Published:Updated:

குருவாயூர் கோயிலுக்கு நன்கொடையாக வந்த வாகனம்; குறைந்த விலைக்கு ஏலம் போன 4-வீல் டிரைவ் தார்!

டிரைவ் தார்
News
டிரைவ் தார்

டிசம்பர் 18-ம் தேதி ஏலமும் நடைபெற்றது. ஏலத்திற்கான ஆரம்ப விலையாக 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இது தாரின் ஆன்ரோடு விலையை விடக் குறைவுதான்.

மஹிந்திரா தார் ஜீப் எப்போதுமே சென்சேஷனல் வாகனம்தான். விற்பனையிலும் சரி... ஓட்டுதலிலும் சரி... இப்போது ஒரு கோவில் ஏலத்திலும் சிக்கி சென்சேஷனல் ஆகியிருக்கிறது மஹிந்திரா தார்.

ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய வீரர்கள்... ராணுவத்தில் பதக்கம் வாங்கிய ஜவான்கள்... ஆட்டோமொபைலில் சாதனை புரிந்தவர்கள் என்று தன் மனம் கவர்ந்த யாராக இருந்தாலும், அவர்களுக்கு மஹிந்திராவின் சார்பாக கார் அன்பளிப்பாகக் கிளம்பிவிடும். அப்படித்தான்

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தார் ஜீப் ஒன்று நன்கொடையாகப் போனது. முதலில் கோவிலின் பயன்பாட்டுக்குத்தான் இதை வைத்திருந்தார்கள். ஆனால் இது ஒரு 4வீல் டிரைவ் கொண்ட ஆஃப்ரோடு மாடல். அதனால் கோவிலின் தினசரி நகரப் பயன்பாட்டுக்கு இது எடுபடவில்லை. எனவே இதை ஏலத்தில் விட முடிவு செய்தது கோயில் நிர்வாகம்.

டிசம்பர் 18-ம் தேதி ஏலமும் நடைபெற்றது. ஏலத்திற்கான ஆரம்ப விலையாக 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இது தாரின் ஆன்ரோடு விலையை விடக் குறைவுதான்.

டிரைவ் தார்
டிரைவ் தார்

நேற்று நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்ட சுபாஷ் பனிக்கர் என்பவர், தார் ஜீப்பை 15,10,000 ரூபாய்க்கு ஏலம் கேட்டார். இவர் துபாயில் வசிக்கும் இந்தியரான அமல் முகமது அலி என்பவர் சார்பாக ஏலத்தில் கலந்து கொண்டார். முகமது அலி தனது 21 வயது மகனுக்கு, கடவுளின் வாகனம் என்று இந்த தாரைப் பரிசளிக்க விரும்பி இந்த ஏலத்தில் தன் சார்பாக சுபாஷை அனுப்பி இருக்கிறார். வேறு யாருமே ஏலத்தில் பங்கு பெறாததால், சுபாஷ் கேட்ட விலைக்கே ஏலம் போனது தார்.

"பரவாயில்லை. நாங்கள் 25 லட்சம் வரை ஏலத்தில் செலவிடத் தயாராக இருந்தோம். ஆனால் ஏலம் 15 லட்சத்து பத்தாயிரத்துக்கும் முடிந்தததில் மகிழ்ச்சியே" என்று கூறினார்.

பின்னர் குருவாயூர் தேவசம்போர்டின் தலைவர் இவ்வளவு குறைந்த விலையில் ஒரு பிரசித்தி பெற்ற கோயிலில் கார் ஏலம் போனதில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், யாருமே ஏலத்தில் பங்கு பெறாததில் சர்ச்சை இருப்பதாகவும் கூறினார். இதனால் ஏலம் குறித்த இறுதி முடிவு செவ்வாய்க்கிழமை கலந்தாலோசித்து எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், "எங்கள் தரப்பில் ஏலம் கேட்கப்பட்டதன்படி காரை வழங்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" எனச் சொல்லியிருக்கிறார் சுபாஷ்.

என்னடா இது கடவுளின் வாகனத்துக்கு வந்த சோதனை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz