ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

இதுதான் இந்தியாவோட முதல் ப்ளஸர் காரு!

அம்பாஸடர் மெக்கானிக்: கரூர்
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பாஸடர் மெக்கானிக்: கரூர்

- சிலாகிக்கும் 'அம்பாஸடர் புகழ்' மெக்கானிக் கௌதமன்

இதுதான் இந்தியாவோட முதல் ப்ளஸர் காரு!

கரூரைச் சேர்ந்த கௌதமன், ஒரு கார் மெக்கானிக். இப்படிச் சொல்வதைவிட, `அம்பாஸடர் ஸ்பெஷலிஸ்ட்' என்று குறிப்பிட்டால்தான் அவருக்குப் பிடிக்கிறது. உண்மையும் அதுதான். கரூர் மாநகரத்தில் உள்ள சின்ன ஆண்டாங்கோயில் சாலையில் அமைந்திருக்கிறது, இவரது `அங்காளம்மன் ஆட்டோ ஒர்க்ஸ்' மெக்கானிக் ஷாப். அந்த கராஜில் இவரது ஸ்பானர் படக் காத்திருக்கும் இப்போதைய கார்களுக்கு இடையே, அம்பாஸடர் கார்களும் `அயம் வெயிட்டிங்' என்று காத்திருக்கின்றன. ஓர் அம்பாஸடர் காரின் முகப்புப் பகுதிக்குள் தலையை நுழைத்தபடி, 'ரிப்பேர்' ஒர்க்கில் பிஸியாக இருந்த கௌதமனிடம், `டீ பிரேக்' டைமில்தான் பேச முடிந்தது.

‘‘கரூர்தான் பொறந்து வளர்ந்தது. இப்போ எனக்கு 62 வயசு. நான் ஏழாவது படிக்கும்போது, படிப்பு மேல பெருசா ஈடுபாடு இல்லை. கரூர்ல அங்க இங்க ஓடிக்கிட்டு இருந்த அம்பாஸடர் கார் மேலதான் ஒரு கண்ணு. ஆனா, அதைத் தொட்டு பார்க்கக்கூட வழியில்லை. அதனால், மெக்கானிக் ஆகும் ஆர்வம் வந்துச்சு. 1973-ம் வருஷம் அம்பாஸடர் மெக்கானிக்கா இருந்த மணிகிட்ட பார்ட் டைமா மெக்கானிக் கத்துக்கப் போனேன். பள்ளிக்கூடம் முடிஞ்சதும் இரவு 8 மணி வரை அங்க வேலை. சின்னச் சின்ன வேலைகள் பார்க்க ஆரம்பிச்சு, அதன் பிறகு அம்பாஸடர் பத்தி அக்குவேறு ஆணிவேறாத் தெரிஞ்சுகிட்டேன்.

படிப்பு மேல சுத்தமா ஆர்வம் போயிட்டு. அடுத்து மாரியப்பன்ங்கிறவர்கிட்ட மெக்கானிக்கா சேர்ந்தேன். அவர்கிட்ட நிறைய கத்துக்க முடிஞ்சுது. அதன்பிறகு, அம்பாஸடர்ல டீசல் வண்டி அறிமுகப்படுத்தினாங்க. அந்த வண்டியை ரிப்பேர் பார்க்கத் தெரிஞ்சாலும், மாரியப்பனுக்கு டீசல் அலர்ஜி இருந்ததால், டீசல் வண்டிகளை ரிப்பேர் பார்க்காமல் தவிர்த்தார். அதனால், ஈரோட்டைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர்கிட்ட வேலைக்குச் சேர்ந்து, டீசல் அம்பாஸடர்களை ரிப்பேர் பண்ணக் கத்துக்கிட்டேன், அங்க மூணு வருஷம் இருந்தேன். அதன்பிறகு, ஊருக்கு வந்த நான், கொஞ்சகாலம் வீட்டுல சும்மா இருந்தேன். இதனால், `கைவித்தையை வச்சுக்கிட்டு, ஏன் மூணு சுவத்துக்குள்ள இருக்கிற'னு என்னோட நண்பர்கள் உசுப்பி விட்டாங்க.

உடனே, அவர்களின் உதவியோட கடந்த 1989-ம் வருஷம் கோவை சாலையில் மெக்கானிக் கடையை ஆரம்பிச்சேன். 10 வருஷம் அங்க நடத்தினேன். `அம்பாஸடர் கார் மெக்கானிக்குன்னா, அது கௌதமன்தான்' என்று கஸ்டமர்கள் புகழுரை வழங்குற அளவுக்குப் பேர் எடுத்தேன். அதன்பிறகு, 18 வருஷம் பாரதி நகர்ல கடையை இடமாற்றம் செஞ்சு, அங்க தொழில் செஞ்சேன். கடந்த அஞ்சு வருஷமா இந்த சின்னச் ஆண்டாங்கோயில் சாலையில் மெக்கானிக் கடையை நடத்திக்கிட்டு இருக்கிறேன். கரூர்ல அம்பாஸடர் கார் மெக்கானிக்னு நான் மட்டும்தான் இருப்பேன்னு நினைக்குறேன்" என்று தனது இத்தனை வருட தொழில் அனுபவங்களை விவரித்தார்.

இதுதான் இந்தியாவோட முதல் ப்ளஸர் காரு!

கொஞ்சம் இடைவெளிவிட்டு, தொடர்ந்து பேசியவர், ‘‘இப்போ `ஒன்மேன் ஆர்மி'யா தனியா பண்ணிக்கிட்டு இருக்கிறேன். அம்பாஸடர் கார் உற்பத்தியை பத்து வருஷமா நிப்பாட்டிட்டதால், முன்புபோல் அம்பாஸடர் கார்கள் அதிகம் வருவதில்லை. ஆனால், ரெகுலரா 20 பேர்கள் என்கிட்ட அம்பாஸடர் கார்களைக் கொண்டு வர்றாங்க. மறைந்த முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன், தன்னோட அம்பாஸடர் காரைத் தொடர்ந்து ஏழு வருஷம் என்கிட்டதான் சர்வீஸுக்கு விடுவாங்க. அம்பாஸடர் கார், இந்தியாவோட ரோல்ஸ்ராய்ஸ். ஆனால், அதோட அருமை தெரியாமல், நவீன மோகத்துல புதுப் புது கார்களை வாங்கி, அதுல பயணிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்கிட்டயும் 1999–ம் வருஷ மாடல் டீசல் அம்பாஸடர் கார் ஒண்ணு இருக்கு. அதுல போறதைப் பார்த்துட்டு, 'இன்னுமா இதைக் கட்டிட்டு அழறீங்க'னு கேலியாக கேட்பாங்க.

அம்பாஸடர் புழக்கம் பீக்குல இருந்த டைம்ல, `ப்ளஸர் கார் வருது'னு இதை சிலாகிச்சவங்க. நாகரிக மோகத்தில், இந்தக் காரை மட்டம் தட்டிப் பேசுறாங்க. ஆனால், `சூப்பரா வண்டிய வச்சுருக்கிற. இதுல போற சுகம் வராது. ஒரு ரவுண்டு தர்றியா'னு வியப்பா கேட்குறவங்களும் இருக்காங்க. இது ஒரு மல்ட்டிபர்பஸ் கார். இதுல அவ்வளவு இடவசதி இருக்கும். 8 சிமெண்ட் மூட்டைகள் வரை ஏத்திட்டுப் போகலாம். நான் காருக்குள் இருக்கும் சீட்டுகளைக் கழட்டிட்டு, அரை டன் பெட்சீட்டுகளை ரெகுலரா ஏத்திட்டுப் போயிருக்கிறேன். மென்மையாகவும் இதை யூஸ் பண்ணலாம், ரஃப்பாகவும் பயன்படுத்தலாம். எதையும் தாங்கும் பாடியைக் கொண்டது அம்பாஸடர்.

மத்த கார்கள்ல காலை ஒடுக்கி வச்சுக்கிட்டு, சொருகுனாப்புல உட்கார்ந்துகிட்டுப் போகணும். ஆனால், இதுல காலை ஃப்ரீயா தொங்கப் போட்டுட்டுப் போகலாம். மத்த காருக்குள்ள கஷ்டப்பட்டு குனிஞ்சு, நுழைஞ்சு போய் உட்காரணும். ஆனா, இதுல ஈஸியா உள்ளே போய் உட்காரலாம். வயதானவங்க பயணிக்க நல்ல வண்டி இது. 50 லட்ச ரூபாய் கார்ல போறதைவிட, இதுல போறது அவ்வளவு சொகமா இருக்கும்.

நான் ஃபோர்டு, டாடா, மஹிந்திரா, ஹூண்டாய்னு எல்லா பிராண்டு கார்களையும் ரிப்பேர் பார்த்தாலும், இப்போதும் சரிக்குச் சமமா அம்பாஸடர் கார்களையும் ரிப்பேர் பார்க்குறேன். என்கிட்ட 30, 25 வருஷமா அம்பாஸடர் கார்களை யூஸ் பண்ற கஸ்டமர்கள் இன்னைக்கும் சர்வீஸூக்கு வர்றாங்க. பலர், `அம்பாஸடர் காருக்கு இவ்வளவு லேபர் சார்ஜ் கேட்குறீங்களே'னு கேட்குறாங்க. ஆனால், மத்த கார்களுக்கு கேட்குற ரேட்டை ஒண்ணும் சொல்லாமக் கொடுப்பாங்க. அம்பாஸடர் கார்ல அதிக உழைப்பு இருக்கு. மத்த கார்களை ரிப்பேர் பண்ணுவது எளிதான விஷயம். ஆனால், அம்பாஸடர்ல வேலை அதிகம். பெண்டு நிமித்திடும். எனக்கு முழுத் திருப்தியா ஆனாதான் சர்வீஸ் பண்ணுன காரைக் கொடுப்பேன், இல்லைன்னா, தயங்காம, 'இன்னும் வேலை இருக்கு. நாளைக்கு வாங்க'னு சொல்லி அனுப்பிருவேன்!" என்றார்.

அம்பாஸடர் காரைப் பராமரிப்பது, அதன் சிறப்பு குறித்துப் பேசிய கௌதமன், ‘‘இப்போ உள்ள கார்கள்ல ஒரு ஸ்பேர் லேசா டேமேஜ் ஆனாலும், புதுசா மாத்த வேண்டியிருக்கும். ஆனால், இதுல முக்கால்வாசி போனாலும், வெல்டிங் பண்ணி பழைய ஸ்பேரையே மாத்த முடியும். இப்போ உள்ள கார்கள்ல செட்டா ஸ்பேரை மாத்தணும். ஆனால், அம்பாஸடர்ல தனித் தனி ஸ்பேரை மாத்தலாம். இதுக்கு, ஸ்பேர்கள் வாங்குறதுதான் கொஞ்சம் சிரமம். கோவை, ஈரோடுனு ஸ்பேர் வாங்குறேன். பல ஸ்பேர்கள் புதுசா கிடைச்சாலும், ஒரிஜினல் கிடையாது. வேற கம்பெனிகள்ல இதுக்குரிய ஸ்பேர் வருது. இன்ஜின் சிலிண்டர் பிளாக், க்ராங்க் ஷாஃப்ட் புதுசா கிடைக்குது. அதேபோல், பழையதா வாட்டர் பம்ப், டைமிங் பெல்ட், நாசில், ரேக்கர் லிவர், கேன் சாஃப்ட், க்ளட்ச் பிளேட் எல்லாம் ஈஸியா கிடைக்குது. அதேபோல், டயர் எம்ஆர்எஃப், சியட்ல புதுசா கிடைக்குது. என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும், கரூர்ல கடைசி அம்பாஸடர் இருக்கும் வரைக்கும், அம்பாஸடரை சர்வீஸ் பண்றதை நிறுத்தமாட்டேன்!" என்றார்.