Published:Updated:

அப்பாச்சி ஓனரா நீங்க? - இந்த குரூப்பில் சேருங்க!

AOG
பிரீமியம் ஸ்டோரி
AOG

இந்தியாவில் இருக்கும் அப்பாச்சி ஓனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்வதற்காக உருவாக்கிய ஒரு கம்யூனிட்டிதான் AOG.அதுதான் அப்பாச்சி ஓனர்ஸ் குரூப்.

அப்பாச்சி ஓனரா நீங்க? - இந்த குரூப்பில் சேருங்க!

இந்தியாவில் இருக்கும் அப்பாச்சி ஓனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்வதற்காக உருவாக்கிய ஒரு கம்யூனிட்டிதான் AOG.அதுதான் அப்பாச்சி ஓனர்ஸ் குரூப்.

Published:Updated:
AOG
பிரீமியம் ஸ்டோரி
AOG

நமக்குப் பிடிச்ச பைக்கை வாங்கி ஓட்டுற சந்தோசம் எப்பவுமே ஸ்பெஷல்தான். அதிலும் நம்ம பைக் மாடலிலேயே வாங்கியிருக்கிற நிறைய பேர் கூடச் சேர்ந்து ஒரு ரைடு போனா எப்படி இருக்கும்?

டிவிஎஸ் தனது பைக்குகளை விற்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வாடிக்கையாளர்களின் பயண அனுபவம், குறை நிறைகள், பைக் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்கி இருக்கிறது. அதுதான் அப்பாச்சி ஓனர்ஸ் குரூப். இந்தியாவில் இருக்கும் அப்பாச்சி ஓனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்வதற்காக உருவாக்கிய ஒரு கம்யூனிட்டிதான் AOG. ஒவ்வொரு நகரத்திலும் அல்லது மாநிலத்திலும் இவர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனைவரும் ஒன்று கூடி தங்களது பைக்கில் எது சிறப்பாக இருக்கிறது, இன்னும் இதுவெல்லாம் சரியாக இருந்தால் நன்றாக இருக்கும், மைலேஜ் எவ்வளவு கொடுத்தது நீண்ட தூர பயணத்தில் சலிப்பு ஏற்பட்டதா, புது இடங்களைச் சுற்றிப் பார்த்தது என தங்களது அனுபவங்களை சக பைக்கர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துவது டிவிஎஸ்தான். ``சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த கம்யூனிட்டியில் 1,00,000-க்கு மேலான அப்பச்சி ஓனர்கள் மெம்பர்களாக இருக்கின்றனர். இதனைக் கொண்டாடும்விதமாக ஒரு ரைடு ஏற்பாடு செய்திருக்கிறோம், மங்களூருக்கு வாங்க!’’ என நமக்கு அழைப்பு விடுத்திருந்தது டிவிஎஸ். காரிலோ ரயிலிலோ அல்ல; பெங்களூரில் இருந்து மங்களூர் வரை பைக்கில்தான். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை நமக்குக் கொடுத்தது டிவிஎஸ் குழு. சந்தோஷமாக ரைடிங் கியர்ஸ் போட்டுக் கொண்டு காலை 4 மணிக்குக் கிளம்பி விட்டோம்.

முதல் நாள்

பெங்களூரில் இருந்து மங்களூர் செல்ல மூன்று வழிகள் காட்டியது கூகுள் மேப். ஒன்று மைசூர் வழியாகச் செல்வது. இன்னொன்று சக்லேஷ்பூர் வழி. கடைசியாக தும்கூர் வழியாகச் செல்வது. இதில் சக்லேஷ்பூர் வழிக்கு லக் அடித்தது. ஹசன் வரை ஆறுவழிச் சாலை. பயணக் களைப்பே இல்லாமல் சென்று விடலாம். ஹசனில் இருந்து சக்லேஷ்பூர் வரை பாதைகள் படுமோசம். குண்டும் குழியும் அதிகமாக இருந்தது... ஆனால் அப்பாச்சி நமக்கு அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொண்டது. சக்லேஷ்பூர் தாண்டியவுடன் அருமையான மலைச் சாலைகள் வந்தன. இருபக்கமும் இயற்கைக் காட்சிகள். பச்சைப் பசேலென கண்களுக்கு மட்டுமல்ல, இதமான குளிர்காற்று வீசி உடலையும் குளிரச் செய்தது. சென்னை வெயிலில் கறுகிப் பழக்கப்பட்ட நமக்கு, குளிர் மிகவும் இதமாக இருந்தது. எனது சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. மலைப் பிரதேசங்களைத் தாண்டியவுடன் மீண்டும் கடலை நோக்கிச் செல்வதால் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நெடுந்தூர பைக் பயணம் செய்யும்போது நீங்கள் அவசியம் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில் உடல் டிஹைட்ரேட் ஆகி மயக்கம் வர வாய்ப்புள்ளது. சராசரியாக ஒரு நாளில் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பீர்கள் என்றால் பைக் ரைடுகளின்போது குறைந்தது 5 லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். நாங்களும் ஒவ்வொரு 70 அல்லது 80 கிமீ தூரத்திற்கு ஒரு முறை தண்ணீருக்காக அப்பாச்சியை நிறுத்தினோம். மதிய உணவுக்கு மங்களூரில் இருக்கும் சாய் ராதா ஹெரிடேஜ் பீச் ரிசார்ட்டைச் சென்றடைந்து விட்டோம். இந்தியாவில் இருக்கும் பல நகரங்களில் இருந்து மொத்தம் 120 அப்பாச்சி பைக் ரைடர்கள் வந்திருந்தார்கள். பார்க்கிங் முழுவதும் சிவப்பு நிறங்களில் அப்பாச்சிகளே நிறைந்து காணப்பட்டன.

மதிய உணவு, சிறிது நேரம் ஓய்வு - இவற்றுக்குப் பின் மாலையில் நிகழ்ச்சி துவங்க ஆரம்பித்தது. வந்திருக்கும் அனைத்து ரைடர்களுக்கும் சில போட்டிகளை நடத்த முடிவு செய்திருந்தது டிவிஸ். தக் ஆஃப் வார், பீச் வாலிபால், சாண்ட் கேஸில் பில்டிங், கோக்கோனெட் ட்ரீ க்ளைம்பிங், மோட்டோ கிராஸ் பிட், ஸ்லோ ரேஸ், அப்ஸ்டக்கிள் கோர்ஸ் என சுவாரசியமான விளையாட்டுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இரண்டாம் நாள்

பீச் ரிசார்ட்டில் இருந்து மரவந்தே பீச் வரை ஒரு அலாதியான ரைடு சென்று வந்தோம். இந்த மரவந்தே பீச்சின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு பக்கம் கடல், மற்றொரு பக்கம் நதி என கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் இடம் இது. 120 ரைடர்களும் வரிசையாக பீச் ரோட்டில் ரைடு செய்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மொத்தம் 150 கிமீ பயணத்தை முடித்து ரிசார்ட்டுக்குத் திரும்போது பல விளையாட்டுப் போட்டிகள் அங்கு காத்திருந்தன. அனைத்து ரைடர்களும் உற்சாகமாக எல்லா விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

அப்பாச்சி ஓனரா நீங்க? - இந்த குரூப்பில் சேருங்க!

வெயிலின் சூடு அதிகமாக இருக்கிறது என கதறிக் கொண்டிருந்த நேரத்தில் மழை வந்து எங்களைக் காப்பற்றியது. இரண்டாவது நாள் மதிய உணவுக்குப் பிறகு டிவிஎஸ்ஸைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் டிவிஎஸ் ஓனர்களும் ஒன்றாக அமர்ந்து அப்பாச்சி பைக்கில் இருக்கும் pros and cons குறித்து விரிவாகக் கலந்து பேசினர். பைக் சர்வீஸில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கின்றனவா; பைக்கில் குறைகள் உள்ளனவா; அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களது நண்பர்களுக்குக்கூட ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதா எனக் கேட்டறிந்தனர் டிவிஎஸ் குழுவினர். அப்பாச்சி ஓனர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக ஒளிவுமறைவுமின்றிப் பகிர்ந்து கொண்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்பாச்சி ஓனர் ஒருவர் தனது பைக்கில் ஒரு லட்சம் கிமீகளைத் தாண்டி இன்னமும் ஓட்டிக் கொண்டிருக் கிறார். அவர் சென்னையைச் சேர்ந்த கதிர் என்பவர். சில பேர் கூட்டமாகவும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். அதை முழுப் பொறுப்புடன் ஏற்றுக்கொண்ட டிவிஎஸ் இன்னும் சிறந்த வகையில் சேவைகள் செய்வோம் என உத்தரவாதமும் கொடுத்தது. உற்பத்தியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை உடைத்தெறிய இது போன்ற நிகழ்ச்சி பெரும் உதவியாக இருக்கும் என்று புரிந்தது. மேலும் பல நகரங்களில் இருக்கும் ஓனர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடி அதிகப்படியான நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது டிவிஎஸ்.

நாள் மூன்று

காலை உணவை முடித்து மீண்டும் பைக்குகளைத் தயார் செய்து, லக்கேஜ்களை பேக் செய்து கொண்டு அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதுதான் மூன்றாவது நாளின் இலக்கு. திரும்பிச் செல்வதற்கும் வந்த வழியையே தேர்வு செய்தோம். சுமார் 7 மணிநேரப் பயணத்துக்குப் பிறகு பெங்களூருக்கு வந்து சேர்ந்து விட்டோம். பைக் ரைடு மட்டுமல்ல பல அப்பாச்சி நண்பர்களோடு கிடைத்த அறிமுகம், பல நகரங்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இந்தப் பயணம் அமைந்தது. நீங்கள் அப்பாச்சி ஓனராக இருந்தால் அல்லது அப்பாச்சி பைக்கை வாங்க போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக அப்பாச்சி ஓனர்ஸ் குரூப்பில் சேர்ந்து கொள்ளுங்கள். இது போன்ற மற்றொரு பயணத்தில் சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism