Published:Updated:

முடிசூடா ராஜா, F1 உலகின் லெஜண்ட், நிழல் மனிதர் சர் ஸ்டர்லிங் மாஸ் பற்றித் தெரியுமா?

வேகம், எனக்கான அமைதியைத் தருகிறது என ஒரு வரியில் தன் வாழ்க்கையை விவரித்த சர் ஸ்டர்லிங் மாஸ் எனும் ஃபார்முலா ஒன் லெஜண்ட் மரணித்துவிட்டதாக FIA அறிவித்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு மனிதர் எப்படி இறந்தார் என்று சொல்வதைவிட எப்படி வாழ்ந்தார் என்று சொல்வதுதான் அவருக்குச் செலுத்தப்படும் கடைசி மரியாதை. அதனால், ஸ்டர்லிங் மாஸின் வாழ்க்கையைப் பற்றி இப்போது கொஞ்சம் அலசுவோம்.

sir stirling moss
sir stirling moss
AP Photos

இந்த மனிதரை ஒற்றைச் சொல்லால் விவரிக்க வேண்டும் என்றால், என் நினைவுக்கு வரும் வார்த்தை `பாப்பராஸி'. சர்வதேசப் பிரபலங்கள் அஞ்சும் நிழல் மனிதர்கள், பிரபலங்களைத் துரத்துவதுதான் வேலை. அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களைப் படமெடுத்து அதைப் பத்திரிகைக்குத் தந்து பிரபலம் ஆவார்கள். ஸ்டர்லிங் மாஸ் கிட்டத்தட்ட இந்த நிழல் மனிதர்களைப் போலத்தான். ஒரு ரேஸர் தனது வாழ்க்கையில் கடைசி வரை ஒரு F1 சாம்பியன்ஷிப் கூட வென்றதில்லை. ஆனால், அவரை உலகமே லெஜண்ட் என்று சொல்கிறது என்றால், அவர் எத்தனை சாம்பியன்களில் வயிற்றில் புலியைக் கரைத்திருப்பார்.

``அஸ்காரி, அதற்குப் பிறகு மாஸ் இந்த இருவர்தான் நான் அதிகம் பயப்படும் போட்டியாளர்கள்" என்று சொல்லியிருக்கிறார் யுவான் மேனுவல் ஃபாங்கியோ. F1-ல் 5 சாம்பியன்ஷிப், உலகளவில் பல கார் ரேஸ்களில் சாம்பியன்ஷிப் எனப் பந்தயங்களில் கொடி கட்டிப்பறந்தவர். ஆனால், இவரால்தான் ஸ்டர்லிங் மாஸின் கரியரில் வெளிச்சமே இல்லை என்பார்கள். ஃபாங்கியோவின் நிழலிலேயே இளைப்பாறியது மாஸின் கரியர்.

sir stirling moss
sir stirling moss
AP Photos

ஆனால், உண்மையில் ஃபாங்கியோவைத் துரத்தியதால்தான் ஸ்டர்லிங் மாஸ் என்பவருக்கு அடையாளம் கிடைத்தது. 1948-ல் ரேஸ் கரியரைத் தொடங்கியவர், 1955-ல் மெர்சிடீஸ் அணியுடன் கைகோத்தபிறகே மாஸின் வாழ்க்கையில் நிழல்களும், வெளிச்சங்களும் தெரியத்தொடங்கின. 1955 முதல் 1961-ம் ஆண்டுக்குள் 16 கிராண்ட் ப்ரீ வெற்றி, 4 முறை இரண்டாம் இடத்தில், 3 முறை மூன்றாம் இடத்தில் சாம்பியன்ஷிப் வெற்றியை உறுதிசெய்தார்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டிர்லிங் மாஸை எல்லோருக்கும் ஃபார்முலா ஒன் டிரைவராகவே அதிகம் தெரிந்திருந்தது. ஆனால், அவருடைய பெரிய வெற்றி என்பது 1955 மைல்ஸ் மிகிலியா போட்டி. மெர்சிடீஸ் 300SLR காரை எடுத்துக்கொண்டு ஃபாங்கியோவை மிரட்டலாகத் தோற்கடித்து நிழலில் இருந்தவர் வெளிச்சத்துக்கு வந்தது அங்கேதான். லீ மான்ஸ், செப்ரிங், ரெயின்ஸ் என்று அவருடைய எண்டியூரன்ஸ் போட்டிகளையும் மறந்துவிட முடியாது.

sir stirling moss
sir stirling moss
AP Photos

1958 F1 சாம்பியன்ஷிப் ஸ்டர்லிங் வாழ்க்கையில் மிக முக்கியமானது. ஃபாங்கியோவின் ஓய்வுக்குப் பிறகு எல்லோருமே மாஸ்தான் அந்த ஆண்டின் சாம்பியன் என்று ஆருடம் உரைத்தார்கள். ப்ரிட் மற்றும் ஹாத்ரோன் இருவரும் அப்போது சகப் போட்டியாளர்கள். ஆகஸ்ட் மாதம் போர்ச்சுகீஸ் சர்க்யுட்டில் போட்டி. அதற்கு முன் நடந்த 8 போட்டிகளில் மாஸ் இரண்டில் முதலிடம். ஹாத்ரோன் ஒரு போட்டியில் முதலிடம். ஆனால், சாம்பியன்ஷிப் பட்டியலில் ஹாத்ரோன் 30 புள்ளியும், மாஸ் 24 புள்ளியும் வைத்திருந்தார்கள். ஃபோர்ட்டோவின் தெருக்களில் நடைபெற்ற அந்த ஸ்டிரீட் சர்க்யுட்டில் வேகமான லேப் அடித்து முன் வரிசையில் ரேஸைத் தொடங்கினார் மாஸ். மழை குறுக்கிட்டபோதும் போட்டியின் சூடு குறையாமல் முதலிடத்துக்காக மோதிக்கொண்டிருந்தார்கள் மாஸூம், ஹாத்ரோனும்.

இடையில் ஹாத்ரோனின் கார் கோளாறாகி நின்றுவிட மீண்டும் ரேஸைத் தொடங்கும் சூழல் ஏற்பட்டது. அதற்குள் மாஸ் முன்னிலைக்கு வந்திருந்தார். ஹாத்ரோனின் காரைக் கடந்து செல்லும்போது கீழே இறங்கும் சாலை ஒன்றில் எதிர்த்திசையில் ஹாத்ரோன் காரை ஸ்டார்ட் செய்வதைப் பார்த்தார். அந்தப் போட்டியில் கடைசியில் மாஸ் முதலிடத்தில் 8 புள்ளியுடன், ஹாத்ரோன் இரண்டாம் இடத்தில் 7 புள்ளியுடன் பந்தயத்தை முடித்தார்கள். ரேஸ் நடுவர்கள் ஹாத்ரோன் காரை எதிர்த்திசையில் ஓட்டியது தவறு என அவருக்கு பெனால்ட்டி போட்டார்கள். ஆனால், ஸ்டர்லிங் மாஸ் அவர் காரை ஸ்டார்ட் செய்த இடம் டிராக் கிடையாது என்று ரேஸ் நடுவர்களுடன் சண்டையிட்டு அந்த பெனால்ட்டியை பின்வாங்கச்செய்தார்.

Vikatan
sir stirling moss
sir stirling moss
AP Photos

அந்த ஆண்டு கடைசியில் F1 சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றது ஹாத்ரோன்தான். ஒரு புள்ளி முன்னிலையிலேயே வெற்றி பெற்றார். சாம்பியன்ஷிப் கிடைக்கவில்லை என்றாலும் மாஸின் ஸ்போர்ட்மேன்ஷிப் அங்கே நின்று பேசியது.

ஸ்டர்லிங் மாஸ் தன் முழுநேர ரேஸ் கரியரை முடித்துக்கொண்டது 1962-ம் ஆண்டு. குட்வுட் சர்க்யுட்டில் லோட்டஸ் V8 கார் ஒன்றை டெஸ்ட் செய்துகொண்டிருந்போது நடந்த மோசமான விபத்தில் ஒரு மாதம் கோமாவில் கிடந்தார். ஆறு மாதங்களுக்கு கை, கால்கள் செயலிழந்து இருந்தன. தன் ரேஸிங் கரியரை அதோடு முடித்துக்கொண்டார். கரியர் முடிந்தாலும் 2011-ம் ஆண்டு வரை ஃபார்முலா ஒன் கார்கள் ஓட்டுவதை இவர் நிறுத்தவில்லை. 80 வயதிலும்கூட ஃபார்முலா ஒன் காரை கொண்டுபோய் கிராஷ் செய்யும் துணிச்சல் இருந்தது.

சர் ஸ்டர்லிங் மாஸ்க்காக ஃபெராரி ஒரு பச்சை நிற GTO 250 காரைப் பிரத்யேகமாகத் தயாரித்துக்கொடுத்தது. ஆனால், அவரால் அந்தக் காரை ஓட்டமுடியவில்லை. 3.5 கோடி டாலருக்கு விலைபோன உலகின் மிக காஸ்ட்லி கார்களில் அதுவும் ஒன்று. மெர்சிடீஸ் நிறுவனமும் SLR Stirling moss என்று இவர் பெயரில் 75 ஸ்பெஷன் எடிஷன் கார்களை உருவாக்கியது. மாஸின் வீடு முழுவதும் ஜேம்ஸ் பாண்டு வீடுபோல கேட்ஜெட்ஸ் நிறைந்திருக்கும். இவரின் வீட்டுக்காகவே பிரத்யேகமான வில்லியம்ஸ் F1 டீம், கார்பன் ஃபைர் லிஃப்ட் செய்து கொடுத்தது. அது விழுந்து அவரின் கால் எலும்பு முறிந்தது வேறு கதை.

Lewis hamilton with sir stirling moss
Lewis hamilton with sir stirling moss
AP Photos

வேகம், தொழில்நுட்பம் மட்டுமில்லை, பிளேபாய் வாழ்க்கையையும் வாழ்ந்தவர் இவர். ரேஸ் மீது இருந்த அர்ப்பணிப்பு, எப்போதுமே நட்பு பாராட்டக்கூடிய அணுகுமுறை மற்றும் நினைப்பதைப் பேசக்கூடிய துணிச்சல் இந்த மூன்றும்தான் 79 வயதிலும் புதிய காதலியை அவருக்குத் தேடிக்கொடுத்தது. ஸ்டர்லிங் மாஸ் எல்லோரும் வியக்கும்படி மாஸாக வாழ்ந்து இறந்த மனிதர். மகிழ்ச்சியோடு பை பை சொல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு