்றம் இருந்தாலும், புதிய ஸ்கார்ப்பியோ ஜப்பானிய, ஐரோப்பிய கார்களுக்கு இணையாக இல்லை. இதற்கு கதவு கைப்பிடிதான் சிறந்த உதாரணம். கொஞ்சம் வேகமாக இழுத்தால், உடைந்து விடுமோ என்கிற பயத்தை வரவழைக்கிறது.

ஸ்டைலிஷ் ஸ்கார்ப்பியோ!

நடுப்பக்க இருக்கைகளின் அடர்த்தி குறைக்கப்பட்டிருப்பதால், அதிக இடவசதி கிடைத்திருக்கிறது. இதனால், இரண்டாம் வரிசை இருக்கைகளில் மூன்று பேர் தாராளமாக உட்காரலாம். கடைசி வரிசையைப் பொறுத்தவரை பென்ச் சீட் கிடையாது. இரண்டு பக்கமும் உட்கார்ந்து கொள்ளும் வகையில் ஜம்ப் சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது பாதுகாப்பானதாகவும் இருக்காது என்பதோடு, இதில் வசதியாகவும் உட்கார்ந்து பயணிக்க முடியாது. சிறு தூரப் பயணங்களுக்கு மட்டுமே கடைசி வரிசை இருக்கைகள் ஓகே!

இன்ஜின்

பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை ஸ்கார்ப்பியோவில் என்றுமே குறைவில்லை.  இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளிவருகிறது ஸ்கார்ப்பியோ. 2.5 லிட்டர், 75 bhp சக்திகொண்ட இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர், 118bhp  எம்-ஹாக் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன். நாம் டெஸ்ட் செய்தது 118bhp  சக்திகொண்ட இன்ஜின். பழைய எம்-ஹாக் இன்ஜினைவிட இதில் சின்னச் சின்ன ட்யூனிங் வித்தியாசங்கள் தெரிகின்றன. கியர் ரேஷியோ மாறியிருக்கின்றன. இன்ஜினை ஸ்டார்ட் செய்ததுமே அதிர்வுகள் இருப்பதை உணர முடிகிறது. 1,000 ஆர்பிஎம் தாண்டி விட்டால், அதிர்வுகள் இல்லை. மேலும், 1,400 ஆர்பிஎம் முதலே பவர் சிறப்பாக இருப்பதால், அடிக்கடி கியர் மாற்றிக்கொண்டிருக்காமல் நகருக்குள் பயணிக்க வசதியான காராக இருக்கிறது. மிட் ரேஞ்சில் பவர் அதிகம் இருப்பதால், ஆக்ஸிலரேட்டரை அழுத்தி மிதிக்கத் தோன்றுகிறது. ஆனால், 3,800 ஆர்பிஎம் தாண்டிவிட்டால் இன்ஜின் 'இதற்கு மேல் என்னால் முடியாது’ என அமைதியாகி விடுகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸைப் பொறுத்த வரை கியர்களை மாற்ற கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழுத்தம் தேவைப்படுகிறது. கிளட்ச்சும் கொஞ்சம் ஹெவியாக இருப்பதால், கியர் ஷிஃப்ட் அவ்வளவு ஈஸியாக இல்லை.

கையாளுமை

ஸ்கார்ப்பியோவில் அதிக முன்னேற்றம் தேவைப்பட்ட பகுதி - ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமைதான். பழைய ஸ்கார்ப்பியோவில் மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது காருக்குள் அலுங்கல், குலுங்கல்கள் அதிகமாக இருக்கும். புதிய ஸ்கார்ப்பியோவின் புதிய சேஸி மற்றும் சஸ்பென்ஷன் பழைய காரை விட பல மடங்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. சின்ன மேடு, பள்ளங்களை டொயோட்டா இனோவா அளவுக்கு ஈஸியாகச் சமாளிக்கிறது புதிய ஸ்கார்ப்பியோ. ஆனால், கொஞ்சம் பெரிய பள்ளங்களில் ஏற்றி இறக்கும்போதுதான் குலுங்கல்கள் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.

ஸ்டீயரிங்கைப் பொறுத்தவரை, ஒரு ஹேட்ச்பேக் ஓட்டுவதைப் போன்று வளைத்து, நெளித்து ஓட்ட ஈஸியாக இல்லை என்றாலும், பழைய ஸ்கார்ப்பியோவைவிட ஓட்டுவதற்கு சிறப்பாகவே இருக்கிறது.

ஸ்டைலிஷ் ஸ்கார்ப்பியோ!

முதல் தீர்ப்பு!

பழைய ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு வந்த உடனேயே எப்படி விற்பனையில் விறுவிறுவென முன்னேறியதோ, அதைவிட புதிய ஸ்கார்ப்பியோவுக்கு அமோக ஆதரவு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய டிஸைன், புதிய டேஷ்போர்டு மற்றும் ஏராளமான சிறப்பம்சங்கள் என ஸ்கார்ப்பியோ தரத்திலும், வசதிகளிலும் முன்னேறிய காராக மாறியிருக்கிறது. ஆனால், 1,820 கிலோ எடை என்பதால், இன்னமும் சுமோ ரெஸ்லர் போலவே இருக்கிறது ஸ்கார்ப்பியோ. அதிக எடை காரணமாக ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் கொஞ்சம் அடிவாங்குகிறது. ஓட்டுதல் தரமும், கையாளுமையும் பெரும்பாலும் விற்பனையை முடிவு செய்வது இல்லை என்பதால், குறைந்த விலையால் ஸ்கார்ப்பியோ எளிதாக வெற்றி பெற்றுவிடும். பழைய ஸ்கார்ப்பியோவைவிட வேரியன்ட்டுக்கு ஏற்ப 30,000 முதல் 50,000 ரூபாய்க்குள் விலை ஏற்றம் இருக்கும். 12 லட்சம் ரூபாய்க்கு ஒரு எஸ்யுவி வேண்டும் என்றால், முதல் சாய்ஸ் ஸ்கார்ப்பியோவாகத்தான் இருக்கும்!

ஸ்டைலிஷ் ஸ்கார்ப்பியோ!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு