Published:Updated:

Motor Updates: `புதிய மாருதி பெலினோவில் என்ன ஸ்பெஷல்?' `விலை கூடிய பொலேரோ!'

மோட்டார் அப்டேட்ஸ் Motor Updates

எலெக்ட்ரிக் மயமாகும் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ஸ்! #மோட்டார்அப்டேட்ஸ்

Motor Updates: `புதிய மாருதி பெலினோவில் என்ன ஸ்பெஷல்?' `விலை கூடிய பொலேரோ!'

எலெக்ட்ரிக் மயமாகும் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ஸ்! #மோட்டார்அப்டேட்ஸ்

Published:Updated:
மோட்டார் அப்டேட்ஸ் Motor Updates

எலெக்ட்ரிக் வாகனங்களைப் பிரதானப்படுத்தும் மெர்சிடீஸ்-பென்ஸ்!

மெர்சிடீஸ் பென்ஸ் EQC
மெர்சிடீஸ் பென்ஸ் EQC

முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யூவியான EQC மாடலை கடந்த 2020-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பென்ஸ். அதேபோல முழுமையான எலெக்ட்ரிக் செடானான EQS மாடலை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் திட்டத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது பென்ஸ். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து செக்மென்ட்களிலும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியிருப்பதும், 2025-க்குள் தற்போது தாங்கள் விற்பனை செய்து வரும் அனைத்து பெட்ரோல் டீசல் கார் மாடல்களின் எலெக்ட்ரிக் வேரியன்ட்டை அறிமுகப்படுத்துவதும்தான் மெர்சிடீஸின் திட்டம். இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலேயே தங்களது எலெக்ட்ரிக் வாகன விரிவாக்கத்திற்கான திட்டமாக இதையே வைத்திருக்கிறது பென்ஸ்.

2030-க்குள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் முழுமையாக எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ். ஆனால், அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவும் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு மாறுவதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. எனவே, முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்வதைப் பற்றி இப்போது கூற முடியாது எனத் தெரிவித்திருக்கிறது பென்ஸ். அதே நேரத்தில் அதிகமாக பெட்ரோல் டீசல் வாகனங்களை விற்கும் திட்டமும் பென்ஸிடன் இல்லை. ஏனெனில் வரும் ஏப்ரலில் இருந்து CAFE 2 (Corporate Average Fuel Economy 2)-வும், 2023 ஏப்ரலில் இருந்து RDE (Real Driving Emissions) விதிகளும் இந்தியாவில் அமலுக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான கட்டுப்பாடும் அதிகரிக்கும். எனவே, இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் வாகன போர்ட்ஃபோலியோவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, பெட்ரோல் டீசல் வாகனங்களைக் குறைக்கும் திட்டத்தில் இருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"பெட்ரோல், டீசல் வாகனங்கள் இனி இல்லை!"-  ரோல்ஸ் ராய்ஸ்

'ஸ்பெக்டர் கூப்' ஸ்பை ஷாட்
'ஸ்பெக்டர் கூப்' ஸ்பை ஷாட்

ரோல்ஸ்ராய்ஸின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் காராக அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது ஸ்பெக்டர் கூப். தற்போது விற்பனையில் இருக்கும் ரெய்த் மாடலுக்கு மாற்றாக இந்த ஸ்பெக்டர் கூப்பை அறிமுகப்படுத்துகிறது ரோல்ஸ்ராய்ஸ். 2030-ல் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யும் முடிவில் இருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ். கடைசியாக ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்ட Mk2 கோஸ்ட் மாடல்தான் ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகப்படுத்திய கடைசி பெட்ரோல் மாடலாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது விற்பனையில் இருக்கும் கல்லினன் எஸ்யுவி, கோஸ்ட் சலூன் மற்றும் பேன்டம் லிமோசின் ஆகிய மாடல்களின் எலக்ட்ரிக் வேரியன்ட்டையும் 2030-க்குள் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ்.

இந்தியாவில் ரெய்த், டான், கோஸ்ட், கல்லினன் மற்றும் பேன்டம் என தங்களின் ஐந்து கார் மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது ரோல்ஸ்ராய்ஸ். மேலும், ரோல்ஸ்ராய்ஸின் புதிய கோஸ்ட் ப்ளாக் பேட்ஜ் மாடலையும் விரைவில் அறிமுகப்படுத்தவும் இருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ்.

'புக்கிங்குகள் ஓப்பன்' -  இந்த மாத இறுதியில் வெளியாகிறது பெலினோ!

மாருதி பெலினோ
மாருதி பெலினோ

ஆன்லைனிலும், தங்களுடைய நெக்ஸா டீலர்ஷிப்களிலும் புதிய ஃபேஸ்லிஃப்டட் பெலினோவுக்கான புக்கிங்குகளைத் தொடங்கிவிட்டது மாருதி சுஸூகி. 11,000 ரூபாய் முன்பணம் செலுத்தி பெலினோவை புக் செய்து கொள்ளலாம். மாருதியின் குஜராத் தொழிற்சாலையிலும் பெலினோவின் தயாரிப்பைத் தொடங்கிவிட்டது மாருதி. வரும் பிப்.23-ம் தேதி மாருதியின் புதிய பெலினோ வெளியாகலாம் எனத் தெரிகிறது.

