Published:Updated:

பஜாஜ் டொமினார் D250 - டெஸ்ட் ரைடு ரிப்போர்ட்! இதற்கும் D400-க்கும் என்ன வித்தியாசம்?

டொமினார் D250
டொமினார் D250 ( Bajaj Auto )

பார்க்க D400 போலவே D250 பைக்கும் இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இதனால் ஒரு பெரிய பைக்கை ஓட்டப்போகிறோம் என்ற உணர்வு, அதில் உட்கார்வதற்கு முன்பாகவே ரைடருக்கு வந்துவிடுகிறது.

பஜாஜ் நிறுவனம், தனது விலை அதிகமான பைக்கின், விலை குறைந்த வெர்ஷனாக, டொமினார் D250 பைக்கைக் களமிறக்கியுள்ளது. 'எண்ணிக் கொடுக்கும் காசுக்கு மதிப்பான பைக்' என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், டொமினார் D400 பைக்கின் விற்பனை, அந்த நிறுவனம் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்பதே நிதர்சனம்.

பவர் க்ரூஸர் எனப்படும் டூரிங் செக்மென்ட்டில் ராயல் என்ஃபீல்டின் 350சிசி தயாரிப்புகளுக்குப் (க்ளாஸிக்/தண்டர்பேர்டு) போட்டியாக வெளிவந்த டொமினார், தற்போது ஜிக்ஸர் 250 சீரிஸ் - யமஹா FZ-S 25 ஆகியவற்றுடன் மோதும் விதமாக டொமினார் D250 பைக்கை பொசிஷன் செய்திருக்கிறது. ரூபாய் 1.92 லட்சத்தில் வந்திருக்கும் டொமினார் D400 BS-6 பைக்குக்கும் (முன்பைவிட 1751 ரூபாய் மட்டுமே அதிகம்), 1.60 லட்சத்துக்குக் கிடைக்கும் டொமினார் D250 BS-6 பைக்கிற்கும் இடையே என்ன வித்தியாசம்? விலை அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம்; கூடவே D250-ன் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவத்தையும் பார்க்கலாம்.

டொமினார் D250: மினி ரைடு ரிப்போர்ட்!

டொமினார் D250
டொமினார் D250
Bajaj Auto

பார்க்க D400 போலவே D250 பைக்கும் இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இதனால் ஒரு பெரிய பைக்கை ஓட்டப்போகிறோம் என்ற உணர்வு, அதில் உட்கார்வதற்கு முன்பாகவே ரைடருக்கு வந்துவிடுகிறது. ரைடிங் பொசிஷனில் எந்த மாறுதலும் இல்லை என்பதுடன், எக்ஸாஸ்ட் சத்தமும் ஸ்போர்ட்டியாக அமைந்திருப்பது நைஸ். மிகக் குறைவான ஆர்பிஎம்களில் இன்ஜின் கொஞ்சம் அசொளகரியமாக இருந்தாலும், வேகம் பிடித்தபிறகு சீராக இயங்கத் தொடங்கிவிடுகிறது. D250-ன் பெட்ரோல் டேங்க் - ஃபுட் பெக்ஸில் அதிர்வுகள் தெரிந்தாலும், ராயல் என்ஃபீல்டு போல அது ரைடருக்கு இடையூறாக இல்லை என்றே சொல்லலாம். பஜாஜின் பவர்ஃபுல் தயாரிப்புகளைப் போலவே, இங்கேயும் பவர் டெலிவரி ஒரே சீராக இருக்கிறது. 0 -100 கி.மீ வேகத்தை 10.5 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் D250-ன் டாப் ஸ்பீடு 132கிமீ என்கிறது பஜாஜ்.

இதன் டாப் எண்ட் பர்ஃபாமன்ஸைச் சோதிக்கக்கூடிய தருணம் கிடைக்கவில்லை என்றாலும், புதிய இன்ஜினின் மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸை வைத்துப் பார்க்கும்போது, அது மனநிறைவைத் தரும் என்றே தோன்றுகிறது. ஸ்லிப்பர் கிளட்ச் காரணமாக, D250-ல் கியரை மாற்றுவது நல்ல அனுபவமாக உள்ளது. போதுமான டார்க் கிடைப்பதால், பைக்கை ஓட்டும்போது அதன் எடை சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால், பார்க் செய்யும்போதும், யூ-டர்ன் அடிக்கும்போதும், D250-ன் அதிக எடையை ரைடரால் உணர முடியும். இந்த பைக்கின் மைலேஜ் விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், தோராயமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30-35 கிமீ வரை மைலேஜ் கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. சஸ்பென்ஷன் செட்-அப்பும் நம் ஊர்ச் சாலைகளைச் சமாளிக்கும் வகையில் உள்ளது. D400 விட மெலிதான டயர்கள் மற்றும் 4 கிலோ குறைவான காரணமாக, பைக்கை வளைத்து நெளித்து ஓட்ட முடிகிறது. பல்ஸர் RS200 போலவே D250 பைக்கிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பதால், பிரேக்கிங் சிறப்பாகவே உள்ளது.

டொமினார் D250
டொமினார் D250
Bajaj Auto

இரு டொமினார்களுக்கும் இடையேயான ஒற்றுமைகள்

ஒரே Beam Type Perimeter ஃபிரேம்தான் இரு பைக்கிலும் இடம்பெற்றுள்ளதால், அளவுகளில் எந்த மாறுதலும் இல்லை. 13 லிட்டர் பெட்ரோல் டேங்க், 157 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 1453 மிமீ வீல்பேஸ் அதற்கான உதாரணம். மேலும், எலெக்ட்ரிக்கல் விஷயத்திலும் இரண்டுமே ஒரே மாதிரி உள்ளன. 8Ah VRLA பேட்டரி, Full LED லைட்டிங் (ஹெட்லைட், இண்டிகேட்டர்கள், டெயில் லைட்) அதை உறுதிப்படுத்தி விடுகின்றன. மற்றபடி பின்பக்கத்தில் 110மிமீ டிராவலுடன் கூடிய Adjustable Nitrox மோனோஷாக் மற்றும் 230மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை இருப்பது பெரிய ப்ளஸ். தவிர Metal மிரர்கள், அதிக எடையைத் தாங்கும் சைடு ஸ்டாண்ட், Backlit ஸ்விட்ச்கள், ஸ்ப்ளிட் சீட் மற்றும் கிராப் ரெயில், Double Barrel எக்ஸாஸ்ட், பெரிய ரேடியேட்டர், Bungee Straps, Tank Pad என டிசைன் அம்சங்களிலும் ஒற்றுமையைப் பார்க்கமுடிகிறது. எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, Big Bike ஃபீலிங்கில் எந்தக் குறையையும் டொமினார் D250 வைக்கவில்லை.

டொமினார் D250 எங்கே வேறுபடுகிறது?

டொமினார் D250
டொமினார் D250
Bajaj Auto

இரு டொமினாரும் தோற்றத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும், Canyon Red மற்றும் Vine Black என கலர் ஆப்ஷன்களிலிருந்தே மாற்றம் ஆரம்பமாகிறது. மேலும் 17 இன்ச் அலாய் வீல்களின் வடிவமைப்பு ஒன்றாகவே இருந்தாலும், D400 பைக்கில் இருந்த Machined Finish இங்கே மிஸ்ஸிங். தவிர முன்பக்கத்தில் இருப்பது USD ஃபோர்க் மற்றும் ரேடியல் கேலிப்பர் டிஸ்க்தான் என்றாலும், அவை அளவில் சிறிதாகியுள்ளன (D400: 43மிமீ - 320மிமீ, D250: 37மிமீ - 300மிமீ). இன்ஜின் திறன் குறைந்திருப்பதால், எதிர்பார்த்தபடியே டயர் சைஸிலும் மாறுதல் தெரிகிறது. அதன்படி D400-ல் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் இருந்த நிலையில் (முன்: 110/70, பின்: 150/60), D250-ல் வழக்கமான Bias Ply டியூப்லெஸ் டயர்களே உள்ளன (முன்: 100/80, பின்: 130/70). இது பல்ஸர் NS200/RS200 பைக்குகளில் இருக்கும் அதே சைஸ்தான். அதேபோல D400-ல் Die Cast Metal ஸ்விங் ஆர்ம் இருந்தால், D250-ல் இருப்பதோ வழக்கமான Box Section ஸ்விங் ஆர்ம்தான்; முன்னே சொன்ன மாற்றங்களால், D400 விட D250 4 கிலோ எடை குறைந்திருக்கிறது (180 கிலோ). D400 போலவே இங்கும் இரட்டை டிஜிட்டல் மீட்டர்கள் இருந்தாலும், D250 பைக்கில் இருப்பதோ முதல் தலைமுறை டொமினாரில் இருந்த மீட்டர்தான்! எனவே D250 பைக்கில் கியர் இண்டிகேட்டர் - மைலேஜ் விவரங்கள் தெரியாது என்பது நெருடல்.

