இந்திய கமர்ஷியல் வாகனத்துறையில் முதன்முறையாக, AVTR எனும் Modular டிரக்குகளை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது அசோக் லேலாண்ட். இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட்டான iGen BS-6 டீசல் இன்ஜின்கள், இந்த டிரக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் 18.5 முதல் 55 டன் வரையிலான Rigid டிரக்ஸ், டிப்பர், டிராக்டர்களின் ஆக்ஸில் வகை, பே லோடு, கேபின், சஸ்பென்ஷன், இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆகியவற்றைத் தனது வர்த்தகப் பயன்பாடு மற்றும் தேவைக்கேற்ப ஒருவர் வாங்கிக்கொள்ளலாம்.

இதுவே AVTR Modular டிரக்குகளின் சாரம்சம் என்றாலும், இதனால் வாடிக்கையாளர்களுக்குக் குறைவான பராமரிப்புச் செலவுகள் கிடைக்கும் என்பது ப்ளஸ். 6 லட்சம் காம்பினேஷன்களில் டிரக்குகளை ஆர்டர் செய்யமுடியும் என்பதால், வெவ்வேறு செக்மென்ட்களில் அசோக் லேலாண்ட் கால்பதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், டிரைவரின் சொகுசு மற்றும் பாதுகாப்பு முன்பைவிட முன்னேற்றம் கண்டிருக்கிறது. மேலும் வாகனத்தின் நம்பகத்தன்மை மற்றும் தரத்திலும் வளர்ச்சி இருக்கிறது. மற்றபடி i-Alert Fleet Management வசதி இருப்பதால், வாகனத்தை Remote Diagnostics செய்யலாம் என்பது செம.
AVTR வாயிலாக, BS-6 டிரக்ஸ் மற்றும் புதிய பிளாட்ஃபார்ம் என ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்திருக்கிறது அசோக் லேலாண்ட். இதில் நம் ஊர்ச் சந்தைக்கான RHD செட்-அப் மற்றும் சர்வதேசச் சந்தைகளுக்கான LHD செட்-அப் என இருவகையான டிரக்குகளையும் தயாரிக்க முடியும் என்பது வெரி நைஸ். இதன் வெளிப்பாடாக, கமர்ஷியல் வாகனத் துறையில் உலகளவில் டாப்-10 இடத்துக்குள் இந்த நிறுவனம் நுழைவதற்கான காரணம் வலுவாகியிருக்கிறது. பலவிதமான நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்ப நிலையில், 6 மில்லியன் கி.மீ அளவுக்கு டெஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன AVTR Modular டிரக்ஸ்.

பல காம்பினேஷன்கள் இருப்பதால், 100 டிரக்குகள் டெஸ்ட்டிங்கில் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 500 கோடி ரூபாய் முதலீட்டில், AVTR பிளாட்ஃபார்மைக் கட்டமைத்திருக்கிறது அசோக் லேலாண்ட். 200bhp முதல் 360bhp வரையிலான செயல்திறனை வெளிப்படுத்தும் 5 விதமான iGen BS-6 டீசல் இன்ஜின்கள், இந்த Medium & Heavy டிரக்குகளில் இடம்பிடித்துள்ளன.
பீட்ஸா ஆர்டர் செய்வது போல, விதவிதமான Configuration-ல் டிரக்குகளை ஆர்டர் செய்யமுடியும் என்பது வரவேற்கத்தக்க அம்சம்தான். இதனால் தேவைப்படும் வசதிகளுக்கு மட்டுமே பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.