வெளிப்புறமும் சரி, உட்புறமும் சரி, புதிய பெலினோவிற்கு சின்ன சின்ன காஸ்மெட்டிக் மாற்றங்களை மாருதி அளித்திருக்கும் எனத் தெரிகிறது. வெளிப்புறம் முந்தைய பெலினோவைப் போலவே காட்சியளித்தாலும், முன்பக்கமும், பின்பக்கமும் மட்டும் புதிய டிசைன்களை மாருதி கொடுத்திருக்கிறது. அதோடு புதிய ஹெட்லைட் மற்றும் டெய்ல்லைட்களும். உட்பக்கம் ஆண்ட்ராய்ட ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவுடன் கூடிய புதிய ஃப்ரீ ஸ்டாண்டிங் இன்ஃபோடெய்ன்மென்ட் ஸ்கிரீன். புதிய ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே. புதிய பெலினோவின் பாதுகாப்பு அம்சங்களில் மாருதி கொஞ்சம் கவனித்திருக்கிறது. பெலினோவின் டாப் எண்டு மாடலில் 6 ஏர்பேக்குகளைக் கொடுத்திருக்கிறது மாருதி. அதோடு ESP (Electronic Stability Program)-ம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஜனவரி 2022 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் அனைத்திலும் முன்பக்கம் இரண்டு ஏர்பேக்குகள் கட்டாயம் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு. எனவே, லோ-எண்டு மாடல்களிலும் இரண்டு ஏர் பேக்குகள் உறுதி. இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. மேனுவல் கியர் பாக்ஸ் உண்டு, அதோடு தற்போது CVT-யாக இருக்கும் கியர்பாக்ஸாது AMT-யாக மாற்றப்படுகிறது. அவ்வளவுதான்.

என்னவெல்லாம் மாறியிருக்கு? 'MG ZS EV ஃபேஸ்லிஃப்ட்'!

புதிய MG ZS EV ஃபேஸ்லிஃப்ட்
புதிய MG ZS EV ஃபேஸ்லிஃப்ட்

'ZS EV-யை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது MG' என அதன் ஸ்பை படங்கள் இணையத்தில் உலா வந்தன. அதைத் தொடர்ந்து புதிய ZS EV-யின் புகைப்படங்களை MG நிறுவனமே வெளியிட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் விற்பனையில் இருக்கும் ZS EV மாடலைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது இந்தியாவில் வெளியாகவிருக்கும் ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடல். வெளிப்பக்கம் சின்னச் சின்ன காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உட்பக்கப் படங்களை MG நிறுவனம் வெளியிடவில்லை, எனவே ZS EV-யின் இன்டீரியர் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், ZS EV-யில் புதிய வசதிகள் பலவற்றைச் சேர்த்திருக்கிறது MG.

10.1 இன்ச் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், மாற்றியமைக்கப்பட்ட க்ளைமேட் கன்ட்ரோல் பட்டன்கள், 360-டிகிரி கேமராவுடன் கூடிய ADAS வசதி மற்றும் புதிய 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டர் இவை அனைத்தையும் ஆஸ்டர் மாடலிடமிருந்து கடன் வாங்கி ZS EV-யில் பயன்படுத்தியிருக்கிறது MG. இந்த ஃபேஸ்லிஃப்டட் ZS-ல் பெரிய மாற்றம் என்றால் அது பேட்டரி பேக் தான். 44.5 kWh-ஆக இருந்து பேட்டரியை புதிய ZS-ல் 51 kWh-ஆக உயர்த்தியிருக்கிறது MG. இதனால், காரின் ரேஞ்சும் 480 கிமீ வரை அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பவர் மற்றும் டார்க்கைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை, 143 hp பவர் மற்றும் 353 Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய அதே மோட்டார் செட்டப் தான். தற்போது 21.49 லட்சம் ரூபாய் முதல் 25.18 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது ZS EV. இதன் ஃபேஸ்லிஃப்டட் மாடல் இதனைவிட கொஞ்சம் அதிக விலையில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

விலை கூடிய பொலேரோ!

பொலேரோ
பொலேரோ

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, இந்தியாவில் விற்கப்படும் கார்கள் அனைத்திலும் இரண்டு ஏர்பேக்குகள் வழங்குவதைக் கடந்த ஆண்டு கட்டாயமாக்கியது மத்திய அரசு. இதற்கு ஏற்ற வகையில் வாகனங்களில் மாற்றம் செய்வதற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் வரை அவகாசம் கொடுத்திருந்தது. 2022 ஜனவரியில் இருந்து இந்தியாவில் விற்கப்படும் கார்கள் அனைத்திலும் இரண்டு ஏர்பேக்குகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் விற்கப்பட்டு வந்த மாருதி ஆல்ட்டோ, எஸ் ப்ரஸ்ஸோ, ரெனோ க்விட் மற்றும் மஹிந்திரா பொலேரோ ஆகிய மாடல்கள் சிங்கிள் ஏர்பேக்குடன் விற்கப்பட்டு வந்தன. தற்போது மஹிந்திரா நிறுவனம் தங்களுடைய பொலேரோவில் இரண்டு ஏர்பேக்குகளைப் பொருத்தி டேஷ்போர்டிலும் சிறிய காஸ்மெடிக் மாற்றம் ஒன்றைச் செய்திருக்கிறது. கூடுதல் ஏர்பேக் பொருத்தப்பட்டதால் அதனுடைய பொலேரோ மாடல்களுக்கு 14,000 ரூபாய் முதல் 16,000 ரூபாய் வரை எக்ஸ்-ஷோரூம் விலையைக் கூட்டியிருக்கிறது மஹிந்திரா.