Published:Updated:

`90'ஸ் கிட்ஸின் முதல் டூவீலர்’ - அட்லஸ் சைக்கிள் இனி வராது!

அட்லஸ் சைக்கிள்
அட்லஸ் சைக்கிள் ( Twitter )

டியூஷன் சென்டர்களுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கும் பள்ளிக்குச் சென்று வரவும் ஏதுவானதாக இருந்த அட்லஸ் சைக்கிள், 90'ஸ் கிட்ஸ்களுக்கு முதல் டூவீலர் என்றால் மிகையில்லை.

அட்லஸ்... இந்த வார்த்தையைக் கேட்கும்போது, 90'ஸ் கிட்ஸ்களின் பள்ளிப் பருவத்தில் இருந்த வரலாற்றுப் பாட Map Guide என்பதைத் தாண்டி, உடனடியாக நினைவுக்கு வரும் மற்றுமொரு விஷயம் சைக்கிள். ஹீரோ/பார்க்கர் பேனா - Sharpener உடனான பென்சில் பாக்ஸ் போல, நண்பர்களிடையே இதை வைத்திருப்பவனுக்குக் கிடைத்த மரியாதையே தனி! டியூஷன் சென்டர்களுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கும் பள்ளிக்குச் சென்று வரவும் ஏதுவானதாக இருந்த அட்லஸ் சைக்கிள், 90'ஸ் கிட்ஸ்களுக்கு முதல் டூவீலர் என்றால் மிகையில்லை.

Atlas Cycles
Atlas Cycles
Twiter

இதையே பல்ஸர், RX100, CBZ, அப்பாச்சி ரேஞ்ச்சுக்கு ஃபீல் செய்துகொண்டு விளையாட்டாக ரேஸ் விடும்போது, செயினையும் பிரேக்கையும் கரெக்ட்டாக அட்ஜஸ்ட் செய்து, அதன் மெக்கானிக்காகவே மாறியவர்கள் நிறைய பேர்; இதை எடுத்து ஓட்டுவதற்காகவே, அம்மா கடைக்குப் போகச் சொன்னபோது கோபப்படாமல் சென்றது எல்லாம் பலரின் நினைவில் இருக்கும்! சானியா மிர்சா, சுனில் ஷெட்டி, அபினவ் பிந்த்ரா ஆகியோர் அட்லஸின் விளம்பரத் தூதுவர்களாக இருந்திருக்கிறார்கள்.

டி-ரோக் VS கரோக்... இந்த எஸ்யூவி-யில் வெல்லப்போவது யார்?

நிதி நெருக்கடி காரணமாகப் புகழ்பெற்ற இந்த அட்லஸின் உற்பத்தி, டெல்லியில் இருக்கும் சஹிபாபாத்தில் கடந்த வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவின் பெரிய சைக்கிள் தொழிற்சாலையான இது, 1989 முதலாகச் செயல்பட்டு வந்தது. மாதத்துக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனை இது பெற்றிருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, அட்லஸ் இயக்கிய கடைசி உற்பத்தி ஆலை இதுதான் (மலன்பூர், சோனிபட் முன்பே மூடப்பட்டுவிட்டன).

அட்லஸ் சைக்கிள்
அட்லஸ் சைக்கிள்
Twitter

உலக சைக்கிள் தினத்தில் தொழிற்சாலை மூடப்பட்டு, இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்ததில், பலர் ஏமாற்றமடைந்ததைச் சமூக வலைதளங்களில் பார்க்கமுடிந்தது. 70 ஆண்டு நிறுவனத்தின் தயாரிப்பாக இருப்பினும், உறுதிக்கும் தரத்துக்கும் பெயர் பெற்ற அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனம், 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் தொடங்கப்பட்டது. மேலும் 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் Official Bicycles ஆக இவை இருந்தன.

நிறுவனம் மூடப்படுவது குறித்து கேட்டபோது, 'கைவசமிருக்கும் உபரி நிலத்தை விற்பனை செய்துவிட்டு, 50 கோடி ரூபாய் நிதி திரட்டிய பிறகு, தொழிற்சாலை பழையபடி செயல்படத் தொடங்கும். இதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, NCLT-யிடம் மனு போட்டுள்ளோம். இந்தியாவில் சைக்கிள்களுக்கான சந்தை மதிப்பு நன்றாக இருப்பதுடன், எங்களின் டீலர் நெட்வொர்க் - Suppliers Base பலமாக இருப்பதால், இயல்பு நிலைக்குத் திரும்புவது சுலபம்' எனக் கூறியுள்ளார், அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் CEO-வான என்.பி.சிங் ராணா.

Atlas Cycles
Atlas Cycles
Twitter

இதனால் அங்கே பணிபுரிந்த 431 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. சைக்கிள் என்றாலே அட்லஸ் என்றளவில் புகழைச் சம்பாதித்திருந்த இந்த நிறுவனம், இந்தியாவின் பெரிய சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் என்ற நற்பெயரை 1965-ம் ஆண்டிலேயே தன்வசப்படுத்திவிட்டது. ஆனால் இளைஞர்களிடையே டூவீலர்கள் மீது நிலவிய மோகத்தால், 2014-ம் ஆண்டில் இருந்தே வீழ்ச்சியைச் சந்தித்தது அட்லஸ் சைக்கிள்ஸ். தற்போது இந்தக் கொரோனா காலத்தில், நம்மிடமிருந்து மொத்தமாகப் பிரியாவிடை பெற்றுவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு