ராயல் என்ஃபீல்டு 350 சிசி பைக்குகளில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 36 பெண் வீரர்கள், 18 நாட்களில், 5280 கிமீ பயணம் செய்து சென்னைக்குத் திரும்பியிருந்தனர். அவர்கள் யாருக்கும் பயணக் களைப்போ, சோர்வோ இல்லை. இன்னும் 5,000 கிமீ கூட போக முடியும் என்கிற தீரத்தோடு அந்த நிகழ்ச்சியில் வீற்றிருந்தார்கள். டெல்லியில் ஆரம்பித்த இவர்களது பயணம் கன்னியாகுமரி வரை நீண்டு, மீண்டும் சென்னைக்குத் திரும்பியதோடு முடிவடைந்திருக்கிறது. இவர்களின் கதையைக் கேட்கும்போதே புல்லரிக்கிறது.
36 பேரும் பெண்களா?
நம்மை முதலில் வியப்படையச் செய்தது இந்தக் கேள்விதான். ஆம், எனச் சிரிக்கிறார்கள் வீராங்கனைகள். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த வீராங்கனைகள் 'BSF சீமாபவானி அனைத்து மகளிர் டேர்டெவில் மோட்டார்சைக்கிள் குழு' என்கிற பெயரில் 2016-ல் தொடங்கப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்கள். ராயல் என்ஃபீல்டு பைக்குகளைக் கொண்டு ஸ்டண்ட் சாகசங்களை வெளிக்காட்டுவதில் வல்லவர்கள் இந்தக் குழு. இரண்டு முறை (2018 மற்றும் 2022) குடியரசு தின அணிவகுப்பில் இவர்களது சாகசங்கள் இடம்பெற்றிருந்தன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வு, பாகுபாடு, பாரபட்சம் உள்ளிட்டவற்றில் இருந்து விடுபடுதல் தொடர்பாக போகிற வழிகளில் எல்லாம், சந்திக்கிற பெண்களோடும் மற்ற ரைடிங் குழுக்களோடும் பேசி விழிப்புஉணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்கள் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் பயணத்துக்கான விதை எங்கு தொடங்கியது?
பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒரு நீண்ட விழிப்புஉணர்வுப் பயணத்தைத் திட்டமிட்ட குழு, ராயல் என்ஃபீல்டை அணுகியது, உடனடியாக ஒப்புக் கொண்ட ராயல் என்ஃபீல்டு, 36 பைக்குகள், ரைடிங் கியர்ஸ், ஹெல்மெட் என அனைத்து உதவிகளையும் செய்திருக்கின்றனர். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று, இன்ஸ்பெக்டர் ஹிமான்ஷு சிரோஹி தலைமையிலான இந்தப் பயணம் புது தில்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஆரம்பித்து டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து 5,280 கிலோமீட்டர் தூரம் விரிவடைந்திருக்கிறது.


உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த அபாரமான சாதனையைக் கொண்டாடும் வகையில், சென்னைக்கு அருகில் உள்ள வல்லம் வடகல் வளாகத்தில் ஒட்டுமொத்த BSF குழுவினருக்கும் சிறப்புப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது ராயல் என்ஃபீல்டு. நிகழ்ச்சியின் போது பேசிய கோவிந்தராஜன் (ராயல் என்ஃபீல்டு நிர்வாக இயக்குனர்) “சுமார் 70 வருடங்களாக இந்தியப் பாதுகாப்புப் படைக்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகளைத் தருவதில் பெருமையே! ஒவ்வொரு வருடமும் சுமார் 2000 பைக்குகளை ராணுவத்துக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய மாபெரும் பயணத்தில் ராயல் என்ஃபீல்டும் பங்களித்தது மேலும் எங்களுக்குப் பெருமை சேர்க்கிறது. ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும் ஏற்ற வகையில் 5,280 கிமீ ஓட்டும் அளவுக்குச் சிறந்த பைக்குகளைத் தயாரித்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த பயணம் மேலும் பல பெண்களை உத்வேகப்படுத்தி, அவர்கள் தங்களின் தடைகளை தாண்டி வர உதவும். வரும் காலங்களில் இது போன்ற பயணங்ளைத் தொடர்ந்து செய்ய ராயல் என்ஃபீல்டு ஆர்வமாக இருக்கிறது.” என்று முடித்தார்.

இந்தப் பெண்கள் தங்களுடைய சாகசத்திற்கான சிறகுகளை இராணுவத்தில் சேர்ந்ததோடு சுருக்கிக் கொள்ளாமல், அதன் பிறகும் மோட்டார் பைக் சாகசங்கள், பெண்களுக்கான விழிப்புஉணர்வு என விரித்துக் கொண்டே இருப்பது அவர்கள் மீதான நம்பிக்கையை வலுவடையச் செய்கிறது. அந்தச் சிங்கப் பெண்களுக்கு மோட்டார் விகடன் சார்பாக வாழ்த்துகளைச் சொல்லி விடை பெற்றோம்.