இன்ஜின் விஷயத்தில் டொமினார் D250 எப்படி?

டொமினார் D250
டொமினார் D250
Bajaj Auto

D400 போலவே D250 பைக்கின் இன்ஜினும் கேடிஎம்மை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது (டியூக் 390/250). எனவே இரண்டிலும் DOHC - 4 வால்வ் அமைப்பு, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச், லிக்விட் கூலிங், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆகியவை தொடர்கின்றன. அளவில் பெரிய D400 பைக்கின் 373.3சிசி இன்ஜின் (40bhp பவர் - 3.5kgm), பல்ஸர் NS200/RS200 போலவே Triple Spark DTS-i தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், D250 பைக்கின் 248.77சிசி இன்ஜினில் இருப்பதோ வழக்கமான Twin Spark DTS-iதான் (27bhp பவர் - 2.35kgm). இது 162 கிலோ எடையுள்ள கேடிஎம்மின் டியூக் 250 பைக்கைவிட 10% குறைவான பவர் என்றாலும் (30bhp - 2.4kgm டார்க்), டார்க்கில் பெரிய மாறுதல் இல்லாதது ஆறுதல். எனவே, குறைவான பவரில் அதிக எடையை இழுக்கவேண்டிய சூழலில் இருக்கும் D250, ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

டொமினார் சீரிஸ் - என்னென்ன முன்னேற்றங்கள் தேவை?

Dominar D250
Dominar D250
Autocar India

எக்ஸ்-ஷோரூம் விலையில் பார்த்தாலே, இரு டொமினாருக்கும் இடையே விலையில் வெறும் 32,000 ரூபாய் மட்டும்தான் வித்தியாசம். ஏனெனில், இன்ஜின் மற்றும் டயர்களைத் தவிர்த்து, D250-ன் டிசைன் மற்றும் வசதிகளில் பெரிய மாறுதல் இல்லாததே இதற்கான பிரதான காரணம். எனவே, முதல் தலைமுறை டொமினாரில் இருந்த டிஜிட்டல் மீட்டர்கள் இங்கே இருப்பதைப்போல, 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் D250-ல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். டூரிங் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் டொமினாரில் Hazard இண்டிகேட்டர்கள் - USB சார்ஜிங் பாயின்ட் அல்லது Phone Mount - Magnetic டேங்க் பேக் மாட்டுவதற்கு உகந்த Metal பெட்ரோல் டேங்க் - எதிர்காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் பெரிய வைஸர் - ரைடரின் கைகளில் சிறு கற்கள் விழுவதைத் தவிர்க்கும் Knuckle Guards போன்ற அம்சங்கள் இல்லாதது மைனஸ்தான். மேலும் பல்ஸர் NS200/RS200 போலவே, டொமினாரிலும் Petal டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் Clip On Handlebar இருந்திருக்க்கலாம்.

Dominar D250
Dominar D250
Autocar India

ஆனால் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால், இந்தக் குறைகள் அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 'எனக்கு டொமினார் வேண்டும். ஆனால் சிட்டி டிரைவிங்குக்கு 40bhp பவர் அதிகம் பாஸ்' என்பவர்களுக்கு, D250 நல்ல சாய்ஸாக இருக்கும். இது NS200/RS200 விடப் பவர்ஃபுல்லாக இருப்பதால், நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலைப் பயன்பாட்டுக்கு ஏற்புடையதாகவே இருக்கும். இதன் மைலேஜும் D400 விட அதிகமாகவே இருக்கும் என்பது செம. ஆனால் 'விலை எனக்கு பொருட்டல்ல, டொமினாரின் Top Spec பேக்கேஜ்தான் வேண்டும்' என்பவர்கள், D400 பைக்கை டிக் அடிக்கலாம்.

Dominar D250
Dominar D250
Bajaj Auto

கிட்டத்தட்ட ராயல் என்ஃபீல்டின் 650சிசி பைக்குகளுக்குச் சவால் விடக்கூடிய பர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கும் இந்த பைக், அடிக்கடி நெடுஞ்சாலைப் பயணங்கள் செய்பவர்களுக்குப் பொருந்துகிறது. மற்றபடி இதர 250-300சிசி பைக்குகளை எல்லாம், Price to Performance Ratio-வில் தெறிக்கவிடுகிறது டொமினார் D400 BS-6.

அடுத்த கட்டுரைக்கு