Published:Updated:

லாக்டவுனுக்குப் பிறகு புதிய கார் டெலிவரி எடுக்கிறீர்களா? இந்த டிப்ஸ் உங்களுக்காகத்தான்! #CarCare

புதிய கார்
புதிய கார் ( Autocar India )

மார்ச் மாத இறுதிக்குள்ளாக உங்கள் புதிய கார், டீலருக்கு வந்திருந்து அல்லது முன்பதிவு செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் அங்கேயே சிக்கிக்கொண்டிருக்கிறதா? தற்போது, இவற்றைத்தான் முதலில் டீலர்கள் வெளியேற்றத் தொடங்குவார்கள்.

ஒருவரது வாழ்வில், புதிய வீட்டுக்கு அடுத்தபடியாக நினைவலைகளில் நிற்கக்கூடிய விஷயம், புதிதாக கார் வாங்குவதுதான்! கிட்டத்தட்ட திருமணம் போலவே, தனக்கேற்ற சாய்ஸைத் தேர்ந்தெடுக்க பல மணி நேரமும் பணமும் இங்கே செலவிடப்பட்டிருக்கும். குடும்பம் சகிதம் டீலரிடம் சென்று, புதிய காரை டெலிவரி எடுத்து, நேராக கோயிலுக்குச் செல்வது என்பது, ஏறக்குறைய ஒரு சடங்காகவே மாறிவிட்டது. ஆனால் இந்த கொரோனா நேரத்தில், இது எல்லாவற்றுக்குமான சாத்தியங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. 50 நாள்களுக்குப் பிறகு வாகன டீலர்கள் இயங்கத் தொடங்குவதால், எதை எங்கு எப்படி ஆரம்பிப்பது என்பதில் அவர்கள் ஏகத்துக்கும் குழம்பிப் போய் இருப்பார்கள்.

Checkpoints List
Checkpoints List
Vikatan

எனவே, மார்ச் மாத இறுதிக்குள்ளாக, உங்கள் புதிய கார் டீலருக்கு வந்திருந்து அல்லது முன்பதிவு செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் அங்கேயே சிக்கிக்கொண்டிருக்கிறதா? தற்போது இவற்றைத்தான் முதலில் டீலர்கள் வெளியேற்றத் தொடங்குவார்கள். ஏனெனில், ஒரே இடத்தில் பலநாள்கள் முடங்கி நின்ற கார்கள் சர்வீஸ் சென்டருக்குப் படையெடுப்பது ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் கைவசமிருக்கும் புதிய கார்களை எந்தச் சிக்கலும் இல்லாமல் வாடிக்கையாளருக்குக் கொண்டு சேர்ப்பதும் அவசியம்தான். எனவே, இந்த நெருக்கடியான சூழலில் நீங்கள் புதிய காரை டெலிவரி எடுக்கப்போகிறீர்கள் என்றால், பின்வரும் விஷயங்களைக் கருத்தில் கொள்வது நலம். வீட்டிற்கே டீலர்கள் காரை டெலிவரி செய்துவிட்டார்கள் என்றாலும், அதற்கும் இவை பொருந்தும்.

1. தனியா டீலருக்குப் போகாதீங்க!

Car Delivery
Car Delivery

டீலரிடமிருந்து அழைப்பு வந்தபிறகு, காரை டெலிவரி எடுக்க தனியாகச் செல்ல வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒருவர் அல்லது நண்பர் ஆகியோருடன் செல்லுங்கள். இவர்களில் யாராவது நீங்கள் வாங்கும் அதே மாடலை வைத்திருப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு போனஸ்தான்! தெரிந்த மெக்கானிக் யாராவது இந்த நேரத்தில் உடன் இருந்தால் இன்னும் சூப்பர்; நீங்கள் காரின் உரிமையாளராக அதை அணுகும்போது, மற்றொருவர் அதை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பார். இதனால் காரில் ஏதாவது இடர்ப்பாடு இருந்தால், அதை இருவரில் யாராவது ஒருவர் கண்டுபிடித்துவிட வாய்ப்புள்ளது. மேலும், மெக்கானிக் என்பவர், கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ரிப்பேர் வேலை அல்லது ஏதேனும் பாகங்களில் பிரச்னை இருக்கிறதா என்பதை உங்களுக்குத் தெரிவிக்க உதவிகரமாக இருப்பார்.

கொரோனாவால் உங்கள் வாகனத்தின் ஆயுள் குறையாமல் இருக்க, சில டிப்ஸ்!

2. வெளிப்புறத்தில் என்ன செக் செய்ய வேண்டும்?

பெரும்பான்மையான டீலர்களில், யார்டு என்பது வெட்ட வெளியான ஓர் இடமாகவே இருக்கும். எனவே, வெயில் - மழை தவிர, தூசு,மண்,சிறிய பூச்சிகள்,இலை தழைகள்,மரக்குச்சிகள்,சிறு கற்கள் ஆகியவை காரின் மேலே நிச்சயம் படர்ந்திருக்கும். இதனால் காரின் வெளிப்புறத்தில், சில இடங்களில் கீறல்கள் அல்லது சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இந்த இடைப்பட்ட காலத்தில், காரின் மேலே இருக்கும் Protective Film/Packing Material ஆகியவை நீக்கப்படாமல் இருந்திருந்தாலோ அல்லது மூடப்பட்ட இடத்தில் கார் நின்றிருந்தாலோ, இதற்கான சாத்தியம் குறைவுதான். எனவே, காரை டீலரிடமிருந்து பெறுவதற்கு முன்பாக, அதன் பெயின்ட் ஃபினிஷ் மற்றும் பாடி பேனல்கள் (பானெட், கதவுகள், டெயில் கேட், ரூஃப், ஃபெண்டர்) ஒரே சீராக இருக்கிறதா என்பதை செக் செய்யவும்.

Tyre Inspection
Tyre Inspection
Autocar India

பிரேக் டிஸ்க் - வீல்கள் - ஃப்ளோர் போர்டு ஆகிய பகுதிகள் துரு இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில், கழற்றி மாட்டக்கூடிய பாகங்கள் (லைட்டிங், பம்பர்கள், அக்ஸசரிஸ், மிரர்கள், கண்ணாடிகள்) ஒன்றுடன் ஒன்று இணையாமல் அல்லது லூசாக இருந்தால், கடைசி நேரத்தில் ஏதாவது அட்ஜஸ்ட்மென்ட் செய்யப்பட்டிருக்கிறது என அர்த்தம். காரின் ரப்பர் (வைப்பர் & பீடிங்) மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் (ஆண்டெனா & ஸ்பாய்லர்), வெடிப்பு அல்லது வெளுத்துப்போய் இல்லாமல் இருக்க வேண்டும். டயர் மற்றும் வீல் ஆகியவை, தேய்மானம் இல்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருப்பது அவசியம். இதையெல்லாம் செக் செய்த பிறகு, காரின் எலெக்ட்ரிக்கல் அம்சங்கள் அனைத்தும் (மிரர் அட்ஜஸ்ட், ஹெட்லைட், டெயில் லைட், இண்டிகேட்டர், வைப்பர், பனி விளக்கு/DRL, ஹாரன்) சீராக இருக்கின்றனவா என்பதைப் பார்க்கவும். இல்லையெனில் பேட்டரி அல்லது ஒயரிங்கில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம். உங்களுடன் இருப்பவர் ஏதாவது தவறு கண்டுபிடித்தால், அதைத் தயங்காமல் டீலரிடம் கேட்கத் தயங்க வேண்டாம்.

3. கேபினில் என்னென்ன கவனிக்க வேண்டும்?

காரின் சாவியைப் போட்டு ஆன் செய்யும் முன்பு, Ignition On-ல் இருக்கும்போது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் எந்த வார்னிங் லைட்டாவது எரிகிறதா என்பதை முதலில் பாருங்கள். சீட் - ஸ்டீயரிங் - சீட் பெல்ட் அட்ஜஸ்ட்மென்ட் ஆகியவை சரியாக இருப்பது அவசியம். பிறகு, கேபினில் இருக்கும் அடிப்படையான மற்றும் ப்ரீமியம் வசதிகள் என அனைத்தையுமே சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதிசெய்யவும் (பவர் விண்டோஸ், ரிமோட் லாக்கிங், Hazard இண்டிகேட்டர்கள், ரீடிங் லைட்ஸ், சார்ஜிங் பாயின்ட்ஸ்). மேலும், டேஷ்போர்டு மற்றும் அப்ஹோல்சரி ஆகியவை, சேதாரமின்றி சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை காருக்குள் தண்ணீர் புகுந்திருந்தால், கேபினில் ஒரு மாதிரியான மணம் அடிக்கும். எதற்கும் கார்பெட்/ஃப்ளோர் மேட் ஆகியவற்றுக்கு அடியே இருக்கும் ஃப்ளோரிங்கைப் பார்த்துவிடவும். பிறகு இன்ஜினை ஸ்டார்ட் செய்துவிட்டு, அதை ஐடிலிங்கில் விடவும்.

Clean Upholsery
Clean Upholsery
Autocar India

காருக்குள்ளே இன்ஜின் சத்தம் வழக்கத்தைவிட அதிகமாகக் கேட்கிறதா என்பதையும், பெட்ரோல்/டீசல் Smell வருகிறதா என்பதையும் பாருங்கள். பின்னர், ஏ/சி மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை ஆன் செய்யவும். ஏசியின் கூலிங் சீராகவும் உடனடியாகவும் இருப்பதுடன், அதிலிருந்து வரும் காற்று எந்த வாடையும் இல்லாமலும் இருக்க வேண்டும். இல்லையெனில், ஏசி அமைப்பை சர்வீஸ் செய்யச் சொல்லிவிடுங்கள். டச் ஸ்க்ரீன் எந்த Lag-கும் இல்லாமல் செயல்படுகிறதா என்பதையும், ஸ்பீக்கர்கள் கரெக்ட்டாக இருக்கின்றனவா என்பதையும் சரிபார்க்கவும். இதில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடலை ஒலிக்கும்போது, இதனை உங்களால் சுலபமாகக் கணித்துவிடமுடியும். மற்றபடி காருடன் வரும் Mandatory பொருள்களான ஸ்பேர் வீல், டூல் கிட், Owners Manual, பேட்டரி வாரன்ட்டி கார்டு, Non Polluting Vehicle Certificate ஆகியவை வழங்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். நீங்கள் கேட்ட ஆக்ஸசரிகள் அனைத்தும் பொருத்தப்பட்டிருக்கின்றனவா என்பதை, செக்லிஸ்ட் வைத்துப் பாருங்கள்.

4. காருக்கு அடியே எப்படி?

பானெட்டைத் திறந்துபார்த்தால், இன்ஜின் பகுதி அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். ஆயில் அல்லது திரவங்கள் லீக் ஆகாமல் சரியான அளவில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு திரவம்/ஆயிலுக்கும் ஒரு தன்மை மற்றும் நிறம் உண்டு. எனவே, அவை அதற்கேற்ப இருப்பது அத்தியாவசியம். இல்லையெனில், அவை பழையதாக அல்லது டாப்-அப் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. பேட்டரி துரு ஏறியோ - லீக் ஆகியோ இருக்கவே கூடாது. ஒரே இடத்தில் நின்ற காரில் எலி அண்ணன் தனது கைவண்ணத்தைக் காட்டாமல் இருந்திருந்தால், ரப்பர் - வயரிங் ஆகியவை நீட்டாக இருக்கும். ஆனால், தொடர்ச்சியாக வெயிலின் வெப்பத்தை சந்தித்திருந்தால், ரப்பரால் ஆன ஹோஸ் - ட்யூப் - கேஸிங் மற்றும் வயர்கள் - கேபிள்கள் ஆகியவை இறுகியிருக்கக்கூடும்.

Underchassis
Underchassis
Autocar India

தவிர, பிளாஸ்டிக்கால் ஆன இன்ஜின் Lid, இன்டேக் - ஏர் பாக்ஸ் - திரவ கன்டெய்னர், வைப்பர் பகுதியில் இருக்கும் பிளேட் ஆகியவை வெளுத்துப் போயிருக்கக்கூடும். எனவே, ரப்பர் பாகங்களைப் பிடிக்கும்போது, அவை Crack ஆகாமல் அதே வழவழப்புத் தன்மையுடனும், பிளாஸ்டிக் பாகங்கள் உறுதித்தன்மை குறையாமல் இருத்தலும் அவசியம். இன்ஜின் இயங்கும்போது அதிர்வுகளின்றியும் கரும்புகையைக் கக்காமலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஏதோ பிரச்னை இருக்கிறது என அர்த்தம். ஐடிலிங்கும் அவ்வப்போது ஏறி இறங்காமல் கச்சிதமாக நிற்க வேண்டும். சகதியான அல்லது நீர் மிகுந்த பகுதியில் கார் நின்றிருந்தால், அதன் அடிப்பகுதி மண்/துரு படிந்து இருக்கக்கூடும்.

5. டெலிவரிக்கு முன்பு டெஸ்ட் டிரைவ்!

New Car Test Drive
New Car Test Drive
Tata Motors

எப்படி காரை புக் செய்வதற்கு முன்பாக டெஸ்ட் டிரைவ் சென்றிருப்பீர்களோ, அதேபோல உங்களுக்கான காரை டெலிவரி எடுக்கும் முன்பு, அதையும் ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிடவும். உங்களுடன் வந்தவர்களையும் காரில் ஏற்றிக் கொள்ளவும். மெக்கானிக்கை அழைத்துச்சென்றிருந்தீர்கள் என்றால், அவரை முன்பக்க பயணி இருக்கையில் அமரச் சொல்லுங்கள். டயரில் Flat Spots இருந்தால், அது காரின் ஓட்டுதலிலேயே தெரிந்துவிடும். கிளட்ச், கியர்பாக்ஸ், ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் , பிரேக் ஆகியவை துல்லியமாக இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்துவிடுங்கள். சீரான தார்ச் சாலைகள் தவிர, குறுகலான பகுதிகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பிலும் காரை ஓட்டிப் பாருங்கள். இந்த நேரங்களில் கார் ஒரு பக்கமாகச் சென்றாலோ - பிரேக் பிடிக்கும்போது உதறல் தெரிந்தாலோ - சஸ்பென்ஷனிலிருந்து விநோதமான சத்தம் வந்தாலோ - கியர் லீவரில் அதிகமாக அதிர்வுகள் தெரிந்தாலோ - காரில் ஏதோ சரியில்லை மக்களே! இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நல்ல நேரம் மற்றும் தேதியைவிட, நல்ல கண்டிஷனுடன்கூடிய காரே தேவை என்பதால், கொஞ்சமும் யோசிக்காமல் காரை சர்வீஸ் செய்து தரச் சொல்லிவிடுங்கள்.

கார் ஆர்வலரா... நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆட்டோமொபைல் படங்கள்!

6. காரின் ஆவணங்களைச் சரிபார்க்கவும்!

2020 தொடங்கி மே மாதத்துக்கு வந்துவிட்டோம் என்பதால், பெரும்பாலும் 2020-க்குப் பின்பு தயாரிக்கப்பட்ட மாடல்களே டீலர்கள் வசம் இருக்கும் (சில சந்தர்ப்பங்களில், அதிக தள்ளுபடிகளுடன் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களும் இருக்கலாம்) இருப்பினும், உங்கள் காரின் மாடல் குறித்த விவரங்களைக் கவனமாக சரிபார்க்கவும். காரின் டயர் மற்றும் கதவு கண்ணாடிகளில்கூட, அவை தயாரிக்கப்பட்ட ஆண்டு இருக்கும் என்பதை நினைவில்கொள்ளவும்! வாகன உற்பத்தியாளர் தரக்கூடிய பார்ம் 22-வில் இருக்கும் இன்ஜின் மற்றும் சேஸி எண்கள், கார் தயாரிக்கப்பட்ட மாதம்/ஆண்டு ஆகியவைதான், காரின் இன்சூரன்ஸிலும் இருக்க வேண்டும். இதில் மதிப்புக் கூட்டுச் சேவைகளான Zero Depreciation - Engine Protection - Electrical Accessories & Parts போன்றவற்றை நீங்கள் சேர்க்கச் சொல்லியிருந்தால், அவை எல்லாமே இடம்பெற்றுள்ளனவா என்பதை மறவாமல் பார்க்கவும்.

Car Documents
Car Documents
Autocar India

மேலும் Vehicle Identification Number (VIN) பொறுத்தவரை, காரின் பில் - RC புக் - ஃபைனான்ஸ் பத்திரம் - காப்பீடு என எல்லாவற்றிலும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும். தவிர, முன்னே சொன்ன ஆவணங்களில், உங்களின் முகவரி - பெயர் - மொபைல் எண் - பிறந்த தினம் - புகைப்படம் - கையொப்பம் ஆகியவை சரியாக இருப்பதும் அவசியம். Extended Warrenty - RSA ஆகிய சேவைகளுக்கு நீங்கள் பணம் செலுத்தியிருந்தால், அதற்கான பில் மற்றும் ஆவணங்களைப் பெறுவதும் அவசியம். புதிய வாகனங்களின் இன்சூரன்ஸ் மற்றும் வாரன்ட்டியில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றாலும், சர்வீஸில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, முதல் இலவச சர்வீஸின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா என்பதை டீலரிடம் கேட்டுவிடுங்கள். எப்படி புது செல்ஃபோனுக்கு உடனேயே கேஸ் கவர் மற்றும் டெம்பர் க்ளாஸ் போட்டுவிடுகிறோமோ, அதேபோல உங்களின் புதிய காருக்கு மறவாமல் பாடி கவரை வாங்கிவிடவும்.

Wish You a Happy & Safe Motoring!

அடுத்த கட்டுரைக்கு